காதல் காலமிது

லக் கையால் இடது புஜத்தை தேய்த்துவிட்டுக் கொண்டாள் சரித்ரா…. முகத்தில் சங்கடத்தை அடைத்து மறைத்து பூசப்பட்ட ஒரு இயல்பு நிலை கவன பாவம்…குளிர் ஒரு காரணம் என்றால் அவள் நின்று கொண்டிருந்த நிலையும் அதற்கு முக்கிய காரணம்….

சென்னையிலிருந்து ஊட்டி சென்று கொண்டிருப்பவள்…….ஒரு வாரம் லீவு எடுத்து வீட்டுக்கு போகுது பொண்ணு…அதுக்கான ஏக குஷியோடதான் கிளம்பி வந்ததெல்லாம்…… என்ன இவ வந்த பஸ் இங்க இந்த இடத்தில இந்நேரம் ப்ரேக்டவ்ண்…. மணி இரவு 12 தாண்டி எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது…

நிறைந்து வரும் ஒவ்வொரு பஸ்ஸிலும் ஒன்று இரண்டு பேர் என ஏத்தி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள் இவள் வந்த பஸ் ட்ரைவர்ஸ் இரண்டு பேரும்….. இப்போது கடைசி க்ரூப்பும் அவர்களுக்கான பஸ் வர கிளம்பிச் செல்ல…. இவள் மட்டும்தான் இன்னும் பஸ் கிடைக்காமல் நிற்கின்ற ஆள்…. அந்த ட்ரைவர்ஸ் இரண்டு பேரும் ரோட்டில் கொஞ்சம் உள்ளே தள்ளி நின்று அவரகள் நிறுவன பஸ் அடுத்து எதுவும் வருகிறதா என பார்த்துக்கொண்டு இருக்க……

இவள் மட்டும் கொஞ்சம் பின் தள்ளி பஸ் பக்கத்தில் தனியா நின்று முழித்துக் கொண்டிருந்தாள்…… பஸ்ஸோட லைட் எமெர்ஜென்சி என்ற வகையில் ப்ளிங்க் செய்வதால் வந்து வந்து போகும் வெளிச்சத்தை தவிர அந்த ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியில் வேறு எந்த வெளிச்சமும் இல்லை….

குளிர் வேறு…….

படித்த பல நியூஸும் இஷ்டம் போல இவளுக்குள் ஓட….. இந்த ட்ரைவர்ஸை கூட எதுக்கு நம்பனும் என எதுவோ எங்கோ ஏடா கூடமாய் தோன்ற….

மனதுக்குள் கடவுளை கட்டாயமா ஹெல்ப் அனுப்பும் படி கன்னா பின்னா எனக் கெஞ்சிக் கொண்டு….கண்களால் சுற்றுப் புறத்தை அளந்து கொண்டு இவள் நின்றிருக்க…..வந்ததே தெரியாமல் சட்டென வந்து நிற்கிறது இவள் எதிர் புறம் அந்த வெள்ளை நிறக் கார்…..

இவள் மட்டுமில்ல  அந்த ட்ரைவர்ஸ் ரெண்டு பேரும் கூட அந்தக் காரைக் கவனிக்க….பின்ன இப்போ இங்க எதுக்கு நிக்கனுமாம்? அதன் கறுப்பு நிற கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு இறங்குகிறான் அவன்…..

நல்ல உயரம்….. ப்ளாக்  பேண்ட்ஸ்…. பேட்டன் என எதுவுமில்லாமல் ஒன்றிரண்டு வொயிட் stripes கட்டமிட்டுக் கொள்ளும் ப்ளாக் ஃபுல் ஸ்லீவ் ஷேர்ட்…..

பார்க்கவும் ஆர்மியை நியாபக படுத்தும் அவன் உடல்வாகும் ஹேர்கட்டும்…… இவளுக்குள் ஏற்படுத்திய ஒருவித மரியாதையை அழித்துப்போட்டது அவனது பார்வை….

நெடுமாடு….. அப்படித்தான் முறுமுறுத்தாள் மனதிற்குள்…. பின்னே இவளுக்கு ஆப்போசிட் சைட்ல காரை நிறுத்திட்டு அதுல சாஞ்சு நின்னு இங்கயே பார்த்துட்டு இருந்தா……இவ திட்டாம என்ன செய்வா?

