மையல் பாதி உன்னோடு

மணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன… இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்… நினைக்கும் போதே சுளீர் என வலித்தது….

இந்த திருமணத்தை நிறுத்த முடியாத தன் கையாலாகதனத்தை நினைக்கையில் தன்ஷியாவிற்கு இன்னுமாய் அழுகை கொப்பளிக்கிறதென்றால்….அடுத்தவர் முன்பு சபையில் வைத்து அழுவது எத்தனை அவமானம் என்ற நினைவு இவள் அழுகையை அடக்கி வைக்கிறது. கூடவே அப்பா அம்மாவின் நினைவு வேறு….

முடிந்தவரை முயன்று கண்ணீரை இமைகளுக்குள் ஒழித்தாள்.

அதே நடிப்பை இதோ திருமணம் முடிந்து ரிஷப்ஷன் நடந்து இன்ன பிற எல்லாம் செய்து முடிக்கும் வரை தொடர முடிந்தவளுக்கு….. இரவில் தனியறைக்குள் அவனை அதான் அவள கல்யாணம் செய்துறுக்கானே அந்த ஷெஷாங்கை சந்திக்கும் போது தொடர முடியவில்லை…..

அவளுக்குள் பயமும் கோபமும்  நீ பாதி நான் பாதி என .பங்கு கேட்டு  டூயட் பாடின என்றால்..…. இரண்டையும் காட்ட முடியாமல் மூன்றவதாய் அழுது வைத்தாள் அவள்.

மேடையில் ஒரே ஈஈஈஈஈ போஸில் எல்லோரிடமும் எக்‌ஸைட்டட் ஸ்டேட் எக்ஸ்‌ப்ரெஷன் கொடுத்து கொண்டிருந்த அவனும் இப்போது வேறு முகம் காண்பித்தான். ஆம் இவளை ஒரு பார்வை பார்த்தவன் அடுத்து இவளை கொஞ்சமும் சட்டை செய்யாது தன்பாட்டுக்கு தன் சட்டை பட்டனை கழற்றியபடியே அங்கிருந்த அடுத்த அறைக்குள் நகர்ந்து சென்றுவிட்டான்.

அடுத்து வந்த ஒரு வாரமும் இதே தொடர….அதாவது கல்யாணத்திற்கென நடந்த விருந்து உபசரிப்புகளில்  இவள் அழாதவாறு காண்பித்துக் கொள்வதும் அவன் ஈஈஈஈஈ போஸ் கொடுப்பதும்…. இரவில் இரண்டு பேரும் என்னவென்று கூட கேட்டுக் கொள்ளாமல் அடுத்த அடுத்த அறைக்குள் புகுந்து கொள்வதும் நடந்தேற….அன்று முதன் முறையாக அவனிடம் பேசும் நிலை வந்தது தன்ஷிக்கு….

அன்று அவனது அக்கா வீட்டில் இவர்களுக்கு விருந்து….. மதிய சாப்பாடு தடபுடலாய் முடிந்திருக்க……அவனது அக்கா அதுராவுக்கு இரண்டு குழந்தைகள்……அதில் இரண்டாவது குட்டிக்கு இப்போதுதான் மூன்று மாசம்…..அந்த குழந்தை தூக்கத்திற்கு அழ…… இவனது அக்கா அதுரா குழந்தையுடன் மாடியிலிருந்த அறைக்கு சென்றிருந்தாள்.

அதுராவின் கணவரும் எதோ ஃபோன் வர, எழுந்து வெளியே செல்ல….. இப்போது அதுராவின் மூத்த குழந்தை மூன்று வயது ஷாலு கையில் ஒரு ரசகுல்லா டின்னுடன் தன் தாய் மாமனிடம் வந்து நின்றது…

ரசகுல்லா வேண்டுமாம்….அந்த ஸ்டீல் டின்னை திறந்து கேட்டது அந்த குட்டி….

டைனிங் டேபிளின் இந்த புற சேரில் அமர்ந்து தன்ஷி பார்த்துக் கொண்டிருக்க அந்த புறம் நின்று தன் மருமகளிடம் கொஞ்சி கொஞ்சி பேசியபடி அந்த டின்னின் மேல் மூடியை கத்தி கொண்டு வெட்டி திறந்து கொண்டிருந்தான் அவன்….

ஒரு கட்டத்தில் அவனது கை பக்கத்தில் நின்றிருந்த ஷாலு குட்டி உற்சாக மிகுதியில் சட்டென  அவன் வலக் கையைப் பிடித்து ஆட்டியபடியே குதித்துவிட….எதிர்பாரா இந்த ஆட்டுதலில், அவன் கையிலிருந்த கத்தி ஆட்காட்டி விரலை ஒரு பக்கமாக வெட்டி சொருகி நின்றதென்றால் அடுத்த விரலில் அந்த டின் மூடி சொருகி இருந்தது….

ரத்தம் இன்னும் வந்திருக்கவில்லை என்பதால் முதல் நொடி தன்ஷிக்கு எதுவும் புரியவில்லை…..அவன்தான் ஒரு சின்ன முகசுளிப்போடானா ஸ்ஸ்….க்குப் பின் எதையும் காட்டிக் கொள்ளவில்லையே….

ஆனால் குட்டி இன்னுமே புரியாமல் அவன் கையை இன்னுமாய் ஆட்டியபடி குதிக்க…..அவளை கட்டுப் படுத்தவென தன் வலபக்கம் நின்ற குழந்தையை இடக்கையால் எக்கி பிடித்து சமாளிக்க முயன்றபடி  தன் விரலை அவன் டின்னிலிருந்தும் கத்தியிலிருந்தும் எடுக்க முயல….

இதில் விரல் ஏடாகூடமாய் கிழிபட்டுக் கொண்டு ரத்தம் பீச்சி அடிக்க…. அப்போதுதான் என்ன நடந்து கொண்டிருக்கிறது என புரிகிறது தன்ஷிக்கு….

