ஆடுகளம் 10

அன்றைய நாள் பொழுது புலர்ந்ததில் இருந்தே துருவ் தவிர ஏனைய போட்டியாளர்கள் அத்தனை பேரும் அதீத படபடப்போடு காணப்பட்டனர். அர்ஜூனும் வினோத்தும் வெளியில் சிரித்து பேசிக் கொண்டிருந்தாலும், அவர்களின் மனதிலும் முதல் நிலை எப்படி இருக்குமோ என்ற கேள்வி, சுண்டெலி போல உள்ளுக்குள் உருட்டிக் கொண்டே இருந்தது.

 

நேரம் மதியத்தை நெருங்கும் பொழுது வீட்டின் வெளிப்பக்கம், நிகழ்ச்சியின் துவக்க விழாவிற்காக ஸ்டேஜ் அமைக்கும் பணி துரிதகதியில் ஆரம்பித்தது. அந்த பணியாளர்கள் மேடைக்கான நவீன அலங்கார பொருட்கள், பூத்தோரணங்கள், அதீத வெளிச்சம் பரப்பும் மின் விளக்குகள் என்று அனைத்தையும் முன்பே வேறு ஓர் இடத்தில் முழுதாய் தயார் செய்து கொண்டு வந்திருந்தனர்.

 

இப்போது இங்கே அவற்றை ஒருங்கிணைத்து பொருத்தும் வேலையை மட்டும்தான் அப்பணியாளர்கள் செய்து கொண்டிருக்கின்றனர், என்பதை நமது போட்டியாளர்கள் பார்த்ததுமே புரிந்து கொண்டனர். வெறும் மூன்று மணி நேரத்திற்குள்ளேயே மேடை அமைக்கும் பணி முற்றிலுமாய் நிறைவடைந்துவிட்டது.

 

அந்த வேலைக்கு வந்தவர்கள் அத்தனை பேரும் பங்களாவை விட்டு வெளியேறிச் சென்ற பிறகே, நமது போட்டியாளர்கள் மேடையை அருகில் சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டனர். தப்பித்தவறி கூட வெளியாட்களுடன் போட்டியாளர்கள் யாரும் எதைப் பற்றியும் பேசிவிடக் கூடாது என்பதனால் இப்படி ஓர் விதிமுறை….

 

நீல வண்ணக் கடலையும், கடல் வண்ண வானத்தையும் பின்புலமாகக் கொண்டிருந்த அந்த கடற்கரையில், அதே வண்ண திரைச் சீலைகள் கொண்டு அமைக்கப் பட்டிருந்தது அந்த அழகிய மேடை. பார்வையாளர்கள் கிடையாது என்பதால் போட்டியாளர்களுக்கு மட்டும் பத்து தற்காலிக இருக்கைகள் மேடை முன்னால் போடப்பட்டு இருந்தன.

 

முதல் நாள் முழுவதும் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்ததனால் வெளியே செல்ல அனுமதி கிடைத்ததும், கூண்டை விட்டு வெளியேறும் கிளிகள் போல ஆசை ஆசையாக வெளியே வந்தனர் பத்து பேரும். ஆளுக்கு ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து, தத்தமது தற்காலிக நண்பர்களோடு அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.

 

அவர்களை கண்காணிக்கும் விதமாய் வெங்கட்டும் உடன் வந்து மேடை மேல் காலாட்டியபடி அமர்ந்து கொண்டான். இதுவரையில் விளையாட்டை நினைத்து அவர்களின் மனதிலிருந்த பதட்டமான சூழ்நிலை, இப்பொழுது கொஞ்சம் மாறி இருந்தது. உடனே அர்ஜுனனுக்கும் வினோத்திற்கும் இயல்பிலேயே உடன் பிறந்த குறும்புத்தன குணம் வெளிவரத் தொடங்கிற்று.

