மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 14 pg (2)

“என்னமா எங்கேயும் வெளிய கிளம்பிட்டு இருந்தீங்களா? என்னால உனக்கு எதுக்குமா இவ்ளவு சிரமம்?” என அக்கறையும் சற்றாய் குற்ற உணர்ச்சியாயும் விசாரித்த பொற்கொடியின் அம்மாவை,

“அதெல்லாம் அவங்க வீட்டுக்கு வர டைம் இருக்கு ஆன்டி, இப்ப இந்த இடத்தில் ஆட்டோ  தேடுறது கஷ்டம், தெரிஞ்ச ஆட்டோ வந்து சேர கொஞ்சம் டைம் ஆகும், அதுக்குள்ள உங்க பஸ் வந்துடும்” என்றபடி தானே கொண்டு போய் பஸ் ஏற்றிவிட்டாள் இவள்.

பொற்கொடியின் ஊர் உளுந்தூர்பேட்டை, அவ்வளவாய் கல்வியறிவோ அல்லது வெளியே சென்று வந்து பழக்கமோ இல்லாத அவளது அம்மா அங்கிருந்து இவ்ளவு தூரம் திருநெல்வேலிக்கு தனியே வந்து செல்லவே படாதபாடு படுவார்.

அதில் இப்படி கடைசி நேரத்தில் ஆட்டோ ப்ரேக்டவ்ண் என்றால் பதறிப் போய் நின்று கொண்டிருப்பார். அவரை இனி இன்னொரு ஆட்டோ தேடி டென்ஷனாக்குவதற்கு இவளே சென்று விட்டு வந்துவிடலாம் என இதைச் செய்த ஆராதனா,

அங்கிருந்து அந்த பேருந்து நிறுத்தத்திற்கு வெகு அருகில் இருந்த பிஜுவின் அலுவலகத்திற்குச் சென்றாள்.

வீட்டில் மொட்டு மொட்டு என முழித்தபடி தனியாய் அவனுக்காக காத்திருப்பதைக் காட்டிலும், இதென்றால் அவனோடே சேர்ந்து திரும்பி வந்துவிடலாம்.

சர்ப்ரைஸ் கொடுக்கிறதே ஆச்சு, அதை இங்க இருந்து ஆரம்பிச்சு வைப்போமே! என ஒரு வித துள்ளலுடன், எந்த அறிவிப்புமின்றி இவள் அவன் அலுவலக வாசலை சென்றடைய,

உள்ளே வழக்கத்திற்கு மாறாக சில பல பேச்சுக் குரல்கள். ஒரே கல கலப்பு.

பிஜுவின் ஃப்ரெண்ட்ஸ் யாரும் வந்திருக்க வேண்டும்.

உள்ளே செல்லவா வேண்டாமா என ஒரு தயக்கம் உண்டாகிறது இவளுக்கு.

மெல்லமாய் உள்ளே எட்டிப் பார்த்தாள். பிஜுவோடு சேர்த்து நான்கைந்து பேர் இருந்தனர். யாரும் பார்க்கும் முன் சட்டென தலையை வெளியே எடுத்துக் கொண்டாள் இவள்.

அப்படி ஒன்றும் அதீதமாய் இவள் மேக்கப் செய்திருக்கவில்லையெனினும், என்ன இருந்தாலும் இவள் பிஜுவை அழைக்க வந்தது எதற்காக? அவனது நட்பு பட்டாளத்தின் முன்னெல்லாம் இப்போது சென்று நிற்க இவளுக்கு முடியாது.

அதே நேரம் உள்ளே ஒலித்துக் கொண்டிருந்த அந்த சள புள சிரிப்பு சத்தத்திற்கு இடையில் காதில் விழுகிறது ஒரு கேள்வி.

“என்னடா மாப்ள என் வீட்டுக்காரி டாக்டரா மட்டும் இருக்க கூடாதுன்னு சொல்லிட்டு அலைவ? இப்ப டாக்டர் பொண்ணுட்டயே மாட்டி இருக்க?”  சிரிக்க சிரிக்க விசாரித்தது ஒரு ஆண் குரல்.

