ஆடுகளம் 14 (2)

லக்ஷிதா, “அதுசரி, அந்த கதிருக்கும் சந்துருக்கும் என்ன பிரச்சனையாம்? எப்போ பாரு யாரையாவது முறைச்சுகிட்டே இருக்காங்க?..”

 

வெங்கட், “சந்துருவுக்கும் கதிருக்கும் சொந்த வாழ்க்கையில ரொம்ப பெரிய பிரச்சனை இருக்கு. அவங்ககிட்ட யாரும் எதுவும் பேச்சு குடுக்காதீங்க, இத உங்க நல்லதுக்காகத்தான் சொல்றேன், புரிஞ்சு நடந்துக்கோங்க.”

 

அர்ஜூன், “அது எனக்கு அடிவாங்குன அன்னிக்கே புரிஞ்சிடுச்சு சார்.”

 

வினோத், “இந்த சம்பவம் எப்பண்ணா நடந்துச்சு?”

 

அர்ஜூன், “அது முதல் நாளே நடந்து முடிஞ்சிடுச்சுடா தம்பி..”

 

வெங்கட், “டேய் விளையாடினது போதும். பேச்சை குறைச்சுட்டு, எல்லாரும் சீக்கிரமா போய் ரெடியாகிட்டு வாங்க, டைம் ஆச்சு..” என்று விரட்ட தொடங்கியதும், ஒருவர் பின் ஒருவராய் அவ்விடத்தை காலி செய்தனர்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் மூன்றாம் நிலை போட்டி ஆரம்பமானது. இம்முறை நமது அணி வீரர்கள் அனைவரும் நான்கு நான்கு பேராக பிரிந்து கொண்டனர். துருவ், அதிதி, அர்ஜூன், வினோத் நால்வரும் ஒரு அணியாய் நிற்க, கதிர், சந்துரு, ஜேம்ஸ், லக்ஷிதா நால்வரும் மற்றொரு அணியாய் நின்றனர்.

 

போட்டி ஆரம்பமானதும் அனைவரும் ஒரு அடர்ந்த காட்டுக்குள் விடப்பட்டனர். அனைவருக்கும் ஆயுதமாய் ஒரு சிறு கத்தி மட்டுமே தரப்பட்டு இருந்தது. வழக்கம் போல இம்முறையும் காட்டிற்குள் செல்லும் பாதை இரண்டாகப் பிரிந்து சென்றது. கதிரின் அணி பாதையைத் தேர்ந்தெடுக்கும் வரையில் துருவ் ஒரு அடிகூட எடுத்து வைக்காமல் பொறுமையாய் காத்திருந்தான். அது புரிந்த கதிர், தனது அணியினரை வலது திசை வழியில் செல்லும் பாதைக்கு அழைத்துச் சென்றான்.

 

அடுத்த ஒரு நிமிடத்திற்கு அப்பாதையில் நிற்காமல் நடந்தவர்கள், கதிர் காட்டும் ரகசிய செய்கை புரிந்ததும் வழியிலிருந்த பெரிய பாறை மற்றும் மரங்களின் பின்னால் ஒளிந்து கொண்டனர். கதிர் அணி உள்ளே சென்ற இரண்டு நிமிடம் கழித்து, துருவ் தனது அணியினரோடு வலது பக்க பாதையை நோக்கி நடந்தான்.

 

துருவ் தன் அணியினருடன் அப்பாதையில் தங்களது மறைவிடத்தைத் தாண்டி முன்னேறிச் செல்வதைக் கண்டதும், கதிரின் அணியினர் ஓசை எழுப்பாமல் அவர்களை பின் தொடர ஆரம்பித்தனர். சில நிமிட நடைப் பயணத்திற்குப் பிறகு, பாதையின் இருமருங்கிலும் ஆங்காங்கே இலைகள் சலசலக்கும் சப்தம் கேட்டது. உடனே போட்டியாளர்கள் எட்டு பேரும் ஒரே இடத்தில் ஒன்றாக கூடி நின்றனர்.

 

துருவ் அதிதியிடம் குறிப்பால் ஏதோ சொன்னதும், அவள் ஒரு பெரிய மரத்தின் அருகில் சென்று நின்று கொண்டாள். அதன் அர்த்தம் புரியாத மற்றவர்களும், தங்களை தாங்களே காத்துக் கொள்ள நினைத்து, அதிதியைப் போலவே ஆளுக்கு ஒரு மரத்தின் அருகே சென்று நின்று கொண்டனர். ஆனால் கதிர் மட்டும் துருவ்வின் செய்கைகளை கவனித்து, அவனைப் போலவே நட்ட நடுவில் நின்றான்.