சற்று பொறுத்து ட்ரைவர்ஸுமே “என்ன சார்?” என அவனிடம் விசாரிக்க…..

“ஏன் சார் கவர்மென்ட் ரோட்ல நிக்றதுக்கு நான் எதுவும் காரணம் சொல்லனுமா?” என அம்சமாய் பதில் வந்தது அவனிடமிருந்து…..

அடுத்து இவள் அவன் இருந்த புறமே திரும்பவில்லை….அதை தவிர அத்தனை திசையிலும் இவளுக்கான பஸ்ஸை பார்வையால் தேடினாள்….

அடுத்து ஒரு வழியாய் இவளுக்கு பஸ் வந்து சேர…. இவள் ஏறும் போது அவன் காரும்  கிளம்புவது இவள் பார்வையில் படுகிறது….

‘பொறுக்கி….’ ஒரு நினைவு  சரித்ராவுக்குள் இப்படி தொடங்க…… அந்த வார்த்தையை முடிக்க கூடவிடாமல் வெட்டுகிறது இன்னொரு சிந்தனை…. ‘ஒரு வேள ப்ரொடெக்டரோ….?’

ட்ரைவர்ஸ் லிக்கர் சாப்ட்றுக்காங்களோன்னு கொஞ்சம் பயம்….ஏன் எல்லோரையும் அனுப்பிட்டு இவள தனியா நிறுத்திட்டாங்கன்னு ஒரு பீதி…. இதெல்லாம் இவ மனசுல ஓடிட்டு இருந்தப்ப வந்தான்…..வெயிட் பண்ணான்…..இவ கிளம்பவும் கிளம்பிட்டான்…..அப்டின்னா??

அவன் யாரையுமே டிஸ்டர்ப் பண்ணலையே…. சொசைடி மேல அக்கறை….பொண்னு தனியா நிக்றதைப் பார்க்கவும் பார்வையால சார் பாதுகாப்பு கொடுத்துட்டுப் போறார் போல…… பிபிஎஸ்….பார்வையால் பாதுகாப்பு கொடுப்போர் சங்கம்….சின்னதாய் சிரித்துக் கொண்டாள்….

றுநாள் காலை போன்ற மதியத்தில்…… ஆமா மத்தவங்களுக்கு அது மதியம்….ஆனா நம்ம சரித்ராவுக்கு அது அப்பதான் அதிகாலை 12 மணி…. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க….படீர் என பின் முதுகில் விழுகிறது அடி ஒன்று….

“ஏய் சர்க்கஸ்…. எழுந்துருடி தூங்குமூஞ்சி ….” இவளைப் பார்க்கவென பெங்களூரிலிருந்து வந்திருந்தாள் இவள் ஃப்ரெண்ட் தீபா….

“ஸ்……தீஞ்ச ரொட்டி… வந்துட்டன்னா வால சுருட்டிட்டு இருக்க வேண்டியதான…..நல்ல க்ராஃபிக்ஸோட நச்சுன்னு கனவு போய்ட்டு இருந்துச்சு…. “ முதுகை தேய்த்துக் கொண்டே இவள் எழுந்து உட்கார…..

“அச்சச்சோ அது நான் இல்லடி நல்லவளே…..ஆன்டி கூப்டுற மாதிரி இருக்கு…..” அவள் தலை தெறிக்க ஓடினாள்….

“அந்த பயம் இருக்குல்ல அப்ப ஏன் எழுப்பின…..எப்டினாலும் இன்னிக்கு இந்த கனவுக்கு உன் காதுதான் கன்டெய்னர்…..” சீரும் சிறப்புமாய் சூளுரைத்தபடி இவள் அட்டாச்  பாத்திற்குள் நுழைந்தாள்….

அடுத்த இரண்டு மணி நேரத்திற்குப் பின்….. நகரின் ப்ரபல டெக்‌ஸ்டைல் ஷோரூமில் இவளும் தீபாவும்….

இவர்கள் முன்னால் பரத்தியிருந்த சல்வார்களை தீபா கிளறிக் கொண்டிருக்க…..

“அப்ப நான் என்ன ஆனேன்னு சொல்லு பார்க்கலாம்?” மிக உற்சாகமான சிறு குரலில் கேட்டுக் கொண்டிருந்தாள் சரித்ரா…. எதிர்ல நிக்ற சேல்ஸ் பொண்ணுக்கு கேட்க கூடாதுல்ல…

இவளைப் பரிதாபமாய் திரும்பிப் பார்த்தாள் தீபா….

