மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன்… 9

டுத்தென்ன, இன்னுமாய் தொடர்ந்த பேச்சு வார்த்தைகளில் திருமணம் முடிவாகியதன் அடையாளமாக இன்னும் இரு தினத்தில் ‘கை மாறுதல்’ எனும் சிறு விழாவை வைத்துக் கொள்வதென்றும், இவளது அப்பா மற்றும் அவளது விடுமுறை முடியும் முன் வெகு விமரிசையாக நிச்சயதார்த்த விழாவை நடத்திக் கொள்வது என்றும் முடிவானது.

மூன்று வருடத்திற்குப் பின்தான் திருமணம் என்பதில் பெரியவர்கள் யாருக்குமே உடன்பாடு இல்லை என்றாலும் பிஜு மறுத்த விதத்திலும் அவனது ராதி அமைதியாக இருந்த விதத்திலும் நிச்சயத்திற்கு பிறகு திருமண தேதியை முடிவு செய்து கொள்ளலாம் என பேச்சை முடித்தனர் அவர்கள்.

அடுத்து வந்தவர்களுக்கு ஆராதனாவின் அத்தை வீட்டிலியே விருந்து நடைபெற,

அதில் இவளை பிஜுவுக்கு அடுத்து அமர வைத்தனர். அப்பொழுதும் சரி அடுத்தும் சரி ராதி அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஆனால் மற்ற எல்லோரிடமும் சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரித்து, பேச வேண்டிய விதமாய் பேசி இவள் கோபத்தை யாரிடமும் காண்பித்துக் கொள்ளாமல் சமாளித்தாள்.

இதில் பிஜுவாக வந்து இவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் பெருந்தீயாய் இவளுக்குள் வளர்ந்து கொண்டிருக்க… கிளம்பும் வரையுமே அவன் அதை செய்யவில்லை.

அதோடு விடைபெறும் நேரமும் பிஜுவின் அம்மாவெல்லாம் இவளது இரண்டு கையைப் பற்றிக் கொண்டு ஆசை ஆசையாக அத்தனை பேசி விடை பெற, பிஜுவிடமிருந்து ‘கிளம்புறேன் ராதி’ என்ற இரண்டு வார்த்தைகள் கூட வரவில்லை.

ஆம் அவன் இவள் அப்பாவிடம் இணைந்து பேசியபடியே வீட்டின்போர்டிகோவிற்கு போனவன் அப்படியே காரில் ஏறி சென்றுவிட்டான்.

அலையாய் அலைக் கழிந்தது இவள் மனம்.

என்னதான் நடக்குது?!!!

இதில் அனைவரும் விடை பெறவும் இவளது அருகில் நின்றிருந்த இவளது அம்மா இவளை இறுகி அணைத்திருந்தார். அத்தனை ஆனந்தம் அவருக்கு.

ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறாங்க, அதோட பொண்ணுக்கு கல்யாணம் வேற நிச்சயம் ஆகி இருக்கே!

முதல் சில நொடி அம்மாவின் ஆசையை நோகடிக்காமல் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்த ராதி,

அடுத்து அவர் “மாப்ளட்ட அப்படி என்ன ஆரு சொன்ன…? மூனு வருஷம் கழிச்சுதான் மேரேஜ்னு பிடிவாதமா சொல்றார்” என முகத்தில் முறுவல் குறையாமலே அடுத்து கேட்ட போது வெடித்துவிட்டாள்.

“என்ட்ட கூட கேட்காம யார் யார்ட்டயோ என் மேரேஜப் பத்தி பேசி முடிச்சுட்டு, இப்ப வந்து நான் என்ன சொன்னனா?” இது முதல் கேள்வி,

“அதான் மாப்ள மாப்ளன்னு சொல்றீங்கல்ல உங்க தங்க மாப்ள… அவர்ட்டயே போய் என் பொண்ணு அப்படி என்ன சொன்னா? ஏன் இப்படி மூனு வருஷம்னு தெரிச்சு ஓடுறீங்கன்னு கேட்க வேண்டியதுதானே!” இது இரண்டாவது கேள்வி…

குண்டு போடும் போர் விமான பாவனையில் கேள்வியை வீசியவள் தடதடவென மாடி நோக்கி படியேற துவங்கிவிட்டாள்.

சற்றும் இதை எதிர்பாராத இவளது அம்மா மொத்தமாய் ஸ்தம்பிப்பும் பதற்றமுமாய் “ஏ..ஏய் ஆரு… ஆதிக்ட்ட மாப்ளய பிடிச்சுருக்குன்னு சொன்னியாமே…” என கேட்டு முடிக்கும் போது மாடியிலிருந்த தன் அறைக்குள் நுழைந்திருந்தாள் இவள்.

