ஆடுகளம் 7 (3)

ஆதித்யா, “உங்களுக்கும் யோசிக்க அஞ்சு நிமிஷம் தர்றேன், விருப்பமில்லாதவங்க தாராளமா வெளியில போகலாம். உங்க யாரையும் விளையாடித்தான் ஆகணும்னு நாங்க கட்டாயப்படுத்தல. ஆனா அக்ரீமெண்ட்ல சைன் பண்ணினதுக்கு அப்புறமா யாராவது பின்வாங்கினா, நாங்க லீகலா ஸ்டெப் எடுப்போம்” என்றதும் யோசனையோடு இருந்த இருவர் வெளியேறிச் சென்றார்கள்.

 

“குட்… இப்போ மொத்தம் பதினஞ்சு பேர் இருக்குறீங்க, உங்கள்ல பத்து பேர மட்டும்தான் நாங்க ராஜ வாழ்க்கைக்கு ப்ளேயர்ஸா செலக்ட் பண்ண போறோம்.”

 

“என்ன பத்துதானா?” என்று மீண்டும் கூட்டத்தினுள் சலசலப்பு உருவாகத் தொடங்கியது.

 

“ஆமா, நீங்க இன்னிக்கு விளையாட போறது ட்ரஷர் ஹண்ட் கேம்முக்கு முன்னால எங்க கம்பெனி ரிலீஸ் பண்ணின கேம். சரியா இன்னும் பத்து நிமிஷத்துல, வரிசைப்படி உங்களுக்கான அழைப்பு வரும். அதுவரைக்கும் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க, விளையாடி முடிச்சதும் செலக்ட்டான பத்து பேரும் அக்ரிமென்ட்ல சைன் பண்ணனும்…” என்றவன் கடகடவென வேறொரு கதவின் வழியே எங்கோ சென்றுவிட்டான்.

 

அதிதியின் மனம் உயிருக்கு ஆபத்தென்ற வார்த்தையை கேட்டதிலிருந்து, அடுத்து என்ன செய்யலாம் என்று உளன்று கொண்டிருந்தது. விளையாடுவதற்கு அச்சமாக இருந்தாலும், பணம் இல்லாமல் வீட்டிற்கு திரும்பி போய் என்ன செய்வது என்ற கவலை அவளை மதில் மேல் பூனையாக்கியது.

 

தவிப்பிலும் குழப்பத்திலுமே ஆதித்யா தந்த சென்ற பத்து நிமிடங்கள் கற்பூரமாய் கரைந்து போனது. அங்கு வந்தப் பணியாள் ஒருவன் விளையாடுவதற்கு தனி அறைக்கு வரும்படி அதிதிக்கும் துருவ்விற்கும் அழைப்பு விடுத்தான்.

 

‘விளையாடி பார்த்துட்டு மற்றதை யோசிக்கலாம்…’ என்று தனக்குத் தானே தைரியம் சொல்லியபடி அவர்கள் காட்டிய அறைக்கு துருவ்வுடன் சென்றாள்.

 

இதற்கு முன் இருந்ததைப் போலவே விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் அந்த அறையில் தயாராய் இருந்தன. அதிதியும் துருவ்வும் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்து கொண்டனர். அதிதி ஆன் செய்ததும் விளையாட்டுக்கான விதிமுறைகள் வரத்துவங்கியது.

 

ஒரு கொலைகார கூட்டத்தினரால் நீங்கள் பாழடைந்த வீட்டினுள் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறீர்கள். ஐந்து நிமிடத்திற்குள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் திறக்கும் கதவுக்குப் பின்னால் கொலைகாரன் உங்களை கொல்லக் காத்திருக்கக் கூடும். அப்படி அவன் உங்கள் பாதையில் குறுக்கிட்டால் அவனை நீங்கள் கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தாக்க வேண்டும்.

 

அதிதிக்கு இம்முறை ஏனோ இதயம் பதறிட அவள் தன்னிச்சையாய், ‘அப்பா… எனக்கு பயமா இருக்கு, நீங்க என் கூடவே இருங்க. என்ன வழிநடத்த நீங்க வேணும்ப்பா எனக்கு…’ என மானசீகமாய் தன் தந்தையை துணைக்கு அழைத்தாள்.

