மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 11

மூன்று நாள் கழித்து அன்று ஆரதனா கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். என்னதான் ஜுரம் எல்லாம் சரியாகிவிட்டாலும், அவள் முகத்தைப் பார்க்க அவளுக்கே ஒரு வெறுமை தெரிந்தது.

அதோடு மீண்டுமாய் அந்த மருத்துவமனை வளாகம் மற்றும் டாக்சி ஸ்டாண்டை எல்லாம் இவள் எப்படி எதிர்க் கொள்ளப் போகிறாள் என ஒரு கசந்த திகில் ஒன்றும் உள்ளே இன்னும் வழிந்து கொண்டிருக்கிறதுதான்.

ஆனாலும் முடிந்தவரை இயல்பாய் காட்டிக் கொள்ள முனைந்து கொண்டிருந்தாள்.

இவளையே அவ்வப்போது ஒரு விதமாய் பார்த்துக் கொண்டு நிற்கிறானே இவள் கணவன் அவனுக்காகவாவது இவள் இயல்பாய் இருந்தாக வேண்டும்.

உடுத்தி இருந்த வெள்ளை சல்வார் இன்னுமே அவளை ‘ஓ’ என்பது போல் காட்ட, போய் ஒரு பளீர் நீலமும் பிங்குமான சல்வாரை இவள் மீண்டுமாய் மாற்றிக் கொண்டு வந்த நேரம்,

“கண்டிப்பா போணுமா ராதி?” என இவளிடம் வந்து நின்றான் அவன்.

அக்கறையாக மட்டுமே பட்டது அவனது கேள்வி.

“இல்லப்பா இப்படி ஒரு இன்சிடென்ட் நான் இதுவரை ஃபேஸ் செய்தது இல்லையில்லையா? அதான் ரொம்பவும் டிஸ்டர்ப் ஆகிட்டேன், மத்தபடி இவ்ளவு நாள் யாராவது பேஷண்ட் இறந்துட்டா இப்படியா பிகேவ் செய்துருக்கேன்?, கண்டிப்பா மேனேஜ் செய்துப்பேன்”

அவனை சமாதானப் படுத்த முயன்றாள். உள்ளுக்குள் தன்னையும்தான்.

அவனோ இன்னுமே இவளை ஒரு விதமாய் பார்த்தபடி நின்றிருந்தான்.

தன்னை போல் அவனுமே இன்னும் சமாதானம் ஆகவில்லை எனப் புரிந்தவள்,

எதிரில் நின்றிருப்பவன் கன்னத்தை தன் ஒரு கையால் தாங்கியபடி,

“ஆசைப்பட்ட எல்லோருக்குமாப்பா மெடிகல் சீட் கிடச்சுடுது? உண்மையில் நிறைய பேரால இந்த வேலையை மனசளவில் தாங்க முடியாதுன்னுதான் கடவுள் அவங்களுக்கு சீட் தரலைனு கூட எனக்கு தோணும். அதே நேரம் எனக்கு இதை தந்திருக்கார்னா, இந்த வேலைய செய்ய தேவையான எல்லாத்தையும் அவரே தருவார்னும் நம்பிக்கை இருக்கு” என மீண்டும் அவனை சமாதானப் படுத்த முயன்றாள்.

இந்த முறை இந்த வார்த்தைகள் ஆராதனாவிற்கே தெம்பைக் கொடுக்க, அதில் அவள் முகத்தில் தெளிவும் ஒரு இலகுபாவமும் சின்னப் புன்னகையாய் வந்து ஒட்டிக் கொள்கிறது.

அதே நேரம் அவன் கன்னம் தாங்கி இருந்த இவளது கையை அவன் பற்ற,

இருந்த மனநிலையில், பற்றிய அவன் கையை எடுத்து அவன் உள்ளங்கையில் இதழ் பதித்தாள்.

மெல்ல நினைவு வருகிறது இது அவளின் முதல் முத்தம்.

அவளது வாழ்க்கை முறை சென்று கொண்டிருக்கும் அசுர வேகத்திற்கு இந்த வகை மெல்லிய தருணங்கள் அவர்களுக்குள் வாய்க்காமலே போயிருக்கிறது இது வரைக்கும்.

செய்வதை ஏன் சின்னதாய் செய்ய வேண்டும்?

எம்பி அவன் கன்னத்தில் அழுத்தமாய் இப்போது இவள் இதழ் பதிக்க,

அவ்வளவுதான் அனிச்சையாய் ஒரு கையால் இவளை இடையோடு வளைத்துக் கொண்டான் இவளவன்.

