மனம் கொண்டேன்

  ல்லாருக்கும் வணக்கம்ங்க. என் பேரு ஜெயமலர். ஜீவநதி தற்சொரூபன் கதையை படிச்சதும் எனக்கு இதை உங்கட்ட ஷேர் செய்யனும்னு ஒரு ஆசை. இப்போ தேன்மொழி மேம் காலேஜ் கலாட்டான்னு ஃபாரம் டாபிக் ஆரம்பிக்கவும் அதில இத எழுதலாமான்னு ஒரு எண்ணம்.

அடுத்தவங்க இல்லாத இடத்தில அவங்கள பத்தி நல்லத பேசலாம் ஆனா கெட்டதை பேச கூடாது…அதுதான் புறம் பேசறது…அவங்களுக்கு போன்மரோல நோய் வரும்னு பைபிள்ள இருக்குன்னு நான் யாரை பத்தி பேச போறேன்னோ அவ அடிக்கடி சொல்லுவா….அவளை பத்தியே புறம் பேசலாமான்னு ஒரு மன தடை.

அப்புறம் என்னோட இன்னொரு ஃப்ரெண்டு தான் குறை சொல்றதுதான தப்பு…நீ சொல்லப்போற விஷயம் எனக்கு குறையாவே தெரியலைனு சொன்னதும் உங்கட்ட சொல்றதுன்னு முடிவு செய்துட்டேன்.

சொல்றதே சொல்றேன் அதை விளக்கமாவே சொல்லிடலாம்னு கதையா சொல்றேன்.

அவ பேரு பொன்மதி. நான் முதன் முதலா அவள பார்த்தது நான் முதல் தடவையா காலேஜ் போன அன்னைக்கு.

ஃஸ்கார்ப்பியோல வந்தவ காலேஜ் மெயின் கேட்லயே இறங்கிட்டா. கேட்ல இருந்து ஒரு அரை கிலோமீட்டர் நடந்தாதான் க்ளாஸ் ரூம் வரும். நான் கவர்மெண்ட் பஸ்ல காலேஜ் போறவ. நடந்துதான் ஆகனும். ஆனா இவ ஏன் இங்க இறங்கனும்னு  புரியாம பார்த்தேன்.

அவ அந்த நேரம் கேட் பக்கத்தில உட்கார்ந்து பூ வித்துகிட்டு இருந்த பாட்டிட்ட போய் பூ விலை கேட்டா. முத நாள் பூ வச்சுகட்டு போலாமேன்னு நானும் அவளுக்கு அடுத்து போய் நின்னேன்.

“நூறு பூ எவ்ளவு..?” எங்க ஊர்ல பூ முழம் கணக்கில வாங்க மாட்டோம். நூறு இருநூறுன்னு எண்ணிக்கை தான்.

“25 ரூவா பாப்பா..” பூக்கார பாட்டியின் கண்ணு ரெண்டும் அவள இறக்கிவிட்டுட்டு திரும்பிகிட்டு இருந்த கார் மேலதான்.

“பாட்டிமா நான் பூக்கு தான் வில கேட்டேன்…” இது அவ தான்.

“அஞ்சு பத்துல்லாம் நீங்க கணக்கு பாக்கலாமா பாப்பா…” பாட்டியின் குரல் குழைந்தது.

“இன்னைக்கு நான் முத நாள் காலெஜ் வந்துருக்கேன் பாட்டிமா….முத நாளே பூ விஷயத்தில ஏமாந்துட்டோம்னு எனக்கு கஷ்டமா இருக்குமே பாட்டிமா….”

குனிஞ்சு நின்னதுல அவ முன்னால தொங்கிகிட்டு இருந்த அந்த நீள சடைய பார்த்த பாட்டி நீளமா ஒரு துண்டு பூவ வெட்டி அவட்ட நீட்டுது. “வச்சுக்கோ பாப்பா…முத நாளுன்னுட்ட….நல்லா இரு…..பொட்டபிள்ள பூல ஏமாற வேண்டாம்…”

அதுவரைக்கும் அந்த பாட்டி மேல் எனக்கு ஒருவித எரிச்சல் இருந்தது. ஆனா இப்போ சந்தோஷம்.

