யாரிவனோ? வந்தது எதற்காக??

ஹேய்…சமர்….” தன்னை யாரோ அழைப்பதைக் கேட்டு திரும்பிப் பார்க்கும்பொழுதுதான் முதன் முதலாக சமர்ப்பணா அவனைப் பார்த்தாள். அவள் கல்லூரி இறுதியாண்டு படிக்கிறாள். அவள் வகுப்பு மாணவியர் மட்டுமல்ல பிற டிபார்ட்மெண்டில் சிலரும் கூட அவளை சமர் என்று அழைப்பதுதான். ஆனால் இந்த சமர் ஆண்குரலில் வர சற்றே ஆச்சர்யத்தோடுதான் அவள் திரும்பிப் பார்த்தாள்.

அழைத்த நபர்தான் ஃபிஸிக்‌ஸ் ஹெச் ஓ டி பாலன் என ஞாபகம். நிச்சயமாக சொல்வதற்கில்லை. பயோஹெமிஸ்ட்ரி படிக்கும் இவளுக்கு இயற்பியல் துறை அறிமுகமற்றது. அவர் ஏன் இவளைக் கூப்பிடுகிறார் என எண்ண தேவையே இல்லாமல் அவர் பார்வை இவளுக்கு சற்று பின்னால் வந்து கொண்டிருந்த அடுத்த நபர் மீது நின்றிருந்தது.

ஆக அன்னிசையாக சமர்ப்பணாவின் கண்கள் அவன் மீது குடிபோயின.  அப்படி ஒரு கண்கள் அவனுக்கு. ஒரு வித கூர்மை, அழுத்தம், தெளிவு , சலனமின்மை எல்லாம். ஒளிவீசிக் கொண்டிருந்தன அவை. மற்றவை எதுவும் அவள் கண்களில் படாததற்கு காரணம் முகம்மறைத்த அவன் தாடியோ?

“சமர் அந்த தாடிக்காரன் இவ்ளவு நேரம் உன்பின்னால தான் வந்தான்” கிசுகிசுத்தாள் அருகில் வந்த ப்ரபா.

அந்த பாலனைப் பார்த்து “ஹலோ…பாலன் சார்..” என்றபடி இவளுக்கு எதிர் திசையில் அவன் செல்ல அவனை திரும்பி பார்க்க கூடாது என்ற முடிவோடு தன் வகுப்பிற்கு வந்து சேர்ந்தாள் இவள். அவன் பெயர் என்னதாக இருக்கும்? யார் அவன்?

சில நாட்கள் சென்றிருக்கும். அன்று வழக்கம் போல் காலை வந்தவுடன் போர்டின் மேல் முனையில் முந்திய நாள் எழுதியிருந்த குறளை அழித்துவிட்டு இந்த நாளுக்காக இவள் படித்து வந்திருந்த  குறளை எழுதிக் கொண்டிருந்தாள். உள்ளுணர்வில் தோன்றியிருக்கும் போல அன்னிசையாய் திரும்பிப் பார்க்க, இவள் வகுப்பு வாசலில் நின்றிருந்தான் அவன், தன் மொத்தப் பார்வையும் இவள் மேல் பதித்து.

ஒரு ஸ்டீல் சேரை இழுத்துப் போர்டருகில்  போட்டு அதன் மீது  ஏறி நின்று எழுதிக் கொண்டிருந்தவள் அவன் பார்வையில் தடுமாறி சட்டென இறங்க முயல, கட்டியிருந்த தாவணியின் முந்தியில் இவளே மிதித்துவிட்டாள் போலும் மொத்தமாக வாரி விழுந்தாள் தரையில்.

“ஹேய்….”அவன் ஓர் எட்டு உள்ளே வைக்க, அதற்குள் சுதாரித்து எழுந்துவிட்ட சமர்ப்பணா அடிபட்ட கைமுட்டியை தேய்த்துக் கொண்டே அவமானமும் பரிதாபமுமாக அவனைப் பார்க்க அவன் விடு விடென்று சென்றுவிட்டான்.

