ஆடுகளம் 10 (3)

“அது ஏன்னா, வெளியில நடக்கிற விஷயம் எதுவும் உங்களோட மனச பாதிக்கக் கூடாது, அதுக்கு உங்களுக்கு வெளியில நடக்கறது எதுவும் தெரியக் கூடாதுடா. ஒவ்வொரு தடவையும் நீங்க யார் கூட பேசுறீங்க, என்ன பேசுறீங்கன்னு வேவு பாக்குறதுக்கு நான் உங்க பக்கத்துலயே நின்னுட்டு இருக்க முடியாதுல. அதனாலதான் மேனேஜ்மென்ட் எனக்கு கேமராவ யூஸ் பண்ண பிராக்டிஸ் கொடுத்து உங்க கூட அனுப்பி வச்சுட்டாங்க.”

 

வினோத், “அப்போ க்ளோஸப் ஷாட், பில்டப்பு, பேக்ரவுண்ட் மியூசிக் எதுவுமே கிடையாதா சார்?”

 

“எல்லாமே உண்டு, ஆனா இங்க இல்ல ஆதித்யா சேனலோட ஸ்டூடியோல நடக்கும்…”

 

ஒருசிலர், “புரியலியே…” என்றனர்.

 

வெங்கட், “கிரிக்கெட் பார்த்திருக்கீங்கள்ல… அது மாதிரியே இங்கேயும் ரெண்டு இடத்துல ஷூட்டிங் நடக்குது. நீங்க விளையாடுறத இங்கிருந்து ஷூட் பண்ணுவோம், ஷோ பத்தி பேசுறதுக்கும், பேக்ரவுண்ட் மியூசிக் குடுக்குறதுக்கும் ஸ்டூடியோவ யூஸ் பண்ணிக்கப் போறோம்.”

 

லக்ஷிதா, “ஸ்டூடியோல ஷோ எப்போ சார் ஸ்டார்ட் பண்றாங்க?”

 

“உண்மைய சொல்லனும்னா நம்ம ப்ரோக்ராம் ஆரம்பிச்சு ஒரு மணி நேரம் ஆயிடுச்சும்மா. வியூவர்ஸ்ட்ட இருந்து செம ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்குனு தகவல் வந்துச்சு…”

 

வினோத், “ப்பா… உங்க பாஸ் உங்கள விட வெவரம்தான் சார்…”

 

“இல்லைனா உங்கள மாதிரி பொதுமக்கள் இருக்குற ஊர்ல, அவரு இத்தன கம்பெனிஸ கட்டி காப்பாத்த முடியுமா? தொணத்தொணனு பேசிட்டே இருக்காம எனக்கு வந்து ஹெல்ப் பண்ணுங்களேன்டா…”

 

“இதோ வர்றோம் பாஸ்…” என்று அர்ஜுனும் வினோத்தும் எழுந்து ஓடி வந்தனர். கூடவே நகுலும் எழுந்து வந்து இன்ன பிற கேமராக்களை எல்லாம் வெங்கட் சொல்லும் இடங்களில் வைக்க உதவி செய்தான். ஸ்டேஜில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் அனைத்தும் ஒளிரத் தொடங்கியதும், அவ்விடம் திடீர் திருவிழா போன்று களைகட்டத் துவங்கியது.

 

அனைத்தையும் ஒரு முறை சரிபார்த்து முடித்ததும் வெங்கட் தனது காதினில் ஹெட்செட் போன்ற ஏதோ ஒன்றை மாட்டி, “வீ ஆர் ரெடி டீம்…” என்று தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாராக காத்திருந்த தனது குழுவிற்கு தகவல் தெரிவித்தான்.

 

அங்கிருந்து பதில் வந்ததும் வெங்கட் போட்டியாளர்களை பார்த்து, “எல்லாமே ஓகே, இப்போ நீங்க பத்து பேரும் ஒருத்தர் பின்னால ஒருத்தரா ஸ்டேஜ் மேல ஏறனும். எல்லாரும் ஸ்டெப்ஸ் பக்கத்துல  வரிசையா நில்லுங்க, நான் ரெடினு சொன்னதும் மேல ஏறனும்…”

 

அர்ஜூன், “இடது பக்கம் ஏறனுமா வலது பக்கம் ஏறனுமா?…”

 

வெங்கட், “ஆங்… ஏந்தலையில ஏறு…”

 

“ஓகே சார்…” என்று வெங்கட்டை நெருங்கினான்.