பூவ வாங்கிகிட்ட அவ தன் பர்ஸை திறந்து பணத்தை எடுத்து நீட்டினா.

“முப்பது ரூபா பாட்டி….நீங்க குடுத்த பூ முன்னூறு இருக்கும்….நூறு பத்து ரூபாதானே…முத நாளே ஓசிக்கு வாங்கினா நல்லா இருக்காது….” இதில் தான் எனக்கு அவள பிடிக்க ஆரம்பிச்சது.

“இன்னைக்கு விஷேஷம்…நூறு 15 ரூபா..” நான் மெல்ல சொல்ல திரும்பி என்னை பார்த்து புன்னகையுடன் “தேங்ஸ்” என்றவள் இன்னுமொரு பதினஞ்சு ரூபாயை எடுத்து பாட்டிட்ட நீட்டினா .

அடுத்து நானும் பூ வாங்க, எனக்காக காத்திருந்து என்னோடு சேர்ந்து நடக்க ஆரம்பிச்சா.

ஃபர்ஸ்ட் இயர் க்ளாஸ் ரூம்ஸ்  இருந்த பகுதியை அடஞ்ச போது நாங்க ஃப்ரெண்ட்ஸ்.

 

வளும் நானும் வேற டிபார்ட்மென்ட். ஆனா எங்க க்ளாஸ் ரூம் அடுத்து, அடுத்து இருந்துது. ஃபர்ஸ்ட் இயர் எல்லாம் ஒரே ப்ளாக். அவ க்ளாஸில் இன்னும் யாரும் வரலை. ரூம் காலியா இருக்குது. என் க்ளாஸில் நாலஞ்சு தல தெரிஞ்சுது. சரின்னு என் க்ளஸுக்கு கூட்டிடுட்டு போய்ட்டேன்.

திடீர்னு ஒரு மனுஷ யான மாதிரி உருவத்துல ஒரு மொட்ட தலையன் உள்ள வந்தான். அழுக்கு ட்ரெஸ்காரன்.

அவள எழுப்பிவிட்டு கேள்வி மேல கேள்வி. இதான் வெள்ளையும் சொள்ளயுமா பணகளையோட இருக்ககூடாதுங்கது.

எங்க யாருக்கும் எதுவும் புரியல.

முதல்ல கேள்வில்லாம் சாதாரணமா இருந்துது. அவளும் இயல்பா பதில் சொல்லிகிட்டு இருந்தா. அடுத்து சின்ன சின்ன ஜாலி ராகிங். அவளும் சொன்னதெல்லாம் செஞ்சா. ஆனா அந்த தடியனுக்கு எரிச்சல் அதிகமாகிட்டே போச்சு.

நாங்கெல்லாம் பயந்து நடுங்கி போய் நின்னுகிட்டு இருக்கோம். அவ மட்டும் எந்த டென்ஷ்னும் இல்லாம முகத்தில இருந்த மலர்ச்சி மாறாம இருந்தா. அதுதான் அவனுக்கு பிடிக்கல போல.

அவன் வக்ரமா பேச ஆரம்பிச்சான்.

அவ சிரிப்பு நின்னுட்டு. ஆனா பயம் வரவே இல்லை. முகமெல்லாம் தைரியம்.

எனக்கு இங்க தொண்ட காஞ்சிட்டு.

அடுத்து அவன் செய்ய சொன்னதை அவன் அம்மா கேட்டிருக்கனும்..

அவ கோப படலை. ஆனா செய்ய முடியாது அப்படின்னு சொல்லிட்டு அவன் முகத்தை பார்த்துட்டு நின்னா.

அவ்ளவுதான் …அந்த மொட்டையன் பக்கத்தில இருந்த ஸ்டீல் சேர எடுத்து அவ தலைல ஓங்கி அடி…

டமார்னு வந்த சத்தத்தில தான் கண்ண விழிச்சேன். தலைல அடி விழுந்தா இப்டியா சத்தம் வரும்?