அவசரமாய் எழுந்தவள் அடுத்து என்ன செய்யவென புரியாமல் அவன் முகம் பார்த்து பதற்றமாய் விழித்தாள்..… ஆனால் அதெல்லாம் ஒரு நொடிதான்….மீண்டுமாய் அவன் கையிலிருந்து வரும் ரத்தத்தைப் பார்த்ததும்……

என்னதான் அவன் மீது இவளுக்கு வெறுப்பு என்று இருக்கட்டுமே…..இந்த ஏழு நாள் இவள் முன் அவன் நடந்து கொண்ட முறையாலோ இல்லை எந்த உணர்ச்சியையும் வெகு நாளாக இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு அலைய முடியாது என்பதால் அவன் மீதிருக்கும் கோபம் குறைந்திருக்கிறதோ? அதனாலோ??

ஓடிப் போய் அவன் விரலைப் பற்றி கத்தியிலிருந்து எடுத்துவிட முனைந்தாள்…

இதற்குள் அவன்  “ஹேய் ஒன்னுமில்ல தனு…. நான் பார்த்துப்பேன் ….நீ ஷாலுவ மட்டும் பார்த்துக்கோ…” என மறுத்தான்…

ரத்தத்தை பார்க்கவும் வீரீட்ட படி அவன் கையை இன்னுமாய் அப்பிக் கொண்டிருந்த குழந்தையை இப்போது அள்ளினாள் அவள்….

“நீங்க கண்டிப்பா ஒரு டிடி போட்றுங்க….” அதுதான் இவள் முதன் முதலாக அவனிடம் பேசிய வார்த்தை. சின்னதாய் சிரித்தபடி தலையாட்டி வைத்தான் அவன்.

அடுத்தும் இவள் எதுவும் பேசவில்லைதான்…..ஆனால் வீட்டிற்கு வந்து இரவு படுக்கப் போகும் முன் இவளிடம் பேச வந்தான் அவன்.

“சாரி தனு…. என்ட்ட கேட்காம அக்கா நமக்கு முசோரிக்கு ஒரு ட்ரிப் புக் செய்துறுக்கா…… உனக்கு ஓகேன்னா போய்ட்டு வருவோம்….இல்ல கண்டிப்பா முடியாதுன்னா சொல்லு….அவட்ட எப்டியாவது நான் சொல்லிக்கிறேன்….” என்றபடி  இவள் முகத்தைப் பார்த்தான்.

இவள் அடுத்து எதுவும் சொல்லும்  முன்….. “இது அக்காவுக்காக போய்ட்டு வர்ற ஜஸ்ட் அ ட்ரிப்”… என விளக்கம் வேறு கொடுத்தான்.

இப்ப விருந்துக்கு போறதா போடுற வேஷத்த கொஞ்சம் மாத்தி ட்ரிப் போறதா போடப் போறோம்…..மத்தபடி ஒரே வீட்ல இருக்றதுன்னா இங்க இருந்தா என்ன இல்ல முசோரில போய் இருந்தா என்ன….. அதுரா அண்ணிக்காக செய்யலாம்…. என அதற்குள்  யோசித்து முடித்திருந்த தன்ஷி சம்மதமாய் தலையாட்டினாள்….

இத்தனை நாள் பழக்கத்தில் அதுராவை இவளுக்கு பிடித்திருந்தது.

டுத்த மூன்றாம் நாள் டேராடூன் வரை ஃப்ளைட்டில் சென்று அங்கிருந்து காரில் இவர்கள் முசோரியை சென்றடையும் போது இரவாகி இருந்தது…. ஸ்னோ ஃபால் வேறு…..

குளிர் மற்றும் அந்த பயண களைப்பில்  மறு நாள் காலை படுக்கையைவிட்டு எழும்பவே தன்ஷிக்கு மனம் வரவில்லை….

அதனால் காலை அவன் வெளியே சுற்றிப் பார்க்க கிளம்பியபோது “நான் வரல” என்ற இரண்டே வார்த்தையில் மறுத்துவிட்டாள்.

அதில் சட்டென அவனும் வெளியே செல்லும் ப்ளானை ட்ராப் பண்ணுவான் என இவள் எதிர்பார்க்கவில்லை….

வெளியே செல்ல முழுதாய் கிளம்பி நின்றவன் ஜெர்க்கினை கழற்ற ஆரம்பிக்க…..இவளுக்கு முகம் விழுந்து போனது……‘ஏன் ? இவள தனியாவிட்டுட்டு போனா என்னவாம்? ‘ அம்மா அப்பா நியாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை இவளால்.

“தனு டூரிஸ்ட் ப்ளேஸ்ல ஹோட்டல்ல லேடீஸ் தனியா இருக்றது எனக்கு சேஃபா தோணாதுமா….” என இவள் மனம் உணர்ந்தார் போல் பதில் சொன்ன அவன்…..”அதுராக்காகனாலும் இதத்தான் செய்வேன்…” என்றுவிட்டுப் போனான்.

இப்பொழுதுதான் முதல் முறையாக இவளுக்கு உறுத்த ஆரம்பித்தது….. இவன் இவள பத்தி தெரிஞ்சு பேசுறானா…? இல்ல யதார்த்தமா சொல்றானா??

அடுத்து நேற்று அவன் படுத்திருந்த ஹால்  சோஃபாவில் போய் அவன் தஞ்சமடைய……இவள் மனக் குதிரை எங்கெல்லாமோ சுற்றி வந்து களைத்துப் போனது….

இருந்த ஒரே படுக்கை அறையில் வெகு நேரம்   விழுந்து கிடந்தவளுக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை….

எழுந்து வெந்நீரில் குளித்து உடை மாற்ற கொஞ்சம் பெட்டர் ஃபீல்…. கடிகாரம் மணி மூன்று என்றது….

“ஒரு வாக் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும் போல இருக்கு….”  அவனிடம் போய் சொன்னாள்….

“ஷ்யூர்” என்றபடி ஜெர்கினை அணிந்து கொண்டு கிளம்பிய அவன், அருகிலிருந்த டேபிளில் இருந்த அவனது பர்ஸை எடுத்து…. கையில் காயம் பட்டிருந்த காரணத்தால் அந்த கையால் அதை தன் பாக்கெட்டில் வைக்க திணற….

“என்ட்ட குடுங்க…. நான் கொண்டு வரேன் “ என அதை வாங்கிக் கொண்டாள் இவள். அடுத்து ஞாபகமாக ரூம் சாவியை தானே எடுத்து அறையை பூட்டிவிட்டு கிளம்பினாள். இந்த கையோட அதைப் பூட்ட அவனுக்கு கஷ்டமா இருக்குமே….