அம்மாவின் குரலில் இருந்த எந்த தவிப்பும் துளி கூட இல்லாமல் “இப்பவும் அவ என்ன மாப்ளய பிடிக்கலைனா சொல்றா…?” என மகிழ்ச்சியும், ஏன் சின்னதாய் கிண்டலும் தொனிக்கும் குரலில் இப்போது அப்பா கூற,

அதுவும் சற்றாய் காதில் விழுகிறது இவளுக்கு.

அப்போதுதான் ராதிக்கு தன் கேள்வியின் அர்த்தமே மெல்லமாய் புரிகிறது. மூன்று வருடம் கழித்துதான் திருமணம் என்பது இவளுக்கு பிடிக்கவில்லை என இவளது அப்பாவுக்கு புரிய இது போதாதாமா?

ஒரு கணம் ஐயோ என்றிருக்கிறது இவளுக்கு. கிண்டல் செய்ய மட்டுமா செய்வாங்க… எப்படியும் இதை சொல்லி கல்யாணத்தை சீக்கிரம் நடத்த வேற பார்ப்பாங்களே…! அவனே மூனு வருஷம் கழிச்சுன்னு சொல்லிட்டு கொஞ்சம் கூட கண்டுக்காம போன பிறகு… இவளுக்கு இப்பவே மேரேஜ் செய்ய இஷ்டம்னு சொல்லி கல்யாணத்தை ப்ரீபோன் செய்றதாமா? நோஓஓஓஓ என்றது இவளது தன்மானம்… கூடவே ஈகோவும்.

ஆனால் அடுத்த நொடியே அந்த எண்ணத்தை அப்படியே விட்டுவிட்டு, தன் முக்கிய கோபத்துக்கு வந்தாள்.

‘எது என்னதா இருக்கட்டும், இவ அப்பா இவட்ட கேட்காம கல்யாணம் பேசுனது தப்புதானே…?! அதுவும் ஒரு மாசத்திலயாம்!!’ என மனம் அங்கேயே கனன்றது.

‘அதைப் பத்தி முதல்ல அப்பாவும் அம்மாவும் இவட்ட சமரசம் பேச வரட்டும்… மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்’ என காத்திருந்தாள்.

எப்படியும் இவள் பின்னாலயே மாடியேறி ஓரிரு நிமிடத்திற்குள் அவர்கள் இருவரும் இவளது அறைக்கு வந்துவிடுவார்கள் என இவள் எதிர்பார்த்திருக்க… அப்படி ஒன்று நடைபெறவே இல்லை.

கால் மணி நேரம் போல் முட்டு கூட்டி அமர்ந்து காத்திருந்தவள்… ‘வீட்டுக்கு யாரும் கெஸ்ட் வந்துட்டாங்களோ…? ஒரு வேள அந்த பஜ்ஜி பையனே இவட்ட சாரி கேட்க திரும்பி வந்துட்டானோ? அவனை பிடிச்சு வச்சு அம்மாவும் அப்பாவும் பேசிட்டு இருக்காங்களோ?’ எனவெல்லாம் வந்த நப்பாசையிலும்… அந்த நினைவில் அவளை மீறி குறைந்து போன கோபத்திலும்… அவள் அறையைவிட்டு வெளியே எட்டிப் பார்க்க,

வீட்டிலோ இவளது அத்தையை தவிர யாருமே இல்லை.

நாளை மறுநாள் நடை பெற இருக்கும் விழாவுக்கு இவளுக்கு தேவையான புடவையும் நகையும் வாங்கவென கிளம்பிப் போயிருந்தனர் இவளது பெற்றோர். அந்த தகவலைக் கூட அத்தைதான் இவளுக்கு சொன்னது.

அதிர்ந்து போனாள் ஆராதனா. கோபப்படுவதா அல்லது பயப்படுவதா என்றே தெரியாத நிலை அவளுக்கு. ட்ரெஸ் செலக்க்ஷனில் எப்போதுமே இவளுக்கு ஈடுபாடு கிடையாது என்பதால் அவளது நகை உடை தேர்வெல்லாம் பொதுவாக அம்மா செய்வதுதான்.

அதுவல்ல இப்போது விஷயம். இவள் இங்கு எப்படி எனக்கு திருமணம் நிச்சயம் செய்வீர்கள் என கோபப்பட்டுக் கொண்டிருக்க… எந்த விளக்கமும் சொல்லாமல் அவர்கள் நிச்சயவிழா ஏற்பாட்டை கவனிக்க சென்றால் என்ன அர்த்தம்?