பாவி வந்து விழவச்சு பார்த்துட்டு  போறியே….போடா

ஒல்லியாய் உயரமாய் நீண்ட முடியோடு இருக்கும் சமர்ப்பணாவிற்கு தாவணி படு அழகாய் இருக்கிறதென்பது வகுப்பு தோழிகள் கருத்து. ஆக ஒவ்வொரு வியாழனும் தலைக்கு ஷாம்பிட்டு குளித்து நீளமாய் சடை பின்னி, தாவணி, கை நிறைய வளையல்கள் என வருவது அவள் வழக்கம். அன்றுதான் லேப் கிடையாது இவர்களுக்கு.

இன்றும் அப்படி ஒரு வியாழக்கிழமை. அது இப்படி ஆகும் என இவள் நினைக்கவில்லை. சுண்டைக்காயாய் சுருங்கி இருந்த இவள் முகம் அன்று ப்ரபாவால் தான் சரியாகியது.

“உன்னைய எவ்ளவு நேரம் பார்த்துட்டு நின்னான் தெரியுமா அவன்…அங்க இருந்து பார்துட்டேதான் வந்தேன்…..உன் தாவணில அவன் விழுந்துட்டான் போ…” ப்ரபா இவளை ஓட்டித் தீர்த்துவிட்டாள்.

றுமுறை சந்திப்பில்தான் அவன் யார் என தெரிந்தது சமர்ப்பணாவிற்கு…. அன்று இவர்கள் டிபார்ட்மென்ட் லெக்சரர் ஒருவருக்கு திருமணம். இவர்கள் துறை ஆசிரியர்கள் அனைவரும் திருமணத்திற்கு போயிருந்தனர் அனுமதியுடன்.

சில மாணவர்களும் விடுமுறை எடுத்து சென்றிருக்க, வகுப்பில் இருந்த மீதியுள்ளோர் பொழுது போகவென எதை எதையோ பேசி, ஒருவகையில் ஒரு அன் அஃபீஷியல் பட்டி மன்றம் போய்க் கொண்டு இருந்தது. இந்தியா அணுகுண்டு தயாரித்தது சரி எனவும் தவறு எனவும் வாதம்.

“அதை யூஃஸ் செய்ய கூடாது……ஆனா அது கண்டிப்பா வேணும்….நம்மட்ட பவர் இருக்கிறப்ப தான் மத்த நாடுங்க நம்மள எந்த விஷயத்துக்கு கம்பெல் செய்ய மாட்டாங்க…இல்லன்னா ஒவ்வொரு விஷயத்துக்கும் நாம அடுத்தவங்க சொல்றதுக்கு ஆட வேண்டி இருக்கும்….குறஞ்சபட்சம் எதாவது ஒரு பவர்ஃபுல் நேஷனுக்கு பின்னால ஒளிய வேண்டி இருக்கும்…..அப்புறம் அப்டியே போனா இந்தியா இந்தியாவா இருக்காது…அந்த நாடோட பினாமியாதான் இருக்கும்….தௌசண்ட்ஸ் ஆஃப் ஸ்னேக் வெரைட்டி இருக்குது உலகத்துல….ஆனா அதுல ரொம்ப சிலதுக்கு மட்டும் தான் விஷம் உண்டு…ஃஸ்டில் விஷம் உள்ளது இல்லாததுன்னு எல்லா பாம்பும் சீறும்…..அதப் பார்த்து அத்தனை பேரும் பயப்படுவோம்…அப்டிதான் நாமளும் கொத்தனும்னு அவசியம் இல்லை…பட் கண்டிப்பா சீறனும்…இல்லனா சட்னிதான்…..” இவள் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருக்க பாராட்டுதலாய் கை தட்டும் சத்தம். சட்டென இவள் பேச்சை நிறுத்த, கைதட்டியபடி வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான் அவன்.

