மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 14

ந்தக் குறிப்பிட்ட நாளுக்குப் பின் ஆராதனா முடிந்த வரை முயற்சி செய்து சற்று நேரத்தையாவது பிஜுவுக்கென செலவழிப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள். இத்தனை பிணியாளுகளுக்காக தூக்கத்தை விட்டுக் கொடுப்பவள், தன்னவனுக்காகவும் கொஞ்சம் விட்டுக் கொடுத்தாள்.

அவன் பிக் அப் செய்ய வரும் போதே தூங்கி வழியாமல், அவனுடன் அரட்டை அடித்துக் கொண்டுதான் வருவாள். வீட்டிலும் வந்து சாப்பிட்டு முடிக்கும் வரையும் அவனை சுத்துவதே இவளது பிரதான வேலையாக இருக்கும்.

ஆனாலும் அதற்கு அடுத்த நிலைக்கு உறவை கொண்டு செல்லும் எதைப் பற்றியும் அவனிடம் அவள் கோடிட்டுக் கூட காட்டவில்லை.

காரணம் இதுதான்.

கோபம், பயம், சந்தோஷம், மனச் சோர்வு போன்ற உணர்வுகள் முதல் மனித உடலின் வளர்ச்சி, இயக்கம் என பல விஷயங்கள் உடல் சுரக்கும் ஹார்மோன்கள் எனப்படும் சிற்றளவான வேதியல் பொருட்களால் கட்டுப் படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு ஹார்மோனின் பணியும் ஒன்றோடு ஒன்று ஒன்று தொடர்புடையது என்பதால், ஒன்றில் சிறிதளவு மாற்றம் வருவதும் உடலின் பல விஷயங்களை பாதிக்கும். இதில் பெண்ணுடலுக்கு கரு சுமக்கும் அதிகப்படி பணியும் இருப்பதால், இந்த ஹார்மோன்களின் பங்கு பெண்ணுடலில் வெகுவாகவே அதிகம்.

ஆனால் கருத்தடைக்கென மனித சமூகம் பயன்படுத்தும் பலவும் பெண்ணின் இந்த ஹார்மோன் இயக்கத்தில் தலையிட்டு கரு உண்டாவதை தடுப்பதாகவே அமைந்துள்ளது. அதன் பக்க விளைவுகள் ஏராளம்.

வெடித்து வரும் மக்கள்தொகை உள்ள தேசம் என்பதால் இத்தகைய கருத்தடை காரியங்கள் பெண் உடலுக்கு ஏற்படுத்தும்  தீய விளைவுகளை யாரும் பேசுவதில்லை போலும்.

அதோடு சில மாதங்கள் அல்லது ஓரிரு வருடங்கள் கருத்தரிப்பை தள்ளிப் போடும் என கொடுக்கப்படும் பல கருத்தடை ஊசி மருந்துகள் பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட வருடமாய் தம்பதியரை கருத்தரிக்காமல் செய்து அவர்களின் வாழ்வை நரகமாக்கி விடுவதும் உண்டு.

இதையும் தம்பதியரிடம் முன்பே சொல்லும் வழக்கமும் இங்கு இல்லை.

இது இப்படியென்றால் அடுத்த வகை உடலுக்குள் பொருத்திக் கொள்ளும் சாதனங்கள். இது வெளிப்படையாய் உண்டு செய்யும் முதுகு வலி, இயல்பற்ற உதிரப் போக்கு, முறையற்ற எடைக் கூடுதல், அதனால் பாதிக்கப்படும் உடலுறுப்புகள் பற்றி கூட குறிப்பிடாமல்தான், ‘அதெல்லாம் ஒன்னும் செய்யாது’ என சொல்லி மட்டுமே பெண்களுக்கு இது பொருத்தப்படுகிறது.

இதில் இதன் மற்ற பின்விளைவுகளைப் பற்றி யார் கண்டு கொள்கிறார்கள்?

பிரசவம் என்பது மறு பிறப்பு என்றால் கருத்தடை சாதனங்கள் ஒரு வகையில் பெண்ணை நிரந்தர நோயாளி ஆக்கும் காரியங்களை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன.

ஆராதனாவுக்கோ இதன் செயல்பாடுகள் உடலுக்குள் எப்படி இருக்கும் என ஓரளவு தெரியுமாதலால், அவளுக்கு இதில் சென்று மாட்டிக் கொள்ள துளியும் விருப்பம் இல்லை.