விலுக்கென்றது ஆராதனாவுக்கு. இது போன்ற விஷயத்தை இரண்டாவது முறையாக அல்லவா கேட்கிறாள். அதுவும் இது உள்குத்து பாலிடிக்ஸ் என எதுவும் இல்லாத நண்பர்களுக்குள்ளான வெத்து அரட்டை.

“என்ன செய்றது மச்சான், அனுபவிக்கனும்னு இருந்தா அனுபவிச்சுதான ஆகணும்” இது சாட்சாத் பிஜுவேதான்.

சட்டென அத்தனை சந்தோஷமும் வடிந்து போக, வலியோடு விக்கித்துப் போனாள் ராதி. அப்படியானால் டாக்டர் பொண்ணை கல்யாணம் செய்ய மாட்டேன் என பிஜு சொல்லி இருக்கிறான் என்றுதானே அர்த்தம்.

பின் எதற்காக இவளைத் திருமணம் செய்தான்? இப்போதும் இந்த நொடி வரையும் அவன் இவளை சற்றாக கூட வெறுத்தது போல் இல்லையே! அன்பும் ஆசையுமாய் பார்த்து பார்த்துதானே இவளைத் தாங்குகிறான்.

ஒரு வேளை இவளைப் பார்க்கவும் பிடித்துப் போய் அதில் தன் முடிவை மாற்றிக் கொண்டு, விரும்பியே இவளை மணந்தானோ?

மனதில் இருந்த வலியைத் தாண்டி ஆவல் பூக்கள் ஆசையுடனே மலர்கின்றன் மங்கைக்குள். சே! அவனுக்கு என்னை ரொம்பவே பிடிக்கும்.

இல்லையே! கல்லூரியில் வைத்து இவளைக் கண்ட போதெல்லாம் காய்ந்தானே! முகத்தை திருப்பிக் கொண்டல்லவா நிற்பான். அபித்தைக் கூட இவளிடம் பேச விடாமல் பிடித்தல்லவா இழுத்து வைத்தான்.

பாய்ந்து வந்த பழைய நினைவுகள் இப்போது இவளைத் திணறத் திணற பந்தாட, இருந்த எல்லா பெலமும் வடிந்து கொண்டு போகிறது இவளுக்கு.

‘அப்றம் ஏன் கல்யாணம் பண்ணான்?’

இவளிடம் அவன் ப்ரோபோஸ் செய்தானே அன்று இரவு மொபைலில் பேசும் போது,

“அனி வந்து உன்னைப் பத்தி சொல்லவும் உடனே சரின்னு சொல்லிட்டேன், ஆனா நான்தான் ராதிட்ட முதல்ல ப்ரோபோஸ் செய்வேன், அப்றம்தான் நீங்கல்லாம் இதைப் பத்தி அவட்ட பேசலாம்னு சொல்லி வச்சுருந்தேன், அதான் அவங்க யாரும் உன்ட்ட இப்ப வரை எதுவும் கேட்கலை” எனச் சொல்லி இருந்தான்.

“அப்படி அனி அண்ணி என்ன சொன்னாங்க?” என இவள் கேட்டதற்கு,

“நீ நம்ம ரிலடிவ்னு சொன்னா,” என துவங்கியவன்,

“இதுல நிறைய பேசணும் ராதிமா, அதை இன்னொருநாள் விலாவாரியா சொல்றேனே, இப்ப டைம் ஆகிட்டு, நீ தூங்காம பரீட்சை எழுதிட்டு வந்து செம்ம டயர்டா இருக்க, தூங்கு” என பேச்சை திசை திருப்பினான்.

அது இப்போது நியாபகம் வருகிறது.

அதோடு அன்று ஆவுடையனூர் அவனோடு சென்று வந்தாளே, அன்றும் இவளின் இதே கேள்விக்கு, மழை அது இதென அவன் பதில் சொல்லாமல் போனதும் நினைவில் வருகிறது.

இதற்கு இடைப் பட்ட நாட்களில் இந்தப் பேச்சை இவளே கூட எடுத்திருக்கவில்லை. அவனும் அதைப் பற்றி பேசி இருக்கவில்லை.

