காதல் வெளியிடை 13

றுநாள் சஹா அறையை நோக்கிச் செல்லும் போதே ஷ்ருஷ்டிக்கு  மனம் துளியும் சரியான நிலையில் இல்லை….. என்ன செய்து கொண்டிருக்கிறேன்… ஏன் செய்து கொண்டிருக்கிறேன்…. என்ற  வகைக் கேள்விகள் அவளை குடைந்து கூடாரமாக்கி நான்கு பக்கமும் இழுத்து அடித்துக் கொண்டிருந்தது…..

இதில் அவன் அறை வாசலை அடையும் போது கண்ணில் படுகிறது அது……அடுத்த கடிதம்…..வெண்ணிற உறையில் சிவப்பு இதயத்துடன்…..

அவ்வளவுதான் எதிர்பாரா நேரத்தில் எதிர்ப்பட்ட வனராஜனை கண்டது போல் வாயோடு சேர்ந்து உயிரும் வறள…..  ஒரு நொடி ஆடிப் போய் நின்றுவிட்டாள் இவள்…

பின் ஒரு விதமாய் அரை குறையாய் ஆசுவாசப்பட்டுக் கொண்டவள்…

“இந்த பூரி…… !!!!! என மனதுக்குள் கத்தியபடி பல்லை கடித்து தன்னை அடக்கி…. நின்று போன மூச்சோடு குனிந்து கடிதத்தை எடுக்க…..இருந்த உணர்ச்சி வேகத்தில் சற்றாய் நடுங்கிய கால் ஸ்லிப் ஆகி…..அறை கதவில் டம் என இடித்துக் கொண்டே அந்த கடிதத்தை எடுத்துச் சேர்த்தாள்…..

அதற்குள்  அழைப்பு மணி அழுத்தும் முன்னமும் கூட கதவை திறந்து கொண்டு எட்டிப் பார்த்தான் சஹா….

“ஹாய் ஸ்ரீ… என்ன சத்தம்?” என்றபடி…

தூக்கிவாரிப் போட நிமிர்ந்தாள் அவள்……அதன் பின் அந்த கடிதத்தை இவள் எப்படி வைத்துக் கொள்ளவாம்….? சில் சில் சிலீரென ரத்தம் சுற்றி சுற்றி பாய….. பய தாளத்தில் இதயம் ஓடாய் சத்தமிட…. தயக்கமாய்…..சங்கடமாய்…. முகம் தொங்க அவனிடம் அதை நீட்டினாள்……

தன்  மனதினுள்ளோ ‘போன ஹாலோவீன் லெட்டரை மறைச்ச மாதிரி இதை மறைக்க முடியாமே போய்ட்டுதே’ என சின்னதாகவெல்லாம் நினைத்துக் கொள்ளவில்லை அவள்….. நடுநடுங்கிப்போனாள் ஷ்ருஷ்டி…

‘அந்த லெட்டர்லயே பூரி தன்னை சஹாட்ட காமிச்சுக்கதான நினச்சா….? இப்ப எங்க ஓபனா எழுதி இருப்பாளோ?  அதைப் போய் கைல கிடச்சும் மறைக்காம விட்டுட்டமே….. பூரி தன்ன லவ் பண்றான்னு தெரிஞ்சா சஹா எப்டி ரியாக்ட் செய்வான்?’ இப்படி எதுவெல்லாமோ எகிறி ஓட…. விதிர்விதிர்த்துப் போய் இவள்…

இதற்குள் அதை பிரித்து ஏதோ கடை பில்லை வாசிப்பது போல் எந்த பாவமும் இன்றி வாசித்திருந்த சஹா….அதை இவளிடமே கொடுத்தான்….“இதுக்கு என்ன அர்த்தம் ஸ்ரீ…? என்றபடி….

வண்ணமற்ற அவன் குரல் வந்த வகையில்….. இயல்பை விட இன்னுமாய் இமைதூக்கி அவன் கண்ட வகையில்  இவள் அடி வயிற்றில் அசைந்து  பிறண்டது அர்த்தமற்ற பயம் ஒன்று.

எவ்வளவோ முயன்று எதையும் வெளிக்காட்டாமல் சமாளித்து…..எச்சில் விழுங்கியபடி கை நீட்டி வாங்கியவள் கண்ணில் படுகிறது அது….. அந்த கவிதை…

மாயையின் மந்தகாசம் நீ

நிஜங்களின் நிர்பயம் நான்

காலப் புரவியின்

கால்தொடா ஸ்தலத்தில்

கற்புறுகிறது என் ஒற்றைக் காதல்

இவளது கவிதைதான்…..இதப் படிச்சுட்டுதான் மீனிங் புரியலைனு அந்த பூரி உளறினது…..எதோ காதல்னு வரவும் அனுப்பி வச்சுட்டு போல…..தலையில் அடித்துக் கொள்ளத்தான் வருகிறது இவளுக்கு….

