ஆடுகளம் 10 (4)

பத்து பேரும் அறிமுகம் செய்து முடித்ததும் வெங்கட் கேமராக்கள் மூன்றையும் நிறுத்தி விட்டு, “அவ்ளோதான்… அடுத்து உங்க எல்லாருக்கும் அரை மணி நேரம் பிரேக். பதினஞ்சு நிமிஷம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம், பதினாறாவது நிமிஷம் எல்லாரும் ரெண்டாவது ஹால்ல அசெம்பிள் ஆயிடுங்க, ஸ்டூடியோல இருந்து அடுத்த தகவல் வந்ததுமே நீங்க விளையாட ஆரம்பிக்கனும்…” என்றான்.

 

அனைவரும் கலைந்து செல்கையில் வெங்கட், “துருவ்… இங்க வாப்பா…” என்றான்.

 

துருவ் வெங்கட்டின் அருகில் வந்து மிகமிக எதார்த்தமாய், “என்ன சார்?” என்றான்.

 

அவன் முகத்தில் இருந்த தெளிவும், குரலில் இருந்த தைரியமும் வெங்கட்டின் மனதினை அசைத்துப் பார்த்தது. சிறுவன் என்பதால் வெங்கட் முடிந்தவரையில்  தனது குரலை கனிவாக வைத்துக் கொண்டு, “முதல்லையே தெளிவா சொன்னேன், இருந்தும் நீ ஏன் இப்டி செஞ்ச துருவ்?” என்றான்.

 

துருவ்வோ தன்னிலையிலிருந்து சற்றும் தளராமல், “என்னப்பத்தி சொல்றதுக்கு இன்னும் நேரம் வரல சார்…” என்றுவிட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

 

சில நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது ஹாலில் அனைவரும் ஒன்று கூடத் தொடங்கினர். வெங்கட் ஒவ்வொருவருக்கும் மைக்குடன் கூடிய விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டை எடுத்து தந்தான்.

 

அதை கையில் வைத்து பார்த்துக் கொண்டு பேந்த பேந்த விழித்த அதிதியின் அருகில் அமர்ந்த துருவ், ‘நான் இருக்கின்றேன் நீ கவலைப்படாதே…’ என்று அவள் கைகளைப்பற்றி சமாதானம் செய்தான்.

 

வெங்கட், “எல்லாரும் ஹெட் செட்ட ஆன் பண்ணி உங்க தலையில மாட்டிக்கோங்க. இந்த கேம்ம நீங்க எல்லாருமே ஒண்ணா, ஒரே நேரத்துல விளையாடப் போறீங்க. உங்களுக்குள்ள நீங்க பேசிக்க வசதியா மைக் வச்ச ஹெட்செட் தந்திருக்கோம்” என்றதும் பத்து பேரும் தங்களுடைய ஹெட்செட்டை ஆன் செய்து தலையில் மாட்டிக் கொண்டனர்.

 

வெங்கட், “சரியா அஞ்சு நிமிஷத்துல ட்ரஷர் ஹண்ட் கேம் ஆக்டிவேட் ஆகும். விளையாட்டோட ரூல்ஸ் எல்லாமே நீங்க கேம் ஆரம்பிச்சதும் உங்க ஸ்கிரீன்ல தெரியும். ஆல் த பெஸ்ட் மக்களே, இந்த போட்டில நீங்க ஜெயிக்கணும்னு நெனச்சு விளையாடினா, கண்டிப்பாக ஜெயிக்கலாம். உங்க தைரியம் மட்டும்தான் உங்களுக்கு துணை, எல்லாரும் நல்லா விளையாடுங்க…” என்றான்.

 

வெங்கட் சொன்னதைப் போலவே அனைவரும் தங்களைத் தயார் செய்து கொண்டு போட்டி ஆரம்பிக்கும் நொடிக்காக காத்திருந்தனர். நான்கு நிமிடங்களும் நான்கு யுகங்கள் போல கரைய, ஐந்தாவது நிமிடம் அவர்களின் திரை ஒளிரத் தொடங்கியது.

Advertisements

அந்நியன் திரைப்படத்தில் வருவது போன்ற, கருப்பு புகைக்குள் இருந்து முகமூடி அணிந்த எலும்புக்கூடு ஒன்று முன்னால் வந்து, “வெல்கம் டு ட்ரஷர் ஹண்ட்” என்று வரவேற்றது.