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என வாக்கிங் நீண்டு கொண்டே போய் சற்று அதிக தூரமே போய்விட்டனர் போலும்…..இருந்த குளிருக்கு அங்கு கண்ணில் பட்ட ஒரு குட்டி ஹோட்டலில் நுழைந்து சாய் ஆர்டர் செய்தனர்….

அதை குடித்து முடித்து பில்லுக்காக பார்க்கும் போதுதான் கவனித்தாள்….. அவன் பர்ஸ் இவளிடம் இல்லை…. ரூமிலிருந்து கிளம்பும் நேரம் கீயால் கதவை திறக்க முயன்ற போது…..அது கொஞ்சம் திறவா கிரகம் செய்ததால், முயன்று திறப்பதற்காக, கையிலிருந்த பர்ஸை அருகிலிருந்த டேபிளில் வைத்தது இப்போதுதான் நியாபகம் வருகிறது….

இவளிடமும் ஒரு பைசா கிடையாது……இவளுக்கு கை காசு என ஒரு பைசா தந்திருக்கவில்லை இவள் பெற்றோர். கல்யாணம் முடிஞ்சு கிளம்புறப்ப இவ அப்பாட்ட வாய்விட்டு கேட்டா.

“அதான் மாப்ள இருக்கார்ல……பார்த்துப்பார்” என அம்மாவிடம் இருந்து அதற்கு பதிலாவது கிடைத்தது. அப்பாவிடமிருந்து பதிலும் வரவில்லை பணமும் வரவில்லை.

இப்ப இவ என்ன செய்யனும்??? விக்கித்துப்போனாள்.

பிடிபட்ட போந்தா கோழி மாதிரி இவ முழிக்கிற முழியிலேயே தெரிஞ்சுட்டு போல அவனுக்கு…..

“என்னாச்சு…?” என இவளிடம் கேட்டவன்….இவள் பதில் சொல்லும் முன்னும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு….”நீ டிஃபன் ஆடர் செய்து சாப்டுட்டு இரு தனு….நான் அதுக்குள்ள ரூம்க்கு போய்ட்டு வந்துடுறேன்….” என்றபடி எழுந்து கொண்டான்.

அவன் கோபமாக எதாவது சொல்லி இருந்தால் கூட நன்றாக இருந்திருக்குமோ….?  பர்ஸை நான் கொண்டு வரேன்னு இவளா போய் பிடுங்கி அத ரூம்ல வச்சுட்டு வந்திருக்காளே…. தவிப்பாக அவனிடம் “சா..சாரி…” என திக்கினாள்.

“ப்ச்…தப்பு என்னோடதுதான்…” என அவன் அதற்கு பதில் சொன்னபோது என்னதான் இருந்தாலும் வலித்தது இவளுக்கு…..பர்ஸ இவட்ட கொடுத்துறுக்க கூடாதுன்றான்…

அடுத்து ஒரு 40 நிமிடம் இவளுக்கு திக் திக்….. போனவன் திரும்பி வரவில்லை இன்னும்….. இங்கோ பனிப் பொழிவு ஆரம்பிக்க….குளிர் ஏடா கூடாமாய் கூட….ஹோட்டலில் இருந்த கொஞ்சம் நஞ்ச ஈ காக்காவும் இடத்தைக் கலி செய்துட்டு போக…..

மிரள தொடங்கி இருந்தாள் தன்ஷி…..

இதில் திடீரென ஹோட்டலின் ஷட்டர் படீர் என்ற சத்தத்துடன் மூடப்படுகிறது…. இவளிருந்த இடத்திலிருந்து துள்ளித் திரும்பிப் பார்த்தால்…..கையில் எதிரிலிருந்த வொயின் ஷாப்பில் வாங்கிய பாட்டிலுடன் தடுமாறி தடுமாறி ஒருவன்….

அடித்து பிரண்டு எழுந்தவள் சுற்று முற்றும் பார்த்தால் ஹோட்டலின் ஒரே வெயிட்டரும் திரும்பிப் பாராமல் அடுத்த கதவிற்குள் நழுவுவது புரிகிறது….

வெலவெலப்பும் வெடவெடப்புமாய் இவள் ……. பனி விழுறதால ஷட்டர இறக்கிருக்காங்களா….. இல்ல வேற எதுவும் நடக்குதா என ஒன்றும் புரியாத நிலையில் இவள் தவிக்க துடிக்க நிற்க…

அந்த லிக்கர் பாட்டில் பார்ட்டி குழற குழற எதையோ எதோ பாஷையில் சொல்லியபடி இவள் இருந்த திசையை நோக்கியே வர…. இவள் இருந்த இடத்தில் இருந்து பின்னாலே நகர…..

‘ஐயோ ஷெஷாங் வந்துற மாட்டானா..? கடவுளே அவனுக்கு எப்டி தெரியும் ஹோட்டல் இன்னும் பூட்டல, நான் உள்ளேதான் இருக்கேன்னு….’ இப்படி இவள் பதறிக் கொண்டிருக்கும் போது சடீர் என்ற சத்தமுடன் திறக்கிறது ஷட்டர்….

ஷெஷாங்!!!!

எத்தனை செகண்டில் அவன் இவளிடம் வந்தான் என்றும் தெரியாது, எப்படி இவள் அவன் கைக்குள் பொதிந்து போனாள் என்றும் தெரியாது…

அவனது இடது தோளில் கைகள் முகம் என எல்லாம் புதைத்திருந்தவளுக்கு அவனது தவிப்பான “சாரிமா….. சாரி சின்னு……வெரி சாரி தனுமா…”. சில நொடிகளுக்கு பிறகே கொஞ்சமாய் உறைக்க முதன் முறையாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்…

‘பர்ஸ வச்சுட்டு வந்தது நான்தான் ஷெஷாங்….தப்பு என்னோடதுதானே’ என இவள் சொல்ல நினைத்தாலும் இருந்த உணர்ச்சி பிரளயத்தில் எதையும் சொல்ல தெரியாமல் இவள் குற்ற உணர்வோடு பார்க்க…..

