ஆடுகளம் 13 (2)

அர்ஜூன் வினோத்திடம், ‘ஷ்…..’ என்று சைகை செய்துவிட்டு அதிதியிடம், “நீ சொல்லு பேபிம்மா…” என்றான்.

 

அதிதி, “இந்தா அர்ஜூன், உனக்கு புடிச்ச ஜூஸ்….”

 

வினோத், “என்னாங்கடா ,ஒரு பக்கமா புகையுது?!….” என்று நீட்டி நெளித்து முழங்கினான்.

 

அதிதி, “ஏய்… சீ… சும்மா இரு. அர்ஜுன் உன்னால எனக்கு ஒரு வேலை ஆகணும், அத உன்ன விட்டா வேற யாராலயும் செய்ய முடியாது. எனக்கு ஹெல்ப் பண்றியா அர்ஜூன்? ப்ளீஸ்….” என்றாள்.

 

“ஷுயர் பேபிம்மா… மண்ண திங்கனுமா? மலைய பொரட்டனுமா? கடல தாண்டனுமா? இல்ல காத்த கையில புடிக்கனுமா?…” என்று ஏதோ சினிமா ஹீரோ போல் கைகளை முறுக்கி ஆக்ரோஷமாய் பேசி முடிக்கையில்,

 

அவனைச் சுற்றி இருந்த அத்தனை பேரும், ‘உனக்கு இப்படி எல்லாம் பேச வருமாடா?…’ என்று அவன் வாயை, ‘ஆ… ‘ எனப் பார்த்திருந்தனர்.

 

அதிதி, “அதெல்லாம் ஒண்ணும் செய்யத் தேவையில்ல… நாம எல்லாரும் ஒரு சின்ன கேம் விளையாடலாமா.”

 

இப்போது அர்ஜூன் இன்னும் அதிக உற்சாகத்தோடு, “என்ன விளையாட்டு பேபிம்மா?….” என்றான்.

 

“சும்மா ஒரு ஸ்டாச்சு ரிலீஸ் மாதிரி, காமெடி டிராமா மாதிரி, பாட்டு பாடி விளையாடுற மாதிரி… எதாவது ஒண்ணு, ஜாலியா விளையாடணும்… நீ எந்த கேம் செலக்ட் பண்ணினாலும் எனக்கு ஓகே, பட் எல்லாரையும் விளையாட கூட்டிட்டு வரனும், உன்னால முடியுமா அர்ஜூன்?”

 

அர்ஜூன், “முடியுமாவா?…. அஞ்சே நிமிஷம், அத்தன பேரையும் அசெம்பிள் பண்ணி காட்டுகிறேன் பாரு…” என்று அதிதியின் முன் ஒரு சொடுக்கு போட்டு விட்டு சென்றான்.

 

அங்கு நிகழ்ந்த அத்தனையையும் அறையின் மூலையில் இருந்த வெங்கட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். ‘இவன் போய் பேசி அந்த அழு மூஞ்சி, சிடு மூஞ்சி, கடு மூஞ்சி எல்லாத்தையும் ஒன்னா சேர்க்க போறானாக்கும்? நடக்குற காரியமா அது?!’ என்ற நினைப்போடு உள்ளுக்குள் எகத்தாளமாய் சிரித்துக் கொண்டிருந்தான்.

 

அதே பயம் அதிதியின் உள்ளத்தினுள்ளும் இருந்ததால், அவளும் தன் நகத்தை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். போன வேகத்திலேயே அர்ஜுன் திரும்பி வந்ததைக் கண்டதும், அவளது நம்பிக்கை அத்தனையும் உடைக்கப்பட்ட உண்டியலின் சில்லறைகளாய் சிதறிப் போனது.

 

வாடிய முகத்துடன் அதிதி, “என்ன ஆச்சு? யாருமே வரலையா அர்ஜூன்…” என்றாள்.

 

அர்ஜூன் வேண்டுமென்றே பெருமிதமாய் முகத்தை நிமிர்த்தி கொண்டு, “ஐயா கை வச்சதுக்கு அப்புறம் ஒரு விஷயம் நடக்காம போயிடுமா?” என்றான்.

