ஆடுகளம் 7

அதிதியும் பால முருகனும் சென்னையிலிருந்து திரும்பி வந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அந்திமாலை நேரம், தனது அடுத்த நாள் பயணத்திற்காக அதிதி சில உடைமைகளை எடுத்து அடுக்கி வைக்கத் தொடங்கினாள். அருகில் கன்னத்தில் கை வைத்தபடியே அவளின் செய்கைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவளின் தங்கை சந்தியா.

 

ஒரு முறைக்கு இரு முறையாக தன் பொருட்களை சரி பார்த்து லக்கேஜை மூடிவிட்டு, “எல்லாம் ரெடி…” என்றபடி கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள் அதிதி.

 

சந்தியா, “வெறும் ரெண்டு செட் டிரஸ் போதுமா அக்கா உனக்கு?”

 

“இதுவே தேவையில்லடி, நான்தான் எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்துகிட்டேன். நாளைக்கி சாயங்காலம் பைனலிஸ்ட் செலக்ஷன் கேம் முடிஞ்சதும் பார்டிசபென்ட் எல்லாரையும் சென்னையில இருக்கற அவங்களோட பொட்டிக்(Boutique)க்கு கூட்டிட்டு போறதா சொல்லி இருக்காங்க.”

 

“அப்போ ராத்திரியாகிடுமே?”

 

“ம்… அப்பத்தானடி அவங்க கடை கஸ்டமர் இல்லாம ஃப்ரீயா இருக்கும். இத்தனை பேருக்கும் அவங்க ஓசியில டிரஸ் கொடுக்க முன் வர்றதே பெருசு. இதுல நேரம் காலம் எல்லாம் நாம செலக்ட் பண்ணி சொல்ல முடியுமா?”

 

“ஒரு ஆளுக்கு எவ்ளோ பட்ஜெட்டாம்?”

 

“பட்ஜெட்டெல்லாம் கிடையாதுடி, ஆளுக்கு பத்து நார்மல் டிரஸ், அது பொக மூணு பார்ட்டி வியர் டிரஸ். நமக்கு புடிச்ச மாதிரி எந்த டிரஸ் வேணும்னாலும் எடுத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. ஆனா ஷோ முடிஞ்சதும் எல்லாத்தையும் திருப்பி கொடுத்துட்டு வந்துடனுமாம்.”

 

“இதுக்கு எதுக்கு உங்களுக்கு டிரஸ் கொடுக்கணும்?”

 

“என்னடி இப்டி சொல்லிட்ட, ஒரு அட்டு ரியாலிட்டி ஷோவையே குறைஞ்சது பத்து லட்சம் பேர் பார்ப்பாங்களாம். இந்த ஷோவ மினிமம் பத்து கோடி வியூவர்ஸ் வச்சு டார்கெட் பண்றதா வெங்கட் சார் சொன்னாரு. அதுனால பார்க்க நல்லா இருக்குற மாதிரி டிரஸ் செலக்ட் பண்ணிக்கனும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிருக்காங்க.”

 

“ஓ… ஓ… ஓ… ஏதாவது சீன் சூப்பர் ஹிட் ஆச்சுனா, உங்க டிரஸ்ஸ அப்டியே மார்க்கெட்ல ட்ரென்டாக்கி விட்ருவாங்க. ப்பா… பிசினஸ்மேன் மூளையே மூளைதான்க்கா….”

 

“ஆமாடி, அங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருக்குறாங்க. எத்தனை லெவல் வரைக்கும் நான் போவேன்னு தெரியல. முடிஞ்சவரை என் முழு திறமையையும் போட்டு, இந்த வாய்ப்பை நமக்கு சாதகமா பயன்படுத்திக்க பாக்குறேன்.”