அத்தனை தூரம், அதுவும் திருமணம் போன்ற மிக முக்கிய விஷயத்தில், இவளது உணர்வுகளை அலட்சியப்படுத்தும் மனம் அவளது பெற்றோருக்கு கிடையவே கிடையாது. பின் ஏன் இப்படி?

ஏதோ விஷயத்தை இவளிடம் எப்படி சொல்ல என தடுமாறுகிறார்களோ என்று பரிதவிப்பாய் தோன்றுகிறது இவளுக்கு. பயந்தாள். அப்படி என்ன விஷயமாக இருக்கும்? எதுவாக இருந்தாலும் நிச்சயம் சிறியதாக இருக்காது.

இப்போது மனம் பிஜு மீதிருந்த கோபத்தையெல்லாம் தாண்டி சட்டென அவனைத் தேடுகிறது.

“அவனுக்கு விஷயம் தெரிஞ்சிருக்குமோ? பேசிப் பார்க்கலாமா?’ என்றெல்லாம் ஒரு பக்கம் பசித்துப் பாய்கிறது என்றால்… அடுத்தபுறம் இவள் கோபத்தில் இருக்கிறாள் எனத் தெரிந்தும் இத்தனை நேரம் வரை இவளை மொபைலில் கூட தொடர்பு கொள்ள முயலாத அவனை எந்த அடிப்படையில் அழைக்க என்றும் இறுகியது.

தன் அறையில் படுத்து தலைவலி வரும் வரை யோசித்தவள்… ஆதிக்கிற்கு தெரியாமல் எந்த விஷயமும் இராது என்ற உறுதியில் தன் அண்ணனைப் பார்த்துவர கிளம்பிவிட்டாள். ‘கண்டிப்பா இவளோட நிலைய புரிஞ்சுகிட்டு எல்லாத்தையும் அவன் சொல்லவும் செய்வான்’ என்ற நம்பிக்கை.

அன்றிலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்ததால்தான் ஆதிக் இன்றைய நிகழ்ச்சிக்கு வரவில்லை என அறிந்திருந்ததால், இந்நேரம் அவன் அன்றிலின் அம்மா வீட்டிற்கு திரும்பி இருப்பான் என்ற புரிதலில் நேராக கிளம்பி அங்குதான் சென்றாள்.

அந்த வீட்டுக்கு அடுத்த வீடுதான் பிஜுவினுடையது என்ற நினைவு ஏக்கத்தையும் எரிச்சலையும் இவளுக்குள் ஒருங்கே கிளப்ப… இவள் தன் அண்ணியின் பிறந்த வீட்டிற்குள் நுழைந்தால்…

இவளுக்கும் முன்பாக அங்கே சென்று உட்கார்ந்திருந்தது இவளது பெற்றோர். எல்லோரும் இவளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

போர்டிகோவிற்கு அடுத்த வெராந்தவில் இவள் செருப்புகளை களைந்து கொண்டிருந்த நேரமே இவளது காதில் விழுகிறது ஆதிக்கின் பேச்சு.

“அதில்ல மாமா…  நீங்க இப்ப நான் போற போஸ்டிங் ரொம்ப ரிஸ்க்… திரும்பி வந்தாதான் நிஜம்… அதனாலதான் இப்பவே உனக்கு கல்யாண ஏற்பாடு செய்றேன்னு சொன்னா ஆராக்கு அடுத்து எப்படி நிம்மதியா இருக்க முடியும்? அதுவும் நீங்க திரும்பி வர ரெண்டு வருஷம் ஆகும்ன்றீங்க… அது வரைக்கும் நீங்களும் அத்தையும் யார் கூடவும் தொடர்பிலயும் இருக்க முடியாதுன்றீங்க… அப்படின்னா ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு என்னாச்சோன்னு ஆரா பயந்துகிட்டே இருப்பால்ல… அதான் அத்தை அவட்ட இதெல்லாம் சொல்ல வேண்டாம்னு சொல்றாங்க…” இவளது அண்ணன் ஆதிக் சொல்ல சொல்ல விஷயம் முழுவதுமே புரிந்து போனது ஆராதனாவுக்கு.

