பாவை கொலுசுகளின் ஓசை கேட்க இங்கு
தினம் பாலை செவிகள் இரண்டு ஏங்குதே
அவள் பாத சூடு பட்டு மோட்சம் ஏகும்
பாதை மண்ணாகிட மனம் வேண்டுதே
காற்றில் அலையும் அவள் கூந்தல் காட்டில்
தொலைய என் சுவாசம் அது போகுதே
நீரும் உண்டு அதில் நெருப்பும் உண்டு
எனும் அவள் விழிகள் தீண்டல் அது வேண்டுமே.
அன்பிட்டு உன்னில் அடைகலமாக
அருகினில் நெருங்கி வந்தேன்
அனலிட்டு என்னை எரித்துக் கொள் என்றாய்
எங்ஙனம் உன் மொழி மறுப்பேன்
மரண வாசல்களின் கதவின் தாழ் திறந்து
காற்றில் ஏறி நான் கரைகையில்
விரலில் ஏறி பின்பு விழுந்துவிட்ட உன்
மருதோன்றி துகளின் தொடுகையால்
கலைந்த உயிரும் இணைந்தே
இவன் இதயம் உள்ளே திரும்புதே
ஜீவன் கொண்டு எழுந்துவிட்ட
என் சரீரமெங்கும் உன் வாசமே
மரணங்கள் எல்லாம் மரணிக்கும் என்னுள்
மங்கை உன் மீதென் காதல் செயல்
என்னுடன் இணைய விலை எனக் கேட்டால்
நூறுமுறை இறந்தெழுவேன், சுகவிதை சொல்
– நனைகின்றது நதியின் கரை
அரண் சுகவிக்காக