படபடக்க ஆரம்பித்தது அவள் இதயம். “என்ன டைமிங்…. ஹீரோ என்றி செம…….” ப்ரபா கிசுகிசுக்க “ஷ்..சும்மா இரு நீ…” தலை குனிந்தபடி சொன்னவள் தன் முகத்தில் சிலீரென பாயும் ரத்தத்தை உணராமலில்லை.

மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“ஹாய் ஆல் ஐ’ம் சமர் ஜெயன்….கம்ப்யூட்டர் சைன்ஸ் டிபார்ட்மென்ட் ஸ்டாஃப்….உங்க கூட டைம் ஃஸ்பெண்ட் செய்ய சொல்லிருக்காங்க….பைதவே நீங்க ஏற்கனவே யூஸ்ஃபுல்லாதான் டைம் ஸ்பெண்ட் செய்துட்டு இருக்கீங்க…குட்…அதையே கன்டின்யூ செய்யலாம்…லெட் அஸ் ஃஸ்பீக் அபவ்ட் சம்திங்…”

அவன் லெக்ச்சரர் என அப்போதுதான் தெரியும்.

அன்று அவன் பேசிய விஷயங்கள், அது காட்டிய அவன் அறிவின் ஆழ அகலம், பார்வை கோணம், யாரையும் புண்படுத்தாமல் தன் கருத்தையும் காயம் செய்யாது பேசும் பாங்கு, இடையோடிய நகைச்சுவை எல்லாம் அவன் மேல் மரியாதையைக் கொண்டு வந்தன எனில், ப்ரபாவின் வார்த்தைகள் அடிக்கடி பெண் முகத்தில் சிவப்பிட்டன.

அதன் பின் ஒருநாள் அவன் வகுப்பில் “இங்க கம்ப்யூட்டர்ஸ் மட்டும் தான் படிக்கனும்னு இல்லை…. எல்லாத்தையும் தெரிஞ்சுக்க ட்ரை செய்ங்க…..ஏன் டெய்லி ஒரு குறள் போர்டுல எழுதி வைங்க யாராவது….” தன் மாணவர்களை அவன் சொல்லிக் கொண்டிருப்பதை எதேச்சையாய் அந்த பக்கம் சென்ற இவள் கேட்க நேர்ந்தது.

“புதுசா சேர்ந்திருக்ற சமர் சார் ஒரு என்சைக்ளோ பீடியா….. உன்னை மாதிரியே…., ஜீனியஸ் அவர்…எங்க க்ளாஸ்ல அவருக்கு நிறைய ஃபேன்ஸ்…” அவன் வகுப்பு மாணவி தேவி இவளிடம் சொல்ல பெருமிதம் இவளுக்குள். பின்பு அந்த உன்னைப் போல ப்ரபாவிடம் எடுத்த அர்த்த ஆழங்கள் ரத்தநாளம் தொட்டன.

அன்று கல்லூரி ஆடிட்டோரியத்தில் கல்ச்சுரல்ஸ். இவளுக்கு பயங்கர தலைவலி. தாங்கமுடியாமல் எழுந்து தன் வகுப்பிற்கு வந்துவிட்டாள். இவள் மட்டும்தான் வகுப்பில். டெஸ்கில் முகம் கவிழ்த்து படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் தூக்கத்திற்குள் நுழைந்துவிட்டாள் போலும்.

சற்று நேரம் பின்பு ஏதோ ஒரு அரவம் உணர்ந்து தலை தூக்கிப் பார்த்தால் அவன் நின்று கொண்டிருந்தான். சமர். அவசர அவசரமாக எழுந்து நின்றாள். “கு…குட் ஆஃப்டர் நூண் சார்…”

“என்ன என்ன ஆச்சுமா…? எனி இஷ்யூ….?” கரிசனை இருந்தது அவன் குரலில். தூக்கத்தில் எழுந்தால் இவள் கண்கள் இப்படித்தான் சிவந்திருக்கும்.