Advertisements

வெங்கட், “அடிங்கொய்யால, போய் வரிசையில் நில்லடா…” என்றதும் அவன் ஓடிப்போய் தயாராக இருந்த வரிசையின் நடுவில் நுழைந்து கொண்டான்.

 

அர்ஜூன், “கோபப்பட்டு என் முகத்த ஷூட் பண்ணாம விட்ராதீங்க சார், எதுவா இருந்தாலும் நாம அப்புறமா பேசித் தீர்த்துக்கலாம்…” என்றான்.

 

“சரி சரி, நேரா நில்லு. ப்ளேயர்ஸ், நான் சிக்னல் கொடுத்ததும் நீங்க எல்லாரும் இதே வரிசையில அழகா, ஸ்டைலா ஒருத்தர ஒருத்தர் இருக்காரு ஸ்டேஜ்ல ஏறுங்க. நான் அடுத்த சிக்னல் தந்ததும் ஒவ்வொருத்தரா அங்க இருக்குற மைக்கு பக்கத்துல வந்து உங்களப் பத்தி சுருக்கமா சொல்லணும். தயவுசெஞ்சு அன்னைக்கு எங்கிட்ட சொன்ன மாதிரி எக்குத்தப்பா எதையாவது சொல்லி தொலைக்காதீங்க, இப்போ நீங்க சொல்லப் போறத உலகம் மொத்தமும் லைவ்வா பார்க்கும். எனி டவுட்?”

 

“நோ சார்…” என்றனர் அத்தனை பேரும்.

 

“நான் கேமராவை ஆன் பண்ணப் போறேன். அர்ஜூன் ஓவரா பல்ல காட்டாத… நகுல், ஜேம்ஸ் சார் இரண்டு பேரும் தலையில தொப்பி போட வேண்டாம், கேமரால உங்க முகம் சரியா தெரியல… அம்மாடி கோமல் தயவு செஞ்சு இப்பவாவது கொஞ்சம் சிரிம்மா, மத்தவங்களும் கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருக்க முயற்சி பண்ணுங்க. கெட் ரெடி… ஒன், டூ, த்ரீ, ஸ்டார்ட்….” என்றான்.

 

அடுத்த நொடியே உலகம் முழுவதும் இருந்த ஆதித்யா தொலைக்காட்சியின் பார்வையாளர்களுக்கு நமது போட்டியாளர்களின் முகம் தெரியத் தொடங்கியது. வண்ண விளக்குகளின் பிரகாசத்தில் மினுமினுக்கும் மின்மினி போன்ற விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களுடன் போட்டியாளர்கள் மேடைமீது வந்து நின்றனர்.

 

வெங்கட் விரல் மூலம் முதலில் நிற்கும் போட்டியாளருக்கு சிக்னல் கொடுத்ததும், ஒவ்வொருவரும் வரிசையாக வந்து தங்களைத் தாங்களே முறையாய் அறிமுகப்படுத்திக் கொண்டனர். கதிர், சந்துரு உட்பட அனைவரும் சரியாக நடந்து கொள்ள, ஒருவன் மட்டும் அன்று பாடிய அதே பல்லவியை இன்றும் பாடினான்.

 

துருவ் விரைப்பாக முன் வந்து, “ஐ ஏம் துருவ்…” என்றுவிட்டு தன் இடத்திற்குத் திரும்பி நடக்கத் தொடங்கினான்.

 

வெங்கட் சைகையால், ‘வேற ஏதாவது சொல்லு துருவ்…’ என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இறுக்கமாய் நின்று கொண்டான். இதற்குமேல் இவனோடு மல்லுக்கட்டுவது வீண் என நினைத்த வெங்கட் அடுத்த போட்டியாளரை வரச்சொல்லி சிக்னல் தந்து விட்டான்.

அடுத்த பக்கம்

 

Advertisements