அவன் அடிச்ச அடி அங்க இருந்த ஸ்டீல் டேபிள் மேல விழுந்து இருந்துது. அவ விலகி இருந்திருக்கா…டேபிள் நடுவுல பள்ளம்.

சட்டுனு கால வச்சு ஓங்கி ஒரு உதை. அவ இப்பவும் விலகிட்டா அடுத்த டேபிள்ள விழுந்த இந்த உதைக்கு சாட்சியா அதுக்கும் நடுவுல பள்ளம்.

இதுக்குள்ள திபு திபுன்னு ஒரு பட்டாளம். வந்தவங்க அவன பிடிச்சு இழுக்க அந்த குண்டன் சொல்றான் “எப்படி காலேஜ தாண்டி நீ வெளிய போறன்னு நானும் பாக்கேன்டி…உன் சாவு என்கைல தான்….”

 

டுத்த நாள் காலை வந்தவட்ட கேட்டேன் “மதி வீட்ல சொல்லிட்டியா?”

“பச்…இதெல்லாம் சொன்னா சரியா வராது….நம்ம காலெஜ் ஏற்கனவே ஸ்ரிக்ட்…டிசி கொடுத்துடுவாங்க…இன்னும் ஒரு வருஷம் தான் இருக்காம் அவனுக்கு கோர்ஸ் முடிய ….என் டிபார்ட்மெண்ட் சீனியர் தானாம்…எங்க சீனியர்ஸ் சொன்னாங்க… “ அவ வீட்ல சொல்லலைனு எனக்கு நல்லா தெரியும். அதோடு மதி பொய் சொல்லவும் மாட்டா.

ஆனாலும் அவ வீட்டுக்கு விஷயம் போயிருக்குது. அத்தனை ப்யூன், செக்யூரிட்டி, கேமிரா எல்லாம் இருக்குதே.  ஆனா மேனேஜ்மென்ட் அந்த சீனியர் மேல எந்த ஆக்க்ஷனும் எடுக்கலை. அதுக்கு பதிலா ஸேஃப்டி மெஷர்ஷை பக்காவா பண்ணிட்டாங்க.

க்ளாஸ் ஆரம்பிக்கிற வரை கேர்ள்ஸ் அவங்களுக்கான வெயிட்டிங் ரூம்ல தான் வெயிட் செய்யனும்….ஒரு பீரியட் முடிஞ்சு அடுத்த லெக்சரர் வந்தா தான் முதல் லெக்சரர் வெளிய போகலாம். அதோட லன்ச் பாய்ஸுக்கு க்ளாஸ் ரூமிலேயே…கேர்ள்ஸுக்கு கன்னி மாடத்தில…அதான்ங்க எங்க வெயிட்டிங் ரூம்ல…இதுக்காக ஒரு ஹால் கட்டினாங்க காலேஜ்ல இருந்து அவசர அவசரமா. அதுவரைக்கும் அவங்கவங்க லேப்தான் தற்காலிக  கன்னிமாடமா பயன்பட்டுச்சு.

எல்லாத்துக்கும் மேல ஒரு ரூல் போட்டாங்க பாருங்க…பாய்ஸ்  அண்ட் கேர்ள்ஸ் ஒருத்தர்ட்ட ஒருத்தர் பேசவே கூடாது…

அப்படி பேசின ரெண்டு மூனு ஜோடிய சஸ்பெண்ட் செய்தாங்க…

இதெல்லாம் ப்ரின்ஸிபால் செய்தது. அவ அப்பா எல்லோரும் பார்க்க இரண்டு மூனு தடவை அவளை க்ளாஸ் ரூம் வாசல்ல வந்து ட்ராப் செய்தாங்க. அப்பதான் யாரும் மகட்ட ப்ரச்சனை பண்ண மாட்டாங்கன்னு அவங்க நினச்சாங்களாம்.

அப்ப தான் எங்களுக்கு தெரியும் பொன்மதி காலேஜ் சேர்மனோட பொண்ணுனு.