“ந்…நோ சார்….ஜஸ்ட் ஹெட் ஏக்… அங்க நாய்ஸ்ல தாங்க முடியலை….அதான்…”

“”ஓ…” அவன் முகத்தில் சற்று இறுக்கம் வந்துவிட்டது. “உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் வரலையா? யார் கூடயாவது ஹாஃஸ்டல் போயிருக்கலாமே….” கோபம் வெளிப்பட்டது அவன் குரலில்.

“இங்க இப்டி தனியா இருக்கிறது சரியா….? மொத்த ஃப்ளோர்லயும் உங்கள தவிர யாரும் கிடையாது….” இப்பொழுது அவன் குரலில் கண்டனம் கொடிகட்டிப் பறந்தது. அறிவிருக்கா உனக்கு என்ற தொனி அப்பட்டம்.

உள்ளுக்குள் சிலீர் என்றது மங்கை மனம். அவன் அவள் மீது உரிமை எடுக்கிறானோ?

“கிளம்பி வாங்க….” அவன் எதற்கு அங்கு வந்தானோ ஆனால் இப்பொழுது இவள் பின் தொடர கல்லூரியின் மெடிக்கல் ரூம் சென்று அங்கிருந்து ஒரு க்ரோசின் எடுத்துக் கொடுத்தவன் “ரொம்ப முடியலைனா மட்டும் சாப்டுங்க” என்று அரைகட்டளையிட்ட பின் அங்கிருந்த பெண் அட்டென்டரை இவளை ஹாஸ்டலில் கொண்டுவிடச் சொல்லிப் பணித்தான்.

அதன் பின்  விஷயம் அறிந்த ப்ரபா இது அக்மார்க் காதல்தான் என்று ஆணையிட்டுச் சொன்னாள்.

“ப்ரோக்ராம் போய்டு இருக்றப்ப எங்க பக்கத்துல நீ இல்லைன்றத பார்த்துட்டுதான் அவர் உன்னை தேடியே வந்துருப்பார்….யாரோ தனியா இருந்தா அவருக்கு என்ன? தன் ஆள்னதும் டென்ஷனாகுது பாரு அவருக்கு…உனக்கு தலைவலின்னா அவருக்கு தாங்கலை…..அதுவும் ரொம்ப முடியலைனா மட்டும் டேப்ளட் போடனுமாம்…..அது ஒரு பயோகெமிஸ்ட்டுக்கு தெரியாதோமோ….அவர் சொல்லித்தான் தெரியுமாமோ….” ப்ரபாவின் வாத்தைகள் சில்லென்ற தீ மழை செய்தது இவள்வரையில்.

முதன் முறையாக அவன் தன்னை விரும்புகிறானோ என்ற எண்ணம் வந்தது அவள் இதய இடுக்குகளில். அதன் பின் அவனது ஒவ்வொரு வருகைக்கும் செயலுக்கும் சிந்தனைக்கும் இவளே காரணமாகினாள் ப்ரபாவை பொறுத்தவரை.

ஒவ்வொருமுறை அவன் பார்வைக்குட்பட்டபோதெல்லாம்,  சாரல் குளியல் கொண்டாள் சமர்ப்பணா.

அன்று வியாழக்கிழமை. மென்சந்தன நிற பட்டில் சிவப்புநிற பார்டரிட்ட பாவாடை சிவப்பு நிற தாவணியில் வந்தாள் சமர்ப்பணா. தலையில் மல்லிகை சரம். “சமர் சார்க்கு சும்மாவே நீ இருந்தா குளிர் அடிக்கும் பனி பெய்யும்….இதுல தாவணி வேற…. அப்டியே வந்து அள்ளிக்க….” ப்ரபா பேசிமுடிக்கும் முன் இவள் பார்த்து முறைத்தாள். எல்லை தாண்டி போகிறதே பேச்சு.

“ப்ரபா திஸ் இஸ் டூ மச்…” இவள் சீறலில் அவள் பேச்சை நிறுத்திக் கொண்டாள் அப்பொழுது.