ஆனால் எதிரில் நின்றிருந்தவன் இவள் முக செல்களை புத்தகம் போல் வாசித்துக் கொண்டிருந்தானே…  இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் பார்த்தால் இவள் முகத்தில் ரத்தமே வரக் கூடும்…. அப்படி ஒரு பார்வை அவன் விழி செயல்…

குனிந்தே நிற்பதுவும் குற்றவாளியாய் தோற்றுவிக்குமே….. முயன்று  அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஷ்ருஷ்டி… அவள் கண்ணிடைப்பட்டது அவனது கண்களே….

“இதுக்கு நீ மாயை, நான் நிஜம்….. என் காதல் நிறைவேறும் காலம்னு ஒன்னு வராதுன்னு அர்த்தமா? நான் உன்ன இனி டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்னு சொல்றதுக்கா இது?” என தன் புரிதலை சொல்லி விளக்கம் கேட்டான் சஹா…. அப்போதுதான் கவனிக்கிறாள் அவன் குரலில் ஒருவித அடர்வு……

முந்திய கவிதையும் ஷ்ருஷ்டியுடையதே வந்திருந்ததால் சஹாவுக்கு இதுவும் அவளுடையதே என சட்டென புரிந்துவிட்டது…..ஆக அதன் அர்த்தம் அவனுக்கு கொடுத்த தாக்கத்தில் அவன் இப்படி கேட்டுக் கொண்டிருந்தான்……

இதெல்லாம் இவனுக்கு அனுப்ப என அவள் எழுதவில்லைதான்….இருந்தாலும் அவை இவனுக்கானவை என நன்றாகவே தெரிகிறது அவனுக்கு…..அப்படி எந்த வகையில் இவன் அவளுக்கு மாயையாகிப் போனானாம்….? ஏன்?  இவனை விட்டுப் போக வேண்டும் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவள்??? இதை நினைக்கவே இவனுக்கு எப்படி இருக்கிறதாம்…? அவளுக்குமேதான் எப்படி இருந்திருக்கும்? பூரிய பார்த்து நேத்து எத்தனையாய் காய்ந்தாள்….? இதெல்லாம் போதாதென இவனை விரும்புவதே ஒழுக்கமற்றது போல் எதையோ உளறி வேறு வைத்திருக்கிறாள்….

அவள் குடும்ப சூழல் மட்டுமல்ல அவளைப் பற்றியே கூட இவனுக்கு பெரிதாய் எதுவும் தெரியாது….அதெல்லாம் அவள் இவனிடம் மனம்விட்டு பேசுமளவு வந்த பின்தான் தன் விருப்பத்தை அவளிடம் வெளியிட வேண்டும் என முடிவு செய்திருந்த இவன்….. நேற்றைய ஷ்ருஷ்டியின் பூரியுடனான கொழுக்கட்டை களேபரத்துக்குப் பின் தன் காதலை அவளிடம் வெளிப்படையாக சொல்லிவிடலாமா எனக் கூட  யோசிக்க துவங்கி இருக்கிறான்….

ஆனால் இப்போதோ இச் சூழலில் தன் காதலை சொல்வது அவனுக்கு துளியும்  சரியாக படவில்லை…..நிராகரிப்பதை தவிர வேற என்ன  பதில் கிடைத்துவிடுமாம்….? அதோடு வெட்டிக் கொண்டு இன்னுமாய் இவனை விலகியும் போவாள்….. அதைவிட அவள் வகை மனதடைக்கான காரணம் தெரிந்தால் சரி செய்யலாம்தானே…. ஆக ‘இதை நீ எனக்குத்தான எழுதின?’ என்றெல்லாம் கேட்காமல்….’இதுக்கு அர்த்தம் என்ன?’ என்று மட்டும் கேட்டபடி நின்றான் அவன்…..

அதோடு  இவள் அறையிலிருந்து கவிதை களவு போகிறதென்றால் யார் இவளுக்குத் தெரியாமல் அங்கு வந்து போவதென்ற கேள்வியும் அவனுள்…. அதனால் உண்டாகிய அவள் பாதுகாப்பு குறித்த அக்கறையும்…… ட்ரோன் அனுப்பிய அந்த மோனியின் சகாக்கள் மீதாய் கனன்ற கோபமும் கூட அந்நேரம் அவனுக்குள் கிரியை செய்து கொண்டிருந்தது….

