நிலவு மட்டும் துணையாக – அருணா கதிர்

நிலவு மட்டும் துணையாக

“முருகா….முருகா” என்று ஆத்யாவின் உள்மனம் கதறிக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறாள் என ஆத்யாவிற்கு நினைவு இல்லை. அரை மணியோ, ஒரு மணிக்கூறோ..இல்லை அதற்கும் மேலாகவா? நினைவிருக்கவில்லை. “நில்லாமல் ஓட வேண்டும்” என்ற எண்ணைத்தை மட்டும் பிராதனமாகக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள். நின்று அழுவதற்கோ, வெடித்து விடுவேன் பார் என தடதடத்த இதயத்திற்கு தெம்பூட்டவோ முடியாது. மூச்சு வாங்கி ஆசுவாசப்படுத்திக் கொள் ஆத்யா என மூளை கட்டளை கொடுத்தபடியிருந்தாலும், கால்கள் தன் பாட்டில் ஈரமணலில் புதைந்து வெளிபட்டுக் கொண்டுதானிருந்தன. தன்னை தொடந்து கொண்டே வரும் கடற்கரை மணலையும், “என்னைக் கொஞ்சம் ரசித்தால் என்னவாம்” என பெளர்ணமி இரவில் வெள்ளிப் பாகாய் மிளிர்ந்து கொண்டிருந்த கடலையும் ரசிப்பதற்கோ ஆத்யாவிற்கு நேரம் இருக்கவில்லை. அந்த நள்ளிரவைக் கடந்துவிட்டிருந்த ராத்திரியில் தன் உயிரையும், உயிரினும் மேலான தனது கற்பையும் பாதுகாத்துக் கொள்ள அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.

ஒருபக்கம் கடலும், மறுபக்கம் சவுக்குத் தோப்பும் கொண்ட சென்னையில் அந்த பிரபல ஈசீஆர் கடற்கரையில் அப்போது அவளைத் தவறி வேறு எவருமில்லை.  நிலவு மட்டுமே அவ்வப்போது மேகச்சிறையிலிருந்து தப்பித்து, ஆத்யா இன்னமும் இருக்கிறாளா என கண்காணித்துக் கொண்டிருந்தது. கடல் மணலில் கால்கள் கடுக்க ஓடுவது சிரமாக இருந்த போதும், தனக்கும் அந்த வீட்டீற்குமான தூரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற உத்வேகம் ஆத்யாவினுள் குறையவில்லை.

அத்தனை நேரம் மேகத்தினுள் தன்னைத் தொலைத்திருந்த நிலவு சட்டென வானில் அழகாய் மிளிரத் துவங்க, தன்னையும் மீறி சில நொடி மூச்சுவாங்க நின்றுவிட்டிருந்தாள். இதே நிலவை, இதே போல் வேறு ஒரு கடற்கரையில் பார்த்த நினைவும், அவளது கையைப் பிடிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்துடன் அருகில் அமர்ந்து நிலவையும், நிலவை ரசிக்கும் அவளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யுவின் முகமும் மனத்திரையில் நிழலாடின. தன் மனக்கட்டுப்பாட்டையும் மீறி கண்கள் தாமாக குளமாயின.

“அபிமன்யு…..சுற்றம் நட்பு என செல்லமாக அனைவருக்கும் அபி, ஆத்யாவிற்கு மட்டும் அபிம்மா….”

Advertisements