ஆனாலும் லேபுக்கு அட்டென்ட் ஷீட் புக்கை எடுப்பதற்காக சென்ற போது இவள் மனதிற்குள் தந்தன் தந்தன தாளம், சுக ராகம் அதில் சந்தன மல்லிகை வாசம். அவனது லேபை இவள் கடக்க வேண்டி வரும். ஒரு வேளை அவன் அங்கே இருக்கலாம்….இவளது ஒற்றை முத்து கொலுசொலி அறை வாசல் கடக்கும் நேரம் அவன் திரும்பியும் பார்க்கலாம்……அவன் பார்வைக்குட்படும் படலம் சுக வரம்.

அவன் லேபை தாண்டி இவள் லேபுக்கே சென்றுவிட்டாள். எங்குமில்லை அவன். சீ போடா….சிணுங்கியது மனம். ‘உன் மேல எனக்கு கோபம்….’ மனதிற்குள் புலம்பிக் கொண்டே லேபிற்குள் இருந்த அலுவலக அறைக்குள் கவனமின்றி  நுழைந்தாள்.

அந்த அறை மேஜையில் இருக்கும் கம்ப்யூட்டரை சற்று தலை குனிந்து நின்றபடி குடைந்து கொண்டிருந்தான் தன் வலக்கையால் சமர். இடக்கையை மேஜை மீது ஊன்றி படு ஸ்டைலாய் அவன். அவளுக்குப் பிடித்த ப்ளாக் பேண்ட்ஸ் ஒயிட் ஷர்ட்ஸில்.

எதிர்பாரா இன்ப அதிர்ச்சியில் ஒரு கணம் தூக்கிப் போட்டது உடல். எதையோ உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான் அவனும்.

அதே நேரம் சட சட என்று தொடங்கிய ஒரு சத்தம் டொம் என்ற வெடிப்பொலியுடன் புகையோடு கண்கரிக்க லேபிலிருந்த மாணவர்கள் இவள் பின்னிருந்து பயங்கரமாய் அலறுவது கேட்கிறது.

இவள் தாவணியில் தீ பிடித்திருக்கிறது என்று இவள் உணர்ந்த நொடி அதைப் பற்றி அவன் இழுத்த விதத்தில் தோள் பகுதியில் இருந்த பின் தெறிக்க அந்த ஜார்ஜட் தாவணி உருவி  அவன் கையோடு சென்றது. அதோடு அவன் இழுத்த வேகத்தில் அவன் தோளில் சென்று மோதினாள்.

“கெட் அவ்ட் ….எல்லோரும் வெளிய போங்க……”அதிர்ச்சியில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி முழு பலத்தில் கத்தியவன் இவளை பிடித்து தரையில் குப்புற தள்ளினான். அதே நேரம் மறு கரத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தாவணியை தரையில் போட்டு காலால் நசுக்கினான்.

தரையோடு தரையாக விழுந்து கிடந்தாலும் நன்றாக புரிகின்றது சமர்பணாவிற்கு இவர்கள் இருவருக்கும் அறையிலிருந்து அலறி வெளியே ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கும் இடையில் நெருப்பு.

அவசரமாக தன் சட்டையை கழற்றி அவளிடம் நீட்டியவன் இவள் அதை அணியவும் நெருப்பு தொடாத ஒரு ஓரப் பகுதி வழியாய் இவளை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான். இவள் எப்பொழுது அழத் தொடங்கினாள் என்றெல்லாம் இவளுக்குத் தெரியாது. ஆனால் வெளியே வந்து தீங்கு தொடமுடியா தூரத்தில் நின்று கொண்டு அவனும் மற்றவர்களும் அவசர அவசரமாக ஃபையர் எக்‌டிங்க்குஷர் மூலம் தீயை அணைக்க போராடுவதைப் பார்த்திருந்த போது அழுது கொண்டிருந்தாள்.