இவனுக்கு வந்த முதல் கவிதை ஷ்ருஷ்டியுடையது என அவள் அறையில் பார்த்து அறிந்து கொண்ட போது,  எதோ ப்ராங்க் செய்து ஷ்ருஷ்டியிடமிருந்து எழுதி வாங்கி அந்த கவிதையை இவனுக்கு  மோனியின் நட்பு வட்டம்தான் அனுப்பி இருக்கிறது என நினைத்தான் இவன்….

அதனால்தான் இனி எப்போதும் அவள் இவன் பார்வையில் இருக்க வேண்டும் என இவன் எண்ணியதும்…. ஆனால் இப்போதும் இவள் கவிதை வருகிறதென்றால் யாரோ இவளுக்குத் தெரியாமல் இவள் அறைக்குள் போகிறார்களோ என்ற கேள்வி வருகிறது அவனுக்கு….

இந்த உணர்வுகளும் எண்ணங்களும் கூட அடக்கப்பட்ட கோபதவிப்பாயும் கண்டன கலவையாயும் அவன்  முகத்திலும் குரலிலும் கலந்தே தலைநீட்ட…..

அதைக் கண்டிருந்த ஷ்ருஷ்டிக்குள் திகுதிகுவென தீ போல ஏறுகிறது திகில்…… அவன் என்ன நினைக்கிறான்னு இவளுக்கு எப்டி தெரியும்? ‘இந்த கவிதைய எழுதினது நான்தான்னு இவனுக்கு தெரிஞ்சுட்டோ…..? இந்த லெட்டரெல்லாம் அனுப்புறதே நான் தான்னு நினைக்கிறானோ? அதான் கோப படுறானோ….?’ இதுதான் அவள் முதல் புரிதல்….

‘இல்ல  அப்டின்னா நீ ஏன் இப்டி செய்தன்னு கேட்பானே…?’ ஆனாலும் இப்ப இவ என்ன பதில் சொல்ல….? ‘எதாவது வகையில இத செய்றது பூரின்னு இவனுக்கு தெரிஞ்சுடுமோ……பூரின்னு தெரிஞ்சு அவட்ட போய் கண்டிக்கிறதுக்குன்னாவது இதைப் பத்தி பேச போய்டுவானோ? அப்டி வெளிப்படையா பேசிட்டா அடுத்து பூரி ‘நீ இல்லன்னா செத்துடுவேன்’னு பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சா என்ன ஆகும்?’ இது அடுத்த கேள்வி…… மொத்தத்தில் தாறுமாறாக ஓடுகிறது பயநதியும் பதற்ற அருவியும் இவளுள்….

திக் திக்கென துடிக்கும் இதயத்தையும்…. இரண்டு உள்ளங்கை வேர்ப்பதையும் உணர்ந்தாள் அவள்… வெளிறினாள்…

அதுவரைக்கும் ஒரு வகை தீவிர பாவம் விரவிக் கிடந்த அவன் பார்வையில் அவள் வகை பயநடுக்கம் புலப்பட…. இப்போதோ சட்டென கனிந்துவிட்டது இவன் கண்களும் காதல் கொண்டிருந்த இவன் மொத்த இதயமும்…. அதோடு அவள் இவனைப் பார்த்து பயப்படுகிறாள் என்பது அவனுக்கு எப்படி இருக்கிறதாம்?

“சும்மா மீனிங் தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்மா…..” என அவள் பயம் போக்கவென தொடங்கியவன்……அந்த வகை பேச்சு அவனுக்கே போதாமல் “என்னடா….அப்டி என்ன உனக்கு என்னை பார்த்து பயம்?” என கேட்டபடி காதல் எல்லைக்குள் கால் வைத்தான்…

அவன்   கண்களை பார்த்தபடிதானே மிரண்டு நின்றிருந்தாள் அவள்……  சட்டென அவன்  கண்ணில் வந்து கொட்டிய அந்த கனிவே இவளை அடிவேர் வரை அலசிப் பார்த்ததெனில்…. அடுத்த அவன் வார்த்தைகள் என்ன செய்கிறதாம் இவளை?  அனைத்து புறமிருந்தும் அலைகரங்கள் நீட்டி ஒரு அன்பு நதி  அங்கமெங்கும் அடிபட்ட அழுகிற்ற காயங்களாய் நிற்பவளை வாரிச் சுருட்டி தன் மென்பட்டு புயங்களில் புதைத்துக் கொண்டது போல் ஒரு உணர்வு…

அந்த மாயப் புயங்களுக்குள் தன்னை தன்னிலிருந்து விடுவித்து இன்னுமாய்  புதைய வேண்டும் என பிறக்கிறது ஒரு பேராவல் பெண்ணுக்குள்….

ஏனோ ஒற்றைத் துளி நீர் உண்டாகிக் கொள்கிறது அவள் கண்களில்….