அவனிடம் குறும்பு ஆசை என அனைத்தும் அடர்வு பட்டாலும்,

“என்னை ஐஸ் வைக்கணும்னுலாம் அவசியம் இல்ல, நீ நிம்மதியா இருந்தா போதும்” என வருகிறது அவனது வார்த்தைகள்.

விலுக்கென நிமிர்ந்தாள் இவள்.

இதுவரை அவனை இந்த வகையில் நெருங்காதவள், இப்படி நீ போக வேண்டாம் என அவன் மறுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முத்தமிட்டு வைக்கவும் விஷயம் அவனுக்கு இப்படி தோன்றிவிட்டது போலும் என இவளுக்கு புரிய,

‘இது ஒன்னும் ஐஸ் இல்ல, ஆசை’ என பதிலாய் அவனுக்கு விளக்கம் சொல்ல இவள் யத்தனித்த நொடி,

ஹாலில் கேட்கிறது அபித்தின் விசில் சத்தம். ஏதோ ஒரு பாடலை விசிலடித்தபடி வந்து கொண்டிருந்தான் அவன்.

என்ன ஒரு டைமிங்டா சாமி

இன்று அபித்தை இங்கு சாப்பிட அழைத்திருந்தாள் இவள். அடுத்து பிஜுவும் அபித்தும் இவளுமாக மருத்துவமனைக்கு கிளம்புவதாக ஏற்பாடு.

அப்படியெனில் அபித்தோடு இயல்பாக பேசிக் கொண்டே மருத்துவ வளாகத்திற்குள் சென்றுவிடலாம், தனியாக போனால் மிரட்சியாக இருக்கக் கூடும், அதில் இவள் முழிப்பதை பார்க்கும் பிஜு இன்னுமே நோகக் கூடும் என்பது இவள் எண்ணம்.

ஆக இப்போது அபித் வரவும் தம்பதியரின் தனிப்பட்ட பேச்சுக்கள் முடிந்து போக, மூவருமாக உணவை முடித்துக் கொண்டு இவர்களது காரில் மருத்துவமனைக்கு கிளம்பியாயிற்று.

பிஜு காரை செலுத்த, அவன் அருகில் இவள் அமர்ந்திருக்க, அபித் பின்னால் இருந்து கல கல என இவளை ஏதோ ஓட்டிக் கொண்டு வந்திருந்தான்.

மருத்துவ வளாகம் கண்ணில் படவுமே மீண்டும் வயிற்றை பிசைந்து கொண்டு வந்தது ராதிக்கு. முடிந்து போன சந்திரன் மரணம்தான் இறுதி என்று எதுவும் இருக்கிறதா என்ன? இனியும் நடந்தால் என்ன செய்ய?

முடிந்தவரை தன்னை சமாளித்துக் கொண்டே இவள் வளாகத்தை நெருங்க, முதலில் கண்ணில் பட்டது ஒரு போலீஸ் பூத். அதோடு டாக்சி ஸ்டாண்டை  மருத்துவமனை வளாக வாசல் அருகில் இருந்து சற்று தொலைவாக இடம் மாற்றி இருந்தார்கள்.

அனைத்து ட்ரைவருக்கும் யூனிஃபார்ம் வேறு.

கூடவே முதலில் வரும் பயணி வரிசையில் இருக்கும் முதல் காரில்தான் செல்ல வேண்டும் என்று கட்டாயமாக்கப் பட்டிருந்தது.

அதாவது இனி ட்ரைவர் உள்ளே போய் சவாரி பிடித்தாலும், தன் காருக்கு கூட்டி வர முடியாது. அப்படியெனில் இன்னொருவருக்கு சவாரி கிடைக்க இந்த ட்ரைவர் கொலை வரை ஏன் இறங்கப் போகிறார்?

மேலும் யூனிஃபார்ம் என்பதால் ட்ரைவர்கள் உள்ளே அலைந்தால் எல்லோருக்கும் அவர்களை அடையாளம் தெரியும்.

இப்போது இவர்களது கார் வளாகத்திற்கு உள்ளே சென்று நிற்க, கண்ணில் கிடைக்கிறது சிசிடிவி.

அங்கு மட்டுமல்ல, மருத்துவ மனைக்குள்ளும் பல இடத்தில் சிசிடிவி. எல்லாவற்றையும் கண்காணிக்க போலீஸ்.