“அதுக்காக ஆராட்ட விஷயத்த சொல்லாமலேயா கல்யாணம் செய்ய முடியும்? அவ கேள்வி கேட்பாதானே? அவள கம்பல் செய்றது போல இருக்காதா? மெடிசின் படிக்கிற பொண்ணு டெத் இஃஸ் பார்ட் ஆஃப் லைஃப்னு யோசிக்கிற அளவு தைரியமா இருக்க வேண்டாமா?” இவளது அப்பா இப்போது பதில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

அதற்கு அன்றிலோ “அது சரிதான் சித்தப்பா… ஆனா விஷயத்தை நீங்க அப்படியே சொல்லாதீங்க… இந்த போஸ்டிங்ல டூ இயர்ஸ் உன்ட்ட பேச முடியாதுமா… அப்படி நாங்க அங்க இருக்கப்ப நீ கீழ விழுந்த மாதிரி கனவு வந்தா கூட எங்களுக்கு மனசு பதறிடும்… இதே இது உனக்கு மேரேஜ் ஆகிட்டுன்னா, மாப்ள இருக்கார் பார்த்துப்பார்னு நிம்மதியா இருப்போமேன்னு யோசிச்சோம்… பிஜு நம்ம ஆதிக்குக்கு நல்லா தெரிஞ்ச பையன்… ரொம்ப பாசமான குணம்… நெருங்குன சொந்தமும் கூட… ஒன்னுக்குள்ள ஒன்னுன்றப்பா எல்லோருமே ரொம்ப நல்லா பார்த்துப்பாங்கன்னு தோணிச்சு. உனக்கும் பிடிச்சிருக்குன்ற ஒரே காரணத்தாலதான் தைரியமா கல்யாணம் பேசினோம்… பிடிக்கலைனா சொல்லு… இப்படியே இந்த கல்யாணப் பேச்ச ட்ராப் பண்ணிடுவோம்னு விஷயத்த இப்படி ப்ரெசென்ட் செய்ங்க… இதுவும் உண்மைதானே…” என அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுநிலமையான வழி சொல்ல…

ஆராதனா வந்த சுவடே தெரியாமல் கடகடவென திரும்பி வந்துவிட்டாள். விஷயம் இவளுக்கு தெரியாது என நினைப்பது அம்மாவுக்கு நிம்மதி தரும் என்றால்… தனக்கு அது தெரிந்துவிட்டதை காட்டிக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்திருந்தாள்.

ஒரு மாதிரி அதிர்ந்து இருந்தாள் அவள். அவளது திருமணம் பற்றிய பெற்றோரின் மனநிலை இப்போது அவளுக்கு தவறாக தெரியவில்லை. அதோடு அவர்கள் இவளிடம் சொல்லத் தயங்கும் காரணமும் முழுக்கவுமே புரிகின்றது.

எத்தனை அளவு அவளது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆபத்து என்றால் இப்படி ஒரு  அவசர திருமண முடிவுக்கு வந்திருப்பார்கள் என அவளுக்கு நன்றாகவே தெரியும். எதற்கும் அத்தனை எளிதாய் அசைந்து கொடுக்காத அவளது அப்பாவே இப்படி யோசிப்பதென்றால் இந்த முறை விடை பெற்று செல்லும் அவளது அப்பாவை அவள் மீண்டுமாய் பார்ப்பது அரிதிலும் அரிதாகத்தான் இருக்க முடியும்.

சற்று நேரம் விஷயத்தின் வீரியத்தில் செய்கையற்று அமர்ந்திருந்த அவள், பின் ஒருவாறு சுதாரிக்கவும் செய்துவிட்டாள். கடவுளுக்குட்பட்ட நியாயமான வாழ்க்கை வாழ்கிறவர்களுக்கு  தானாக தேடிக்கொள்ளாத மரணம் ஆதாயம் என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது… அப்படியானால் அது வந்துவிடுமோ என நினைத்து அழ என்ன இருக்கிறது என்ற திடநிலைக்கு சீக்கிரமே திரும்பிவிட்டாள்.

ஆனாலும் மனதிற்குள் ஒரு பெத்த பெரும் அழுத்தம். அத்தை வீட்டிலிருந்த தன் அறையில் சுருண்டு கிடந்தவளுக்கு மீண்டுமாய் விழிப்பு தட்டியதே கடும் வயிற்று வலியில்தான். மாதம் மாதம் வரும் தொல்லையான ஆசீர்வாதம் வந்திருந்தது. இப்போது இருந்த மன அழுத்தம் காரணமாகவோ என்னவோ சில பல நாட்கள் முன்பே வந்து நிற்கிறது. நாள் தவறி வருவதால் அதற்கேற்ப வலியும் கொடும் தீவிரமாக இருக்கிறது.