பார்த்திருந்த இவனோ இப்போது பதறிப் போனான்….அழுகிறாளே…??!! ஏன்??

இதற்குள்  மாயையில் மண்டிப் போனவள் வாயிலிருந்து சின்னதாய் வந்து விழுகிறது இந்தப் பதம்….  “சஹா”…… இவனை சகனாய் சமானனாய் தன்னவனாய் கண்பிக்கும் தொனி….. உதவ மாட்டாயா என்ற உள்ளர்த்தமோடு அது…

“ஸ்ரீமா என்னாச்சுடா…?” உருகியவன் உயிர்தவிப்போடு ஒரு அடி அவளை நோக்கி எடுத்து வைக்க….

அவ்வளவுதான்…..அவ்வளவேதான்…. சட்டென தன் நிலை உணர்ந்தாள் அவள்…. இப்போது முகமோடு மோதிட்ட அவள் உதிரத்தில் பீறிட்டுக் கிளம்புகிறது விஷ வகை பயமொன்று….  ‘எனக்கு இவன் மேல உள்ள  பயம் போய்டுமோ?’ என வீரிட்டது அது…..

கடகடவென திரும்பி நடக்கத் துவங்கினாள் அவள்…

விருட்டென அவள் முன் போய் நின்றான் இவன்….. “உள்ள வா ஸ்ரீ…” என்ற இவன் குரலில் கோபம் தவிர பிடிவாதம் மட்டுமே பிழைத்து இருந்தது…. பிறகு என்னவாம்? இப்ப எதுக்கு இப்டி வெட்டிட்டுப் போறாளாம்…

“இப்டில்லாம் பேசினா எனக்கு பிடிக்கல….” வெட்டு தெறித்தார் போல் வந்தது அவள் வார்த்தை….

“என்னதான் ஃப்ரெண்ட்னாலும்…..பேசுற முறைன்னு ஒன்னு இருக்கு….” அவள் சொல்ல….சட்டென இவன் சுதாரித்துவிட்டான்…  இப்போதைக்கு காதலை சொல்ல வேண்டாம் என இவன் நினைத்தான் தானே….. அடுத்து இப்டி பேசி வச்சா என்ன அர்த்தமாம்?

“சாரி நீ ரொம்ப ஃபீல் பண்றத பார்த்து அப்டி வந்துட்டு….இனி உனக்கு பிடிக்காத மாதிரி பேச மாட்டேன்….” விட்டுக் கொடுத்தான் அவன்…

பதில் சொல்லாமல் நின்றாள் அவள் சில நொடி…

பின் “உங்க சாரி அக்சப்டட்….ஆனா இனி நான் இங்க வரலை…” என எங்கோ பார்த்தபடி விரைப்பாகவே சொன்னவள், ஒரு எட்டு வைத்து அடுத்து “ப்ளீஸ் என்னை கம்பெல் செய்யாதீங்க…” என்றபடி இவனை கடந்து சென்றாள்.

ஒரு நொடி அவளை தடுக்க நினைத்த சகாயனும் ‘போய் முதல்ல கொஞ்சம் கூலாகட்டும்….அப்றமா  பேசிக்கலாம்’ என்ற புரிதலில் அமைதியாக நின்று கொண்டான்.

தோ அமைதி போல் அவனிடம் ‘சாரி அக்சப்டட்’ என்று வந்துவிட்டாளே தவிர ஷ்ருஷ்டி உள்ளுக்குள்ளோ குமுறிக் கொண்டிருந்தாள்…. அத்தனை வகை புயலும் ஆயிரம் வகை புகைச்சலும்…..கோட்டுக்குள் வராத கோடி வகை நினைவுகளுமாய் அவள்…… அதற்காக அவள் சகாயனை காய்ந்து கொண்டிருந்தாள் என்றால் அதுவும் இல்லை…

‘இவ இடம் கொடுக்கப்போய்தானே அவன் அப்டி  நடந்துகிறான்….’ என்பதே அவளது ப்ரதான குற்றச்சாட்டாய் இருந்தது….. ‘சஹா’  என இவள் தடுமாறிய அந்த நொடி நினைவு வரும் போதெல்லாம் கோடி வாள் கூடி அறுத்தது இவள்  அணுவையும் கணுவையும்…

இதில் நேரம் செல்லச் செல்ல இதற்கு நேரெதிராய்  ‘இனி இங்க வர மாட்டேன்னு வேற சொல்லிட்டு வந்தாச்சு….இனி எப்டி அவன போய் பார்க்க?’ என்ற நினைவே ப்ரதான ப்ரச்சனையாக தோன்றியது….. அதற்கு அவளது ப்ராஜக்ட் விஷயம்தான் காரணம் என பரிபூரணமாய் நம்பினாள் அவள்…. இப்போதே போய் அவனைப் பார்த்துவிட்டு வந்துவிடலாமா என்றெல்லாம் உருளத்தொடங்கியது அவள் உயிர்….

