காதல் கசக்குதடி – மேகலா அப்பாதுரை

காதல் கசக்குதடி ……

ஒரு சின்ன டீசர்…..
நாயகன் : கள்ளழகர்.
நாயகி: சுந்தரவள்ளி.
கள்ளழகர் பெயருக்கு ஏற்ற நம் மதுரை மண்ணின் ஆளுமை நிறைந்த அழகன். கோவக்காரன். ஊருக்கே நல்லபிள்ளை, தவறு செய்பவருக்கு பொல்லாப்பிள்ளை.
சுந்தரவள்ளி அழகரையே சுற்றி சுற்றி வரும் அழகான தேவதை. அவன் ஊருக்கு நல்லபிள்ளை என்றால் இவள் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை. ஆட்டம் பாட்டம் என வாழ்க்கையில் அழகரை காதலித்து கைபிடிப்பதையே லட்சியமாய் திரிபவள். அவளுக்காய் உலகையே விலை பேசும் தந்தை…. அவளுக்காக தூது செல்லும் அப்பத்தா….. அவளை எறும்பு கூட தீண்டாமல் பாதுகாக்கும் கருப்பட்டி இவளின் காதலும் அவளின் அலப்பறையுமே தான் கதை. படிங்க என்ஜாய் பண்ணுங்க
*******************************************************************************
காதல் கசக்குதடி…..

நான் மைக்கேல் ஜாக்ஸி நிலவு நிலவு நடை காட்டட்டா….
ஹேய்… நான் ஹிரித்திக் ரோசி வளைவு சுளிவு அதில் சேர்க்கட்டா ….
நான் பார்சினிகோவின் நடக்கும் நடையும் ஒரு பாலேதான்…..
ஹேய் நான் பிரபு தேவி ஒரு கடக்கு முடக்கு என…. தடக்கு படக்கு என…. வெச்சா அடி வெச்சா
இந்த ரோடும் கூட மேடா….
சச்சா ஹே சச்சா என் ஹார்டு பீட்டும் ஆட்டம் தான் ……

டீவியில் பாட்டு உச்சஸ்தானியில் ஒலித்துக் கொண்டிருக்க பிரபு தேவாவின் நடனத்தை தாளம் தப்பாமல் சுந்தர வள்ளி ஆடிக்கொண்டிருக்க அவளின் ஆட்டத்தை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது அவளின் நட்புகளான நண்டு சிண்டு கூட்டங்கள்.

வெற்றிலையை இசைக்கு ஏற்ப இடித்துக் கொண்டிருந்த அப்பத்தா கிழவி உட்கார்ந்த வாக்கிலேயே ஆடிக் கொண்டிருந்தாள்‌.

“மொர்ராக்கா… மட்றாக்கா…. வந்தாச்சே தீவா… மொர்ராக்கா மட்ராக்கா தாவி ஆடும் பூவா…. மப்ராக்கா மெட்டாலிக்கா என் கூட ஆட நீவா…..” என்று அட்சரம் பிசகாமல் அந்த ஸ்டெப்களை அவள் ஆடிக் கொண்டிருக்க

அவளை முறைத்தப்படி நின்றிருந்தான் அழகர் என்ற கள்ளழகர்.

அவனைப் பார்த்தும் காலைத்தூக்கி ஆடிக் கொண்டிருந்தவள் அப்படியே அதிர்ந்து நிற்க, அவள் நின்றபின் தான் அங்கு இன்னொருவன் வந்ததே உறைத்தது. ஆட்டம் பாதியில் நின்றுவிட்டதென்ற கவலை அவர்களுக்கு

“வாடா பேரான்டீ….. என்ன ரொம்ப நாளா இங்கிட்டு ஆளையே காணோம் ” என்று வந்தவனை வரவேற்க

“ஏன் அம்மாச்சி இவ இந்த ஆட்டம் ஆடுறா நீயும் பாத்துட்டு அவளுக்கு இணையா நீயும் ஆட்டம் போட்டுட்டு இருக்க …. இந்தா அம்மா சீம்பால் கொடுத்து விட்டாங்க…” என்றபடியே கையில் இருந்த தூக்குவாளியை தன் பாட்டியிடம் கொடுக்க