கடகடவென நொடிக்குள் இவள் மனம் எங்கெல்லாமோ சென்று வர,

அதே நேரம் அவள் தேடிய விளக்கம் அவள் காதில் அதாக வந்து விழுந்தது கொதிக்கும் ஈயத்தை துடிக்க துடிக்க செவிக்குள் கொட்டியபடி.

“டாக்டர் பொண்ண கல்யாணம் செய்றதுன்னா கௌரவம்தானடா? இதுல எதுக்கு டாக்டர வேண்டாம்னு சொல்லணும்?” இன்னொரு குரல் விசாரிக்க,

“கௌரவத்த வச்சு என்ன செய்ய?” முதல் குரல் ஒருவிதமாய் குத்தல் தொனிக்கு நக்கலாய் இடம் பெயர்ந்தது.

“அது மச்சி நர்ஸ்மார்லாம் நைட் டூட்டிக்கு போறதுங்களே எல்லாம் பேஷண்ட மட்டுமா கவனிக்குதுன்னு நினைக்க, ஆம்பிள டாக்டருக்குத்தான் அதுங்கல்லாம் ஜல்ஜாப்பு சர்வீஸே, அதே சர்வீஸுக்கு பொம்பிள டாக்டர் மட்டும் போகலைனு கண்டமா நாம, அப்படியே இவளுங்க வரலைனா மட்டும் விட்டுடுவானுங்களா கூட இருக்கவன்?

நீயே சொல்லு பத்தினினு சொல்றவளுக்கு பத்து மணிக்கு மேல வீட்டுக்கு வெளிய என்ன வேலை?” என வந்து விழுந்தது ஒரு அருவருப்பு விளக்கம் அந்தக் குரலிடமிருந்து.

ஆராதனா கொதித்துப் போனாள் என்பதெல்லாம் வெகு சாதாரண விளக்கம், ஆனால் அதையும்விட இவைகளை கேட்டுக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் நிற்கும் பிஜுவை நினைக்கையில் வெந்தே போனாள்.

இதில் இது போதாதென,

“அப்படில்லாம் இருந்தா பிஜு மாப்ள ஏன் இதுல போய் கால் வைக்கப் போகுது ரவி? நீ சொல்றது ஒன்னும் சரியா படல” என இரண்டாம் குரல் இப்போதும் விசாரிக்க,

“அனி வீட்டுக்காரருக்கு இந்தப் பொண்ணு ரொம்ப சொந்தமாமே? நியாபகம் இருக்கா, நம்ம ரமணியோட தங்கச்சி அவளோட ஆட்டோ ட்ரைவர லவ் பண்றான்னு தெரியவும், அவசர அவசரமா ரமணியோட தாய் மாமா, தன் வீட்டம்மாவுக்கு சொந்தக்கார பையனுக்கு ரமணி தங்கச்சிய கட்டி வச்சாரே, அது போல இது எதாச்சுமா இருக்கும்.

அனி கேட்டு நம்ம பிஜு முடியாதுன்னு சொல்ற ஆளா?” என அதற்கு அந்த ரவியிடம் இருந்து அடுத்த விளக்கமும் வர,

கேட்டிருந்த ஆராதனாவுக்கோ ஒரு பக்கம் எதாவது உலக்கை தடிமனில் கம்பு அல்லது கம்பியை எடுத்து பேசிக் கொண்டிருக்கும் அந்த ரவியின் தலையை பிளக்கலாம் என்பது போல் கோபம் கொந்தளித்துக் கொண்டு வருகிறதென்றால்,

மறுபக்கம் இவளை இத்தனை தூரம் பேசவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்பது இவளது கணவன் என்பதில் உயிர் வரை ஆடிப் போகிறது.

ஆக பிஜுவுக்குத்தான் இவள் மீது என்ன மரியாதை இருக்கிறது?

இதுவரை எத்தனை முறை இவளிடம் இந்தப் படிப்பு உனக்கு அவசியமா என கேட்டிருக்கிறான் அவன்?

அதற்கெல்லாம் இதுவா அர்த்தம்?

அடுத்த பக்கம்

Advertisements