இப்போது இவள் முன் முடியை மென்மையாய் ஒதுக்கிவிட்டவன்……. மிக மிக மிருதுவாய் இவள் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான்…. அ….ம்….மா….அவளது அடி வயிறு வரை அடித்து பிரட்டுகிறது ஒரு ஆறுதல் பெருமழை….

அது கிளறிய உணர்வையே தாங்கமாட்டாமல் இவள் திண்டாட…. அந்த அவனது முதல் முத்தத்தை விடவும்

“உனக்கு நான் செலவுக்குன்னு பணம் தந்திருக்கனும் தனு….தாரதது என் தப்புதானே….” என்றதுதான் அவளை ஆட்டித் தூக்கி வீசிவிட்டது….

‘என்ன சொல்றான் இவன்???’ உடல் விறைத்துக் கொண்டு போகிறது இவளுக்கு.….….

இதற்குள் எதோ ஒரு மொழியில் உளறிக் கொண்டு அருகில் வந்த அந்த லிகர் பார்டியை ஓங்கி ஒரு தள்ளு…..அவன் கொஞ்ச தூரத்திலிருந்த சேரில் போய் பொத் என  உட்கார….. இவளை மறுகையால் அணைத்துப் பிடித்தவாறே வெளியே கூட்டி வந்தான் ஷெஷாங்

அவன் வந்திருந்த ஹோட்டல் காரின் பின்சீட்டில் இவளோடு சென்று ஏறிக் கொண்டவன்….. முதல் காரியமாக பர்ஸிலிருந்து கைக்கு வந்த மொத்த பணத்தையும் எடுத்து இவளிடமாக நீட்டினான்….

நடப்பது கனவா நிஜமா எனப் புரியாமலிருப்பவளுக்கு உடல் நடுங்கத்தொடங்குகிறது….. உள்ளுக்குள் எதோ சிலீரென உடைந்து தீயாய் பரவுகிறது…..

ஹோட்டலுக்கு வந்து சேரும் முன் கடும் காய்ச்சல் வந்து சேர்ந்திருந்தது அவளுக்கு….

கண்மூடி சோர்ந்து கிடந்தவளிடம் “என்னாச்சு தனு…? ரொம்ப பயந்துட்டியாமா…..சாரிபா….” என நொடிக்கொருமுறை கரிசனைப் பட்டுக் கொண்டே….சுட சுட எதோ  சாப்பாடு ஆர்டர் செய்து…அதை இவளை சாப்பிட வைத்து….

மாத்திரை சாப்பிட மாட்டேன் என குழந்தை போல ஆர்பாட்டம் செய்தவளை….. கெஞ்சி கொஞ்சி அதை விழுங்க வைத்து….. தூங்கும் வரை இவள் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டதெல்லாம் அவளுடையவன்தான்.

எவ்வளவு நேரம் தூங்கினாளோ…..குளிர் உறைக்க விழித்துக் கொண்டவளுக்கு இது பின்னிரவு என்பது வரை புரிகிறது…..  ஏன் குளிர்கிறது என்றுதான் புரியவில்லை….. படுக்கை அறை, ஹால், ரெஸ்ட் ரூம்…. என தனி குட்டி வீடு போலிருக்கும் இவர்கள் சூட்டுக்கென ப்ரத்தியேக  சென்ட்ரலைஸ்ட் ஹீட்டிங்க் சிஸ்டம் உண்டு…..அதனால் வெது வெதுப்பாகவே இருக்கும் அறை…. ஆனா இப்ப என்னாச்சு??

ஒரு வேளை ஃபீவர்னால குளிருதோ….?

இதற்குள் அடுத்திருந்த ஹாலில் பேச்சு குரல் கேட்க அங்கு செல்லவென எழுந்தாள்.

“என்னங்க நீங்க இந்த மாதிரி சீசன்லயாவது நைட்க்கும் ஒரு எலக்ட்ரீஷியன் வச்சுருக்கலாமே….” ஷெஷாங் இங்க்லீஷில் யாரிடமோ அடக்கப்பட்ட கடுகடு குரலில் சொல்வது காதில் விழுகிறது…

“இப்ப ஹீட்டர் வர்க் பண்ணல….நாங்க என்ன செய்றது…? அதுவும் என் வைஃபுக்கு ஃபீவர்….” அவன் குரல் சீறினாலும் சத்தம் குறைந்தே இருக்கிறது…. சூட் எம்ளாயியிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என புரிகிறது இவளுக்கு.

“சாரி சார்….” அந்த எம்ப்ளாயி இயல்பான குரல் அளவில் எதோ பதில் ஆரம்பிக்க…

“ஷ்….என் வைஃப் தூங்கிட்டு இருக்கா…உங்க சத்தத்துல அவள டிஸ்டர்ப் செய்துடாதீங்க…..” இவளவனின் சற்று அதிகாரம் கலந்த கார வார்த்தையில்

“சாரி சார் இதுவரை இப்டி இஷ்யூ ஆகல….வெரி சாரி…. இப்போதைக்கு ஒரு ப்ளோவர் இருக்குது….கொண்டு வர சொல்லி இருக்கேன்… பெட் ரூமுக்கு சஃபீஷியன்ட்டா இருக்கும்….மார்னிங் எல்லாத்தையும் சரி செய்து கொடுத்துடுறேன் சார்…” என்று தொடர்ந்த அந்த எம்ப்ளாயியின் பேச்சு குரல் ரொம்பவுமே சத்தம் குறைந்து இருந்தது…

“முதல்ல அதையாவது கொண்டு வாங்க….” இவள் கணவனின் குரலில் இன்னுமே கோபம் குறைந்தபாடில்லை….

இதற்குள் தன் அறை கதவருகே சென்றிருந்தவளுக்கு சின்னதாய் திறந்திருந்த அதன் இடைவெளியில் இவர்கள் சூட்டிற்குள் இன்னுமொரு நபர் நுழைவது தெரிகிறது……ஒரு கையில் போர்ட்டபிள் ஹீட்டரும்…மறு கையில் ஒரு அழகான பையையும் எடுத்து வந்தான் அவன்…..

ஹாலுக்குள் செல்லலாம் என நினைத்த தன்ஷி இப்போது தயங்கி நின்றாள்…. தான் நைட் ட்ரெஸில் இருப்பது இப்போதுதான் உறைக்கிறது இவளுக்கு….