அதோடு அன்னியர் நடமாட்டம் நோயாளிகள் அருகில் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரவும் என அறிவிப்புகள் வேறு.

ஒரு புறம் அபித் மறு புறம் தன் கணவன் நடந்து வர, ஒவ்வொன்றையாய் பார்த்துக் கொண்டே வந்த ராதிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்துவிட்டது, இனி இந்த ட்ரைவர்கள் வகை சம்பவம்  சாத்தியம் இல்லை என.

அவளுக்குள் வந்து பாய்ந்த பெரும் நிம்மதியில் கண்ணில் அதுவாக நீர் துளிர்க்கிறது என்றால், அனிச்சையாய் உணர்ந்து இவள் திரும்பிப் பார்த்தால், அபித் இவளையே ஒரு குறுகுறு பார்வை பார்த்தபடி வந்து கொண்டிருந்தான்.

இவள் பார்வை அவன் மீது படவும், “அண்ணாவும், பெரியப்பாவும் (பிஜுவின் அப்பா) அவங்களுக்கு தெரிஞ்ச போலீஸ் ஆஃபீசர்ட்ட பேசி, ப்ரெஷர் கொடுத்து, கூடவே இங்க உள்ள ஸ்டாஃப்ஸ் நம்ம ஸ்டூடண்ட்ஸுன்னு எல்லோரையும் பேச சொல்லி, அதுலதான் இவ்ளவு அரேஞ்ச்மென்ட்ஸும் நடந்துருக்கு, இனி ப்ராப்ளம் இருக்காது”

என ஆறுதல் சொன்னான் அவன். சற்றாய் அதில் பெருமிதமும் காணக் கிடைத்தது. அவனது அண்ணன் விஷயத்தில் அவன் அப்படித்தான்.

அவனுக்கு மட்டும்தானா? இவளுக்கு இல்லையாமா? எப்படி உணர்கிறோம் என்றே உணர முடியாத ஒரு பெரு வெள்ள அன்யோன்யமும், அன்பு செய்யப்படும் உணர்வுமாய் இவள் பிஜுவின் கையைப் பற்றிக் கொள்ள,

இவள் முகம் கசங்கியபடி கனிந்த வகையைக் கண்ட அபித், இவர்கள் பேசிக் கொள்ளட்டும் என் நினைத்து ஒன்றும் சொல்லாமல் விறுவிறு என முன்னால் போய்விட்டான்.

பிஜு இப்போது இவள் முகத்தை என்னவென்பது போல் பார்த்தான்.

இவளிடம் காணப்பட்ட உணர்வு பாவங்களைப் பார்த்தவனிடம் கனிந்த புன்னகை ஒன்று கண்ணுக்கு தெரியாத அளவு இடம் பிடித்திருந்தது.

இது வீடாயிருந்திருந்தால் இப்போது இவள் என்ன செய்திருப்பாள்?

இதற்குள் அவனை இறுக அணைத்தபடி மார்பில் புதைந்திருக்கமாட்டாளாமா?

அவன் கன்னம் கொள்ளாமல் கொடுத்திருக்கவும் செய்வாளே!

‘என்ட்ட ஏன் சொல்லவே இல்லை?’ என சிணுங்கியும் இருப்பாள்தான்.

இவள் எண்ண ஓட்டம் பிஜுவுக்கு அப்படியே புரிந்தது போலும்.

முதல் இரண்டையும் இப்படி ஆட்கள் சுற்றிக் கொண்டிருக்கும் மருத்துவமனையில் வைத்து செய்ய முடியாதே, ஆக மூன்றாவதான கேள்விக்கு மட்டும்

“உன் முன்னாலதான் அப்பாட்ட, லோக்கல் எஸ்பிட்டல்லாம் மூனு நாளும் பேசிட்டு இருந்தேன், நீ கவனிச்ச மாதிரியே இல்ல, சரி எதுக்கு தேவையில்லாத ஸ்ட்ரெய்ன்னு அடுத்து டீடெய்ல்ஸ் சொல்லலை” என்றவன் இப்போது சின்னதாய் அவள் கன்னம் தட்ட,

“எனக்கு உங்கள ஹக் பண்ணணும் போல இருக்கு” என ஒரு பரிதாப குரலில் முனங்கலாய் வருகிறது மனையாளின் பதில்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டு ஒருவன் சும்மாவா நிற்க முடியும்?

ஆனால் நிற்க வேண்டியதாயிற்று.

