ஆடுகளம் 1 (2)

மரணிப்பதற்கு முதல் நாள் வரைக்கும் காய்ச்சல் தலைவலின்னு கூட படுக்காத அளவு ஆரோக்கியமானவர்கள், அந்த பத்து பேரும். அப்படிப்பட்டவர்கள் திடீரென ரத்த அழுத்தம் அதிகமாகி ஹார்ட் அட்டாக் வந்து சாகுறாங்கன்னு சொன்னா, அதுக்கு காரணம் அவங்க தன் வாழ்க்கையோட கடைசி நேரத்தில விளையாடிய அந்த ‘ட்ரஷர் ஹண்ட்’ கேம் தான்னு சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.

இதுல என் கட்சிக்காரர்கள் இட்டு கட்டிப் பொய் சொல்வதற்கும், பணம் பறிக்க முயல்வதற்கும் எந்தவிதக் காரணமும் தேவையே இல்லை என்பதை உயர்திரு மல்கோத்ரா அவர்களுக்கு நான் இறுதிமுறையாக தெளிவு படுத்துகின்றேன்.”

மல்கோத்ரா, “யுவர் ஆனர்,  விளையாட்டு என்பது ஒரு மனிதனோடு மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய பொழுது போக்கு. இப்போ இருக்கிற வாழ்க்கைச் சூழ்நிலையில, சின்ன குழந்தைகள் கூட தங்களுக்கான விளையாட்டு நேரத்தையும் ஓய்வு நேரத்தையும் தாங்களே முடிவு செய்றாங்க. அப்படி இருக்கும்போது இளைஞர்கள், தங்களுக்கான ஓய்வு நேரத்தையும் விளையாட்டு நேரத்தையும் மத்தவங்களுக்காக மாற்றி அமைக்க தயாராக இல்லை.

அந்தக் குறையை நிவர்த்தி செய்யத் தான் போன நூற்றாண்டிலேயே வீடியோ கேம் அப்படிங்கிற ஒரு கண்டுபிடிப்பு இந்த உலகத்திற்கு வந்தது. வருடங்கள் நகர நகர ஒவ்வொரு பயன்பாட்டுப் பொருட்களும் எப்படி நவநாகரீகமாக மாறுச்சோ அதே மாதிரிதான் இந்த கணிணி விளையாட்டும் உருமாறி இருக்கு. நம்மளோட சின்ன வயசில 2d 3dன்னு ஆரம்பிச்ச விளையாட்டுக்கள் எல்லாம், இப்போ 9dல வந்து நிக்குது. எந்த ஒரு கேம் டெவலப்பர் நிறுவனமும் என்னுடைய விளையாட்டை நீ விளையாடித்தான் ஆகணும்னு பொதுமக்கள கட்டாயப்படுத்துவது கிடையாது.

நவீன காலத்தின் மாற்றத்திற்கு ஏற்பவும், தற்போதைய மக்களின் மனோநிலை மாற்றத்திற்கு ஏற்பவும் அவங்க புதுப்புது விளையாட்டுக்கள உருவாக்குறாங்க, அதுதான் அவங்களோட வேலையே. நீங்க ஏன் இப்படி ஒரு விளையாட்டை உருவாக்குறீங்கன்னு நாம நிறுவனத்தை கேள்வி கேட்கிறது அபத்தம் சார். அப்டி கேட்குறதுதான் நியாயம்னா நாம நிறுவனத்தை மட்டும் கேள்வி கேட்காமல், தரவிறக்கம் செய்த அந்த பத்து கோடி பேரையும் கூப்பிட்டு கேள்வி கேட்க வேண்டி வரும். அந்த பத்து கோடி பேர்ல பத்து பேர் மட்டும் செத்துட்டாங்க, அதுக்கு காரணம் எங்களுடைய கேம் அப்டினு நீங்க விதண்டாவாதம் செஞ்சா, மீதம் இருக்கிற மக்கள் எல்லாரும் நல்லாத்தானே இருக்குறாங்கனு நாங்களும் எங்க பக்கத்து பதிலை சொல்லலாம் இல்லையா…

எதிர்க்கட்சி வக்கீல் பேச்சுப் போக்கில ஒரு விஷயம் சொன்னார். ஆறு மாசம் முன்னால வரைக்கும் நல்லா இருந்தவங்க அப்படின்னு… அப்போ இடைப்பட்ட ஆறு மாசத்தில அந்த பத்து பேருக்கும் ஏதாவது ஒரு தனிப்பட்ட மன அழுத்தம் வந்து இருக்கலாம். இறந்து போன அனைவருமே இளைஞர்கள், நம்ம நாட்டு இளைஞர்களைப் பத்தி நமக்கு நல்லா தெரியும். ஒரு சிலரைத் தவிர அனேகம் பேர் வெகு சுலபத்தில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். அதுக்கு அவங்கள தப்பு சொல்லவும் முடியாது, அவங்க வயசு அப்படி. வெளி உலக அனுபவமும் பக்குவமும் அந்த வயசில அவர்களுக்குக் கிடையாது. காதலையும் நட்பையும் மட்டுமே தங்களுடைய வாழ்நாள் லட்சியம் போல நினைக்கும் இளவயசு, அதை இழந்திடக் கூடாதுன்னு எந்த எல்லைக்கும் போகக்கூடியது தான் அவங்க மனசு. என்னைக் கேட்டா இறந்து போன பத்து பேருமே, அந்த கடைசி நாள் ஏதோ ஒரு மன அழுத்தத்தோடு ட்ரஷர் ஹண்ட் விளையாட்டினை விளையாட தொடங்கி இருந்திருப்பார்கள்.