ப்ளோவரை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு…..அந்த பைக்கார பையன் இப்போது அதை திறந்து ஒரு லிக்கர் பாட்டிலை எடுத்து ஈஈஈ என்றபடி டேபிளில் வைப்பது இவள் பார்வையில் விழ கசப்பில் சுருங்குகிறது இவள் முகம்…..

அதற்குள் “இதெல்லாம் இங்க யார் கேட்டா….எடுத்துட்டு போங்க…” என்ற ஷெஷாங்கின் குரல் அதட்டியது….

“இல்ல சார்….இது எங்க காம்ப்ளிமென்ட் சார்… சார்ஜ் பண்ண மாட்டோம்.” அந்த எம்ப்ளாயிதான்…. ஹீட்டர் பெயிலானதுக்கு இத குடுத்து ஐஸ் வைக்கோம்ன்றத டீசண்ட்டா சொன்னான்.

“இல்ல தேவை இல்ல…..இந்த பழக்கம் எனக்கு கிடையாது…” ஸ்டெர்ன் வாய்சில் மறுப்பது ஷெஷாங்கேதான்…

ஹான்..!!! அப்டின்னா..?? இவள் மனம் இப்படி ஓட… அங்கு அந்த பையனோ….

“சார் சார் அது க்ரே கூஸ் சார்…..” பாட்டிலை விழுங்கிவிடுவது போல் பார்த்தபடி இதப்போய் வேண்டங்கிறியே என்பதை சொல்லாமல்  சொன்னவன்

“இந்த பாட்டில் நாலாயிரம் ரூபாகிட்ட ஆகும் சார்….உங்களுக்கு வேண்டாம்னா யாருக்காவது கொடுங்க சார்….” ‘எனக்கே கூட கொடுத்துடுங்களேன்’ என்ற டோனில் அடுத்த ஐடியாவை கொடுக்க….

“ஓ…சரி….இங்க வச்சுட்டு போங்க…” என சட்டென இறங்கி வந்தான் இவள் கணவன்.

இவளுக்கு எதோ புரியத் தொடங்குவது போல் இருக்கிறது…..

அடுத்து அந்த சூட் வொர்க்கர்ஸ் கிளம்பிப் போகவும்….. சத்தம் எழுப்பிவிடக் கூடாதென ஒவ்வொரு அசைவிலும் கவனமெடுத்து ஷெஷாங் கதவைப் பூட்டுவதும், அந்த ப்ளோவரை எடுத்துக் கொண்டு இவள் அறைக்கு வருவதும் தெரிய

இவள் அவசரமாய்ப் போய் அசையாது படுத்துக் கொண்டாள்.

அறைக்குள் வரவும் ஹாலிலிருந்து வடிந்த சின்ன வெளிச்சத்தில் இவள் தூங்குகிறாளா என ஒரு கணம் பார்த்தவன்….பின் அந்த ப்ளோவரை செட் செய்து ஆன் செய்துவிட்டுப் போனான்.

அடுத்து அந்த வோட்கா பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்தவன்…. படுக்கை அறை கூடதானே அட்டாச் ஆகி இருந்தது ரெஸ்ட் ரூம்…..அதில் போய் அதை திறந்து ஊத்தி ஃப்ளெஷ் செய்தான்…

இவன் வேண்டாம்னு சொல்லி இருந்தா….இவனுக்கு கொடுத்த கணக்கில் அந்த பாட்டில் அந்த பையனுக்கு போயிருக்கும்…..அதனால இவன் வாங்கி டிஸ்போஸ் செய்றான்…. என்று இந்த அவன் செயலுக்கு தன்ஷிக்கு காரணம் புரிந்தாலும் முன்பு அவள் பார்த்த அந்த நிகழ்வுக்குத்தான் பொருள் புரியவே இல்லை….

ஏன் அப்டி செய்தான்? டிராமாவா? ஏன்???

இவள் மனம் தாறு மாறாய் தாவி அந்த நிகழ்வுக்குள் பாய்கிறது….

“உனக்கு மேரேஜ் ஃபிக்‌ஸ் செய்துறுக்கோம்….மாப்ள நல்ல மாதிரி….போற இடத்துலயாவது போய் வால சுருட்டிட்டு இரு….” இவளது அம்மா அறிவிக்க….அப்பா இவள் புறம் திரும்பாமல் எங்கோ பார்த்து நின்றவர்….இவள் பதிலுக்காக காத்திருந்தார்.

வீட்டில் அம்மா அப்பாவை நிமிர்ந்து பார்த்து பேசும் வழக்கம் கூட இப்போதெல்லாம் கிடையாது தன்ஷியாவிற்கு…..அதற்கான தகுதியைத்தான் இவள் இழந்துவிட்டாளே…. ஆக குனிந்தபடியே பூம் பூம் மாட்டின் செயல்.

அவர்களிடம் எதையும் முடியாது பிடிக்காது என்றெல்லாம் இவளால் சொல்ல முடியாது…. அப்படி சொல்லித்தானே தன் வாழ்வையும் அவர்கள் சந்தோஷத்தையும் அழித்துப் போட்டாள்.

ஆனால் அதற்காக இவளால் ஒருவனை, அதுவும் ஒரு நல்லவனை திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்வையும் நாசமாக்க முடியாது….

ஆக அந்த மாப்பிள்ளை ஷெஷாங்கைப் பார்த்து பேசி இந்த திருமணத்தை நிறுத்தியாக வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள்.

ஆனால் எப்போதும் அம்மா அல்லது அப்பாவின் நேரடிப் பார்வையில் மட்டுமே இருக்கும் இவளால்….தப்பி தவறி அம்மாவும் அப்பாவும்  சேர்ந்து வெளியே சென்றாலும் செல்லும் நேரம் இவளை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு செல்லும் வழக்கம் உள்ள நிலையில்….எப்படி அவனை கான்டாக்ட் செய்ய..?