“ப்ச்….இப்ப நீ என்னனு கேட்கனும்….சரி நானே சொல்றேன்….நான் நம்ம ஜெர்ரி சைஸ் மனிஷியாகிட்டேன்….”

“ஜெர்ரியா….?”

“ஆமா நம்ம டாம் கேட்டை துரத்தி துரத்தி அடிக்குமே அந்த ஜெர்ரிதான்…..அப்டி சின்னதாகி…ஜெர்ரி வழக்கமா ஓடி ஒழியுமே அதோட வீடு அதுக்குள்ள போய்…..” இவள் தொடர….

“ஏன்டி சர்க்கஸ் இப்டி பாடா படுத்ற…..?” புலம்ப தொடங்கினாள் கேட்டிருந்தவள்….

“ சென்னைல இருந்து கிளம்பி ஊட்டில வந்து ட்ரெஸ் எடுக்ற ஒரே ப்ரஜை நீயாதான் இருப்ப……கேட்டா அதெல்லாம் எனக்கு செலக்ட் செய்ய தெரியாதுன்னு ஒரு பதில்….சரி பாவம் பொண்ணு பொழச்சு போகட்டும்னு ஹெல்புக்கு வந்தா… கண்ட கனவ சொல்றேன்னு காதுல ஓட்ட போடுறியேமா தாயே…..”

“ம்…. அது நீ என்ன அடிச்சு எழுப்புறப்ப யோசிச்சுறுக்கனும் TR (தீஞ்ச ரொட்டிய பொண்னு ஷார்ட்டா சொல்லுதுங்கோ) …..கண்ட கனவ அவள எழுப்பினவங்கட்ட சொல்லலை இந்த சரித்ரான்னு சரித்ரம் நாளைக்கு என்னை தப்பா பேசுமே…. நமக்கு ஹிஸ்ட்ரி முக்கியம்…… “

சிறு குரலில் வளவளத்துக் கொண்டிருந்த இவள் குரல், இவள் காதிலே விழாத அளவுக்கு வீலென உச்சத்தில் தொடங்குகிறது குழந்தை ஒன்றின் அழுகை…..

சத்தம் மிக அருகில் கேட்க, அனிச்சையாய் இவள் திரும்பிப் பார்க்க….

அங்கே அதே நேரம்…..” அச்சச்சோ குட்டிப்பாக்கு போரடிக்குதாமா….மாமா கூட கேம் விளையாட வர்றீங்களா…” என சொல்லியபடி அந்த அழுத குழந்தையை அதன் அம்மாவிடமிருந்து வாங்க கை நீட்டிக் கொண்டிருந்தான் அவன்… அதான் அந்த அவன்தான்

‘பிபிஎஸ்’ முனங்கியது இவள் உள்மனது..

அந்த குட்டிப் பையனுக்கு ஒரு வயது இருக்குமாயிருக்கும்….

“வேண்டாம் ஜீவா.. நீயே என்னமோ ஓன்னு இருக்க….டயர்ட்டா இருக்கப்ப இவனை சமாளிக்கிறது…” அந்த அம்மா ஏதோ சொல்ல தொடங்க……

இதற்குள் உரிமையாய் குழந்தையை  தூக்கி எடுத்திருந்தான் அவன்….“நான் டயர்டா இருக்கேன்னு சொன்னனா?” என அந்த பெண்ணிடம் கேட்ட படி…..

’அது அவனது அக்காவா இருக்குமோ…?’ இவள் மனம் ஆராய்ந்தது. கூடவே இவனப் பார்க்க டயர்டா இருக்காமா…?? என்றும் ஒன்று தோன்றியது…..

“வாடா மாப்ள….நாம வேர்ல்ட் பீஃஸ காப்பாத்த போவோம்…..” கை மாறி அவன் கை வரவும் அழுகையை நிறுத்திவிட்டு…. அவன்  ஒற்றை கையில் ஜோராய் உட்கார்ந்து….. அவன் முகம் பார்த்த குழந்தையிடம்  அந்த பிபிஎஸ் @ ஜீவா சொன்ன விதம் கொஞ்சம் க்யூட்டாய் ஃபீலாகியது இவளுக்கு….