Advertisements

அர்ஜூன், “வெங்கட் ஜி, எனக்கு உங்கள பார்த்தா ஒன்னு தோணுது, சொல்லட்டா???” என்றான் குறும்புச் சிரிப்போடு.

 

வெங்கட், “வேண்டாம்னா மட்டும் விட்டுறவா போற? சொல்லும்… சொல்லித் தொலையும்…” என்றான் இம்சை அரசன் திரைப்படத்தில் வரும் வார்த்தைகளைப் போல்.

 

அர்ஜூன், “இப்போ உங்கள பாக்குறதுக்கு அச்சு அசலா எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மாதிரியே இருக்கீங்க ஜி. அவரும் இப்படித்தான், தினமும் சாயங்காலம் எங்கள கிரவுண்ட்ல வரிசையா உட்கார வச்சு கட்டாயப்படுத்தி படிக்கச் சொல்லுவாரு. அந்த ஒரு மணி நேரமும் உங்கள மாதிரியே என்னவிட்டு கண்ணெடுக்காம உர்ருனு பாத்துக்கிட்டே இருப்பாரு. தப்பித் தவறி நான் புக்கவிட்டு தலையை வேற பக்கம் திருப்பினேன்னா தர்ம அடிதான்…”

 

“ஹா.. ஹா.. உன் முகராசி அந்த லட்சணத்துல இருக்குதுடா…”

 

உடனே வினோத்தும், “மீ டூ அண்ணா… நான் காலேஜுக்கு போக புடிக்கலைன்னு தான் இங்க வந்தேன், இங்கேயும் காலேஜ் அட்மாஸ்பியர் மாதிரியே கொண்டு வந்துட்டீங்க. வெங்கட் சார் கையில் ஒரு புக்க கொடுத்துட்டா, அப்டியே இது என் கிளாஸ் ரூம் தான்…” என்றான்.

 

அர்ஜூன், “தேங்க்ஸுடா தம்பி, இங்க வேற யாராவது மீ டூ சொல்ற ஐடியால இருக்கீங்களாப்பா?”

 

வெங்கட், “கருமம் புடிச்சவனே… பொம்பள புள்ளைங்க இருக்கிற இடத்தில ஏன்டா டபுள் மீனிங்குல பேசி தொலைக்கிற?”

 

அர்ஜூன், “என் வார்த்தையில் பிழையேதும் இல்லை, வேண்டுமானால் எனதருமை தாய்க் குலங்களை கேட்டுப்பாருங்கள் மன்னா…”

 

“போதும் மூடு…”

 

வினோத், “ஏன்சார் எங்க அண்ணன திட்டுறீங்க? உங்க நெஞ்ச தொட்டு சொல்லுங்க, உங்களுக்கு இந்த சிச்சுவேஷன பார்க்கும் போது எதுவும் தோணலையா?”

 

வெங்கட், “தோணுது…”

 

அர்ஜூன், “என்ன தோணுது சார்?”

 

“எனக்கு பனிரெண்டு வயசு இருக்கும்போது, என்னோட அப்பத்தா சொன்னதெல்லாம் இப்ப தோணுது…”

 

வினோத், “என்ன சொன்னாங்க சார்?” என்றான்.

 

“நான் அந்த வயசுல அடிக்கடி ஸ்கூல் போக மாட்டேன்னு அழுது அடம் பண்ணுவேன். அதுக்கு எங்க அப்பத்தா, ‘நீ ஒழுங்கா படிக்கலைனா மாடு மேய்க்கத்தான்டா போவ…’ன்னு சொல்லி மிரட்டும், அதுக்கு பயந்துதான் நான் ஒழுங்கா படிச்சேன். ஆனா கடைசில கார்ப்பரேட் கம்பெனில பெரிய வேலை கிடைச்சும், என்ன மாடு மேய்க்க விட்டுட்டானுங்களே…” என்றதும் மொத்த கூட்டமும் வெங்கட்டின் பாவமான முகத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது.

அடுத்த பக்கம்

Advertisements