இந்த நேரம் இவளது அறைக்கதவின் புறம் சத்தம்…..”அக்கா நான் பூரி….ப்ளீஸ் கதவ திறங்கக்கா”

அழைப்பு மணியை அழுத்தாமல் கூப்பிட்டாள் பூரி….

‘இந்த நேரத்தில் இவள் வேறயா ‘என துவண்டாலும்…..அவளது குரலில் தெரிந்த கெஞ்சலில் மனம் கேட்காமல் கதவைத் திறந்தாள் ஷ்ருஷ்டி…

இவள் திறந்தும் திறக்காமல் இருக்கும் போதே “தேங்க்ஸ் தீதி….. பாபின்னா அண்ணினு அர்த்தம்…..டென்ஷன்ல தீதின்னு சொல்றதுக்கு பதிலா அப்டி உளறிட்டேன்…..இனி எப்பவும் நான் உங்கள தீதின்னே கூப்டுறேன்…அப்பதான் ஸ்லிப் ஆகாது…..ஆனா இதுக்காகவெல்லாம் நீங்க ஸ்கூபா டைவிங் வரலைனு சொல்லிட்டீங்களா தீதி…?” பெரிய கண்கள் முழுதும் ப்ராவகிக்கும் பெரும் கவலையோடு  இளைக்க இளைக்க  கேட்டது பூரி…

அநேகமாக ஓடி வந்திருப்பாளாய் இருக்கும்……

கவலை தரும் அனைத்தையும் மறந்து ஒரு நொடி முன்பு போல் பூரியின் குழந்தை தனத்தை ரசிக்கப் போனது இவள் மனம்….

“அப்டில்லாம் இல்லபா….” இவள் மறுக்கத் தொடங்க….

இப்போதோ இவளது இடக்கையை இரு கைகளாலும் பற்றி இழுக்க தொடங்கினாள் பூரி….

“ அப்டின்னா வாங்கக்கா.….நீங்க வரலைனா ஸ்கூபா டைவிங்க்கு நானும் வேண்டாம்னு சொல்றாங்கக்கா…..ப்ளீஸ் ப்ளீஸ் வாங்கக்கா….” அவள் கெஞ்ச

சட்டென குத்துகிறது ஷ்ருஷ்டிக்கு….’ஓ இதுக்குத்தானா?’ ஒரு கணம் மனம் உர்ர்ர்ர்ர் என்றாலும்….அடுத்த கணம் பூரியோடு இணைந்து நடக்க துவங்கிவிட்டாள்….

‘இவ வரலைனா பூரிய சஹா வரகூடாதுன்னு சொல்லி இருக்கானே….…அந்த தைரியம் சேர ‘இப்பவே அவனைப் போய் பார்த்தாக வேண்டும்’ என எதோ  உருண்டு கொண்டிருந்ததே உள்ளுக்குள்…..அதற்கு அடிமைபட்டு செல்வதென முடிவெடுத்துவிட்டாள் இவள்….

சஹா தன் அறை வாசலில் இவளைப் பார்க்கவும்

“ப்ளீஸ் முதல்ல உள்ள வா…. “  என எதிர்க் கொண்டான்…. அதிலேயே இவள் முகம் எத்தனை தவிப்பிற்கும் கோபத்திற்கும் இடையில் இருந்திருக்கும் என இவளுக்கு புரிகிறது….. ஆனால் இந்த இவனை கண்டுவிட்ட இந்த நொடி சற்று முன் வரை  இவள் குரல்வளையை கடித்து குதறிட்ட குரூர மனசாட்சியின் கோர  கூக்குரல்கள் எல்லாம் வலுவிழந்து வாயடைக்கிறதே….. ஓதமாய் ஓர் அமைதி வந்து தைக்கிறதே….ஏன் ?

உள்ளே போகும் பூரியை ஒரு கணம் நின்று பார்த்த ஷ்ருஷ்டி அடுத்த நொடி சஹாவின் அறைக்குள் போய்க் கொண்டிருந்தாள்….”இனிமே ஒழுங்கா என் பேரை சொல்லி கூப்டுங்க” என இவனிடம் சட்டமாய் சொன்னபடி…

சஹாவுக்கு கொஞ்சம் கோபம் என்றாலும் அவன் இதயப் பைகளில் நிம்மதி சேமிப்புகள்…. இதழிலோ இடம் பிடிக்கிறது சிறு முறுவல்…… என்ன இருந்தாலும் இவ்ளவு நேரத்துக்குள்ள இவனைத் தேடி வந்துட்டாளே!!!  ஆக இருந்த சூழலை அப்படியே ஏற்றான் அவன்….இன்னுமாய் கிளறவோ…..இது பற்றி ஷ்ருஷ்டியிடம் பேசவோ ஏற்ற நேரத்தை இவன் கண்டாக வேண்டும்….