“நீ வேணா வந்து கூட ஆடு மாமா…. அதை விட்டுட்டு ஏன் இப்படி அலுத்துக்கறீங்க….” என்று அவனை சீண்டியவளை

“ம்… உங்கூட நான் ஆடனுமா நெனப்புதான் பொழப்பக் கெடுக்கும்… நீ ஆடுறது ஒரு ஆட்டம் இதுல இவ கூட நான் ஆடனுமாம்… அம்மாச்சி உம்பேத்திக்கு ரொம்பத்தான் ஆசை….” என்று சிரிக்க

“இதா பாரு மாமா என்னைய எங்க பள்ளிக்கூடத்துல எல்லோரும் தீபிகா படுகோன் மாதிரி அழகா அம்சா இருக்க…. மடோனா மாதிரி சூப்பரா ஆடுறேன்னு சொல்வாங்கத் தெரியுமா….” என்று அங்கலாய்க்க

அவளின் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தவன் “யாரு நீ தீபிகா படுகோனேவா..,… நீ படுகோனே இல்லடீ படுகேன…” என்று கூறிவிட்டு சிரிக்க

அதை கேட்டு வாண்டுப் பட்டாளங்கள் அனைத்தும் சிரிக்கவும் சுந்தரவள்ளிக்கு கோபத்தில் நுனிமூக்கு சிவந்து போனது.

“ஆங்க்…..அப்பத்தா …. பாரு இந்த மாமனை…” என்று சிறுபிள்ளையாய் கைகால்களை உதற

“இப்பதான் நீ சரியா ஆடுற…” என்றவனை கொலைவெறியுடன் பார்த்தாள் சுந்தரவள்ளி.
**********************************

“எலேய் கருப்பட்டி …. இவிங்களை எப்படி மடக்குனாலும் எஸ்ஸாயிடுறாங்கடா …. அந்தாளை கரெக்ட் பண்ண ஏதாச்சும் ஐடியா குடுடா….. உனக்கு எங்கப்பங்கிட்ட சொல்லி ஒத்த மரத்துக் கள்ளா ஒரு மாசத்துக்கு குடுக்கச் சொல்லுறேன்…” என்றவளை

கள் என்ற வார்த்தையைக் கேட்டதும் போதையேறியவனாய் கருப்பட்டியின் கண்கள் மின்னியது, அதே நேரம் அவனது முகம் கண்முன் வர சட்டென அவன் கண்களில் மரணபீதியுடன் “ம்க்கூம் ….. அந்த கள்ளக் குடிக்க நா உசுரோ இருக்கனுமே…. அந்த பயபுள்ள எமகாதகன். என்னைக் கேட்டா நீ அவனை மறந்துட்டு உங்க ஆத்தா சொல்லுறாப்புல அந்த உசிலம்பட்டி மாப்ளையை கட்டிக்கிட்டிக்கோ……” என்று கூற

“அட எடுபட்டப்பயலே….. என் சபதத்த நிறைவேத்த ஐடியா குடுடான்னா….. அந்த முனியான்டியவா கட்டிக்க சொல்ற…. என்ன என்கிட்டயே லந்தா….. இருடீ மாப்ள இன்னைக்கு சோத்த கட் பண்ணிடுறேன்….” என்றவளை

“இங்க பாரு நீ எதை வேண்ணா சொல்லு செய்யறேன் ஆனா இந்த சோத்துல கை வெக்கற வேளைல்லாம் வேண்டாஞ் சொல்டேன்…. இன்னைக்கு வேற ஆத்தா கோழியடிச்சு கொழம்பு வெக்கறேன்னு சொல்லிருக்கு ….” என்று அவன் முடிக்கும் முன்னரே

“என்னது கோழியா …. அச்சோ என் அஜித்துகுமாரு …..” என்று பறந்தடித்துக் கொண்டு ஓடியவளை பார்த்தவன்,

“ம்க்கூம் கோழிக்கு அஜித்துகுமாரு…. ஆட்டுக்கு அர்னால்டு…. நாயிக்கு அமாவாசைன்னு பேர்வெச்சிட்டு திரியுற…. உனக்கு ஒருத்தன் இப்படி எதாச்சும் பேரு வெக்கமாட்டேங்குறானே…. ” என்று தலையலடித்துக் கொண்டான் கருப்பட்டி.