டெனிம் ஷாட்ஸும்…. வைட் ஷேர்ட்டுமாய்  குட்டியோ ரொம்பவும் க்யூட்டாய் தெரிந்தது…… இப்போது இவள் பக்கவாட்டு கையில் விழுந்தது ஒரு இடி…. வேற யாரு தீபாதான்……

“இந்த க்ரீனா இல்ல அந்த பிங்கா…. உனக்கு எதுடி பிடிக்குது…?” அவள்  கேட்க

“ஏய் TR அங்க ஒரு குட்டி க்யூட்டா இருக்குது….” அதற்கு இவளது பதில்….

“அதல்லாம் நாம கேட்டா வீட்டுகாரங்க சும்மா விடமாட்டாங்க….” என்ற தீபாவின் பதிலில் அவள் பொறுமை எல்லையை தொட்டுவிட்டது என புரிய

அதற்கு மேல் அவளைப் படுத்த விரும்பாமல் அவசரமாய் தன் முன் கிடந்த சல்வார்களுக்குள் பார்வையை புதைத்தாள் சரித்ரா…. ஆனாலும் என்னைக்கு இவ இவளுக்கு ட்ரெஸ் செலெக்ட் செய்துறுக்காளாம்….இப்ப மட்டும் செய்துட…..மனம் அங்கு போகவில்லை….

“இங்க பாருங்க குட்டிப்பா….. இப்ப நாம என்ன செய்யனும்னா இதை மூவ் பண்ணனும்……”அவன் சொல்லும் சத்தம் பின்னால் கேட்க எதை மூவ் பண்ண போறாங்களாம் என்றது இவள் மனது….

“அப்போ அம்மா மட்டுமில்ல எல்லோரும் ஹேப்பியாகிடுவாங்க…….” மெல்ல பார்வையை நிமிர்த்தியவளுக்கு எதிரில் இருந்த கண்ணாடியில்……அவன் அந்த குழந்தையை அங்கிருந்த சுவர் அருகில் இறக்கி விடுவது தெரிகிறது……

“அம்மாவ ஹேப்பியாக்கலாமா……..” அவன் கேட்க….குழந்தை இப்போது சுவரில் இரண்டு கை ஊன்றி தள்ளத் தொடங்குகிறது….ஏனெனில் அவனும் அதைத்தான் ஆக்ட் செய்து கொண்டிருந்தான்……சுவரை மூவ் பண்றாங்களாம்….

“கமான் சேம்ப்…..யெஸ் அப்டித்தான்…..ஆசம்…” அவனது வார்த்தைக்கு ஏகத்துக்கு ஏறிக் கொண்டு போனது குட்டியின் பெரிமிதமும் முயற்சியும்….

‘குழந்தய என்னமா ஏமாத்றான்….’ என ஒரு சிந்தனை ஓடினாலும்……அவன் சொன்னது போல் குழந்தையின் அம்மா மட்டுமல்ல  குழந்தை உட்பட எல்லோரும் சற்றாய் சிரிப்புடன் ஹேப்பியாய் தங்கள் வேலையை தொடர….

இப்போது கண்ணாடியில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த இவளது பார்வையை சந்திக்கிறது அவனது பார்வை……

அச்சோ…….!!!! அவசர அவசரமாய் அவனிடமிருந்து பார்வையை பிரித்தெடுத்தாள் இவள்….

“ஏன்டி கேட்டேன்ல க்ரீனா பிங்கானு….இவ்ளவு நேரமா யோசிப்பா ஒருத்தி….?” தீபா வேறு இடையிட….

‘எனக்கு எடுக்க தெரியாதுன்னு தெரிஞ்சுதான வந்த….’ என இவள் இயல்பின் படி எகிறாமல்…. ஏனோ எதையாவது செலக்ட் செய்து  அமைதியை மீண்டும் நிலை நாட்ட தோன்றியது இவளுக்கு….

சற்று படபடப்பாய் இருக்கிறது…. ‘இவ அவனப் பார்த்துட்டு இருந்தத அவன் எதுவும் தப்பா நினச்சுடுவானோ….?’

தீபா சொன்ன அந்த பிங்க் அண்ட் க்ரீனை இவள் உன்னிப்பாய் பார்த்தாள் இப்போது…..

“ஹேய்  இந்த க்ரீன் உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்……” அவன் சத்தம்தான்…..

‘இப்பொழுது சட்டென ஏறியது இவளது சுயம்….அவ்ளவு திமிராமா….? எதோ குழந்தைய இவ பார்த்தா……இவனப் பார்த்து மயங்கிப் போய் நின்ன மாதிரி…..இவ ட்ரெஸ்ஸ செலெக்ட் செய்ய அவன் யாராம்….?’