தெதெல்லாமோ நினைத்து வந்துவிட்டாளே தவிர அடுத்தெல்லாம் ஷ்ருஷ்டியால் சற்று கூட இயல்பாய் இருக்க முடியவில்லை சஹா முன்னிலையில்….

இதில் அன்று அவளுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்தது அவனே….. ஆமாம் அல்க்சான்ட்ரியாவ அடி கடல்ல போய்ப் பார்க்கனும்னா ஸ்கூபா டைவிங்க்கு அவள் தயாராகனுமே…அது ஒன்னும் எதோ போருக்கு போற வார் பயிற்சி கிடையாதுன்னாலும்……உயரம்னா பயம்னு சொல்லிட்டு ஒழுங்கா நீச்சல் அடிச்சு ஒரே ஒருநாள் பழகி இருக்கவளை கடலுக்குள் இறக்குறதுன்னா பயிற்சி தேவைதானே…

ஷ்ருஷ்டி சாதரண நீச்சல் பயிற்சியில் இவனிடம் இலகுவாக இருக்க முடியாது எனதான் நிம்மியை சஹா ஏற்பாடு செய்திருந்தான்…..இப்போது இந்த உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மூடும் தடிமனான ரப்பர் ஷீட் ஸ்கூபா டைவிங் உடையில்… சுறாவே மேல உரசிட்டு போனா கூட  எதோ நம்ம ரூம் சுவர தேச்சுகிட்டு போகுதுன்ற ஃபீல் கொடுக்கிற நிலையில் ….. அதுவும் அவனோடுதானே கடலுக்குள் அவள் வந்தாக வேண்டும் என்ற சூழலில்…. வெறும் எதை எப்படி போடனும்….எப்படி பயன்படுத்தனும் போன்ற காரியங்கள் பற்றிய இந்த பயிற்சியை அவனே சொல்லிக் கொடுக்கலாம் என நினைத்துவிட்டான் போலும்….

அந்த ரீப்ரீதெர் ஸ்கூபா சிஸ்டம் எப்படி கடலுக்கு அடியில் மூச்சுவிட வகை செய்கிறது என தொடங்கி…..எப்படி நீள மூச்சுக்கள் கடலுக்குள்ளே அவசியமாகிறது….. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள  கம்யூனிகேஷன் சிஸ்டத்தை எப்படி கையாள வேண்டும்…. தலைப் பகுதியில் இருக்கும் ஹெல் லைட்டை எப்படி பயன்படுத்தலாம்….கால் துடுப்புகளை எப்படி அணிய வேண்டும்….எவ்வாறு இயக்க வேண்டும் என என்னதெல்லாமோ சஹா சொல்லிக் கொண்டு போக…..அதையெல்லாம் அச்சு பிசகாமல் கேட்பதிலும் அதை செய்து பார்ப்பதிலுமாக இவள் தீவிரமாக ஈடுபடுவது போல் காண்பித்துக் கொண்டாலும்…..  இயல்பற்ற ஒரு நிலையிலேயே அன்றைய அவனை கடந்தாள் ஷ்ருஷ்டி….  அவனும் தேவையற்ற ஒரு வார்த்தை கூட பேசவில்லை…

இவளும் அலெக்சாண்ட்ரியா வருவேன் என சொல்லிவிட்டதால் துறைமுகத்தில் கப்பலைவிட்டு இறங்க அனுமதிக்கும் போர்ட்கால் (port call) எனப்படும் சட்டரீதியான அரசாங்க அனுமதி வாங்கவும்….

கடலடி அலெக்சாண்ட்ரியாவைப் பார்க்க  சுற்றுல்லா வகை அனுமதி என எதுவும் கிடையாது…. அங்கு ஆராய்ச்சி செய்யும் ஒரு நிறுவனகுழு உதவியுடன் தான் இவர்கள் செல்ல வேண்டும்…..ஆக அவர்களிடம் ஷ்ருஷ்டி குறித்து அனுமதி வாங்கவும் என  ஒரு நாள் தேவைப் பட்டதால் அதற்கும் மறுநாள் அலெக்சாண்ட்ரியா   செல்வதென முடிவாகி இருந்தது…..

அந்த மறுநாளும் வந்தது…..

