ஆடுகளம் 10 (5)

அர்ஜூன், “நண்பர்களே… உங்கள நம்பித்தான் நான் இந்த ஊருக்குள்ள வர்றேன், விளையாட்டுக்கு கூட என்ன எவனும் தனியா விட்டுட்டு போயிடாதீங்கடா…” என்றதும் முன் வரிசையில் இருந்த நால்வரும், அவனை திரும்பி பார்த்து முறைத்து விட்டு சென்றனர்.

 

சில அடி தூரம் சென்றதும் ஒரு கட்டிடத்தின் உள்ளிருந்து, ரத்தம் சொட்டும் கோரைப் பற்களுடனும், கிழிந்த ஆடைகளுடனும், கொடூர உருவம் கொண்ட ஓர் ஸோம்பி வெளியே வந்தது. அதைக் கண்டதுமே அதிதியும் கோமலும் ‘வீல்…’ என அலறி விட்டனர்.

 

அந்த ஸோம்பி மனிதர்களைக் கண்டதும் விழி விரிய நெருங்கத் துணிந்திட, அடுத்த நொடியே அதன்  உடலில் சடசடவென மூன்று குண்டுகள் துளைத்து நுழைந்தன. கண்ணிமைக்கும் நொடிக்குள் யார் சுட்டது என்று அனைவரும் சுற்றும் முற்றும் பார்க்க, அதைச் சுட்ட துருவ்வோ தான் எதுவும் செய்யாதது போல முன்னேறிச் செல்லத் துணிந்தான்.

 

அவன் மதிப்பெண் உயர்ந்ததைக் கண்டதும், மற்றவர்களும் தங்களுடைய ஆயுதங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு முன்னேறி செல்லத் தயாராகினர். இரண்டாவது தெருவினில் பத்து பதினைந்து ஸோம்பிக்கள் உலவிக் கொண்டிருந்தன. வாய்ப்பினை நழுவ விட விரும்பாத போட்டியாளர்கள் மளமளவென சுட்டுத் தள்ளினார்கள்.

 

வெற்றிப் புன்னகையோடு அவர்கள் மூன்றாவது தெருவினுள் நுழைய, அந்த வீதி முழுக்க ஸோம்பிக்கள் நிறைந்து கிடந்தது. வெண்ணிற விழிகள் கொண்ட அவை ஓவ்வொன்றும் பற்களைக் காட்டியபடி போட்டியாளர்களை நோக்கி முன்னேறி வரத் தொடங்கின. போட்டியாளர்கள் எவ்வளவு சுட்டாலும் போதாது என்பதைப்போல, அங்கே மலையென குவிந்து கிடந்தன ஸோம்பிக்கள்.

 

அர்ஜூன், “அய்யய்யோ ஊரு ஒண்ணு கூடிட்டாங்கப்பா…” என்று கத்தினான்.

 

வினோத், “வா அண்ணா, நாம வேற பாதையிலே ஓடுவோம்…” என்றதும் அர்ஜூன் அவனோடு சேர்ந்து ஓடத் துவங்கி விட்டான்.

 

ஏற்கனவே உயிர் உறையுமளவு பயத்தில் நின்றிருந்த அதிதியும் கோமலும், என்ன செய்வதென்று தெரியாமல் வேறு ஒரு வீதிக்குள் புகுந்து ஓடத் துவங்கினர்.

 

மற்றவர்களுக்கும் இனி இங்கிருந்து தப்பி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை எனும் நிதர்சனம் புரிய, ஆளுக்கொரு திசையில் பிரிந்து ஓடத் தொடங்கினர். திரையின் ஓரத்தில் ஒளிரும் மேப்பினை பார்த்தபடியே ஓடுவதால், திடீர் திடீரென மேலே வந்து பாயும் ஸோம்பிக்களின் கொடூர முகத்தைக் கண்டு, அதிதியும் கோமலும் நொடிக்கொரு முறை கத்திக் கொண்டே இருந்தார்கள்.

Advertisements

பொறுத்து பொறுத்துப் பார்த்த கதிர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, தனது கோப முகத்தை காட்டத் தொடங்கினான். மேப்பில் தெரியும் மலைக்குன்றிற்கான பாதையை, ஒருமுறை நன்றாக பார்த்து தனது ஆழ் மனதில் பதிய வைத்தான். அதற்கான திசையில் விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினான்.

 

தனது வழியில் எதிர்ப்படும்  ஸோம்பிக்கள் அத்தனையையும் சுட்டுத் தள்ளியபடி முன்னேறிக்கொண்டே இருந்தான். குன்றினை நெருங்கும் நேரத்தில், அவன் துப்பாக்கியில் குண்டு தீர்ந்திருந்தது. எப்படியாவது இன்னும் சில அடி தூரம் தாக்குப் பிடித்தால் குன்றின்மேல் ஏறி விடலாம். ஏதேனும் ஒரு சக்தியை அடைந்த பிறகு இந்த ஸோம்பிக்களை சமாளிப்பது அவ்வளவு கடினமாக இருக்காது, எனும் எண்ணத்தோடு முன்னேறிட தவித்தான்.

 

ஆனால் ஸோம்பிக்களோ இரை கிடைத்த மகிழ்ச்சியில், ரத்தம் சொட்டும் தனது நீண்ட கோரைப் பற்களைக் காட்டி வாயைப் பிளந்தபடி அவனருகில் வந்தன. சடுதியில் சுதாரித்த கதிர் தனது துப்பாக்கியின் பின் முனையால் ஒரு ஸோம்பியின் வாயினை குத்தி கிழித்தான். அதை எதிர் வரும் ஸோம்பிக்களின் மீது தள்ளிவிட்டுவிட்டு அருகிலிருந்த சுவற்றின் ஜன்னல் மீது ஏறி தாவி குதித்தான்.

 

அந்த முயற்சி நல்ல பலன் தந்தது… தொடர்ந்து அதே முறையில் ஒரு ஸோம்பியை தனது கத்தியால் குத்திக் கொல்வதும், அதை எதிரில் இருக்கும் மற்ற ஸோம்பிக்கள் மேலே தூக்கி எறிந்துவிட்டு தாவிக் குதித்து முன்னேறிச் செல்வதுமாய் இருந்தான். அடுத்த சில நொடிகளிலேயே அவன் கண்களுக்கு சக்திகள் இருக்கும் குன்று புலப்படத் தொடங்கியது.

 

குன்றினை கண்டவுடனேயே வீறுகொண்டு தன் வழியிலிருந்த ஸோம்பிக்களை அடித்து நொறுக்கிய கதிர், மிக விரைவாகவே அவ்விடத்தை அடைந்துவிட்டான். அவன் குன்றின் மீது ஏற துவங்கியதுமே, அவனைப் பின்தொடர்ந்து வந்த ஸோம்பிக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து பின் வாங்கத் துவங்கின.

 

வெற்றிப் புன்னகையோடு விருவிருவென மேலே ஏறிய கதிர், குன்றின் உச்சிக்கு வந்து பார்த்தான். அங்கே ஏற்கனவே இரண்டு சக்திகள் எடுக்கப்பட்டிருந்தது.

 

தொடரும்…

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

ஆடுகளம் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

Advertisements