“சே இந்த க்ரீன் நல்லாவே இல்ல……அந்த பிங்க் ஓகே….” விறைப்பாய் சொல்லியபடி சரித்ரா கண்ணாடியில் அவனைப் பார்க்க….அவனோ அவனது அக்காவின் கையில் இருந்தவைகளில் ஒரு பச்சை நிறப் புடவையை சுட்டிப் பேசிக் கொண்டிருந்தான்……

இப்போது இவள் பதிலில் இவள் புறமாய் ஒரு பார்வை வேறு வீசினான்…

‘சே….பல்ப்பா…’

“நாம மெட்டீரியல்ஸ் பார்க்கலாம்…..”அவசரமாய் தீபாவின் கை பற்றி இழுத்தபடி நடந்துவிட்டாள் இவள்….

பின்பு அலைந்து திரிந்து ஷாப்பிங்க் முடித்து கடையைவிட்டு வெளியேறவென அதன் முன் பகுதி நுழை வாயிலுக்கு இவர்கள் வர, இப்போது அவனும் அவனது அக்காவும் கூட அங்கேதான் நின்றிருந்தனர்….

பர்சேஸ் செய்தவகைளை டெலிவரி வாங்குமிடத்தில் அவர்கள்…..  அவன் இடுப்போடு இரு புறமும் கால் போட்டு, அவன் கழுத்தை தன் பிஞ்சு கைகளால் சுற்றி,  அவன் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு கையில் தாங்கிய படி…..அடுத்த கையில் அவன் அந்த பேக்குகளை வாங்குவதைப் பார்க்க இவளுக்கு நன்றாக தோன்றியது….

எ கம்ப்ளீட் குடும்ப மனிதன் ஹெய்….மனதுக்குள் கமென்ட் செய்து கொண்டாள்.

இதுதாங்க நம்ம சரித்ராவின் ஹிந்தி……சொல்றத சொல்லிட்டு ஒரு ஹேய் சொல்லி முடிச்சா அது ஹிந்திதான?

கடை வாசலில் இருந்த பட்டர் கார்ன் ஆளுக்கு ஒரு கப் இவளும் தீபாவும் வாங்கி சாப்பிடும் போது அவன் அக்காவுடன் இவர்களை தாண்டிப் போனான்…..

சாப்பிட்டு முடித்தபின்…இப்போது இவள் தீபாவுடன் தன் ஸ்கூட்டியை எடுக்க பார்க்கிங் போக….அங்கு இவள் ஸ்கூட்டியில் அந்த டெக்‌ஸ்டைல் ஷோரூம் கவர்…. இவளுக்கும் முந்தி தீபாதான் அதை எடுத்து திறந்தாள்….

“என்னடி இது யாரோ மறந்து வச்சுட்டு போய்ட்டாங்களோ…?” என்றபடி….

‘ரித்து இந்த ப்ளூ உனக்கு ரொம்ப க்யூட்டா இருக்கும் ….நம்ம ரெண்டு பேருக்கும் பிடிச்ச கலர்—- பிபிஎஸ்’ என  எழுதப்பட்ட கடிதத்தோடு இவளைப் பார்த்து சிரித்தது  இவளது பேவரிட்  ப்ளூ நிறத்தில் சல்வார் ஒன்று…..

இதுக்கு என்ன அர்த்தம்…?? யார் அந்த ரித்து….??? ஆனா அது என்ன பிபிஎஸ்….? அந்த ஜீவாவோட வேலையா இது? அவனுக்குதானே இவ பிபிஎஸ்னு பேர் வச்சா….ஆனா அவனுக்கு அப்டி பேர் வச்சுறுகிறத  இப்பவரை இவ யார்ட்டயும் மூச்சுவிடக் கூட இல்லையே..… இதுல இது இவளுக்கு பிடிச்ச ப்ளூ வேற….

டேய் என்னாங்கடா நடக்குது இங்க…?

சுற்று முற்றும் எங்கு தேடியும் யாரையும் காணவில்லை…. வேற வழியில்லாமல் அந்த ப்ளூ சல்வார் இவள் வீடு வந்து சேர்ந்தது….