ப்பலிலிருந்து இறங்கி இவர்கள்  துறைமுகத்தின் கிழக்குப் பகுதியில் இருக்கும் அந்த குறிப்பிட்ட கடற்பரப்பை நோக்கி ஒரு படகில் பயணித்துக் கொண்டிருந்தனர்…. அந்த வெள்ளை நிற படகு மிக பெரிதாகவும் இல்லாமல் அதற்காக வெகு சின்னதாகவும் இல்லாமல் ஒரு அளவில் இருக்க…..அதன் ஒரு ஓரத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்தது பூரி….

ஆம் அவள் அணிந்து வந்திருந்த அந்த அதிக ஃப்ளேர் உள்ள முழு நீள  ஷ்ரிங் பாவடையை காற்றின் திசையில் ஓரளவு விரித்துப் பிடித்தபடி நின்றிருந்தாள் அவள்…. பட்பட்பட்பட் என்ற சத்தம் எழுப்பியவண்ணம் படபடவென  காற்றில் ஆடிக் கொண்டிருந்தது அந்த ஆலிவ் பச்சை நிற பாவாடை…..

அவள் அருகில் நின்று கடலைப் பார்த்துக் கொண்டிருந்த ஷ்ருஷ்டியிடம் இப்போது “பாருங்க பாருங்க இப்ப காத்துக்கு கோபம்” என பரபரத்தாள் சின்னவள்…. அதே நேரம் அவளது பாவாடை ஆடும் வேகம் வெகுவாக குறைந்து போனது இரு நொடி போல… பின் முன்னிலும் வேகமாக அடித்துக் கொண்டது பாவாடை…..வீசிய காற்றின் செயல் வேகம் அது….

அந்நேரம் அங்கு வந்து சேர்ந்தான் சஹா…..“என்ன ஒரே விளையாட்டு போல…” என இருவரையும் பார்த்து பொதுவாய் கேட்டபடி..

பூரி வெறுமனே பதிலாக ஈஈஈஈஈஈஈஈஈ என்றதென்றால்…

ஷ்ருஷ்டியோ “ போட்டிங்கின் ஆய பயன் வேற என்ன இருக்கு…” என்றாள்….

அவ்வளவுதான் அவளது ஆய பயனை பிக்கெப் செய்து கொண்டான் சஹா..

“பூரி ஆய பயன்னா என்ன?” சின்னவளிடம் கேட்டான்…

“ஆயா பையனா?…” என திருப்பிக் கேட்டது அது…

அதற்கே ஷ்ருஷ்டிக்கு சிரிப்பு வந்ததென்றால்….

“ஆயா பையன்னா…… மாமா இல்லனா அப்பா அப்டித்தான வரும்” என நாடியில் ஒற்றை விரலால் தட்டிக் கொண்டே பூரி யோசிக்க….

அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்…

சஹாவும் சிரித்தான்தான்….. ஆனால் வாய்விட்டென்று இல்லாமல் சற்றாய் அடக்கமாய்.

அதோடு முகம் கனிய தன் வலக்கை நீட்டி பூரியின் உச்சந்தலையில் வைத்து சின்னதாய் ஒரு ஆட்டு…. “உன்ன மாதிரி ஒரு சின்ன தங்கை எங்க வீட்ல இருந்திருந்தா எல்லாமே நல்லா இருந்திருக்கும்….”  என்றான்.

திக்கென இதயம் நின்று பின் சிலீரென பாய்ந்திட்டது ஷ்ருஷ்டிக்குள்…. அவன் என்ன சொல்கிறான் என புரிகின்றதே இவளுக்கு…

பூரியோ மலங்க மலங்க விழித்தது….. அவள் முகம் எங்கும் உணர்ச்சிக் கலவை…. கண்ணில் நீர் கோர்த்தாலும் முகம் எங்கும் சந்தோஷம் போல் இதழ்களை இழுத்து வைத்து சிரித்தது….

“ எனிவே  இப்பவும் என் தங்கைதான்” அவன் பூரியைப் பார்த்து  சொல்ல

எங்கோ ஒரு தென்றல் ஷ்ருஷ்டிக்குள் சுகமாய் வீச, .அடிவயிற்றிலோ  ஒரு கசமை…. ‘பாவம் பூரி’ என பரிதவித்தது அது…

“தங்கையா….யூ மீன் சிஸ்டர்…..நோ வே” என மறுப்பு சொல்கிறதுதான் பூரி….. ஆனால் கோபம் வலி ஆர்ப்பட்டம் என எதுவும் வெளிப்படுத்தாமல்….ஏதோ விளையாட்டு போல் சொல்கிறது அது…

“முறைய மாத்துறீங்களே ஜி….. “ என்றுவிட்டு பழிப்பம் காண்பித்தது…..

