ஆடுகளம் 10 (2)

வினோத், “உங்க அப்பத்தா பரவாயில்ல சார், எங்க அம்மாச்சி எப்பபாரு என்ன, ‘நீ எல்லாம் கழுதை மேய்க்க கூட லாயக்கு இல்லடா…’னு சொல்லும்…” என்றதும் அவர்களின் சிரிப்பொலி கடல் அலைகளுக்கு போட்டியாய் எதிரொலித்தது.

 

நேரம் மாலை ஐந்து மணி நெருங்கியது முதலே வெங்கட் அனைவரையும் அவசரப் படுத்த தொடங்கினான். ஆண்கள் அனைவரும் சடுதியில் தயாராகி வந்துவிட்டனர். உலகம் முழுவதும் பார்க்க போகின்ற அறிமுக விழா என்பதால் அதன் தகுதிக்கேற்ற ஒப்பனைக்காக, பெண்களுக்கு சற்று கால அவகாசம் அதிகமாகவே தேவைப்பட்டது.

 

அதிதி தனது கயல்விழி கண்களுக்கு கருப்பு மை தீட்டி, ஆரஞ்சு நிற இதழ்களுக்கு ரோஜா வண்ணம் வரைந்து, அந்தி வானம் நிறம் கொண்ட பொன் வதனமதில் செவ்வண்ணம் பூசி, அசைந்தாடி நடைபயிலும் தோகை மயில் போன்றதொரு தோரணையில் இருந்தாள். அலங்காரம் முடித்து பெண்கள் மூவரும் மாடியிலிருந்து கீழே இறங்கி வரத்தொடங்கினர்.

 

அதிதி தனது பால் வண்ண மேனியின் நிறத்திற்கு பொருத்தமாகவும், அதேநேரம் பார்ப்பவரின் கண்களுக்கு சற்றும் உறுத்தாத வகையிலும் தேர்ந்தெடுத்திருந்த முத்து மணிகள் நிறைந்த லெஹெங்கா ஆடையினை, கால் தடுக்காத படி லேசாக தூக்கி பிடித்தபடி நடந்து வந்தாள். விண்ணிலிருந்து இறங்கி வரும் தேவதை போன்ற பெண்ணவளைக் கண்டு, அத்தனை கண்களும் இமைக்க மறந்து நின்றுவிட்டன.

 

அந்தப் பேரழகு பெட்டகத்தை கண்களால் ஒரு முறை கண்டவர் எவரும், எவ்வளவு முயன்றும் தனது தலையை வேறு திசையில் திருப்பி இயலவில்லை. என்னதான் லக்ஷிதாவும் கோமலும் ஒப்பனையில் அழகாக இருந்தாலும், உச்சி வெயிலில் மின்னும் கோபுர கலசம் போன்ற அதிதியின் அருகில், அவர்களின் அழகு சற்றே மட்டுப்பட்டது போலத்தான் காட்சியளித்தது.

 

நாடு முழுவதிலும் இருந்து எத்தனையோ அழகிகள் ராஜ வாழ்க்கை நிகழ்ச்சியின் தேர்விற்காக கலந்து கொண்டிருந்தனர். இருந்தும் எதற்காக அதிதி எனும் பேரழகியை மட்டும் நமது நிகழ்ச்சிக்கு கட்டாயம் வேண்டுமென ஆதித்யா விடாப்பிடியாக முரண்டு செய்தார் என்று இப்போதுதான் வெங்கட்டிற்கு புரிந்தது.

 

சாதரணமானவர்களே அதிதியின் அழகினில் சித்தம் கலங்கிய நிலையில் இருக்கும் பொழுது, நம் காதல் மன்னன் அர்ஜுனைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? அவளைக் கண்டதும் அர்ஜுன் தன் கணீர் குரலில்,

 

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென தவித்திருந்தேன்…

அதை இன்றுதான் கண்டுபிடித்தேன்…

கண்ணே உன்னை காட்டியதால்

என் கண்ணே சிறந்ததடி…

உன் கண்களை கண்டதும்

இன்னொரு கிரகம்,

கண்முன் திறந்ததடி…

Advertisements

என்று அனைவருக்கும் கேட்கும்படி சத்தமாக பாடினான்.