 

அக்காவின் மனதினுள் அச்சத்தால் ஆயிரமாயிரம் குழப்ப மேகங்கள் சூழ்ந்து இருப்பது புரிந்த சந்தியா, “கவலப்படாதக்கா, ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான், எந்த சூழ்நிலை வந்தாலும் அவன் நம்மள கைவிட்ற மாட்டான். நீ வெற்றி தோல்வினு எதையும் நினைச்சு மனச குழப்பிக்காம, சும்மா ஜாலியா மட்டும் விளையாடிட்டு வா…” என்று அதிதியின் மனதை தேற்ற முயன்றாள்.

 

“என்ன நான் பாத்துக்குவேன்டி, நான் திரும்பி வர்ற வரைக்கும் நீ கொஞ்சம் கிருஷ்ணாவ கேர் எடுத்து பாத்துக்கோ. கடன் விஷயத்தில் அவன் ரொம்பவே டிஸ்டர்பாகிட்டான். எதையாவது விளக்கம் குடுத்து புரிய வைக்கலாம்னு நான் பக்கத்துல போனா, பேச விருப்பம் இல்லாத மாதிரி மூஞ்சிய தூக்கி வச்சுக்கிறான்.”

 

சந்தியா சிரித்துக்கொண்டே, “பார்த்தேன்… பார்த்தேன்… ஏற்கனவே அந்த மூஞ்சூரு மூஞ்சிய பார்க்க சகிக்காது, இப்ப உர்ருனு உராங்குட்டானாட்டம் முகத்த வச்சிருக்கு” என்றதும் அதிதியும் அவள் சிரிப்பினில் இணைந்து கொண்டாள்.

 

இரவு நேரம் டைனிங் டேபிளில் பாட்டி, “அதிதி, உன் ஆபீஸ்ல லீவ் சொல்லிட்டியாம்மா?” என்றார்.

 

“சொல்லிட்டேன் பாட்டி, எங்க மேனேஜர் விஷயத்தை புரிஞ்சுக்கிட்டாரு. ‘இப்போதைக்கு மெடிக்கல் லீவ்னு லெட்டர் எழுதி கொடு, மத்தத அப்புறமா பாத்துக்கலாம்’னு சொன்னாரு, அதான் அப்படியே எழுதி கொடுத்துட்டேன்.”

 

சந்தியா, “ஏன்க்கா? அதான் ஆதித்யா சேனல்ல உனக்கு வேலை தர்றதா சொல்லி இருக்காங்கல, இந்த வேலைய ரிசைன் பண்ணிட வேண்டியதுதான?”

 

“நானும் அப்படித்தான் நினைச்சேன்டி. ஆனா மேனேஜர், ‘தெரியாதவங்க சொல்றத அப்படியே நம்பக்கூடாதுமா. இன்னிக்கு போட்டியில கலந்துக்குறதுக்காக வேலை தர்றோம்னு சொல்லிட்டு நாளைக்கு வேலை தர மாட்டேன்னு சொல்லிட்டா என்ன செய்வ? நம்மள மாதிரி மிடில் கிளாஸ்க்கு எப்பவும் ஒரு பிடிமானம் கையில இருக்கணும்’னு சொன்னாரு.”

 

பாட்டி, “சரியாத்தான்மா சொல்லி இருக்காரு… நமக்கு இன்னிக்கி வேண்டாம்னு தோண்ற ஒன்னு, எதிர் காலத்துல தேவைப்படலாம். அது கிடக்கட்டும், நாளைக்கி நீ சென்னை வரைக்கும் தனியா போயிடுவியா அதிதி?”

 

“ஒருதடவ போய் வந்து பழகிட்டேன்ல பாட்டி, பாலமுருகன் அங்கிள ஓயாம அலைய வைக்க வேண்டாம்னு நினைச்சேன், அதான் நானே போய்க்குவேன்னு சொன்னேன். அதுவும் போக பாஸ்கரன் அங்கிள் அங்க நான் இறங்கினதும் பிக்கப் பண்ண வர்றேனு சொன்னாரு. சேனல் ஆபிஸ்ல அவரே டிராப் பண்ணிடுவாரு, அதுனால ஒன்னும் பயமில்ல பாட்டி.”

அடுத்த பக்கம்

Advertisements