“ஹலோ அண்ணா,  டி அண்ணி” என் அழைத்தபடி அதே நேரம் அங்கு வந்து சேர்ந்திருந்தாளே ஆரதனாவின்  நட்பு பொற்கொடி.

வகுப்புக்கே ப்ரதர் ஃபிகரான பிஜுவை கல்யாணம் செய்ததால் ஆராதனா இப்ப இவளுக்கும் அண்ணி.

ஆராதனாவுக்கு மட்டும் நட்பாய் இல்லாமல் பிஜுவோடும் நன்றாக வாயாடுவாள் பொற்கொடி.  ஆக அடுத்து சில நிமிடங்கள் மூவருமாக பேசிக் கொண்டு நின்றுவிட்டு விடை பெறும் நிலை ஆரதனாவுக்கும் அவள் கணவனுக்கும்.

அடுத்து பிஜு கிளம்பிச் செல்ல, பொற்கொடியுடன் எதிர்த்திசையில் நடந்தாலும் தன்னவனை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள் ராதி.

கடந்த மூன்று நாட்களில் அவன் கைக்குள்ளேயே இருந்த போது கூட கவனிக்காத அவனது கரிசனைகள், திருமண நாளிலிருந்து இந்த நிமிடம் வரை அவன் இவளை, இவர்களது திருமண வாழ்வை கையாளும் விதம், முதல் இரவிலேயே அவன் கேட்ட விஷயம் என எல்லாம் இப்போதுதான் இவளுக்கு மனதிற்குள் அதன் ஆழ அகலத்துடன் தட்டுப் பட,

ராதிக்கு தன்னவன் மீது இதுவரைக்குமே காதல்தான், விருப்பம்தான், வெகுவாக பிடிக்கும்தான். ஆனால் இன்றைய நிலையில் அவள் அவனுக்குள் அடுத்த நிலைக்கு கடந்து கொண்டிருந்தாள்.

அவன் இவளுக்குப் பார்த்துப் பார்த்து செய்வது போல் எப்படியாவது முயன்று அவனையும் இவள் கவனித்துக் கொள்ள வேண்டும் என பெருகுகிறது பெண்ணுக்குள் ஒரு காதல் சுனை.

ஆராதனா இப்படி தன்னவனை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்வதை கவனித்து வைத்திருந்த ஒரு நபர் அபித்.

இதில் என்றுமில்லா  வகையில் ஆராதனாவைத் தேடி மதியமும் ஒரு முறை வந்தான் பிஜு. அத்தனை அழுது கொண்டல்லவா சென்ற முறை மருத்துவமனையில் இருந்து வந்திருந்தாள், இப்போது எப்படி இருக்கிறாள் என பார்த்து வர வந்திருந்தான் அவன்.

அதோடு காலையில் என்ன சொல்லிவிட்டு எப்படி முழித்துவிட்டு உள்ளே சென்றிருக்கிறாள் அவள்?!

ஏங்கும்தானே இவனுக்கும்!

ஆனால் அவன் வந்த நேரம் ராதி பிரசவம் ஒன்றை கவனித்துக் கொண்டிருந்ததால், பிஜு அவளைக் காணாமலே திரும்ப வேண்டியதாயிற்று.

பிஜு இப்படி வந்து சென்றதும் அபித்துக்குத் தெரிய வந்தது.

அபித்தும் ஹவுஸ் சர்ஜனாகத்தானே இருக்கிறான்? அதோடு ஆராதனா வீடு செல்லும் நேரமும் வேலைக்கு வரும் பொழுதும் இவனுக்கும் தெரியும். ஆக அவனது அண்ணனின் திருமண வாழ்க்கை எந்த அளவில் இருக்கும் என அவனுக்கு தெளிவாகவே புரியும்.

இதில் இன்று தம்பதியர் இருவரும் ஒருவாறு அலைப்புறுவதாகத் தோன்றவும், அடுத்து ஆராதனாவை சந்திக்கும் போது

“பெர்மிஷன் வாங்கிட்டு தாத்தா வீட்டு பங்க்ஷனுக்கு அண்ணா கூட போய்ட்டு வாயேன், தாத்தா வீட்லயும் சந்தோஷப் படுவாங்க, அண்ணாவுக்கும் ரொம்ப நல்லா இருக்கும்” என ஆரதனாவுக்கு ஐடியாக் கொடுத்தான் அபித்.

அதில்தான் ஆரம்பித்தது அத்தனை பிரச்சனையும்.

தொடரும்…

Advertisements

2 comments

Leave a Reply