ஆடுகளம் 13

இன்று போட்டியின் மூன்றாவது நாள், இரண்டு நிலைகளை வெற்றிகரமாக கடந்திருக்கும் எட்டு போட்டியாளர்களும், மூன்றாம் நிலையில் காலெடுத்து வைக்க போகின்ற நாள். ஆதித்யா போட்டியாளர்களுக்கு இடையில் சண்டை உருவாக வேண்டும் என நினைப்பது தெரியாமல், ‘அனைவரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்!…’ என்று அந்த அதிகாலை வேளியில் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது ஒரு ஜீவன்.

 

‘ஆண்டவா… நாங்க பத்து பேரும் இந்த வீட்டுக்கு வந்து இன்னியோட அஞ்சு நாள் ஆயிடுச்சு. இத்தன நாள் ஆன பிறகும் ஒருசிலர் யாரோடையும் ஒட்டாம தனித்தீவா சுத்திக்கிட்டு இருக்காங்க. அப்டி ஒட்டாம இருக்குறவங்களே பரவாயில்லைன்ற அளவுக்கு இந்த கதிரும், துருவ்வும் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்காங்க. எல்லாரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு அன்போடயும் அரவணைப்போடயும் இருக்க நீதான் வழி செய்யனும் ஆண்டவா…’

 

அதிதி தன் வேண்டுதல்களை எல்லாம் முடித்துவிட்டு மாடியிலிருந்து கீழே வருகையில், துருவ்வும் கதிரும் உர்ரென்று எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர். நேற்று இரவிலிருந்தே இவ்விரு முகங்களும் ஒன்றை ஒன்று முறைத்துக் கொண்டிருப்பதை அதிதி கண் காணித்திருந்தாள். அதனாலேயே இன்று காலையில் இறைவனிடம் இந்த திடீர் வேண்டுதல்கள்.

 

‘ஆரம்பிச்சுட்டானுங்களா? அவ்வளவு கோபம் இருந்தா ரெண்டு பேரும் தள்ளித் தள்ளி உட்கார்ந்து தொலைக்க வேண்டியது தான?… எதுக்காக வேணும்னே எதிரெதிர்ல உட்காரணும்? எல்லாருக்கும் தெரியிற மாதிரி உர்ருனு முறைச்சு கிட்டு இருக்கணும்? துருவ்வும் கதிரும் எப்பிடி இப்படி ஒரே மாதிரி பிகேவியரோட வந்து வாய்ச்சானுங்க?’ எனும் கேள்விகள் அவளின் இதயத்தில் எழாமல் இல்லை….

 

அன்று காலை உணவு நேரத்திலும், நீதிமன்றம் அனுமதி அளித்த டாக்டர்கள் வந்தா செக்கப் செய்யும் நேரத்திலும் அவர்கள் அப்படியே இருந்தனர். அவர்களின் சச்சரவு விஷயம் அரசல்புரசலாக அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும், ‘இவ்விரு சண்டிக் குதிரைகளுடன் நம்மால் மல்லுக்கட்ட இயலுமா?’ என்று யாரும் சமாதானம் பேச முன்வரவில்லை.

 

அதிதி, ‘ஆரம்பத்தில் என்னை கதிரிடம் இருந்து விலகி இருக்கச் சொன்ன துருவ், இப்பொழுது தானே அவனோடு மல்லுக்கு நிற்கிறான் என்றால், அதற்கு காரணம் நானன்றி வேறில்லை என்பது அதிதிக்கு தெரியாமல் இல்லை. இப்படியே இருந்தால் நிச்சயம் அவர்களுக்குள் விரைவில் கைகலப்பு உருவாகிவிடும்.’

 

‘அப்படி ஏதாவது கைகலப்பு உருவாகினால், ஒன்று துருவ்விற்கு காயம் படும், இல்லையேல் இந்த நிகழ்ச்சியை இழுத்து மூடிவிட்டு செல்ல வேண்டியிருக்கும். இவ்விரண்டிலுமே இழப்பு என் பக்கம் தான் அதிகமாய் இருக்கும்.’

