ஆடுகளம் 1

67280639_739266669822738_9129832395086757888_n

பாகம் – 1

காரிருள் மழை மேகங்களின் வரவால் முன்பகல் வேளையானது, முழுதாய் புலர்ந்திடாத அதிகாலையைப் போல் தோற்றம் கொண்டிருந்தது. ஓங்கி உயர்ந்து நிற்கும் சென்னையின் உயர் நீதிமன்றம் வழக்கத்தைவிட அதிகமான காவலர்களாலும் மீடியாக்களாலும், பண மதிப்பு மிகுந்த வாகனங்களின் வருகையாலும் அதீத களேபரத்துடன் காணப்பட்டது.

அதற்கு காரணம் இதுவரை தான் கைவைத்த எதிலும் தோல்வியே காணாத இந்தியாவின் இளம் தொழிலதிபர் ஆதித்யா இன்று இங்கு வருவதால் தான். அவன் சார்பாக வாதாட இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர் ஒருவர் தனது ஜூனியர்கள் புடைசூழ அங்கு தயாராக காத்திருந்தார்.

இன்று நீதிமன்றம் விசாரிக்க போகின்ற முதல் வழக்கே ஆதித்யாவினுடைய வழக்கு தான் என்பதால், நீதிபதியுமே சற்று முன்னேற்பாடாக சொன்ன நேரத்திற்கும் முன்பே வந்து விட்டார்.

சரியாக பத்து மணியாக ஐந்து நிமிடம் இருக்கும் போது நீதிமன்ற வளாகத்திற்குள் இரண்டு வாகனங்கள் நுழைந்தது, அதைக் கண்ட அடுத்த மாத்திரத்திலேயே தின்பண்டத்தை கண்ட ஈ என ஊடகங்கள் அனைத்தும் அந்த வாகனங்களை சூழ்ந்து நின்றது. குண்டு துளைக்காத வெள்ளை நிற காருக்குள் இருந்து அவன் வெளிவருவதற்கு முன்பாகவே, அவனுடைய கட்டுமஸ்தான பாதுகாவலர்கள் முதல் வாகனத்தில் இருந்து இறங்கி, ஊடகங்களை ஒதுக்கி அவன் நடப்பதற்காக வழிவிட்டு நின்றனர். வெள்ளை நிற காரின் முன் இருக்கையிலிருந்து இறங்கிய ஆதித்யாவின் பிஏ வெங்கட் சுற்றுச்சூழல் மட்டுப்பட்டு விட்டதை உணர்ந்ததும் பின்னிருக்கை கதவினை திறந்துவிட்டான்.

ஆதித்யா… அவ்வளவு எளிதில் காண கடைக்காத முகம் அது. தென்னை மரத்தில் பாதி வளர்ந்திருந்த அவ்வுருவம், தன் இருபத்து நான்கு மணி நேரத்தையும் பணமாகவே மாற்றும் வித்தையில் தேர்ந்தது என்ற தோரணையில், அளவினுக்கும் அதிகமாய் நிமிர்ந்து நின்றது.

முகம் பார்க்கும் அளவிற்கு பளபளவென்று மின்னுவதாய் அவன் அணிந்திருந்த கரு வண்ண காலணிகள் இரண்டும், இதுவரை தான் பார்த்திராத மண் தரையில் முதன் முதலாக தங்கள் காலடியினை பதித்தது. அவன் அணிந்திருந்த உயர் ரக ஆடைகளோ அவனுக்கு எதிராக வாதாட போகும் வழக்கறிஞரை நினைத்து கொக்கரித்து சிரித்தது.

அளவில் சிறிதாய் இருந்தாலும் ஆணித் தரமாய் இருந்த அவனது பார்வை, இதுவரையில் எனக்கு தோல்வியைப் பார்த்து பழக்கமே இல்லை எனும் எகத்தாளத்துடன் எவரையும் நேர்பட பார்த்து நகர்ந்தது.

ஆதித்யாவிற்கென காத்திருந்த ஜூனியர் வக்கீல்கள் நான்கு பேர் கடகடவென அவன் அருகில் ஓடிவந்து ஒரு ராயல் டைப் வணக்கம் வைத்தனர். அதை சிறு தலையசைப் போடு வாங்கிக்கொண்டான்.

அவர்களின் முன்னால் தன்னுடைய பிஏ வெங்கட்டுடன் வேகமாக நடந்த ஆதித்யா, “ஆரம்பிச்சிட்டாங்களா?” என்றான் ரத்தின சுருக்கமாய்.

ஜூனியர், “இல்ல சார்… நீங்க வர்றேன்னே சொல்லி இருந்ததால, எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.”