“முன்னமே சொன்னேன் நான் சாலியாங்கும்” என்றபடி ஷ்ருஷ்டியின்  இடக் கையை தன் இரண்டுகைகளிலும் பற்றி இவளது தோளோடு சாய்ந்து கொண்டது….

உருகிப் போனாள் ஷ்ருஷ்டி….. அவளுக்கு இந்த சாலி காலி எல்லாம் எதுவும் புரியவில்லை…….ஆனால் பூரியின் நிலை கண்டு இவளுக்குள் தாய்மை உணர்வு…. பூரி வசதியான பின் புலத்தில் இழப்புகள் எதையும் சந்திக்காமல் வளர்ந்திட்ட ஒற்றைக் குழந்தை….. நிச்சயமாய் இது பெரிதாய் வலிக்கும்….

இவள் இப்படியாய் யோசித்துக் கொண்டிருக்க….

சஹாவோ “எல்லாம் ஒன்னுதான்” என பூரியிடம் சொன்னபடி ஒற்றைவிரல் ஆட்டி பத்திரம் சொல்லிக் கொண்டிருந்தான்….

அதே நேரம் இவர்கள் சென்று கொண்டிருந்த படகின் மோட்டர் நிறுத்தப்பட்டு வேகம் விடைபெற நிற்க துவங்குகிறது…

சட்டென வந்த இந்த மாற்றத்தில் நினைவு தடைபட…..அதே நேரம் ஒருவர் இவர்களிடமாக வந்து….”சூட் போட்டு ரெடியாகுங்க” என ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டார்…

கடலுக்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதென புரிந்தது இவர்கள் மூவருக்கும்…

சஹாவின் சிறுதலையாட்டலில் ஸ்கூபா சூட்டை மாட்டிக் கொள்ள கடந்து போனாள் ஷ்ருஷ்டி…. இப்ப வேற என்ன செய்ய முடியுமாம்? இந்த சூழலில் நிற்கவே இவளுக்கு பெருஞ்சங்கடமாக இருக்கின்றதே…

திரும்பி அவள் வரும் போது…..தயாராக இருந்த சஹா இப்போது கடலில் இறங்க….அவனைப் பின் பற்றி படகின் சுவரை கையால் பற்றியபடி மெல்ல நீருக்குள் இறங்கினாள் இவளும்…..

இதே நேரம் இப்போது இன்னுமொரு படகு அங்கு வந்து சேர்கிறது…..  ஆகாஷ் இருந்தான் அதில்…. “ என்னடா கிளம்பியாச்சா? பூர்ணிமா எங்க?” எடுத்ததும் இப்படித்தான் கேட்டான் அவன்…… அப்போது அங்கு தலைகாட்டிய பூரி….

“இதோ வந்துட்டேன்ணா……” என ஆகாஷுக்கு பதில் சொல்லிவிட்டு

“தீதி எனக்கு உள்ள வர ஒரு மாதிரி இருக்கு….நான்  ஷிப்க்கு போறேன்…..ஹேவ் அ நைஸ் டைம்…” என ஷ்ருஷ்டியிடமும்…..”பை ஜி”என சஹாவிடமும் சொல்லிவிட்டு…. அருகிலிருந்த ஆகாஷின் படக்குக்குள் கால் போட்டு தாண்டி ஏறிப் போனது…

தன் மன நிலையை சமாளிக்க முடியாமல் அவள் கிளம்புகிறாள் என ஷ்ருஷ்டிக்கு புரிகிறதுதானே….எத்தனைதான் இருந்தாலும் ஷ்ருஷ்டியால் நிம்மதிப்பட முடியவில்லை…பரிதவித்தாள்…

சஹாவுக்கு அந்த லெட்டர் எல்லாம் எழுதியது இந்த பூரின்னு தெரியாதுன்றதால அவன் எதேச்சையா பேசிட்டான்….அதை தப்புன்னும் சொல்ல முடியாது….. ஆனாலும் இந்த  இடத்தில இது நடந்திருக்க வேண்டாம்…. ஷிப்ல வச்சு இப்டி நடந்திருந்தா பூரியோட வீட்டு ஆட்கள்லாம் அவளுக்கு இருப்பாங்கள்ல…. என என்னல்லாமோ ஓடுகிறது ஷ்ருஷ்டியின்  மனதில்…

“பூரிய அவ பாட்டிமாட்ட  கொண்டு போய் விட்டுடு…” அழுத்தம் போல் சொன்னான் சஹா…. ‘சும்மா ஷிப்ல விட்டுட்டு அவளா ரூம்க்கு போய்க்கட்டும்னு நினைக்காத’ என அவன் குறிப்பால் உணர்த்துகிறான் என ஷ்ருஷ்டிக்கு புரிகிறது….

ஏதோ மனதில் நெருடியது இவளுக்கு…..

 

Next page