என்ன சொல்லப் போகிறாய்? – அன்ன பூரணி தண்டபாணி

ஹாய் ஃப்ரண்ட்ஸ்! சிலருக்கு என்னை தெரிஞ்சிருக்கலாம்! தெரியாதவங்களுக்கு…. 

 நான் அன்னபூரணி தண்டபாணி! 

இந்த தளத்துக்கு புதுசு! அன்னா மேம் புதுசா புதினம் 2020 அறிவிப்பை பாத்து உள்ள வந்திருக்கேன்!

 Best of the Bestest Entertainer ன்னு கேட்டிருக்காங்க!

 முடிஞ்ச வரைக்கும் பெஸ்ட்டா குடுக்க முயற்சி செய்யறேன்! 

 உங்களின் பின்னூட்டங்களில்தான் என்னைப் போன்றவர்களின் வளர்ச்சி உள்ளது! எனவே உங்கள் பின்னூட்டங்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியிருக்கும் எனக்கு உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

 கதையின் தலைப்பு:

 

என்ன சொல்லப் போகிறாய்

 

 

நாயகன் நாயகி எல்லாம் கதையின் போக்கிலேயே தெரிந்து கொள்வீர்கள்! 

 

கதையின் டீசர் இதோ! 

 

 ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஓர ஓரமா

பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்

பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்

முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள

சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

 

 செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மியின் வெண்கலக் குரல்கள் அந்த ஊடலை ஒலிபெருக்கி (Bluetooth Speaker) வழியாகக் கசிந்து வந்து அந்த அறையின் மூலை முடுக்கெல்லாம் அதிர்ந்து கொண்டிருந்தது. 

 வகுப்பறையின் கரும்பலகை அருகே நின்று கொண்டு அந்தப் பாடலுக்கேற்ற அசைவுகளை அவள் ஆடிக் காண்பிக்க,

ஆறு வயது ஏழு வயது மதிக்கத் தக்க மழலைகள் பத்து பேர் அவளைப் பார்த்து ஆடினார்கள்! 

 ம்ஹூம்சீமாகைய இப்டி வெச்சுக்கோ….” என்று ஒரு குழந்தையின் கையைப் பிடித்து அவள் சரி செய்ய, அந்தக் குழந்தையும் அவள் கூறியது போலவே கையை வைத்துக் கொண்டு அவள் கற்றுத் தந்தபடி ஆட முயன்றது. 

 

தேஜூ…. கால் இவ்ளோ தூக்க வேணாம்அப்றம் கீழ விழுந்துடுவல்ல…” என்று கேட்டுச் சிரித்தாள். குழந்தைகளும் சிரித்தார்கள். 

 

அதிதி…. இப்டி…. ஹாங்…. இப்டி….” 

 

ப்ரீத்தி…. குட்இப்டிதான்….” 

 

சோனு….. இத பாரு…. இந்த கைய இங்க வெச்சிக்கோ…. ம்…. குட்….” 

 

ஒவ்வொருவரும் ஒழுங்காக ஆடுகிறார்களா என்று தனித் தனியாக கவனித்து சரி செய்து சரியாக ஆட வைத்துக் கொண்டிருந்தாள் அவள்! 

 

அவள் சிவப்பு இல்லை! அதே நேரத்தில் கருப்பும் இல்லை! அழகான வட்ட முகம்! பிறை போல நெற்றி! வில் போல் புருவங்கள்! கரு வண்டாய் துறு துறு விழிகள்! எடுப்பான எள்ளுப் பூ நாசி! புன்னகை மட்டும் தான் எனக்குச் செய்யத் தெரியும் என்று சொல்லும் படியான அழகான அதரங்கள்! சங்குக் கழுத்து! நீண்ட கரிய கூந்தல்! சராசரியை விட சற்று அதிக உயரம்! இன்னும் கொஞ்சம் எடை கூட்டலாம் என்னும்படியான உடல் வாகு! 

 

இளஞ்சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தாள்! நடனம் ஆட வசதியாக துப்பட்டாவை தாவணி போல போட்டு இடுப்பில் இறுகக் கட்டியிருந்தாள்!

 

அவளின் நடன அசைவுகள் அவள் ஒரு கை தேர்ந்தஇல்லை இல்லைகால் தேர்ந்த நடன வித்தகி என்று காட்டும்படி இருந்தது! 

 

நடன அசைவுகளுக்கேற்ப கண்களும் பேசியது! சில இடங்களில் கொஞ்சியது என்று கூடச் சொல்லலாம்! 

 

இந்தப் பாட்டுக்கே கண்கள் கொஞ்சினால் அப்ப…. கொஞ்சும் பாடலுக்கு இவள் அபிநயம் பிடித்தால்பார்ப்பவர் மனதை நிச்சயம் கொள்ளை கொள்ளும்! 

 

முதல் முறை பார்த்தால் ரொம்ப ஒண்ணும் அழகில்லஆனாலும் ஏதோ ஒரு புதுமையான அழகிருக்கு இவகிட்ட…. என்று எல்லோருக்குமே எண்ணத் தோன்றும்படியான தோற்றம் கொண்டவள்! 

 

நளினா!?” 

 

வகுப்பறையின் வாசலிலிருந்து குரல் வர, அவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்! 

 

ப்ராக்டீஸ் முடிஞ்சிதா! கௌம்பலாமா?” இவளைப் போல ஒரு இளம்பெண் நின்றிருந்தாள்! 