 

அந்தப் பாடலை கேட்டு ஒருசிலர் சிரித்து விட, ஏற்கனவே நாணத்தினால் முகம் சிவந்திருந்த அதிதி, “சும்மா இருங்கப்பா… நானே இவ்ளோ பெரிய டிரஸ்ஸ தேவையில்லாம செலக்ட் பண்ணிட்டேனோன்னு கவலப்பட்டுட்டு இருக்கேன். நீங்களும் வேற கலாய்ச்சீங்கனா பேசாம போய் நார்மல் சுடிதார் போட்டுட்டு வந்திடுவேன்” என கெஞ்சலும் மிரட்டலும் கலந்து பேசினாள்.

 

வெங்கட், “அட அவங்க சும்மா விளையாட்டுக்கு உன்ன சீண்டுறாங்க அதிதி, உண்மையிலேயே நீ இந்த ட்ரெஸ்ல ரொம்ப அழகா இருக்கிற. கொஞ்ச நேரம்தான, இதுவே இருக்கட்டும் அதிதி.”

 

அதிதி, “ஓகே சார்…” என்றாள்.

 

வெங்கட், “எல்லாரும் வந்தாச்சுல, டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. வெளியில இருக்குற ஸ்டேஜ்க்கு முன்னால போய் உட்காருங்க. நான் பின்னாலேயே வரேன், மூவ் ஃபாஸ்ட்…” என்று விரட்ட தொடங்கினான்.

 

ஆதவனின் வெளிச்சம் மங்கும் மாலை நேரத்தில், ஆளில்லாமல் அனாதையாக நின்று கொண்டிருந்த ஸ்டேஜ் போட்டியாளர்கள் பத்து பேராலும் ஆக்கிரமிக்கப்பட்டது. மூன்று கேமராக்கள் கொண்ட பேக்கையும், அதற்கான ஸ்டாண்டுகளையும் தூக்கிக் கொண்டு வந்தான் வெங்கட். முதலாவது கேமராவை ஸ்டேஜுக்கு நேரான இடத்தில் மண்ணில் ஊன்றி நிறுத்தினான்.

 

வினோத், “என்ன சார், நீங்கதான் ஷூட் பண்ண போறீங்களா?”

 

“ஆமாடா அதையும் என் தலையிலேயே கட்டிட்டாங்க…”

 

அர்ஜூன், “அட என்ன சார்? இந்த ப்ரோக்ராம்க்காக கோடிக் கணக்குல செலவு பண்றீங்க, லைவ் டெலிகாஸ்ட்க்கு ஏத்தமாதிரி ஒரு நல்ல கேமராமேன் கிடைக்கலையா உங்க பாஸுக்கு?”

 

“நக்கலு….”

 

அர்ஜூன், “லைட்டா…”

 

“வாய் மட்டும் இல்லைனா உங்க ரெண்டு பேரையும் நாய் கவ்விட்டு போயிருக்கும்டா…”

 

அர்ஜூன், “பின்ன என்ன சார், நான் பாரதிராஜா ரேஞ்சுக்கு ஒரு கேமரா மேனும், எங்கள இன்டர்வியூ எடுக்குறதுக்கு ஒரு அழகான பொண்ணும் வரும். எங்களோட வீர தீர சாகசங்களையெல்லாம் பாராட்டி பேசும்னு நினைச்சுட்டு ஆசையா இருந்தேன். நீங்க இப்படி என் ஆசையில மண்ணை அள்ளி போட்டுட்டீங்களே, ஏன் சார் இப்படி செஞ்சீங்க?…”

அடுத்த பக்கம்

Advertisements