 

இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணம் ஒருவர் மற்றவரோடு நெருங்கி பழகாததுதான் என்ற முடிவிற்கு வந்திருந்தாள் அதிதி. ஆனால் அறிவுரை வழங்கும் செயலெல்லாம் இந்தக் குழுவினருக்கு நிச்சயம் ஒத்து வராது என்பதும் அவளது அறிவிற்கு நன்றாக தெரிந்திருந்தது. ஏதேனும் ஒரு விதத்தில் இவர்களை நெருங்க வைத்து விட்டோம் என்றால், குணம் ஒத்துப்போய் பாசப் பிணைப்பு தானாய் உருவாகிவிடும் என்பது அதிதியின் திடீர் திட்டம்.

Advertisements

அதற்கான செயல் முறையில் ஈடுபடும் முன்னதாக, இந்த ஷோவிற்கு பொறுப்பாளராகிய வெங்கட்டிடம் சென்று அனுமதி வேண்டி நின்றாள். அவள் சொன்ன விஷயங்களை கேட்டதும், வெங்கட்டிற்கு தூக்கி வாரிப்போட்டது.

 

‘ப்ளேயர்ஸ்க்குள்ள உருவான இந்த சண்டையும் கோபமும் இப்படியே மெயிண்ட்டெயின் ஆகனும்னு நம்ம பாஸ் ப்ளான் போட்டுட்டு இருக்கும்போது, இந்தப் பொண்ணு என்னடான்னா சண்டைய முடிக்கிறதுக்கு வழி தேடுறாளே….’ என்று அதிர்ந்த வெங்கட், தன் உள்ளத்து உணர்வுகளை வெளிக்காட்டாமல் புன்னகை முகத்தோடு அதிதியிடம் பேசத் தொடங்கினான்.

 

வெங்கட், “இதெல்லாம் நடக்கிற காரியமா அதிதி? தேவையில்லாம பிரச்சனை பெருசாயிட போகுது… இத முயற்சி பண்றதுக்கு பதிலா, பேசாம நீயும் துருவ்வும் கதிர விட்டு ஒதுங்கி இருக்கலாம்ல…” என்று அவள் எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போட முயன்றான்.

 

அதிதியோ விடாப்பிடியாய், “ஒண்ணுமே செய்யாம வேடிக்கை பாக்குறத விட, எதையாவது முயற்சி செஞ்சு பார்க்கலாமே சார். இப்படியே எத்தனை நாள்தான் ஒருத்தர ஒருத்தர்  ஒட்டாமலே இருக்கிறது? எனக்கும் துருவ்வுக்கும் ஒத்து போன மாதிரி, ஏதாவது ஒரு விஷயம் நிச்சயமா எல்லாருக்கும் ஒத்துப் போக வாய்ப்பிருக்கு சார்.”

 

“இவ்ளோ தூரம் நீ சொல்ற, சரி… ட்ரை பண்ணுங்க. பட் பின்னால யாராவது ஏதாவது சொல்லிட்டாங்கனு யாரும்  எங்கிட்ட வந்து அழுதுகிட்டு நிக்கக் கூடாது…”

 

“இல்ல சார்… அப்டி எதுவும் நடக்காது…”

 

“ம்… ஓகே…”

 

அனுமதி கிடைத்ததும் அகம் மகிழ்ந்த அதிதி, கிச்சனுக்குச் சென்று அர்ஜூனுக்கு பிடித்த ஜூஸை செஃபிடம் கேட்டு வாங்கிக் கொண்டாள். டிவியில் தனக்குப் பிடித்த பாடலை தேர்வு செய்வதற்காக, வினோத்தோடும் லக்ஷிதாவோடும் வம்பிழுத்துக் கொண்டிருந்த அர்ஜூனின் அருகில் வந்து நின்றாள்.

 

அதிதி, “ஹாய் அர்ஜூன்….” என்றாள் பாசமான குரலில்.

 

அடுத்த நொடி தன் கையில் இருந்த ரிமோட்டினை வினோத்தின் மேல் தூக்கி எறிந்த அர்ஜூன், “ஹேய் பேபிம்மா… வா.. வா.. உக்காரு… ஏது இவ்வளவு தூரம்?…” என்று வெகுவாய் உபசரித்தான்.

 

வினோத், “கிச்சன்ல இருந்து ஹாலுக்கு வர்றதெல்லாம் ஒரு தூரமாண்ணா?” என்று நடுவில் தன் பங்கு நக்கலை தவறாமல் செய்தான்.

அடுத்த பக்கம்

Advertisements