எல்லா மாதங்களும் இது இவளுக்கு வலிக்க வலிக்கத்தான் வரும் என்று இல்லை…  ஆனால் வலிக்க வந்த மாதங்களில் இவளை துவம்சம் செய்துவிடும். அதன் முதல்கட்ட வேலையாக குடல் அறுந்து வாயில் வருவது போல் உணர்வு… இதோ பதறி அடித்து  குளியலறையை நோக்கி ஓடினாள் இவள்.

மதியம் சாப்பிட்டதெல்லாம் வாய் வழியாய் வெளி நடப்பு செய்யத் துவங்க… அதே நேரம் குனிந்திருந்த இவளது நெற்றியை பின் இருந்து பிடிக்கிறது ஒரு கரம். காருண்ய ஸ்பரிசம். அரவணைப்பு சுரபி.

மொத்த உலகிலும் தன்னந்தனியாய் நிற்பது போல் இருக்கும் இவளது மன நிலைக்கும், சாய்ந்து வரும் அந்த சன்ன இருளுக்கும், இந்த உபாதை வலி உடல் நிலைக்கும் அப்படியே திரும்பி அந்த கரத்திற்கான தோளில் புதைந்து சுருளத் தள்ளியது அவள் மனம்.

“அம்மா” என்றபடி திரும்பினாள் இவள். ஆம் தன் அம்மா வந்திருப்பதாகத்தான் நினைத்தாள் பெண்.  ஆனால் கனிவும் தன்மையுமாய் நின்றிருந்த அவன் இப்போது இவள் பார்வைக்கு கிடைக்கிறான். பிஜு.

இவன் எங்கே இங்கு வந்தான்? என எகிற மட்டுமல்ல ஏதுவாக நினைக்க கூட முடியாமல்  சின்னதாய் நடுங்கிக் கொண்டிருந்த இவள் மென் தேகம் உந்த… கட்டாயமாய் தன்னை கட்டி இழுத்து கட்டிலுக்கு செல்லத்தான் முயன்றாள் ராதி. வார்த்தை என்று எதுவும் பேசிவிடவில்லை அவள்.

அதற்காக வைத்த முதல் எட்டிலேயே அவளது கால் சற்றாய் வழுக்க… அனிச்சை செயலாய் குனிந்தவள் கண்ணில் படுகிறது அவளது உடையில் பட்டிருந்த உதிரத் தடங்கள்.

அவள் சறுக்க தொடங்கவும் “ஹேய் பார்த்து” என்றபடி அவனும்தானே இவளைப் பிடிக்க முயன்றான். அதில் அவள் பார்வை சென்ற இடத்துக்கு அவனது பார்வையும் சென்றிருக்கும்தானே… இவள் கண்டதை அவனும் கண்டிருப்பான்தானே!

அவள் ஒரு மருத்துவ மாணவி, அதோடு இது ஒரு இயல்பான இயற்கையான விஷயம் என பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சொல்லி வளர்க்க வேண்டும் என்ற புரிதல் உள்ளவள் என்றாலும் இப்படி நேருக்கு நேராய் ஒரு ஆணின் பார்வைக்கு உட்படுவது எப்படி இருக்கிறதாம்?

அவள் வசமில்லாத உடலாலும் மனதாலும் நிகழ்ந்துவிட்டதை முழுதாய் உள்வாங்கி அசூசையை அதன் முழு அளவில் அனுபவிக்கும் முன்னாக கூட

“அக்காவுக்கு முன்னல்லாம் மாசம் மாசம் ஃபீவர் வந்துடும்… கூடவே வாமிட்டும் ஆகும்… இந்த டைம்ல அக்கா ரொம்ப வீக்கா இருப்பா… நாமதான் நல்லா பார்த்துக்கனும்,  ஹார்மோன்ஸ்னால சும்மா சும்மா கூட அவளுக்கு எரிச்சல் ஆகும்… நீதான் அட்ஜஸ்ட் செய்து போகனும்னு அம்மா சின்னதில் இருந்தே சொல்லி கொடுத்ருக்காங்க” என வெகு வெகு இயல்பாய் வந்தன வார்த்தைகள் அவனிடமிருந்து.

அவள் மனம் உணர்ந்தவனாய், இதற்காக அவள் கூனிக் குறுக கூடாதென, ‘எனக்கும் இது இயற்கை என்று தெரியும், அதோடு அதன் வேதனையும் புரியும், என் சகோதரியை பார்க்கும் விகாரமற்ற மனப் பான்மையில் மட்டுமே இதைக் காண்கிறேன் என இப்படியாய் உணர்த்துகிறான் என்பது வரை அவளிருக்கும் இந்த நிலையிலும் புரிகின்றது ராதிக்கு.

