மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 12

ன்று பிஜு மற்றும் அபித்தின் தாத்தாவின் தம்பிக்கு 60 வது பிறந்த நாள். அந்த தாத்தாவும் பாட்டியும் இருக்கும் ஆவுடையனூர் கிராமத்தில் இதையெல்லாம் கொண்டாடும் வழக்கம் இல்லை என்றாலும், அவர்கள் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் என எல்லோரும் வெளியூர்வாசிகளாகிவிட்டதால் வந்திருந்த பழக்கத்தில் இதை ஒரு சிறுவிழாவாகவே ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆராதனாவோ அபித்தோ விடுமுறை எடுக்கும் சூழல் இல்லை என்பதால் அந்த விழாவுக்கு இன்று மாலை பிஜு மட்டும் சென்று வருவதாகத் திட்டம்.

அதற்குத்தான் கூடப் போய் வா என வழி சொல்லிக் கொண்டிருந்தான் அபித்.

கேட்கும் போதே வெகுவாக ஆசையாக இருக்கிறதுதான் ராதிக்கு.

“ப்ச் போ நீ, அப்படில்லாம் யார் பெர்மிஷன் கொடுப்பா? அதுவும் மூனு நாள் லீவு வேற எடுத்துட்டு வந்துருக்கேன்” ஏமாற்றம் மற்றும் ஏக்கத்தோடு இவள் சலித்துக் கொள்ள,

“அட அண்ணி, அப்படி பெர்மிஷன்க்கெல்லாம் வழி செய்யாம, உன்ட்ட வந்து இதைச் சொல்வனா? எல்லாம் ரெடி, நீ சரின்னு தலையாட்ட வேண்டியதுதான், மூனு மணிக்கு அண்ணாவுக்கு பிக்கப் செய்ய வரச் சொல்லி ஃபோன் செய்ய வேண்டியதுதான், அவன் கூட போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்” என இப்போது அவன் சந்தோஷ சர்ப்ரைஸ் கொடுக்க,

அதற்கு, ஆஆஆஆ என விழி விரித்து, வாவ் என ஆச்சர்யப்பட்டு,

“அப்ப அப்ப நீ நல்லவன் அபித்” என இவள் பாராட்டும் போது இவளுக்குத் தோன்றியது அந்தத் திட்டம்.

‘இவளும் இப்படியே பிஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தால் என்ன?’

அடுத்தென்ன விஷயத்தை சொல்லி அபித் வாயை அடைத்துவிட்டு, இவளிடமும் வீட்டு சாவி ஒன்று உண்டு என்பதால், ஆட்டோ பிடித்து நேராக வீட்டுக்குச் சென்று,

அம்மா சொல்லி இருந்த “கிராமத்துல எதுவும் ஃபங்ஷன் அட்டென் செய்தா, கண்டிப்பா புடவை கட்டிட்டுப் போய்ட்டு வா ஆரா, கழுத்துல போட்ருக்க செயின் தவிர கூட சின்னதா ஒரு நெக்லசாவது போட்டுட்டுப் போ, நம்ம நேச்சர அடுத்தவங்க போல மாத்திக்க முடியாது, ஆனா நம்ம ட்ரெஸ் நம்ம சுத்தி இருக்கவங்க போல செய்தாதான் அவங்கள மதிக்கிறாப்ல இருக்கும்” என்ற அறிவுரையின் படி,

திருமண சமயத்தில் இவளவன் வாங்கித் தந்திருந்த வான் நீலமும் ஆரஞ்சுமான ஒரு புடவையை அணிந்து விழாவுக்கு ஏற்றபடி தயாராகிக் கொண்டவள்,

“ஈவ்னிங் ஆஃபீஸ்ல இருந்து நேர அப்படியே ஆவுடையனூர் கிளம்புவேன்” என பிஜு சொல்லிச் சென்றிருந்ததால் ஆட்டோவெடுத்து அவன் அலுவலகம் இருந்த தெருவுக்கு அருகில் போய் இறங்கிக் கொண்டு,

அங்கிருந்து அவனை மொபைலில் அழைத்தாள்.

“ஹேய் வாலு, இப்பதான் உன்ன நினச்சுகிட்டே கிளம்பிட்டு இருக்கேன்” என்றபடி இணைப்பை ஏற்றான் அவன்.

“என்னை எதுக்கு நினைக்கணும்?” வம்பிழுத்தாள் இவள்.

“ஒரு பெருச்சாளிட்ட இருந்து மூனு நாள் கழிச்சு பெரிய எஸ்கேப் கிடச்சுருக்குல்ல, அதுக்குத்தான்” கடந்த மூன்று நாளும் இவள் அவனை ஒட்டிக் கொண்டு கிடந்ததை சொல்லி அவன் சீண்ட,

“ஓ அப்படி வேற நினைப்பு இருக்கா?” இவள் ஏற,

“அப்படி மட்டும்தாங்க நினைப்பு இருக்கு” அவன் வார,

“அதெல்லாம் நடக்க விட்டுடுவமா நாங்க?” இவள் பந்தயம் கட்ட,

“இனிமேதான் நடக்கணுமா? இப்பவே நான் போய்கிட்டே இருக்கனே” அவன் சொல்ல,

இவள் “ஐயோ” என அலறினாள் இப்போது. உண்மையிலேயே பதற்றம் இருந்தது அவள் குரலில்.