 

அந்த வார்த்தைகள் அதிதியை விட, வெங்கட்டிற்கே பெரும் அதிர்ச்சியை தந்தது. தன் காதால் கேட்டதை அறிவால் அறிந்து உறுதி செய்யும் கொள்ளும் பொருட்டு, அர்ஜூனின் முன்னால் வந்து நின்றான்.

Advertisements

தன் விழிகளை பெரிதாய் விரித்த அதிதி, “நிஜமாவா? எப்டி அர்ஜூன்? அதுவும் அஞ்சு நிமிஷத்துல?…” என்றவளுக்கு ஆச்சரியத்தில் அதற்கு மேல் பேச முடியவில்லை. ஏனெனில் அனைவரையும் விளையாட சம்மதிக்க வைக்க, குறைந்தது அரை நாள் ஆகும் என்று அவள் நினைத்திருந்தாள்.

 

அர்ஜூன், “அத்தன பேரும் இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுக்கு பின்னால அசெம்பிள் ஆகுறதா சொல்லி இருக்காங்க. பாட்டு பாடுறது, ஸ்டேச்சு ரிலீஸ் எல்லாம் ஓல்டு கேம்ஸ், ஸோ டிராமா கேம் ஓகேனு அக்செப்ட் பண்ணிட்டாங்க, உள்ள இருக்குற மத்தவங்களையும் சீக்கிரமா வரச் சொன்னாங்க…” என்று அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய் தந்தான்.

 

அவன் வார்த்தைகளை நம்பாம முடியாமல் அனைவரும் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தனர். நீச்சல் குளத்திற்கு அருகே இருந்த, செயற்கை பந்தல் போன்ற இடத்தில் ஆளுக்கொரு இருக்கையில் தயாராய் அமர்ந்திருந்தனர். அதிலும் நகுல் விளையாட்டிற்கு தேவையானவற்றை எழுதவே தொடங்கி விட்டிருந்தான்.

 

அதிதி, “வாவ்… சூப்பர் அர்ஜூன்… நீ ரொம்ப பிரில்லியண்ட்..” என்று அவனுக்கு கைகுலுக்கி தன் வாழ்த்தினை தெரிவித்து விட்டு, விளையாடத் தயாராய் அமர்ந்திருந்த ஜோதியில் தானும் சென்று ஐக்கியமாகினாள்.

 

வியப்பு விலகாமல் பேய் முழி முழித்துக் கொண்டிருந்த வெங்கட், அர்ஜுனை பிடித்து அமுக்கி தனது கை வளைவிற்குள் கொண்டுவந்து, “அது எப்படிடா இவங்க அத்தனை பேரையும் ஒத்துக்க வச்ச?” என்று தன் மூளைக்குள் உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தினை கேட்டான்.

 

அர்ஜூன், “அது ஒன்னும் இல்ல சார், இந்த வீட்ல இன்னிக்கில இருந்து அடிக்கடி ஜாலிக்காக ஏதாவது விளையாட்டு விளையாடப் போறோம். விளையாட வந்தா பத்தாயிரமும், ஜெயிக்கிறவங்களுக்கு ஒரு லட்சமும் தர்றதா, நீங்க சொன்னீங்கனு ஒரு சின்ன பொய் சொன்னேன். அடுத்த நிமிஷமே எல்லாரும் வந்துட்டானுங்க…” என்றான்.

 

வெங்கட் உச்சகட்ட அதிர்ச்சியில், “அடேய்… அகோரி வம்சத்துல பொறந்தவனே… அந்த ரத்தக்காட்டேரி கூட்டத்துல என்ன ஏன்டா மாட்டி விட்ட?” என்றான்.

 

“ஏன் சார், அம்புட்டு அழகான பொண்ணு அதுவா வந்து உதவி கேட்கும் போது மாட்டேன்னு சொல்ல முடியுமா?”

 

“அதுக்குன்னு என்னத் தூக்கி பலி கெடா ஆக்குவியாடா?”

அடுத்த பக்கம்

Advertisements