 

விளையாட்டு துவங்கிற்று… கருமை நிறத்தையே பிரதானமாக கொண்டிருந்த அச்சிறு அறையினுள், தரையில் படுக்க வைக்கப்பட்டு இருந்தாள் அதிதி. சுற்றிலும் ரத்தக்கரை படிந்த சுவர்களாகவே காட்சி தர, மெதுவாக எழுந்து கதவினைத் திறந்தாள்.

 

குறுகிய நீளமான பாதை ஒன்று தென்பட்டது. ஆங்காங்கே அனைத்து பொருள்களும் சிதறிக்கிடக்க, அதிதி அதைத் தாண்டி தாண்டி அந்த பாதையின் இறுதி வரையில் சென்றாள். அதன் கடைசியில் ஒரு வெள்ளை நிறக் கதவு தென்பட்டது.

 

அதற்கு பின்னால் எவரும் இருப்பாரோ என்று அச்சம் மேலிட, தரையில் கிடந்த ஒரு பூ ஜாடியை கையில் எடுத்துக் கொண்டாள். கதவைத் திறந்ததும் அங்கு என்ன ஏதென்றெல்லாம் பார்க்க தோன்றாமல், கண்ணை மூடிக்கொண்டு அடித்து வெளுத்து விட்டாள். அதன் விளைவு, அவள் கண் விழித்த போது அங்கிருந்தவன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு கிடந்தான்.

 

இந்த அறை முன்பு அவள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அறையைவிட கொஞ்சம் சுத்தமாகவும் பெரியதாகவும் இருந்தது. அதனுள் மூன்று கிளைக்கதவுகள் இருந்தன. ஒரு கொலைகாரனை கொன்றுவிட்ட தைரியத்தில் அதிதி முதல் கதவினை நெருங்கினாள், அது ஒரு பாத்ரூம். அதனுள்ளே எவரும் இல்லை, அடுத்து போவதற்கு அதனுள் வழியில்லாததால் இரண்டாவது கதவை அடைந்தாள்.

 

அது பார்ப்பதற்கு கதவு போல் இருந்தாலும் அது ஒரு புத்தக அலமாரி. அதையும் கடந்து மூன்றாம் கதவினை திறக்க அவள் நெருங்கையிலேயே அது சடாரென்று திறந்து கொண்டது. அதன் உள்ளிருந்து பெரிய கத்தியோடு ஒருவன் அதிதியை நோக்கிப் பாய, தடுக்க நினைத்து தன் கையை முகத்துக்கு முன்பாக நீட்டினாள். அந்த கத்தி அவளின் உள்ளங்கையை குத்தி துளைத்துவிட்டது.

 

பயத்தில், ‘அம்மா!….’ என்று அலறியபடி கீழே விழுந்தாள். அப்போது அருகில் கிடந்த துப்பாக்கி அவள் கண்ணில் பட, சிறிதும் யோசிக்காமல் அதை எடுத்து அந்த கொலைகாரனை சுட்டுவிட்டாள். அவன் அப்படியே பின்னால் சாய்ந்து திறந்திருந்த கதவின் உள் பக்கமாய் விழுந்துவிட்டான்.

 

கையில் ரத்தம் கொட்டுவதாய் கண்கள் காட்டினாலும், அந்த மாயக்காயம் வலிக்கவில்லை என்பதால், அதை கவனிக்காமல் மூன்றாம் கதவின் உள்பகுதியை கவனிக்கத் தொடங்கினாள். அது கீழ் வீட்டிற்குச் செல்லும் படிக்கட்டுக்கான கதவு, குண்டடி பட்டு விழுந்த கொலைகாரன் கீழே கடைசி படியினில் மல்லாக்க பார்த்தபடி விழுந்து கிடந்தான்.

 

திரைப் படங்களில் வருவதைப்போல அருகில் போனதும் அவன் தன் காலை பிடித்துக் கொள்வானோ என்ற அச்சத்தில், ஒரே ஓட்டமாக பாய்ந்து கீழே ஓடிச்சென்றாள். அந்த அறை ஒரு பெரிய லாபி. அதன் நட்ட நடுவில் பெரிய ஸோபா, வலது மூலையில் பிரம்மாண்ட நெருப்பு மூட்டுமிடம் என பணச் செழுமையோடு இருந்தாலும், பார்க்கும் இடங்களில் எல்லாம் ரத்தம் சிதறியிருந்தது.

அடுத்த பக்கம்

Advertisements