ரண்டு நாளில் தீபா கிளம்பிப் போக…..இவள் இன்று மாலை இவளது நாய் டாமருடன் வாக்கிங் வந்திருந்தாள்…. டாமர் ஒரு கன்னுகுட்டி அளவில் இருக்கும் ராட் வீலர் குலம்….

கை  டாமர் கயிறை பிடித்திருந்தாலும் சரித்ரா மனம் முழுவதும் எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது… இதில் சட்டென இவள் பிடியை உருவிக் கொண்டு ஓடுகிறது திருவாளர் டாமர்….

“ஹேய் டாமர்….நில்லு…ஸ்டாப்….ஸ்டாப்னு சொல்றேன்ல…” இவள் அதை துரத்திக் கொண்டு ஓட…அப்போதுதான் தெரிகிறது  எதிரில் சற்று தொலைவில் அவன் ….அந்த பிபிஎஸ் @ ஜீவா…..அவனது கார் வின்டோவை இறக்கிவிட்டு இவளை பார்த்தபடி காரில் அமர்ந்திருந்தான்…………

.இந்த டாமர் ஓடிப் போய் ….இவள் கொஞ்சமும் எதிர்பாரா வண்ணம்….அந்த கார் வின்டோ வழியே உள்ளே ஏறி…..அவன்  தோள் வரை கால் போட்டு…… விட்டா அவன் முகத்தை நக்கி வச்சுடும் போல…..கடிச்சா கண்டிப்பா ஒரு கிலோக்கு உடம்புல விழும் ஓட்டை…..

“ஏய் டாமர்….. “ அலறாத குறையாக அலறிக் கொண்டு இப்போ இவள் ஓட…. அதற்குள் டாமர் காரின் பின் சீட்டுக்குப் போயிருந்தது……..இவள் கார் அருகில் நின்று இப்போது எத்தனையாய் கூப்பிட்டாலும், அதட்டினாலும அது  அசைவதாய் இல்லை…

அந்த பிபிஎஸ்ஸை  முடிந்த மட்டும் முறைத்தாள்…..ஆனாலும் இதில் அவன் தப்பு என்ன என இவளுக்கே புரியவில்லை…..

“கதவ திறங்க…” .இவள் முறைப்பும் கர்ஜிப்புமாய் கடுகடுக்க… அவன் இவள் முகத்தை பார்த்தபடியே காரின் இவள் பக்க கதவை திறந்து விட்டான்…..

இப்போது அதன் வழியாய் உள்ளே குனிந்து…..இவள் டாமரின் கயிறை பற்றி “வா டாமர்….இப்ப வரப் போறியா இல்லையா” என்ற உறுமலுடன்  இழுக்க…..

அந்த அன்பு கன்னுகுட்டி பதிலுக்கு இவள் செய்ததையே…. அதாங்க இழுக்கிறதை……. அக்கா அக்கா நானும் உன்ன மாதிரியே…… என்றபடி தானும் ஈக்வலண்ட்டாய் இழுக்க …… பேலன்ஸ் மிஸ்ஸாகி காருக்குள் போய்  எப்படியோ எதிலயோ இடித்தபடி விழுந்தாள்…..

ஹேய் என அந்த பிபிஎஸ் பதறுவது இவளுக்கு கேட்கிறது…. கூடவே சில கிங்…கிங்….கிஸ்கா….. என எதேதோ சின்ன சின்ன சத்தங்களும்…

இதோடு சேர்ந்து காருக்குள் முக்கால்வாசி உள்ளுக்குள்ளும் கால் மட்டுமாய் கொஞ்சம் வெளியிலுமாய் விழுந்திருந்த இவளை…..எதோ ஒன்று பத்திரமாய் மொத்தமாய் உள் பகுதிக்குள் பார்சல் செய்யும் நிகழ்வு….

ஹேய்….என இவள் அலறி புரண்டு எழுந்து சமநிலைப்படும் போது…..லைட் க்ரீம் கலரில் இருந்த காரின் இன்டீரியர் முழுவதும் ஒரு ப்ளாக் நிறத்திற்கு மாறி….. டாமரை  ஒரு வள்ளுடன் படுத்து பம்ம செய்து…

எங்கோ பறந்து கொண்டிருக்கிறதா…..????கரைந்து கொண்டிருக்கிறதா…..????இது என்னது கார் தானா….???? இவன் மனுஷன் தானா….???? ஐயோ நான் கூட …. மிரண்டு போனாள் சரித்ரா…

“ஹேய்..…கூல் டவ்ண்….ஒன்னுமில்லமா….ரிலாக்‌ஸ்…..பை மிஸ்டேக் நீ எதையோ ப்ரஸ் செய்துட்ட….ஃப்யூ மினிட்ஸ்ல சரியாகிடும்…அதுவரைக்கும் கண்ண மட்டும் மூடிக்கோ…” ஆறுதல் சொல்றானாம் அவன்…..