**********************************

செம்மண் புழுதி பறக்க புல்லட்டில் வந்து கொண்டிருந்தவனை கண்டவள் “வாடீ மாப்ள இன்னைக்கு வசமா மாட்டுன….” என்றவாறே அவன் வரும் தூரத்தைக் கணித்தவள் வரப்பிலிருந்து மேலேறி கால்களை விந்தியவாறே நடக்கமுடியாதவளாய் நடந்து சற்று தள்ளியிருந்த மரத்தை நோக்கி நடந்தவள் அதைப் பற்றி நின்றாள்.

தூரத்தில் வரும் பொழுது இவளைக் கண்டுவிட்டவன் அவள் கால்களை ஊனமுடியாமல் நடப்பதைக் கண்டு ‘ என்னாச்சு இவளுக்கு …. ஏன் இப்படி நடக்குறா… பொட்டபுள்ள ஒத்தையில நடக்கமுடியாம நிக்குது கேக்காம எப்படி போறது…. ஆனா இவகிட்ட பேச்சு குடுக்கிறது எனக்கு நானே செய்வினை வெச்சிக்கிற மாதிரியாச்சே…’ என்று நினைத்துக்கொண்டே வர அதற்குள் அவள் நின்ற இடம் வந்துவிட தன் வேகத்தைக் குறைத்தவன்

“என்னாச்சு….” என்று வினவினான்.

‘அதானே… உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா …. எப்படின்னாலும் நீ நிறுத்துவேன்னு தெரியுமே…’ என்று மனத்திற்குள் சந்தோசப்பட்டவள்

“வரப்புல வரும்போது கால் இடறி நல்லா சுழுக்கிடுச்சு போல நடக்கமுடியல…” என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் கூற

“ஒழுங்கா நடக்கனும். நீ தான் ஆடிக்கிட்டே நடக்கிறவளாச்சே அதான். இன்னைக்கு என்ன பாட்டுக்கு ஆடுனவ….” என்று அவன் கேள்வியெழுப்ப

“மைக்கேல் ஜாக்சன் பாட்டுக்கு …..” என்று சற்று முன்னர் தான் ஆடிக்கொண்டிருந்த பாட்டை நினைத்துக் கூறயவளை பார்த்து

“ம்க்கூம் …. ஒழுங்கா பன்னென்டாவது பாஸ் பண்ணமுடியல….. ஆனா பாட்டுமட்டும் மைக்கேல் ஜாக்சன்து… சரி சரி ஏறு….” என்று மிடுக்காய் கூறியவனை நோக்கியவாறே அவன் ஏறச் சொல்லியதும் காலை விந்தியவாறே நடந்து வந்தவள் அவன் அருகில் வரும்போது தடுமாற சட்டென அவள் தோள் பற்றித் தாங்கிக்கொண்டவன்

“ஏய்…. பாத்து பாத்து” என்றவனைப் பார்த்து

“வலிக்குது….. ” என்றவாறே
அவன் தோள் பற்றி ஏறி அமர

“ஏய்…. மேல கை வெக்காத சைடுல இருக்குற கம்பியப்புடி….” என அதட்டியவாறே அவன் வண்டியை விரட்டினான்.

‘கம்பியவா புடிக்க சொல்லுற இன்னைக்கு நான் புடிக்கிற புடில நீ என்ன ஆகப்போறப் பாரு…’ என்று நினைத்தவள் வழியில் வந்த பள்ளத்தில் அவன் புல்லட் இறங்கி ஏற அதுதான் சமயமென அவளின் மேனி அவன் பரந்த முதுகில் மோதி அவன் இடையை அவளின் பூங்கரங்களால் இறுகப் பற்றியது.

Advertisements