தினமும் ஒவ்வொரு வழி யோசித்து ஒன்றும் செட் ஆகாமல்….கடைசியில் அந்த இந்தா என எங்கேஜ்மென்ட்டே வந்துவிட்டது. விழா முடிந்த அசதியில் பெற்றோர் தூங்கிக் கொண்டிருக்க அன்றுதான் மனதை வெறுத்து அம்மா தலையனைக்கடியில் இருந்த சாவியை உருவி…..இரவோடு இரவாக அந்த ஷெஷாங்கைப் பார்த்துவர சென்றாள்.

இவள் அவன் வீட்டை அடையும் போது கேட்டில் செக்யூரிட்டி கூட இல்லை என்றால் வீடும் ப்ளாச் என திறந்து கிடக்கிறது……ஃபங்க்ஷன்றதால எல்லோருக்கும் லீவு கொடுத்திருப்பான்னு அப்ப நினச்சது தப்போ…..???

அவனது அறையை அடையும் போது காதில் விழுகிறது அவனது குடியால் குழறிய குரல்…..

“இங்க பாழ் பேபி..….நான் கள்யாணத்தையும் இதையும் குழப்பிக்கிழதே இள்ள……. நெவழ்……. அவளையும் உன்னையும் ஒரு நாழும் கன்ஃப்யூஸ் செய்யவே மாட்டேன்…… அவ என் குட்டி வீட்டுக்கு பிரின்ஸஸ்…… இளவழசி…… நீ வெழிய மத்த எல்லா இழத்துக்கும் குயின்…. குயின் பெழுசா….இழவழசியா…? ஸீ… எனக்கு நோ கன்ஃப்யூசன்….உனக்கும் நோ கன்ஃப்யூசன்…..ஓகே… பேபி….”

வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் தன்ஷிக்கு எப்படி இருக்கிறதாம்??? கோபம் ஆத்திரம் அழுகை அவமானம் ஏமாற்ற உணர்வு….நீ விதச்சதுக்கு இப்டித்தான் விளையும் என்ற குற்ற உணர்வு எல்லாம் சேர்ந்து கொந்தளிக்க…இவள் போய் பட படவென கதவை தட்ட…

“யாழு…?” என்ற அவனது குழறல் குரல் பதில் கொடுத்தாலும்,  கதவை திறக்கவில்லை அவன்…

பொறுமை இழந்தவள் அறையின் கதவை ஒட்டி இருந்த அலங்கார ஜன்னலில் எட்டிப் பார்க்க…அறையின் மறு புறம் இருக்கும் திறந்த கதவும் பால்கனியும் பார்க்கத் தெரிகிறது…..அதில் டார்க் பிங்கும் கோல்டன் கலருமாய் உடை அணிந்த ஒரு பெண் ஓடிப்போய்  ஒளிந்தபடி கதவை மூடிக் கொள்கிறது…

பார்க்கவே ரொம்பவும் அருவருப்பாய் இருக்கிறது இவளுக்கு…..

சற்று நேரம் என்ன செய்வதென புரியாமல் திகைத்துப் போய் நின்றுவிட்டாள்….

இப்போது இவளுக்கு கதவை திறந்தான் இந்த ஷெஷாங்….

வைட் ஷேர்ட்டின் பட்டனை ஏற்ற இறக்கமாய் எப்படி எப்படியோ மாட்டியபடி……வெற்று மார்பும் …இறுகிய வயிறும் இன்னும் கூட வெளியில் தெரியும் படியாய் ஒரு கோலம்…..தள்ளாடி தள்ளாடி அவன்…..இன்னும் கூட எங்கேஞ்ச்மென்ட்  ஃபேண்ட்ஸைதான் அணிந்திருக்கிறான்…..

ட்ரெஸ கூட மாத்தல அதுக்குள்ள இன்னொரு பொண்ணோட…..

சர்ப்பமாய் சீற வருகிறது இவளுக்கு…..

“யூ டோன்ட் வொழ்ழி டாழ்ஸ்…..அவழுக்கும் அதான் அந்த தன்ஷி….தன்ஷியாஆஆ அவளுக்கும் என்ன கழ்யாணம் செய்ய பிடிக்கழ….இப்பவழ அவ என்ட்ட பேசவே இள்ள தெழியுமா…? ழாங்கி…. இழுந்தும் ஏன் கள்யாணம் செய்ழேன்னு தான கேட்க…..கழ்யாணத்துக்கு மினிஸ்ட்டழ் வழைக்கும் அப்பாய்ண்ட்மெந்ட் வாங்கிருக்கேன் பேபி…. போஸ்ட்டர் எழ்ழாம் அடிச்சு ஒட்டியாச்சு…..இப்ப போய் எப்டி நிழுத்த…? அதான்..”

இவளை அந்த எவளோ ஒரு பேபி என குழப்பிப் போய், அவளிடம் பேச வேண்டியதை இவளிடமே அவன் பேச….

இவனிடம் தன் காரணத்தை சொல்லி என்ன ஆகப் போகிறதாம் என ஒன்றும் சொல்லாமலே திரும்பி வந்துவிட்டாள் தன்ஷியா….

அடுத்து வீட்டிலும் எதுவும் சொல்ல முடியாமல் நடந்து விட்டிருந்தது திருமணம்.

அன்று அப்படி நடந்து கொண்ட அவனேதான் திருமணத்திற்குப் பின் இப்படி நடந்து கொள்வதும்….. கல்யாணம் செய்யப்போறவ முன்னால குடிச்சிட்டு நின்னவன்….

இன்னைக்கு அவ தூங்குறான்னு நம்பி…..இத்தன குளிருலும் இருக்கும் ஒரு ப்ளோவரையும் இவளுக்கு வச்சுட்டு….லிக்கரையும் கொண்டு டிஸ்கார்ட் செய்துட்டு….

ஆக அன்னைக்கு நடந்தது ட்ராமாவா….ஆனா ஏன்..?

இவள கல்யாணம் செய்யனும்ன்ற நோக்கத்தில் ட்ராமா போட்றுந்தா ஒருத்தன் தன்னை இப்டியா காமிச்சுப்பான்…?? நிச்சயமா அது கல்யாணத்தை நிறுத்த போட்ட டிராமாவும் கிடையாது….

ஷெஷாங்கிற்கு இவளது கடந்த காலம் தெரியுமோ…..? உன்னை கண்காணிக்க நான் உன் கூட இல்ல…உன் சேஃப்டிக்காகன்னு விளக்கம் கொடுத்தான்தானே….. ஆனா அத தெரிஞ்ச ஒருத்தன் இவளை கல்யாணம் செய்வானாமா? கண்டிப்பா செய்யமாட்டான்….