ஆதித்யா, “நான்தான் எனக்காக நீங்க வெயிட் பண்ண வேணாம்னு சொல்லி இருந்தேனே….” என்றான் சற்று எரிச்சல் மண்டும் குரலில். காரணம், அவன் வீணடிக்கும் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு சில ஆயிரங்கள், அப்படிப்பட்டவன் இங்கு நேரடியாக வந்ததற்கு ஒரே காரணம் வெற்றி எனும் போதை மட்டுமே.

ஜூனியர், “இல்ல சார், எப்படியும் நீங்க கரெக்ட் டைமுக்கு வந்திடுவீங்கன்னு எல்லாருக்கும் தெரியும். அதான் ஒரு இரண்டு நிமிஷம்…” என்று வார்த்தையை முடிக்கும் முன்பாக அவர்கள் வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

நீதிபதிக்கு மரியாதை நிமித்தமாய் ஒரு வணக்கம் வைத்துவிட்டு தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த தனி இருக்கையில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தான் ஆதித்யா. முறைப்படி வழக்கு ஆரம்பிக்கப்பட்டதும் ஆதித்யாவின் முதன்மை வழக்கறிஞராகிய மல்கோத்ரா எழுந்து தன் வாதத்தை துவங்கினார்.

மல்கோத்ரா, “மை லார்ட், என் கட்சிக்காரராகிய ஆதித்யா இந்திய அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். அவர் தன் பெயரில் தொலைக்காட்சி நிறுவனம் முதல் தொலைபேசி நிறுவனம் வரையில் பல்வேறு தொழில்களை நடத்தி கொண்டு வருகின்றார் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்த விஷயம்.

அவரின் ஸிக்ஸேக் எனும் கேம் டெவலப்பர்ஸ் நிறுவனம் ஆறு மாதங்களுக்கு முன்பாக ‘ட்ரஷர் ஹண்ட்’ எனும் விளையாட்டினை உருவாக்கி இருந்தது. அது நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட, அதாவது பத்து கோடிக்கும் அதிகமான மக்களால் தரவிறக்கம் செய்யப்பட்டு விளையாடப்பட்டு வந்தது.

சமீபத்தில் சந்தைக்கு வந்த விளையாட்டுகளில் இந்த ட்ரஷர் ஹண்ட் கேம் முதல் ஐந்து இடத்திற்குள் இருக்கிறது என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு சில இளைஞர்கள் மாரடைப்பு வந்து இறந்ததற்கு காரணம், இவ்விளையாட்டு தான் எனும் வதந்தி, எங்களின் தொழில் முறை எதிரி ஊடகங்களால் பொது மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றது.

மிகப் பெரிய தொழிலதிபராகிய என் கட்சிக்காரர் மீது வழக்கு தொடுத்தால் நிச்சயமாக பெரிய அளவில் ஒரு மானியத் தொகை கிடைக்கும், என்ற ஒரே ஒரு குறிக்கோளை தவிர இந்த வழக்கை தொடர்ந்த எதிர்க் கட்சியினருக்கு வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை. ஆகையால்…” என்று முடிக்கும் முன்பாக ஐம்பது வயது மதிக்கத்தக்க எதிர் கட்சி வக்கீல் சிவராமன் எழுந்து நின்றார்.

சிவராமன், “அப்ஜெக்ஷன் மை லார்ட். நாங்க ஏதோ பணத்துக்காக இந்த வழக்க போட்டிருக்கிறதாவும், இந்த வழக்குல குறிப்பிட்டு சொல்ற விதமா வேறு எந்த காரணமும் இல்லைனும் உயர்திரு வழக்கறிஞர் மல்கோத்ரா அவர்கள் சொல்கிறார். அவருக்கு குறிப்பிட்ட ஒரு சில விஷயங்களை தெளிவாக தெரிவிக்க வேண்டியது இப்போது என் கடமை இல்லையா. அதனால தான் அவரோட வாதத்துக்கு நடுவுல நான் வர வேண்டியதாயிடுச்சு. இறந்து போன அந்த பத்து இளைஞர்களும், ஆறு மாசத்துக்கு முன்னால வரைக்கும் நல்ல மனநிலையில இருந்தவங்க. வழக்கமான மனிதர்களைப் போல காலையில் கல்லூரிக்கு அல்லது வேலைக்கு செல்வதும், வார விடுமுறையில் நண்பர்களோடையோ இல்ல காதலியோடையோ பீச் பார்க் என சுற்றி விட்டு வீட்டுக்கு வருவது, முதல் மார்க் இல்லைனாலும் ஓரளவு நல்ல பர்சன்டேஜில் பாஸாவது என்று சராசரி மனிதர்களுக்குரிய குணாதிசயங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தான் அவர்கள்.

அடுத்த பக்கம்

Advertisements