அதிகமான மன அழுத்தத்தோடு நாம ஒரு வேலையை செய்தால் நிச்சயம் அது தவறாய்த்தான் போய் முடியும். அதுதான் அந்த இளைஞர்களுக்கும் அன்று நிகழ்ந்திருக்கும்… வீட்டிற்கு வெளியே ஏற்பட்ட மன அழுத்தத்தை, விளையாட்டில் தீர்க்க நினைத்து மீண்டும் மீண்டும் கேம் ஆடி இருப்பார்கள், அதனால் அவர்களின் ரத்த அழுத்தம் அளவை கடந்திருக்கும்.”

சிவராமன், “என்ன சார் ஏதோ கை கால் போன மாதிரி ரொம்ப அசால்ட்டா சொல்லிட்டீங்க? சம்பந்தப்பட்ட குடும்பங்கள் இழந்தது அவங்க பெத்து வளர்த்த ஒரு உயிரை சார்… அந்த குடும்பங்களோட எதிர்கால வாழ்க்கையையே ஒரு கேம்மால நீங்க அழிச்சுட்டீங்க… இப்போ நீங்க எவ்வளவு பணத்த கொட்டி கொடுத்தாலும் அவங்களோட இழப்பை உங்களால ஈடுகட்ட முடியாது சார்… நம்ம நாட்டுல ஆம்பள புள்ளைங்களோட கடமை எத்தனை இருக்குதுன்னு தெரியுமா உங்களுக்கு? தங்கச்சிய பத்திரமா பஸ் ஏத்தி விடுறதுல ஆரம்பிச்சு தம்பியை படிக்க வைக்கிற செலவு வரைக்கும் அத்தனையும் அந்த மூத்த பையன் தலையில் தான் வந்து விழும்… உங்களால முடிஞ்சா ஒரு தடவ, ஒரு கம்பெனியின் வாசல்ல போய் நின்னு பாருங்க, அப்போ தெரியும் சார்… வேலை கிடைக்காம வெளியில வர்ற அவனோட நிலமை, அந்த ஊமைக் கதறல எத்தனை வார்த்தைகளால சொன்னாலும் நம்மால முழுசா விளக்க முடியாது. நீங்க…”

மல்கோத்ரா, “கேஸுக்கு சம்பந்தமில்லாத பேச்சுக்களை பேசி எங்களோட நேரத்தையும் நீதிமன்றத்தோடு நேரத்தை வீணாக்காதீர்கள் மிஸ்டர் சிவராமன்.”

சிவராமன், “எது சார் தேவையில்லாத பேச்சு? இந்த கேம் விளையாடினதாலதான் பத்து குடும்பங்களும் அவங்களோட எதிர் காலத்தையே இழந்துட்டு நிக்குது. அத தெளிவா சொல்லத்தான் நான் நமது சமுதாய சூழ்நிலைய பேசினேன். இறந்தவங்க அத்தனை பேரும் இன்னும் ஒன்றிரண்டு வருஷத்துல தன்னோட குடும்பத்தை தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்புல உள்ள பசங்க. இப்போ அந்த குடும்பங்கள் எல்லாம் நிர்கதியாய் நிற்கின்றன. சொல்ல முடியாது, அந்த பத்து பேர்ல ஒருத்தன் நாளைக்கு உலகமே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு பெருசா வந்தாலும் வந்திருப்பான்…

மை லார்ட், இப்போ நீங்க இந்த விளையாட்டை தடை செய்யலைன்னா, இழப்புகள் இன்னும் அதிகமாகும்னு நாங்க ஆணித்தரமா அடிச்சு சொல்றோம். ஒருவேள அப்படி ஆகாதுன்னு நீங்க அனுமதி தந்தா நாளைக்கு இன்னும் பல மரணங்கள் எங்களுக்கு ஆதாரமா உங்க கண்ணு முன்னால வந்து நிக்கும்.”

மல்கோத்ரா, “நாங்க உருவாக்கின ட்ரஷர் ஹண்ட் கேம், தற்கொலைக்கு தூண்டின ப்ளூ வேல் அளவுக்கு பயங்கரமானது கிடையாது. பாக்குறவங்கள முகம் சுளிக்க வைக்கிற அளவுக்கு அசிங்கமான விளையாட்டும் கிடையாது. இது ஒரு சாதாரண ட்ரஷர் ஹண்ட்டிங் மாடல் கேம். இந்த காலத்து பசங்களுக்கு ஏத்த மாதிரி அத நவீனமா செஞ்சத தவிர வேற எந்த தப்பும் செய்யாதவர் என்னுடைய கட்சிக்கார். அவருக்கும் அவருடைய நிறுவனத்திற்கும் அவப்பெயரும், நஷ்டமும் உருவாக்க நினைக்கும் அவருடைய தொழில்முறை எதிரிகளுடைய வேலைதான் இது. எனவே என் கட்சிக்காரருடைய ஒரு ஆண்டு கால உழைப்பிற்கும், நன்மதிப்பிற்கும் எந்தவித கலங்கமும் நேராதபடி நல்லதொரு தீர்ப்பை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் மைலார்ட்…” என்று தன்னுடைய வாதத்தை முடித்தார் மல்கோத்ரா.

அடுத்த பக்கம்

Advertisements