ஆடுகளம் 14

அனைவரும் சேர்ந்து ஆடிய நாடகத்தின் விளைவாய் அன்று முழுவதும் அவர்களின் உதட்டில் புன்னகை எனும் சாயம் ஒட்டிக் கொண்டே இருந்தது. ஒவ்வொருவரும் மற்றவரின் உள்ளிருக்கும் குறும்பு குணத்தை புரிந்து கொண்டு சகஜமாக பேசவும் பழகவும் துவங்கி இருந்தனர். இந்நிலையிலும் பிறரோடு ஒட்டாமல் விலகியிருக்கும் மூன்று ஜீவன்களும் அங்கே இருந்தது, அது துருவ், கதிர், சந்துரு.

 

மாலை போட்டி நேரம் நெருங்கியதும் துருவ் வழக்கம்போல் அதிதியோடு தனியே அமர்ந்து, இன்றைய போட்டியில் விளையாடும் முறையினை விளக்கிச் சொல்லிக் கொண்டு இருந்தான். கதிரும் சந்துருவும் ஆளுக்கொரு திசையில் தனித்தனியே உலவிக் கொண்டு இருந்தனர். ஏனைய உயிரினங்கள் எல்லாம் தூரத்தில் கூட்டமாக அமர்ந்து அவர்கள் நால்வரையும் பற்றி குசுகுசுவென்று புரளி பேசிக் கொண்டிருந்தது.

 

லக்ஷிதா, “ஏம்ப்பா, இந்த துருவ் யாரு? இவனுக்கு எப்படி எல்லா லெவலும் இவ்ளோ நல்லா விளையாடத் தெரியுது?” என்று சிறு திரியை கிள்ளிப் போட்டாள்.

 

வினோத், “பாத்தாலே தெரியல, அது ஏதோ பெரிய அரசியல்வாதி வீட்டு புள்ளையா இருக்கும்.”

 

கோமல், “துருவ் அரசியல்வாதி வீட்டு பையனா? எப்படி சொல்ற வினோத்?”

 

“ஆரம்பத்துல இருந்தே அவனுக்கு மட்டும் எல்லா விஷயத்துலயும் ஸ்பெஷல் ஆஃபர் கொடுக்கிறாங்க, வெங்கட் சாரே அவன் சொல்றதுக்கெல்லாம் சலாம் போடுறாரு. பையனும் பாக்குறதுக்கு நல்லா ஆப்பிள் பழம் மாதிரி கலரா, ஹீரோவாட்டம் செம கெத்தா பிகேவ் பண்றான். அப்புறமென்ன?”

 

லக்ஷிதாவும் கோமலும், “இருக்குமோ?” என்று கோரஸ் போட்டனர்.

 

ஜேம்ஸ், “கண்டிப்பா இல்லம்மா..”

 

வினோத், “என்ன சார் ரூட்ட மாத்துறீங்க?”

 

ஜேம்ஸ், “பின்ன என்னடா? அவ்வளவு அதிகாரம் இருக்கிறவன் எதுக்காக இந்த ஆபத்தான கேம்ல பார்ட்டிசிபேட் பண்ண போறான்? அவன் போகணும்னு சொன்னாலும், இவ்வளவு சின்னப் பையன ஆபத்தான கேம்ல விளையாட எப்டி அவனோட குடும்பம் ஒத்துக்கும்? நீங்க சொன்னதுல கொஞ்சம் கூட லாஜிக்கே இல்ல, அவன் வேற எங்கேயோ இருந்து வந்திருக்கான்..”

 

வினோத், “இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கிறது. ஜேம்ஸ் சாரு நாம யோசிக்காத விதத்துல யோசிக்கிறாரு பாருங்க மக்கா” என்றதும் ஜேம்ஸ் தனது கொடுவா மீசையை பெருமையாய் முறுக்கி விட்டு கொண்டார்.

 

கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அர்ஜூன், “ஒரு வேள அவன், இந்த கேம்ம உருவாக்கின என்ஜினீயர் பையனா இருப்பானோ?” என்றான்.

 

வினோத், “யூ மீன் கேம் டெவலப்பர் சன்?”

 

அர்ஜுன், “ஆமாடா, பனங்காய் மண்டையா”

 

ஜேம்ஸ், “எனக்கும் அதே சந்தேகம் தான், அவன் விளையாடுற முறை ரொம்ப துல்லியமா இருக்கு. ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப ரொம்ப சரியா ஹேண்டில் பண்றான். அதுமட்டுமில்லாம ஒன்னும் தெரியாத அதிதியையும் தன்னோட சேர்த்து விளையாட வைக்கிறான், இது கண்டிப்பா சாதாரண ஆள் செய்ய முடியாதது.”

 

நகுல், “வெங்கட் சார், பாத்துகிட்டே இருக்கீங்களே, ஆமா இல்லன்னு ஏதாவது சொல்லுங்க.”

 

வெங்கட், “நான் மத்தவங்களோட பர்சனல் டீடெய்ல்ஸ வெளிப்படுத்தக் கூடாதுப்பா”

 

அர்ஜூன், “ப்ளீஸ் சார், இப்படியே போனா இன்னும் நாலு நாள்ல எங்க மண்டை வெடிச்சிடும். தயவுசெஞ்சு அவனைப் பத்தின எதையாவது சொல்லுங்க சார்” என்றான்.

 

அவனோடு சேர்ந்து மற்றவர்களும், ‘ப்ளீஸ் சார்.. சொல்லுங்க சார்..’ என்று வெங்கட்டை நச்சரிக்க ஆரம்பித்தனர்.

 

வினோத் ஒரு படி மேலே போய் வெங்கட்டை கிச்சு கிச்சு மூட்ட தொடங்கியதும், “சரி சரி சொல்லித் தொலைக்கிறேன், என்ன விடுடா..” என்று கையெடுத்து கும்பிட்டு கதறினான் வெங்கட். அவன் ஒத்துக்கொண்டதுமே கதை கேட்கும் ஆர்வத்தில் அனைவரும் அவனை சுற்றி வளைத்து அமர்ந்து கொண்டனர்.

 

வெங்கட், “உங்க கெஸ் எல்லாமே தப்பு, அவன் எந்த பிண்ணணியும் இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில இருந்து வந்தவன். அவனோட அப்பாவும் அம்மாவும் நம்ம சென்னையில தான் ஏதோ ஐடி கம்பெனில வேலை பார்க்கிறாங்க. அவனுக்கு கூடப் பிறந்தவங்க, க்ளோஸ் பிரண்ட்ஸ்னு யாரும் கிடையாது. ஆனா அவன் படிப்பு விளையாட்டுனு எல்லாத்துலயும் எப்பவுமே நம்பர் ஒன். இதத் தவிர அவன் பயோடேட்டால வேற எதுவும் கொடுக்கல.”

 

லக்ஷிதா, “சே.. பய செம்ம பிரில்லியண்ட் சார். அவன் மட்டும் ஒரு நாலஞ்சு வருஷம் முன்னாடி பொறந்திருந்தா நான் கண்டிப்பா அவனத்தான் லவ் பண்ணி இருப்பேன்.”

 

அர்ஜூன், “அப்பக்கூட நீங்க பின்னால பொறக்கணும் வேண்ட மாட்டீங்களாம்மா?”

 

வினோத், “இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எசமான்” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தான்.

அடுத்த பக்கம்

Advertisements