‘ஹான்ன்….இவன் பக்கத்துல உட்காந்து கண்ண வேற மூடனுமா?’ முழு கண்ணளவிலும் முறைத்தாள்……

“இன்னொரு டைம் இப்டி நீ போன்னீங்க…..…..” இவள் கொதிப்பாய் தொடங்க….

“ஓகே  சொல்லல….நீ..ங்க இப்ப கண்ண மட்டும் மூடிகோ…ங்க…” மரியாதைப் பன்மைக்கு மாறி இருந்த அவன் கண்களை மூடிக் கொண்டான்…

சுற்றிலும் பார்க்க இவளுக்குமே எதோ வயிற்றைப் பிரட்டுவது போல் தோன்ற….இப்போது இவளும் வேண்டா வெறுப்பாக க்ளோசிங் த ஐஸ்…..

சில நிமிடங்கள் கழித்து எல்லாம் இயல்பு போல் தோன்ற….இவள் கண்விழித்து அருகில் இவளது ஆசை ஊட்டியை தேட…..

ஐயஹோ!!! அது காணாமல் போயிருந்தது…..

நாம எங்க வந்து  இருக்கோம்….??? பதறியபடி சுற்றிலும் பார்வையை சுழற்றியவளின் கண்களில் கிடைக்கிறது தூரத்தில்  அந்த காட்சி….

ஒருவித காபி நிறத்தில் மேல் சட்டை பகுதி…. பாவாடை போன்ற பகுதியோ வழ வழ பள பள சந்தன நிறம்…. கால் சராய் ஒரு வித சிவப்பில் ஆரஞ்சு புள்ளிகளுடன்…. இப்படி ஜோதா அக்பர் மூவில வர்ற ஆம்பிளைங்க மாதிரி ஒரு ட்ரெஸ் போட்ட ஒரு ஆள்…..தலையில சந்தன நிற டர்பன்ல கொஞ்சம் முத்து அலங்காரம்…….கழுத்தில் இரண்டு சரமாய் ஓடிய முத்துமாலை….காதிலும் சிறு முத்துக்களால் கம்மல்…….

ஒரு பல்லக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்…….பல்லக்கு தூக்கிகள் பக்கத்தில் நின்றிருந்தனர் படு பவ்யமாக…

‘டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எங்கடா கொண்டு வந்துட்ட என்ன…???’  இவள் அலற ஆரம்பிக்க…….எங்க அலற முடியுதாம்…? அதுக்குள்ளதான் பக்கத்திலிருந்தவன் இவ வாய மூடிட்டானே….

“ப்ளீஸ் ப்ளீஸ் கத்தாதமா…தீங்க…அவங்க காதுல விழுந்தா கஷ்டம்……இப்போதைக்கு நாம இந்த டைம் மெஷினுக்குள்ள இருக்ற வரைக்கும் நாம இங்க இருக்றது அவங்களுக்கு தெரியாது….பேசுனா அவங்களுக்கு கேட்கும்…. நீ…ங்க விழுந்ததுல பை மிஸ்டேக் இந்த பீரியட் வர மிஷின் செட் ஆகிட்டு….. எக்‌சிக்யூட் ஆன பிறகு இடையில நிறுத்த முடியாது….ஆனா இப்போ இப்டியே திரும்பி நாம உன்…ங்க வீட்டுக்கு போய்டலாம்….”

எங்க போகவாம்…. அவன் இத்தனை விளக்கமா விளக்கிகிட்டு இருக்ற வரை இவ கைய கால வச்சுகிட்டு சும்மா இருக்கவாமா….? இவ கத்த ஆரம்பிக்கவும் இவள கழுத்தோட இழுத்து பிடிச்சு இன்னொரு கையால இவ வாய வேற மூடினானா……அப்பவே இவ ஐயோ அம்மா அப்பா காப்பாத்துங்க ரேஞ்சுல…..கையை காலை உதைக்க…..