தீ அணைந்தும் சற்று நேரம் பின்புதான் அவன் சட்டையை திருப்பித் தர வேண்டும் அவன் சட்டையின்றி நின்று கொண்டிருக்கிறான் என்பதே உரைக்க ஹாஃஸ்டல் சென்று ஒரு சல்வார் செட் இரவல் வாங்கி உடுத்திக் கொண்டு சமர்ப்பணா அவனைத் தேடி திரும்பி வந்தால் அவன் யாருடைய ஷர்ட்டிலோ நின்றிருந்தான்.

சரி துவைத்துவிட்டு திருப்பிக் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

மறுநாள் துவைத்து அயர்ன் செய்த அவன் சட்டையுடன் அவன் முன் போய் நின்ற போது திட்டி தீர்த்துவிட்டான் அவன். “லேபிற்கு சிந்தடிக் ட்ரெஸ் போட்டுவரக்கூடாதுன்னு ரூல் இருக்குதானே…..அதுவும் பின்னால வால் மாதிரி ட்ரஸ்ஸை தொங்கவிட்டுட்டு….அது எதுல பட்டு தீ பிடிக்குன்னு கூட தெரியாம…..” அவன் திட்டின் சாரம்சம். அப்பொழுதுதான் கவனித்தாள் அவன் தன் தாடியை நீக்கி இருந்தான். அப்படியானால்????

“சமர் சார் லவ் பண்ண பொண்ணு வீட்ல லவ்க்கு பயங்கர எதிர்ப்பாம்….அதுல அந்த பொண்ணு வெக்ஸாகி சுசைட் செய்துட்டாம்……அதான் சார் தாடி வச்சுருக்கார்…….” கல்லூரியில் உலவும்  அவன் தாடிக் காரணம் அதுதான்.

மனம் அவனிடம் சமர்ப்பணம்.

அடுத்து சில கண்ணாமூச்சி ஆட்டங்களுக்குப் பின் அவனிடம் தன் உள்ளத்தை வெளியிட்டேவிட்டாள் சமர்ப்பணா.

“அஸ் அ லெக்ச்சர்ரா ஒரு ஸ்டூண்ட்ட எப்டி பழகனுமோ அப்டித்தான் உன்ட்டயும் பழகினேனே தவிர நத்திங் எல்ஸ்..…இதெல்லாம் கூட இருக்கவங்க தூண்டிவிடுறதால வர்ற குழப்பம்….”

சில நாட்களில் வேலையைவிட்டு சென்றும்விட்டான்.

அவன் தன்னை எந்த வகையிலும் பிற மாணவர்களைவிட வித்யாசமாகவோ, இயல்புக்கு மீறிய அக்கறையுடனோ நடத்தவில்லை என்பதும், இவளிடம் பேசிய இரண்டு தருணங்களுமே எதேச்சையாய் அமைந்த நிகழ்வுகள்தான் என்பதும் மெல்ல உறைக்க, அடுத்து வந்த காலங்களில் அவன் சொன்னதுதான் உண்மை என இவளுமே உணர்ந்து கொண்டாள்.

நாட்கள் நகர என்னவெல்லாமோ நடந்துவிட்டது. அப்பாவும் அண்ணனும் ஒரு தீ விபத்தில் இறந்து போக ஒரே நாளில் அனாதையாகிப் போனாள் இவள். வீடும் பேங்கில் இருந்த சில லட்சங்களையும் தவிர எதுவுமில்லை இவளுக்கென. ஆக வீட்டின் தரை தளத்தை வாடகைக்கு விட்டு, மாத வருமானத்திற்கு வழி செய்து, ப்யோகெமிஃஸ்ற்றி கனவுகளை கைவிட்டு பேங்க் எக்ஸாம் எழுதி இன்று பேங்கில் வேலை. கிடைப்பதை ஏற்க பழகிவிட்டாள்.

இவளது கஷ்ட்டகாலத்தில் உடன் நின்ற உண்மை தோழி ஆத்மிகா தன் கணவரின் உறவினர் வகையில் நல்ல வரன் இருப்பதாக சமீபகாலமாக அறித்து வருவதின் விளைபயனாய் சரி பார்க்கலாம் என்று இவள் சொன்ன மறுநாள் இவள் எதிரில் வந்து நின்றான் அவன். சமர் ஜெயன் “ஆத்மிகா அண்ணி உன்னைப் பத்தி சொன்னாங்க” என்றபடி.