 

அவர்களைச் சுற்றிலும் ஆங்காங்கே மீண்டும் இலைகள் சலசலக்கத் தொடங்கியது. துருவ்வின் கவனம் முழுவதும் அதிதியைச் சுற்றியிருக்கும் செடி கொடிகளிலேயே பதிந்து இருந்தது. நொடிப் பொழுதில் நான்கு திசையிலும், இலைகளின் மறைவிலிருந்து கருஞ்சிறுத்தைகள் வெளியில் பாய்ந்து வந்தன. அடுத்த நொடியே துருவ் தங்களது ரகசிய மொழி மூலம், அதிதியை மரத்தின் மேல் ஏற வைத்திருந்தான்.

 

கருஞ்சிறுத்தைகள் வருமென ஆட்டத்திற்கு முன்பே விதிமுறைகளில் அனைவரும் அறிந்திருந்தாலும், அதிலிருந்து தப்பிக்கும் முறையினை எவரும் அறியாததால், வெகு சிலரைத் தவிர நிறைய பேர் சிறுத்தைகளின் பிடியில் மாட்டிக் கொண்டனர். இனி தப்பிச் செல்ல இயலாது என்றதும் அர்ஜூன், சந்துரு இருவரும் தங்களுடைய குறுவாளைக் கொண்டு சிறுத்தையோடு சண்டையிட தொடங்கினர்.

 

கதிருக்கு இலவச இணைப்பாக அவன் அடைந்த சக்தியாகிய வாள் இருந்ததால், அவன் மிகச் சுலபமாக தன்னைச் சூழ்ந்த அனைத்து சிறுத்தைகளையும் வீழ்த்திவிட்டான். ஆனால் லக்ஷிதாவோ சிறுத்தைகளின் திடீர் தாக்குதலினால் தனது சிந்திக்கும் திறனை சுத்தமாய் இழந்திருந்தாள். விரைந்து சென்று மரத்தில் ஏறவும் தோன்றாமல், துணிந்து வந்து சிறுத்தைகளை எதிர்த்து சண்டையிடவும் தெரியாமல், வசமாக அவற்றின் நடுவில் அவள் மாட்டிக் கொண்டாள். ஆதலால் வெகு விரைவிலேயே அவள் தன்னுடைய ஒரு உயிரை இழந்து விட்டாள்.

 

துருவ் தன்னைச் சூழ்ந்த சிறுத்தைகளை கொன்றதும் அதிதியோடு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லத் துவங்கினான். கதிர் சாதுரியமாக துருவ்வை பார்த்தே ஒவ்வொரு செயலின் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டு அதைச் செய்தே முன்னேற ஆரம்பித்தான். அடுத்த கட்டத்திற்கு சென்ற அவர்கள் மூவரையும் தவிர, மற்றவர்கள் அனைவரும் கருஞ்சிறுத்தைகளோடு இன்னமும் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தனர்.

 

சில நொடிகளிலேயே நமது மூவர் படை ஒரு ஆற்றங்கரையினை வந்து அடைந்தது. மூவரும் ஆற்றில் இறங்கி அக்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்த நேரம், நீரின் அடியில் இருந்து நீர்க்குமிழிகள் வெளிவரத் துவங்கியது. அதைக் கண்டதுமே துருவ் தன்னுடைய குறுவாளை எடுத்து தயாராக பிடித்துக் கொண்டான்.

 

அது மட்டுமின்றி அவன் அதிதியிடம், ‘நான் சொன்னதுமே நீ உன்னோட ஷூவை ஆக்டிவேட் செஞ்சிடு..’ என்று குறிப்பு தருவதனை கதிர் நன்றாக கவனித்துக் கொண்டான்.

 

எனில் இவ்விடம் மிகுந்த ஆபத்து நிறைந்தது என்பதனை கதிர் அறிந்து கொண்டு, தன்னுடைய சக்தியாகிய வாளை எடுத்து தயாராக கையில் வைத்துக் கொண்டான். தன் எதிரில் அடுத்த நீர்க்குமிழி வந்ததுமே கதிர் சற்றும் யோசிக்காமல் தன் வாளால் ஓங்கி ஒரு வெட்டு வெட்டி விட்டான். உடனே உள்ளிருந்து ரத்தம் கொப்பளிக்க இரண்டு துண்டான முதலையின் உடல் மிதந்து வந்தது.

அடுத்த பக்கம்

 

Advertisements