அச்சுதன் அந்திகை 4

(வணக்கம் அன்பு நண்பர்களே,

அச்சுதன் அந்திகை கதையில் வரும் அறிவியல் தகவல்கள் உண்மை என்றாலும், கணேஷ்ராம் கதாபாத்திரம் கற்பனை என்பதால்.. அவரது கண்டுபிடிப்புகளாக சொல்லப்படுபவை எல்லாம் கற்பனையே என்பதை வாசகர்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.. ஒரு கதையில் எல்லாம் உண்மையாகவே கொடுக்க முயற்சிக்கலாமே தவிர முழுக்க முழுக்க உண்மை சார்ந்து மட்டுமே ஒரு படைப்பை உருவாக்க இயலாது.. இங்கு கணேஷ்ராமின் கண்டுபிடிப்புகள் என நான் சொல்லும் விசயங்கள் இப்போது சாத்தியமில்லை என்றாலும், பிற்காலத்தில் இவையெல்லாம் நடைபெற எல்லா வித சாத்தியங்களும் உள்ளன..உலகின் பல பகுதிகளில் பல விதமான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள்… அவர்களைப் போன்றதொரு விஞ்ஞானியை என் கற்பனையில் உருவாக்கியுள்ளேன்… வாசகர்கள் உண்மைக்கும், கற்பனைக்குமான வேறுபாட்டை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்..

தொடர்ந்து கதையை படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!!)

மாமா அவளை தனியே விட்டுச் சென்றார்.. உண்மையில் அவளுக்கு ஓய்வு தரவா சென்றார்? இல்லை அவருக்கே ஓய்வு தேவைப்பட்டதோ? புரியாமல் மென்னடை போட்டாள் அந்த பரந்த வனத்தில்..

 

என்ன தான் விவசாயம் பெருக, மகசூல் அதிகரிக்க, வறட்சி தாங்க என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஹைப்ரிட் ரகங்கள் என சொல்லப்படும் ஒட்டுத் தாவரங்களை விளைவிப்பதை லயாவால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை..

 

அறிவியலின் முன்னேற்றம், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் வரப்பிரசாதம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் உண்மையில் எந்த அறிவியல் கண்டுபிடிப்பின் பின் விளைவுகளும் வெளியே தெரிய வர பல வருடங்கள் ஆகும் என்பது அவளது எண்ணம்.. எனவே முற்றிலும் இயற்கையான முறையிலான விவசாயமும், விளை பொருட்களுமே சிறந்தவை என்பதும் அவள் எண்ணம்!!

 

இப்போது அவளது மாமாவின் ஆய்வுக் கூடத்தில் அவளது பதின்பருவத்தில் கண்ட விநோத விலங்குகள் நினைவில் ஆடின..

 

பயிர்களில் இருந்து அடுத்த கட்ட வளர்ச்சியாக விலங்குகளை கலப்பினங்களில் உருவாக்கியுள்ளார்.. அதுவும் ஒரே இன விலங்குகள் இல்லாமல் பரிணாம வளர்ச்சியின் வெவ்வேறு படிநிலைகளில் உள்ள விலங்குகளுக்குள் கலப்பினம் செய்துள்ளார் என இப்போது புரிந்தது..

 

என்னென்ன விலங்குகள்? அவை எவ்வாறு இருந்தன என்பதெல்லாம் புகை மண்டலமாய் தெளிவின்றியே நினைவில் ஆட.., அந்த ஆராய்ச்சி கூடம் இருக்கும் பாதையை கணித்து தோராயமாக அங்கே செல்ல எத்தனித்தாள் லயா!!

 

எல்லாம் அவர் வாயால் சொல்லி, அவர் சொல்வதை கேட்க வேண்டும் என எண்ணியவள் தான்..!! ஆனால், அந்த கலப்பின உயிரினங்களை காண அவளது ஆராய்ச்சி மூளை அவளை உந்தித் தள்ளியது..

 

அதையும் உடனே செய்ய முடிவெடுத்தவள்.., மாளிகைக்குள் நுழைந்து ஆராய்ச்சி கூடம் இருக்கும் திசை நோக்கி நடை போட்டாள்…

 

அவள் அங்கு வந்து, அவர் வழிகாட்டி இவள் அதை பார்த்து எல்லாம் ஒரு பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகியிருக்க.., ஒரே ஒரு முறை மட்டுமே சென்ற பாதையை நினைவில் கொண்டுவந்து, அந்த வழியே செல்ல முடியுமா என்ன?

 

எனினும் இவள் சுற்றிச் சுழன்று அந்த மாளிகையின் பாதாள தளத்திற்கு செல்லும் வழியை ஒரு வழியாக கண்டறிந்து விட்டாள்!!

அடுத்த பக்கம்

Advertisements