அப்படின்னா ஏன்?

அவனிடமே கேட்டு விடலாம்….எழுந்து இப்போது ஹாலுக்கு சென்றாள்….. கடும் குளிரில் சில கேன்டிலை ஏத்தி வைத்துவிட்டு அதன் அருகில் உட்கார்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தான் அவன்….

“ஷெஷாங்,,” இவள் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவன்…

“விழிச்சுட்டியா தனு….” என்றபடி எழும்ப அவன் எப்போதோ அவளை சின்னு எனக் கூப்பிட்டானோ என்றும் தோன்றுகிறது….. முன்னால அம்மா அப்பா வார்த்தைக்கு வார்த்தை அப்டித்தான் இவள கூப்டுவாங்க….தலைல வச்சு கூத்தாடுவாங்க…..

நியாபகம் வர கண்ணில் அதுவாக நீர் கட்ட….

“என்னாச்சு தனு…? ரொம்ப முடியலையாமா…?” சற்று பதறியபடி இப்போது இவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தவன் மார்பை மட்டுமே ஆதாரமாக கொண்டு தன்னை மீறி அப்படியே சாய்ந்துவிட்டாள் இவள்..

“சின்னு…” தாங்கி அணைத்திருந்தான் அவன்….

விலக துடிக்கிறது குற்ற இதயம்….. மறுக்கிறது அன்புக்காக ஏங்கும் மனது….

சற்று நேரம் அவன் பிடிக்குள் அவள் அப்படியே அடங்கி இருந்தவள்…… “நான் உங்களுக்கு தகுதியானவ இல்லபா….நான்  மோசம் ….ரொம்பவும் மோசம்… ஐ’ம் வீக்….வெரி வீக்…… ” என கதற தொடங்கி இருந்தாள்.

சற்று நேரம் அவளை எந்த வகையிலும் தடுக்கவில்லை அவனும்….

பின் ஒருவாறு இவள் சுதாரிக்கவும்….உன்ட்ட கொஞ்சம் பேசனும் என அழைத்துப் போய் பெட்டில் உட்கார வைத்தவன்…

“உனக்கு தெரியுமா….. உலகத்தை காக்க கடவுளின் குமாரன் ஜீசஸ் பிறந்திருக்கார்னு ஆட்டு இடையர்களுக்கு தேவதூதர்கள் அறிவிச்சதா பைபிள்ள இருக்கும் படிச்சிறுக்கியா…? அவர நீங்க எப்டி அடையாளம் கண்டுகலாம்னா…ஒரு பிறந்த குழந்தையா…மாட்டு தொழுவத்தில்..பழைய துணியால சுத்தி வைக்கப்பட்றுபாருன்னு சொல்லி இருப்பாங்க…..

அதாவது எந்த ஒரு மனிதனும் கடவுளைப் பத்தி முதன் முதலா யோசிக்க தொடங்குறப்ப….…..அவர் பலவீனமானவரா….. தனக்கு தானே கூட எதையும் செய்துக்க முடியாதவரா….. எந்த தப்பையும் தடுத்து நிறுத்த முடியாத குழந்தையா…தேவை உள்ளவங்களுக்கு கூட எதையும் கொடுக்க முடியாத ஏழையாதான் தெரிவார்… “

அவனை வினோதமாய் பார்த்தாள் அவள்….

“அதுக்குபிறகும் ஏன் எதுக்கு என  அவரை இன்னுமா தேடுறவ ஒவ்வொருவருக்கும்தான் அவர் எப்பேர்பட்ட கிங்னு புரியும்……அதாவது அடுத்தும் ஜீசஸ் வளர்ந்தார்…..

ஒரு அடிமை நாட்ல ஒன்னுமே இல்லாத வீட்டில….டெலிவரி பார்க்க கூட அவரோட அம்மாக்கு ஆள் இல்லாத சூழ் நிலையில பிறந்த அவர்… அதுவும் அவர் பிறந்து 2000 வருஷம் தாண்டின பிறகும் இன்னும் நீயும் நானும் கோடானு கோடி பேறும் அவர்ட்ட இருந்து நாம வாழ தேவையான அளவு உதவிகளை பெற்று, நமக்கு அவர் எல்லாவகையிலும் போதுமானவரா இருக்கார்னு அனுபவிச்சு, அவரை கடவுளா உணர்ந்து அவரைப் போல வாழனும்னு பின்பற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்…..

ஒவ்வொரு தலைமுறையிலும் அவருக்குன்னு கோடிக் கணக்கான கூட்டம் இருந்திருக்குது…. இருக்குது….அப்படி ஒரு ஆளுகை அவரோடது…….

அப்படித்தான் தன்ஷி நம்ம வீக்னெஸும்….அது  நமக்கே நமக்கான ஒரு டொமைன்…..ஒரு  சிம்மாசனத்தின் ஆரம்பம்…..அதில் கடவுள அனுமதிச்சா….. அதை ஒழுங்கா ஹேண்டில் செய்தோம்னா…. நம்ம வீக்னசை தாண்டி  வருவோம்….  வளருவோம்….அதாலயே நாலு பேருக்கு நல்லது நடக்கும்…..நமக்குன்னு ஒரு ராஜியமே கூட உண்டாகும்….

ஆனா அப்ப போய் நான் ஒரு நாள் குழந்தையா இருந்தேன்…..எனக்கு கேவலமா இருக்குன்னு அழுதா அபத்தமா இருக்கும்…..  .

நீ ட்ரக் அடிக்ட்டா இருந்த கதையும் அப்டித்தான்…அது உன் ஆரம்பம் ….இப்ப அதவிட்டு வெளிய வந்தாச்சு….உன் பேரண்ட்ஸ் உன் பாஸ்ட்ட பார்த்து பயந்துட்டாங்க…….எவ்ளவு வளந்தாலும்  பேரண்ஸுக்கு குழந்தைகளாத்தான் நாம தெரிவோம்… அதான் அப்டி உன்னை நம்பாம, வீட்டை விட்டு வெளிய கூட விடாம, கைல பணம் குடுத்தா பழையபடி எதுவும் ஆகிடுமோன்னு  பயந்துட்டாங்க….…”

அவன் பேசுவதைக் கேட்டவள்…..இரு கைகளாலும் முகத்தை தாங்கியபடி  வெகு நேரம் அமர்ந்திருந்தாள்….