எக்சிக்யூஷன் கம்ப்ளீட் ஆனதில் அதுவாக அன்லாக் ஆகி இருந்த கதவில் இவள் கை எதையோ தட்ட….விழுகிற இவளது கால் கொடுத்த உதைகளில் கதவு திறந்து வைக்க….

‘அச்சச்சோ அம்மா இந்த வளந்தவன நம்பி உள்ள வந்த  என்ன என்னலாமோ செஞ்சுபுட்டாங்களேயா சாமி…..இனி இத தாங்காது இந்த டாமி……நான் போறேன் இது என் பூமி…..!!!’

அலறிய படி திறந்த கதவு வழியே விழுந்தடித்து ஓடுகிறது…..டைம் ட்ராவல் அனுபவத்தில் தாறுமாறாய் மிரண்டிருந்த  டாமர் த டாக்….

இப்போதுதான் விஷயம் சொல்லி விளக்கி முடித்திருந்த ஜீவாவின் வார்த்தைகளில் இவள் அய்யோவிலிருந்து ஆன்….ஆஹான்…ரேஞ்சுக்கு வந்திருக்க….. பின்னே டைம் மிஷினாச்சே…….த டைம் மி…ஷி…ன்….

அப்படியே அசையாமல் நின்றிருந்த நீண்ட கைகால்களை வைத்தும்….. நிமிர்ந்து இவனைப் பார்த்திருந்த அவளது முட்டைக் கண்களை வைத்தும்……. அவள் விஷயத்தை புரிந்து கொண்டாள் என, அவன் இவளை பிடித்திருந்த பிடியை விலக்கிய நேரம்…. டாமர் கதவை தாண்டிப் போய் சற்று தொலைவில் நின்றிருந்தது…….

இப்போ இவளோட ‘டைம் மிஷினா ஆஹான்’ என்ற மனம்….’ஐயோ மை டாமர்’க்கு தாவி இருந்தது….

நாய பிடிக்கப் போறேன்னு இவளும் எழுந்து ஓடிவிடக் கூடாதென அவசரமாய்  அவன்  இவள் கையைப் பிடிக்க வர…

அவன் கைகளுக்குள் பிடிபடாமல் சட்டென கையை இழுத்துக் கொண்டவள்….. “எங்களுக்கும் காமன்சென்ஸ்லாம் இருக்குது…அப்டி ஒன்னும் ஓடிட மாட்டேன்…..” நொடித்த வார்த்தைகளால் அவனை குத்தி…..

“ஆனா டாமர் இல்லாம இங்க இருந்து வர மாட்டேன்…..” என்று முடித்தாள்.

“சாரிமா…ங்க… கண்டிப்பா….”  சொல்லியபடி  இப்போது காரில் எதோ பட்டன்களை இவன் அப்படியும் இப்படியுமாய் அழுத்த…..

“ஏம்பாங்க….” இவள் அவனைக் கூப்பிட்டாள்…. “இப்டி கூப்டா உங்களுக்கு எப்டிங்க சார் இருக்குது…..? இதுக்கு நீங்க என்னை நீ போன்னே பேசிடுங்க….. பைதவே என் நேம் சரித்ரா…”

அவள் நக்கலாய் தொடங்கிய போது…. சற்று ஒருவிதமாய் பார்க்க ஆரம்பித்தவன் முகத்தில் இப்போது புன்னகை…

”தேங்க்ஸ்…..என் நேம்…” அவன் சொல்லி முடிக்கும் முன்

“ஜீவா…” ஒரு ஃப்ளோவில் சொல்லி இருந்தாள் இவள்…..  இப்போது அவன் பார்வையில் ஒரு மின்னல்…..‘ஐயோ எதுக்குடி இப்ப சொன்ன..?’ அதே நேரம் அவள் மனம் அலற…..

அந்த இவளது சங்கடமும் அவனுக்கு புரிந்ததோ…..இதழில் அடக்கிய புன்னகையுடன் அவன் பார்வையை ஸ்டீரிங் வீலுக்கு திருப்பினான்…..இப்போது கார் சற்று தொலைவு நகர்ந்தது….

“இப்ப நம்ம சுத்தி யாரும் இல்லை…இறங்கி டாமர தேடலாம்….. ஆனா யாரும் பார்க்காத மாதிரி கவனமா இருக்கனும்….” அவன் சொல்ல சரித்ரா சுற்றும் முற்றும் பார்த்தபடி இறங்கிக் கொண்டாள்….

 

Next Page