 

முகமூடிக்கு இடையே தெரிந்த அந்தக் கோரமான முகத்தினைக் கண்டதற்கே மிரண்ட அதிதி, தன் கைகளோடு கைகள் கோர்த்திருந்த துருவின் விரல்களை இன்னும் இறுகப் பற்றிக்கொண்டாள். கேம்மினுள் நுழைந்ததும் அனைவரது பெயரும், அவர்களுக்குரிய எண்ணும் ஒளிர்ந்தது. அவரவர் எண்ணை தேர்வு செய்து விளையாட்டிற்கு நுழைந்தனர்.

 

ட்ரஷர் ஹண்ட்டின் முதல் நிலை போட்டி ஆரம்பித்தது. வெப்பக் காற்று வீசும் பாலை வனத்தின் நடுவில் அமைந்திருந்தது அச்சிறு கிராமம். அக்கிரமத்தைச் சுற்றிலும் மரப் பலகையாலான காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு இருந்தது. பத்து பேரும் ஒருவர் பின் ஒருவராக அந்த காம்பவுண்டின் வாயில் முன்பு தோன்றத் தொடங்கினர். அனைவரும் வந்த பிறகு ஆட்டத்தின் விதிமுறைகள் வர ஆரம்பித்தது.

 

‘நீங்கள் இப்போது ஸோம்பிகள் (zombies) உலவும் ஊரினுள் நுழைய போகின்றீர்கள். உங்களுக்கான இலக்கு ஊரின் மறு எல்லையில் இருக்கும் கிணறு. ஊரைப் பற்றிய சிறிய மேப் ஒன்று உங்கள் திரையின் ஓரத்தில் தெரியும். அதை வைத்து எவ்வழியில் சென்றால் இலக்கை அடைய முடியும் என நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.’

 

‘ஊரின் மையத்தினில் அமைந்திருக்கும் சிறு குன்றின் மீது ஏறி அங்கிருக்கும் ஐந்து சக்தியில் ஒன்றை அடைய வேண்டும். குன்றினை முதலில் அடைபவர்களுக்கே முன்னுரிமை. நீங்கள் இங்கு அடையும் சக்தி விளையாட்டின் இறுதி நிலை வரையிலும் உங்களோடு வரும். சக்தியினை சாமர்த்தியமாக பயன்படுத்தினால், ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் சுலபமாக முன்னேறிச் செல்ல முடியும்.’

 

‘வழியில் எதிர்ப்படும் ஸோம்பிகள் அத்தனையையும் நீங்கள் உங்களது முதுகுப் புறத்தில் இருக்கும் துப்பாக்கியையும், இடுப்பிலிருக்கும் கத்தியையும் கொண்டு தாக்க வேண்டும். ஒரே அடியில் வீழ்த்துதல், சில நிமிடங்கள் சண்டையிட்ட பிறகு வீழ்த்துதல் என்று தாக்குதலில் தகுதிக்கேற்ப உங்களுக்கான மதிப்பெண் உயரும்.’

 

‘ஒருவேளை ஸோம்பிக்கள் உங்களை கொடூரமாய் கடித்து குதறிவிட்டால் உங்களுக்கான ஆயுளில் ஒன்று குறைவதோடு, குன்றினை நீங்கள் அடைவதற்கும் கால தாமதமாகும். அவ்வாறு நேர்ந்தால் உங்களுக்கான சக்தி கிடைக்காமல் போய்விடக்கூடும்.’

 

‘விளையாட்டில் உங்களுக்கு விருப்பமான உருவத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம், ஆனால் ஒருமுறை தேர்ந்தெடுத்து விட்டால் அந்த உருவம் தான் விளையாட்டின் இறுதி வரையில் உங்களுக்கு தரப்படும். இனி நீங்கள் உள்ளே செல்லலாம்…’

 

விதிமுறைகள் முடிவடைந்ததும் விதவிதமான உருவங்கள் முன்னால் வரத்தொடங்கியது. அனைவரும் தனக்கான உருவத்தை தேர்வு செய்ததும், மரப்பலகை கதவு திறந்து கொண்டது. நீண்டு கிடந்த அந்த முதல் தெருவினுள் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் யாருமே இல்லை. கதிர், சந்துரு, துருவ், லக்ஷிதா நால்வரும் முன்னால் செல்ல ஏனையோர் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

அடுத்த பக்கம்

Advertisements