அவனும் எதுவும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தவன்… கடைசியில்…..

“ஒரு ஹஸ்பண்ட் தன் வைஃபை அப்படி குழந்தையா பார்க்க முடியதே…” என்று எழுந்து போக….சட்டென கை நீட்டி அவன் கையைப் பிடித்தாள் இவள்….

இவளைக் கண்ணோடு கண் பார்த்தவன்…. முகத்தில் மென்மை தவழ “எனக்கு உன் ப்ரெசென்ட்டும் ஃப்யூசரும்தான் வேணும் சின்னு….” என்று முடித்தான். அந்த நொடியே அவனிடம் அவள் சரணடைந்துவிட்டாள் என்று இல்லை….

ஆனால் முசோரியிலிருந்து திரும்பி வரும் போது அவனது திருமதியாகத்தான் வந்திருந்தாள் தன்ஷியா….

முசோரி ட்ரிப் முடிந்து இன்று இவர்கள் தங்களது வீட்டிற்கு வந்திருந்தார்கள்….. முதன் முறையாக இவள் தங்கும் அறைக்குள் உள்ளிருக்கும் அவனது அறைக்குள் சென்றாள் தன்ஷி….. அங்கு அந்த டார்க் பிங்க் மற்றும் கோல்டன் கலர் ட்ரெஸ் ஒரு சேரின் மீது விரிந்து கிடந்தது…. ஒரு விக்கும் கூட அதன் அருகில்…

“எப்ப நீயா என்னத் தேடி வந்தாலும் உனக்கே புரிஞ்சிருக்கும்…..” சொல்லியபடி அவளை பின்னிருந்து அணைத்தான் அவளவன்….

அவனை அவள் முதன் முதலாக தேடி வந்த போது ஓடி ஒழிந்த லேடி கெட்டப் சாட் சாத் ஷெஷாங்னுடையதே… அந்த பால்கனியிருந்து அடுத்திருக்கும் அவன் அறைக்குள்ளும் கதவிருப்பதால் அது வழியாய் அங்கு போய் ஆண் உடை மாற்றி வந்திருந்தான் அவன்…..

“அதெல்லாம் சரி…இதுக்கு எதுக்குப்பா நீங்க வில்லன் அவதாரம் எடுத்தீங்க…” அந்த உடைகளை எடுத்து பார்த்து சிரித்தபடி கேட்டாள் இவள்…“இப்ப பேசி கன்வின்ஸ் செய்தத அப்பவே செய்திருக்கலாமே……”

அதுவா இப்பொழுது இன்னுமாய் மென்மையாய் அவள் தோள்மீது நாடி வைத்து அவள் கன்னத்தில் தன் கன்னம் பதித்தவன்…

“இல்ல அப்ப இருந்த சிச்சுவேஷன்ல நான் பேசினா நீ கன்வின்ஸ் ஆகி இருப்பன்னு எனக்கு தோணலை………அப்டியே  நான் உன்ன  பேசி கன்வின்ஸ் செய்துறுந்தாலும்….நீ என்ன விரும்பியே மேரேஜ் செய்தாலும்….உள்ளுக்குள்ள நான் உன்னவிட ரொம்ப மேலன்னு தோணும்…. அது ஒரு காம்ளக்‌ஸாவே  செட் ஆகிடும்… உன்னால என்ன உனக்கு சமமா நினச்சு அப்ரோச் செய்ய முடியாம போகும்….

ஆனா இதுன்னா……நானும் உன்ன மாதிரி ஒரு வீக் பெர்சன் அப்டின்னு முதல்ல உனக்கு தோனும்….அப்றம் அந்த மைன்ட் செட்ல  என்னை மனசால நீ நெருங்கி வரனும்…, அதான் ஒவ்வொரு ஸ்டெப்பும் உன்ட்ட இருந்துதான் வரனும்னு வெயிட் பண்ணேன்…. நீயாதான் முதல்ல பேசனும்…நீ ஒத்துகிட்டாதான் ட்ரிப்….நீ வெளிய போகனும்னாதா வாக்னு….அப்டின்னா  என்னை புரிஞ்சுகிற டைம் வர்றப்ப உன் மனசுலையும் என்னை நெருங்கி இருப்ப….

அம்மாட்ட குழந்தை தன்ன தாழ்வா நினைக்கிறதில்லையே…..அப்டித்தான் மனசளவில நெருங்கியவங்கட்ட நாம மேல கீழன்னுல்லாம் பார்க்கமாட்டோம்…….அதோட என்னதான் இருந்தாலும் பர்ஸ்ட் இம்ப்ரெஷன்னு ஒன்னு இருக்குது…… நானும் வீக்னெஸ் உள்ள மனுஷன்னு உனக்கு பதியும் அது…”

” எனக்காகவாபா இவ்ளவும்?” அவன் வார்த்தைகளில் உருகத் தொடங்கிவள் மெல்ல கண்களை மட்டும் உயர்த்தி அவன் முகத்தைப் பார்த்தாள்.

“இல்லையே….” வெகு இயல்பாக அவன் சொல்ல…

இப்போ இவள் பே….பே

“பாதி காதல்தான் மேடம் எனக்கு உங்க மேல….. மீதி எனக்கு ஹி ஹி என் மேலயேதான்….நீங்க என்ட்ட க்ளோசா, சந்தோஷமா இருக்கிறதாலதானே மேடம்ஜி எனக்கும் கிடைக்க வேண்டியதெல்லாம்  ஒழுங்கா நிறைய கிடைக்குது….” அவன் கண் சிமிட்ட… அதற்கு ஆயிரம் அர்த்தம் இருந்தாலும் அப்போதைய உடனடி அர்த்தத்தில் அவள்

“போடா…” என சிணுங்க….

மையல் புயல் மையம் கொண்டது.

 

(சென்ற வருட க்றிஸ்துமஸ் கொண்டாட்ட த்தின் போது எழுதியது…)

Leave a Reply