ஏற்கனவே வெறுமையின் வியாப்பிப்பினால், தனிமையின் தாராளத்தால் இரும்புக் குண்டாய் கனத்திருந்த அவளது மனதில் இது ஏக ஏராளமாய் செய்விக்கிறது ஏதோ ஒரு வேதியல் வினை. திருமணத்தில் அவன் வெறுமையாய் வரவில்லை.. அவனது அக்கா, அம்மா ஏன் அப்பா, தாத்தா பாட்டி உறவுகள் நட்புகள் என எத்தனையோ பேர் அவனுக்குள் உண்டாக்கி இருக்கும் ஒரு உலகத்தை கொண்டு வருகிறான் என்று ஒரு உணர்வு நிலை. உறவுகளின் உலகம்!

அவளை அப்படியே கைப் பற்றி அருகிலிருந்த பாத் டப் விளிம்புச் சுவரில் அமர வைத்த அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அவள்.

அவள் இலகுவாக உணர வேண்டும் என்பதற்காகவாவது அப்படியே அவன் வெளியே போய்விடுவான் என்ற அவளது நம்பிக்கையை நாசமாக்கி, அவசர அவசரமாய் சென்று அவளுக்கு மாற்று உடைகள் எடுத்து வந்தான் அவன்.

“சமாளிச்சுப்பல்ல…?” அவனது அடுத்த விசாரிப்புக்கு எதுவுமற்ற பார்வையோடு சம்மதமாய் தலையசைத்து வைத்தாள் அவள்.

“இல்லனா அத்தைய வரச் சொல்லவா?” மறுபடியும் அவன் கேட்க, அவன் விழிகளில் கொழுவி நின்ற தன் கண்களை மறுப்பாய் இவள் அசைக்க, குளியலறை கதவை சாத்தி வைத்துவிட்டு சென்றான் அவன்.

சென்றவன் அவள் படுத்திருந்த மெத்தையின் விரிப்பை எடுத்துவிட்டு வாட்ரோபிலிருந்து தேடி எடுத்து மற்றுமொரு விரிப்பை விரிப்பது, இன்னுமே அசையாமல் அமர்ந்திருந்த அவளுக்கு… சின்னதாய் திறந்து நின்ற கதவின் வழியாய் காணக் கிடைக்கிறது.

அதிலும் கரை பட்டிருக்குமாயிருக்கும். மாற்றி வைக்கிறான் எனப் புரிகிறது.

அவளது அம்மா கூட இந்த காரியங்களை இவளுக்குச் செய்தால் தர்மசங்கடப் படுவாள் இவள். அதை சற்றும் சங்கோஜமின்றி, வெறுப்பு அருவருப்பு எதுவுமின்றி, பாலுணர்வு சார்ந்த பார்வையோ கிண்டலோ ஏதுமின்றி, ஏன் காதலைக் கூட காட்டாமல், தனக்கான வேலையைச் செய்வது போல் அத்தனை சாதாரணமாய் அவன்  செய்து கொண்டு நின்ற விதத்தில்

அடித்துப் புரள்கிறது அவள் அடிவயிற்றில் ஒரு அன்யோன்ய அருவி.

எழுந்து சென்று கதவைத் தாழிட்டவள், இதயத்தில் அவனுக்கும் அவளுக்கும் இடையிலிருந்த கோட்டினை எப்போதோ தொலைத்திருந்தாள்.

ஈரம் சொட்டும் முடியோடு அடுத்து இவள் வெளியே செல்லும் போது இளநியும் சின்ன கவருமாக அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான் அவன்.

“இளநி, யோகர்ட் ரெண்டும் இருக்கு… தலை முடி நல்லா காஞ்ச பிறகு ரெண்டுல எதாவது ஒன்னு சாப்டு, உனக்கு வேற எது வேணும்னாலும் சொல்லு” சொல்லியபடி கையிலிருந்தவைகளை கொண்டு வந்து மேஜை மீது வைத்தான்.

பதிலேதும் சொல்லாமல் இப்போதும் அவனையே பார்த்திருந்தாள் இவள்.

“அப்போ பார்க்காமலே கொன்னதுக்கு இப்ப பார்த்தே பரிகாரம் செய்துடலாம்னு நினச்சுட்ட போல” சிறு சிரிப்புடன் வந்த பிஜுவின் அந்த வார்த்தைகளை ஒரு வகையில் இந்நேரம் இவள் எதிர்பார்த்தாள் என்றே சொல்லலாம். இவளிடம் தனிமையில் விஷயத்தை பேச வந்திருக்கிறான் என புரிகிறதுதானே.

“மூனு வருஷம் கழிச்சு வர வேண்டியவங்க இப்ப ஏன் வந்தீங்க?” எரிச்சலுறாமல்தான் கேட்பதாக எண்ணினாள்.