இன்று உணர்ச்சி வேகத்திலோ, இல்லை தோழி சொல்லியதற்காகவோ என்றில்லாமல் நிதானமாக யோசித்து, இவள் அவன்பின் அரைவேக்காடு மன நிலையில் சுத்திய காலத்திலும் அவன் கடைபிடித்த கண்ணியம், நேர்மை, இன்றைய அவன் பொருளாதார சூழல், ரிசர்ச் சம்பந்தப்பட்ட அவனது சென்ட்ரல் கவர்மென்ட் வேலை எல்லாம் நிதானித்து அவனிடம் மனம் கொடுத்தாள். திருமணம். இனிக்க இனிக்க  துவங்கியது இல்லறம். அவன் கைவளைவிற்குள் தோள் அணைப்பிற்குள் சொர்க்கம்.

அவன் தாடிகதை இவள் சொல்ல வாய்விட்டு சிரித்தான். “சின்னப்பையனா தெரியுதுன்னு தாடி வச்சா லவ்ஃபெய்லியர்….தீ பட்டுட்டுன்னு ஷேவ் செய்தா நெக்ஸ்‌ட் ரொமன்ஸா….?” இவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ன்று சமர்ப்பணா தன் பாஃஸ்போர்ட் தேவைப்பட தேடமுடிந்த இடத்திலெல்லாம் தேடிக் கிடைக்காமல் எரிச்சலில் கட்டில் காலை உதைக்க எங்கு மறைந்திருந்தென தெரியவில்லை வந்து விழுந்தது அது. ஒரு தம்ப்ஸைஸ் லேமினேட்டட் கார்ட். அவனது ரா ஏஜென்ட் ஐ டி கார்ட். கல்லூரியில் ஆட்கள் இல்லாத அறைகளில், அவன் சம்பந்தம் இல்லா துறைகளில், முன்பு அவன் சுற்றித் திரிந்தது ஞாபகம் வருகிறது. அப்படியானால்???????????

அரவம் உணர்ந்து அறை வாசலைப் பார்த்தால் அவன்.

“சாரி சம்யூ…..உங்க அப்பா மிலிட்டரி சீக்ரெட்டை எனிமீஸ்க்கு விக்றதா இன்ஃபோ….அந்த காலேஜ்கூட உன் அப்பாவோட பினாமியோடதுன்னு நியூஸ்… இன்வெஸ்டிகேட் செய்யதான் அப்போ வந்தேன்…..உங்கப்பா டெத்க்கு பிறகு கேஸ் க்ளோஸ் ஆகிட்டுது….டிபார்ட்மென்ட் சீக்ரெட்ஸ்….இதெல்லாம் வைஃப்ட்ட கூட சொல்ல கூடாதுடா…சாரிடாமா…”

அப்பாவுக்கும், அண்ணனுக்கும் நடந்தது விபத்து அல்ல, அது கொலை. செய்தது இவளே அல்லவா???!!!!!!!!!!!!!! இவள் மாத்திரம் அறிந்த ரகசியம். எதேச்சையாய் எதிர்பாராவிதமாய் அவர்கள் தேச துரோகம் இவளுக்கு தெரிய வர இவள் அதிர்ந்து ஆடிய ஆர்பாட்டத்தில் அவர்கள் இவளை கொல்ல முயல, இவள் கையில் கிடைத்த பிஸ்டல் முந்திவிட்டது. பயத்தில் விபத்தென்று அதை மூடி மறைத்துவிட்டாளே அன்று!!!!!!!

இவன் இவளை உண்மையில் மணந்திருக்கிறானா? அல்லது இதுவும் துப்பறிய போட்ட வேஷமா?

இப்பொழுது இவன் வந்தது எதற்காக??????????????

7 comments

Leave a Reply