“ஹேய் என்னாச்சு ராதிமா?” பதற்றம் இப்போது அவனையும் தொற்ற,

“இல்லப்பா கார்ல வருவீங்கன்னு நினச்சேன், பைக்ல வந்துருக்கீங்க” இவள் ப்ரச்சனையைச் சொல்ல,

அதில் அவள் அங்கு அவனைப் பார்க்கும் இடத்தில் இருக்கிறாள் என புரிந்த அவனோ,

“ஹேய் வாலுக் குட்டி எங்க இருக்க நீ?” என்றபடி பைக்கை நிறுத்தி சுற்று முற்றும் தேடினான்.

சாலையின் பக்கவாட்டில் இருந்த இவளைக் காணவும் அவன் முகத்தில் வந்த அந்த ஒரு உணர்வே இவளுக்கு இன்றைய நாளின் அத்தனை முயற்சிக்கும் போதுமானதாய் இருந்தது.

ஓட்டமும் நடையுமாய் அவனிடம் போய் நின்று கொண்டது அவனது வாலுக் குட்டி.

அடுத்து இவள் தானும் அவனுடன் வரும் திட்டத்தைச் சொன்னவள்,

“கார்ல எதுவும் இஷ்யூவாப்பா?” என விசாரிக்க,

“இந்த வெதர்க்கு பைக் ரைட் ப்ளசென்ட்டா இருக்குமேன்னு பைக் எடுத்தேன்மா, தாத்தா ஊர் வேற பக்கம்தான? கார் ஆஃபீஸ்லதான் நிக்கிது, வா போய் எடுத்துட்டு போகலாம்” என அழைத்தான் அவன்.

வெகுநாளாக அவனுடன் பைக் ரைட் போக வேண்டும் என இவளுக்கும் ஆசைதான் என்றாலும், புடவை கட்டி பைக்கில் உட்கார இருந்த பயத்தில் கார் பயணமே இப்போதைக்கு சரி எனப் பட, அவன் வார்த்தைக்கு சம்மதமாக தலையாட்டியபடியே பைக்கில் ஏறிக் கொண்டாள் இவள்.

புடவைக்கும், ஒரு பக்கமாக கால் போட்டு உட்கார்ந்திருக்கும் இவள் நிலைக்கும்,

முதல் சில நொடிகள் அந்தரத்தில் உட்கார்ந்திருப்பது போலவும், அடுத்த நொடி பல்டி அடிக்கப் போவது போலவும் பீதி பிறக்கிறது இவளுக்கு.

ஆனால் அதைச் சமாளிக்கவென, அவனை இடுப்போடு ஒரு கையால் வளைத்துக் கொண்டு, சற்றாய் அவன் முதுகில் இவள் சாய்ந்தும் கொள்ளவும்,

அந்த அவனது அருகாமைக்கும், நகர்ந்து கொண்டிருக்கும் வண்டியின் நிமித்தம் முகத்தில் வந்து வீசும் காற்றுக்கும், இருந்த அந்த மந்தார தட்பநிலைக்கும், எதிரிடையாய் மாறிப் போனது பெண் உள்ளம்.

“பஜ்ஜி பையா” இவள் அழைக்க, அந்த ஒரு வார்த்தையிலேயே அவள் மனநிலை எங்கிருக்கிறது என அவனுக்கும் புரியுமே,

“போக வர 100கிலோமீட்டர் ஆகிடும் வாலுக் குட்டி, சமாளிச்சுப்பியா?” கேட்டான். அவனுக்கும் அதில் எத்தனை ஆசை இருக்கிறது என அவன் குரல் சொல்லாமல் சொல்ல,

அன்று தாத்தா வீட்டிற்கு பைக்கில் சென்று சேர்ந்தனர்  இருவரும்.

விழா வீட்டில் தம்பதி சகிதமாய் வந்த இவர்களைக் கண்டு தாத்தாவும் பாட்டியும் வெகுவாக மகிழ்ச்சியடைந்தார்கள் எனில், உள்ளூர் உறவினர்கள் பலர் இன்றுதான் ராதியை முதன் முதலாகப் பார்ப்பதால் அவர்கள் எல்லோரும் ஆவலாக இவர்களிடம் வந்து பேசினர்.

அந்தப் பேச்சில் அடிக்கடி ராதி காதில் விழுந்த விஷயம் “நம்ம அனி பார்த்த பொண்ணாமே இது? அனிக்கு சொந்தக்காரப் பொண்ணுனுதான் பேசி முடிச்சாங்களாமே?” என்ற விசாரிப்புகள்.

கேட்ட ஒவ்வொருவருக்கும் “ஆமா அனி மாப்ளைக்கு சொந்த அத்தைப் பொண்ணு” என்ற ரீதியாக சிரித்தபடியே பதில் கொடுத்துக் கொண்டிருந்தான் பிஜு.

அன்றில்தானே பிஜு வீட்டில் இவர்களது திருமணப் பேச்சை துவக்கியது, அதை ஏன் இத்தனையாய் விசாரிக்கிறார்கள் என வித்யாசமாய் இருந்தது ராதிக்கு. கிராமம் என்றால் இப்படித்தான் போலும் என நினைத்துக் கொண்டாள் அவள்.

 

அடுத்த பக்கம்

Advertisements