ஆணுறை என்பது கருத்தடை விஷயத்தில் 20% தோல்வி அடையும் வாய்ப்புள்ள ஒன்றாகும். அதாவது அதை பயன் படுத்தியும் ஐந்தில் ஒரு பங்கு வாய்ப்பு கருத்தரிக்க உண்டு.

மாதவிடாய் துவங்கியதன் பத்தாம் நாள் முதல் இருபதாவது நாள் வரைதான் கருத்தரிப்பு காலம் என்பதால், அதைத் தவிர்த்து பிற காலங்களில் கூடல் வைத்துக் கொள்ளுதலே உடலுக்கு  தீங்கில்லாத இயற்கையான கருத்தடை முறை என ஆரதனாவின் மனம் அதைத்தான் நாடியது.

பிஜு அன்று ஊரில் இருந்து திரும்பும் வழியில் அவளிடம் தடுமாறிய நாளிலிருந்து, இயற்கையான இந்த கருத்தடை நாட்களுக்காக அவள் காத்திருந்தாள்.

ஆனால் அந்தக் குறிப்பிட்ட நாளில் அவளால் வீட்டுக்கு வர முடியாமல் போனால் என்னாவது? அவனுக்கு அவசியமற்ற ஏமாற்றமல்லவா அது என, இதை எதையும் அவள் பிஜுவிடம் பேசிக் கொள்ளவில்லை.

இதில் ஒரு வாரத்தில் அந்த நாட்களும் வந்து சேர, முயன்று அன்று ஓரளவு சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்டாள். நல்லவேளையாக இல்லை கெட்ட வேளையாக என சொல்ல வேண்டுமோ? அவள் அப்படி கிளம்பி வர தடை எதுவும் வந்து சேரவில்லை.

வந்தவள் பிஜுவை அழைக்க வர சொல்லாமல் அவளே வந்துவிட்டாள்.

நமக்கு இன்று முதலிரவு என அவன் முகத்தைப் பார்த்து சொல்லும் தர்மசங்கடத்தைவிட, அவன் வரும் முன் படுக்கை அறையையும் இவளையும் சற்றாய் அலங்கரித்துக் கொண்டால் அதுவே குறிப்பாக அவனுக்கு உணர்த்தி விடும்தானே.

அதோடு அவனுக்கு சர்ப்ரைஸாகவும் இருக்குமே! சென்றமுறை எதிர்பாராமல் இவளைக் காணவும் அவன் மகிழ்ந்த பாவம் இன்னும் இவள் கண்ணுக்குள் நின்று தித்திக்கிறது.

முகம் சிவக்க சிவக்க இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே, படுக்கையில் மல்லிகை அரும்புகளை தூவி வைத்தவள், தானும் குளித்து இவர்களது திருமண இரவின் புடவையை அணிந்து, தன்னை மிதமாய் அலங்கரித்துக் கொண்டாள்.

கேன்டில் லைட் டின்னருக்குப் போல் உணவு மேஜையையும் தயார்படுத்திவிட்டு, அதன் பின்  சுகந்தமாய் சுருட்டி எடுக்கும் ஒரு அலைக்கழிப்புடன் தன்னவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.

வழக்கமாக இரவு எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவது பிஜுவின் வழக்கம் என இவளுக்குத் தெரியும். நேரம் ஏழேகாலை தாண்டிக் கொண்டிருக்க, அந்நேரம் சிணுங்குகிறது இவளது மொபைல்.

இவளின் நட்பு பொற்கொடிதான் அழைத்தது.

“சாரிடி, அம்மா வந்துட்டு கிளம்பினாங்கல்ல, அந்த ஆட்டோ உன் வீட்டு பக்கம் ப்ரெக்டவ்ண் ஆகி நிக்குது போல, ஏழ்ரைக்கு அம்மா வண்ணாரப் பேட்டை ரதிமீனா ஆஃபீஸ்ல பஸ் பிடிக்கணும், கொஞ்சம் வேற ஆட்டோ பார்த்து அனுப்பிடுறியா?” அவள் சற்று படபடப்புடன்  கேட்க,

வெளியே செல்லும் அளவு தன் அலங்காரம் மிதமாய்தான் இருக்கிறது என்பதை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து உறுதிப் படுத்திக்கொண்ட ஆராதனா,

ஒரு கவரில் சில பழங்களையும், ஸ்கூட்டி சாவியையும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

அடுத்த பக்கம்

Advertisements