“அதென்ன என் மேரேஜ் டேட்ட என்ட்ட கேட்காம நீங்க மட்டுமா முடிவு செய்துப்பீங்க?” சிடுசிடுக்காமல்தான் கேட்பதாக நினைத்தாள்.

இப்போது இவளை ஒரு பார்வை பார்த்த அவனோ… ட்ரெசிங் டேபிளைப் போய் குடைந்து ஹேர் ட்ரெயரை எடுத்து வந்து ப்ளக்கில் மாட்டினான்.

“நான் பாட்டுக்கு கேட்டுகிட்டு இருக்கேன்… நீங்க பாட்டுக்கு…” இன்னுமாய் இப்போது குமுற தொடங்கிய இவள்… இன்னுமே முகத்தின் இலகுத்தன்மை மாறாமல் அவன் இவளையே பார்த்துக் கொண்டு நிற்பதை காணவும்… அவனது அந்த அன்புசெறி அசராப் பார்வையில் அதற்கு மேல் எகிறக் கூட முடியாமல் பேச்சை நிறுத்தினாள்.

‘இப்படி பார்த்தா என்ன அர்த்தமாம்? டேய் உனக்கு ஐ லவ் யூதான் சொல்லத் தெரியாதுன்னா சண்டை போடவும் தெரியல…’ அவளது கோப மேகத்தின் மீது சந்தோஷ வர்ணம் படரத் துவங்குகிறதே.

“நீங்கதான் மேடம் நேத்து நைட் பேசுறப்ப பி ஜி முடிக்கிற வரைக்கும் மேரேஜ்னு ஒன்னு லைஃப்ல கிடையாதுன்னு சொன்னீங்க” அவன் சொல்ல…

அவன் சொன்ன வகையிலேயே அது உண்மையாய் மட்டும்தான் இருக்க முடியும் என புரிந்ததால் ஒரு பே முழியோடு நேற்றைய அவனுடனான பேச்சை ரீவைன்ட் செய்ய முயன்றாள் இவள்.

நேற்று பிஜு இவளிடம் பழகத் தொடங்கும்வரை இவளது எண்ணம் அப்படித்தானே இருந்தது. இருந்த உற்சாகத்தில், கலகலவென எதை எதையோ பேசிக் கொண்டிருந்ததில் ‘முன்னால அப்படி நினச்சேன்… இப்ப அப்படி எதுவும் யோசிக்கல’ என்றெல்லாம் சொல்லாமல், இதை எதோ ஒரு பேச்சின் இடையில் குறிப்பிட்டது நியாபகம் வருகிறது.

இதை வைத்து இவள் மன விருப்பம் இது என நினைத்து, யாரும் இவளை அதற்கு எதிராகக் கட்டாயப் படுத்தகூடாதென, எல்லோர் முன்பாக அப்படி சொல்லி வைத்திருக்கிறான் என இப்போது அவன் எதுவும் சொல்லாமலே புரிகின்றது.

இவளுக்காகத்தான் பேசினானாமா?!!!

சற்றே கீழாய் குனிந்து பரிதாபமாய் அவள் முழித்த முழியிலேயே அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டதென அவனுக்கும் தெரிகிறதுதானே.

“எனக்கு இந்த இயர் உன் கோர்ஸ் முடியவும் நம்ம மேரேஜ் இருக்கனும்ன்றதுதான் ஒரிஜினல் தாட்” சொல்லியபடி இப்போது இவளருகில் வந்தவன்,

“ஆனா எனக்கு இப்ப ஒன்னு தோணுது… எப்படியும் உனக்கு படிப்பு முடிய குறஞ்சது மூனு வருஷம் இருக்கு.. அதில் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு மேரேஜ் செய்துக்கிறதுக்கும், இப்ப மேரேஜ் செய்துக்கிறதுக்கும் என்ன வகையில் வித்யாசமாகிடப் போகுது?” என்றான்.