 

இவள் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,

 

இன்னும் ஒரு டென் மினிட்ஸ்….” என்றாள் கெஞ்சலாக! 

 

சரி! நா அதுக்குள்ள லிஸ்ட் எல்லாத்தையும் எடுத்து வெச்சிடறேன்! இப்பவே ஆஃபீஸ்ல சப்மிட் பண்ணினாதான் ஆனுவல் டேக்குள்ள எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ண முடியும்!” என்று கூறிக் கொண்டே அவள் ஓடினாள்! 

 

இவள் திரும்பவும் குழந்தைகளிடம் கவனம் செலுத்த, மீண்டும் அழைப்பு! இவள் திரும்பிப் பார்த்தாள்.

 

நளினா மிஸ்?” 

 

பள்ளிக்கூடத்தின் அலுவலக உதவியாளன் (peon) நின்றிருந்தான். 

 

என்ன பூங்காவனம்?” என்று வெளியே வந்து தன் பெயருக்கேற்றாற் போல் புன்னகையுடன் மென்மையாகக் கேட்டாள். 

 

பிரின்சிபால் உங்கள வரச் சொன்னாங்க மிஸ்!” 

 

அப்டியா! பசங்களுக்கு ப்ராக்டீஸ் முடியப் போகுது! பத்து நிமிஷத்தில வந்திடறேன்னு சொல்லுங்க பூங்காவனம்!” 

 

இல்லஉங்கள உடனே வரச் சொன்னாங்க…. நா வேணும்னா பசங்கள பாத்துக்கறேன்! நீங்க போங்க மிஸ்!” நடனமாடியதால் அவள் முகத்திலும் கழுத்திலும் பூத்திருந்த வியர்வைத் துளிகளைப் பார்த்துக் கொண்டே கூறினான்.

 

அவனுடைய பார்வையின் மாற்றத்தை உணர்ந்தவள், 

 

பத்து நிமிஷத்தில வந்திடறேன்னு நா சொன்னதா போய் சொல்லுங்க பூங்காவனம்!” என்று முகம் மாறாமல் ஆனால் கடுமையான குரலில் கூறிவிட்டு வகுப்பறைக்குள் வேகமாகச் சென்றாள்! 

 

அவள் அப்படி ஒன்றும் அழகில்லைஅவளுக்கு யாரும் இணையில்லை….” என்று அவளை நினைத்து ஒரு பெருமூச்சு விட்டு தனக்குள் முணுமுணுத்தபடி போனான் பூங்காவனம். 

 

சரி பசங்களா…. இன்னிக்கு ப்ராக்டீஸ் போதும்! நாம நாளைக்கு திருப்பியும் வந்து இதே மாதிரி சூப்பரா ப்ராக்டீஸ் பண்ணுவோம்! சரியா?!” என்று புன்னகை முகமாகக் கேட்டபடி துப்பட்டாவை சரியாகப் போட்டுக் கொண்டாள்.

 

எல்லாக் குழந்தைகளும் தலையாட்டிவிட்டு கிளம்பினார்கள். தத்தம் குழந்தைகளை அழைத்துப் போக வந்த பெற்றோரிடம் ஓடிய குழந்தைகளைப் பார்த்து புன்னகைத்தபடியே தன் கைப்பேசியையும், அந்த ஊடலை ஒலிபெருக்கிக் கருவியையும் அணைத்து எடுத்துத் தன் கைப்பையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

 

மிஸ்…. நாளைக்கும் ரோஸ் கலர் தஸ் போட்டு வாங்க மிஸ்!” ஒரு வாண்டு அவளுடைய சுடிதாரைத் தொட்டுச் சொல்ல, நளினா அந்தக் குழந்தையின் உயரத்துக்கு மண்டியிட்டு அமர்ந்து, 

 

எங்கிட்ட வேற ரோஸ் கலர் ட்ரஸ் இல்லையே….” என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கூறினாள். 

 

இதைக் கேட்டு அந்தக் குழந்தையின் முகம் சுருங்கிப் போக, 

 

என்ன செய்யலாம்…..” என்று யோசிப்பது போல பாவனை செய்தாள்! பின்னர்,

 

நாளைக்கு நீ என்ன கலர் ட்ரஸ் போட்டு வருவ?” எனக் கேட்டாள்.

 

ப்ளூ கலர்!” என்றது குழந்தை! 

 

ம்எங்கிட்ட ப்ளூ கலர் ட்ரஸ் இருக்கு…. நானும் நாளைக்கு ப்ளூ கலர் ட்ரஸ் போட்டு வரேன்….” என்று கண்ணை விரித்து சிரித்தபடி அவள் கூற, 

 

ஹை…. நம்ம தெண்டு பேதும் மேச்சிங் மேச்சிங்…. ஆமால்ல மிஸ்…” என்றது அவளை விட அதிகமாகக் கண்ணை விரித்து! 

 

ம்…. ஆமா…. மேச்சிங் மேச்சிங்…” என்று சொல்லி சிரித்தாள் நளினா! 

 

அந்தக் குழந்தை அவளுடைய கன்னத்தில் பச்சென்று  முத்தமொன்றை பரிசாகத் தந்துவிட்டு ஓடிப் போக, நளினா வியந்து புன்னகைத்தபடியே நகர்ந்தாள்.

 

 

 

 

 

என்ன சொல்லப் போகிறாய்… – விரைவில்…. 

Advertisements