“மேரேஜோட எந்தப் பொறுப்பையும் இப்ப நீ எடுத்துக்க வேண்டாம்… ஜஸ்ட் இப்ப ஹாஸ்டல்ல இருந்து காலேஜ் போய்ட்டு வர்ற மாதிரி… இனி நம்ம ஃப்ளாட்ல இருந்து போய்ட்டு வா… ஹவ்ஸ் சர்ஜன் பீரியட்ல சாப்ட தூங்க கூட டைம் கிடைக்காதுன்னு அபித் சொன்னான்… நமக்குன்னு எந்த டைமும் கிடைக்கலன்னா கூட உன்னை பிக்கப் அன்ட் ட்ராப் செய்ற டைமாவது நாம கூட இருப்பமே… எல்லாத்துக்கும் மேல  உனக்கோ எனக்கோ எதோ சின்ன ப்ரச்சனை, இன்னைக்குப் போல ஹெல்த் இஷ்யூஸ்னா பக்கத்துல இருந்து பார்த்துக்கிறதுக்காகவாவது மேரேஜ் வேணும்தானே… இல்லன்னா நீ ஹாஸ்டல்ல இருப்ப… நான் உள்ள வந்து பார்க்க கூட முடியாது…” என தொடர்ந்தவனின் கண் அதில் குமிழ்ந்தும் எழுந்தும் வரும் பாச வகை உணர்வுகள், ஆவல், உடனிருக்க விரும்பும் ஒரு தாகம், தவிப்பு என எல்லாவற்றிலும் இடைவிடாது பயணித்துக் கொண்டிருந்தவளிடம்

“இப்பவே மேரேஜ் செய்துப்பமா ராதிமா?” எனக் கேட்டான் அவன்.

அவளது பெற்றோரை நினைத்து அழுந்திப் போய் கிடக்கும் மனநிலைக்கும், இவனிடம் உணரும் அதீத அன்யோன்யத்திற்கும், அவனோடு எப்போதும் இருக்கப் போவதாக எழும் சுகோன்னத நினைவுக்கும்..அவன் கேள்வியே போல் ஒரு வருஷத்தில் என்ன வித்யாசம் வந்துடப் போகுது என இவளுக்கும் தோன்றியதற்கும்… அவன் இப்போது மனக் கண்ணில் விரித்த இவர்களது எதிர்காலம் பற்றிய காட்சியின் சுகந்தத்திற்கும், திருமண திக்கிலேயே இவள் மனமும் சாய…

ஆராதனா முழு மனதாகவே சம்மதம் சொல்லி இருந்தாள்.

அடுத்தென்ன இவளது அப்பாவின் விடுமுறை முடியும்முன் திருமணம் என மூன்றாம் வாரத்தில் ஒரு நாள் வெகு விமரிசையாய் முடிந்திருந்தது இவர்களது மணவிழா.

அன்றைய இரவில் பிஜுவின் கடற்கரை வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கின்றனர் தம்பதியர் இருவரும்.

வீசி அடித்த காற்று ரிஷப்செனுக்கென இவள் அணிந்திருந்த மென் ஆரஞ்சு வர்ண புடவையை தன்னோடு கொண்டு சென்றுவிடுவேன் என விடாது விளையாடிக் கொண்டிருக்க… அதை தடுக்க இருகைகளாலும் புடவையை சமாளிக்க முயன்றபடி,

கண்ணுக்கெட்டும் தூரம் வரை தெரியும் கரு நிற கடலை பார்த்தபடி இவள். இவளுக்கு பக்கவாட்டில் அவன்.

ஒரு கணம் அவன் தோள் வரை பார்வையை செலுத்தியவள் மீண்டும் கடலிலே சென்று தன் பார்வையை நிறுத்த…

இப்போது இவளுக்கு பின்னால் வந்து நின்றவன்… புடவையின் மென்மை இவள் இடைப் பகுதியில் புரியும் வண்ணம் அதன் மீது கை வைத்து வளைத்துக் கொண்டான்.

புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவன் மனைவி.

தொடரும்..

11 comments

  1. ennammaa… words use pandreenga.. sweety sis.. padikka romba inimiayaa irukku.. oru vazhiyaa… Bajji kooda marriage mudinjuttu.. 🙂 🙂 What next ?

  2. Nice ud! பிஜு தன்னவளின் மாதந்திர சுழற்சி போது எற்பாடு இன்னலை தாங்குவது இதம்.

  3. Hi mam

    என்னவொரு நல்ல வளர்ப்பு,பிஜுவின் புரிந்துணர்வு நிறைய ஆண்களிடம் இல்லை,ஒருவர் மற்றொருவரின் நிலையில் யோசிக்கும்போது அவர்கள் நடு நிலையாகவும் மற்றவரை புரிந்துகொள்வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் யோசிப்பார்கள்,அந்தக்குணம் பிஜுவிடம் இருக்கின்றது, கண்டிப்பாக இவர்களது திருமணவாழ்க்கை சிறப்பாகத்தான் இருக்கும்.

    நன்றி

  4. அவளது கோப மேகத்தின் மீது சந்தோஷ வர்ணம் படரத் துவங்குகிறதே.

    nice lines.

Leave a Reply