 

டுத்து என்ன,  எல்லாரும் அவட்ட பேசுறதை நிறுத்திட்டாங்க. அவ சேர்மன் டாட்டர்னு தெரிஞ்சதும் க்ளாஸ்ல நடக்கிற எல்லாத்தையும் அவ வீட்ல போய் சொல்றதா இவங்களுக்கா ஒரு பயம். அதனால அவள அப்படியே ஒதுக்கிட்டாங்க கேர்ள்ஸ்.

ஏற்கனவே பாய்ஸ்ட்ட பேச மாட்டா. நானும் தான். நாங்க ரூல்ஸை கரெக்ட்டா ஃபாலோ பண்ற ஆளுங்க. அதோட பாய்ஸ்ட்ட பேசனும்னா எதாவது திருட்டுதனம் செய்தாதான் உண்டு.

எப்படியாவது கேமிரா, ப்யூன், கண்ணுல மண்ண தூவிட்டு அண்டர் கன்ஷ்ட்ரக்ஷன்ல இருக்கிற ப்ளாக்ல போய் பொண்ணுங்களும் பசங்களும் கடலை போடுறதுல இருந்து காதல் வளக்கிறது வரை எல்லாம் உண்டு.

ஆனா எங்க கேங் இது எதுக்கும் போகாது.

ஆக்க்ஷுவலி ரொம்ப கலகல டைப் அவ. எப்படித்தான் பேசாமலே க்ளாஸில் இருப்பாளோ….? ஆனா லன்சுக்கு எங்க கூட வந்துடுவா. கஷ்டமா இருக்குன்னு ஒரு நாள் புலம்பினது கிடையாது அவ. எப்பவும் சந்தோஷத்தின் மறு உரு. யாரையும் எதுக்காகவும் குற சொல்லவும் மாட்டா.

எல்லோருக்கும் உன்ன பிடிக்கலைனு தெரிஞ்சும் எப்படி உன்னால அங்க இருக்க முடியுதுன்னு நானே கேட்டுருக்கேன். “கஷ்டமா இருக்குது ஆனால் கவலையா இல்ல….பிஜி அண்ணா யுனிவர்சிடில வாங்கிடனும்…மெரிட் சீட்னா மட்டும் தான் அப்பா சந்தோஷமா அனுப்புவாங்க..”

இது வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போச்சுது.

 

ந்த நேரத்துல என் க்ளாஸ்மேட் ஒரு பையன், எங்க க்ளாஸில படிக்கிற சௌமிங்கிற  பொண்ணோட எங்கயோ வெளிய போயிருக்கான். சௌமி குடும்பம் பொன்மதி வீட்டுக்கு தெரிஞ்சவங்க.

வெளிய போன எங்க க்ளாஸ் லூசு அவ வீட்ல பொன்மதி வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போயிருக்குது. சாயந்தரம் லேட் ஆனதும் சௌமி அம்மா இவளுக்கு போன் செய்து மகட்ட பேசனும்னு சொல்ல, விஷயம் எதுவும் தெரியாத இவளும் அவ இங்க இல்லையேன்னு சொல்லிட்டா.

அப்புறம் என்ன நடந்திருக்கும்? சௌமி வீட்ல அவளுக்கு ஆப்பு.

இது எதுவும் எங்க யாருக்கும் தெரியாது. என்னமோ இவதான் சௌமி அம்மாட்ட ஃபோன் செய்து போட்டு கொடுத்த மாதிரி மத்தவங்கல்லாம் கொதிச்சிருக்காங்க….சாயந்தரம் ஃபைனல் பெல். தன் திங்ஸை எடுத்துட்டு பொன்மதி எதோ உறுத்த திரும்பி பார்த்தா அவள சுத்தி 16 தடியங்க. எல்லாம் எங்க க்ளாஸ் எருமைங்க தான். அவ க்ளாஸ் மேட்ஸ் யாரும் இவள அலர்ட் பண்ணகூட செய்யாம தனியாவிட்டுட்டு  வெளிய போய்ட்டாங்க.

எங்க க்ளாஸ்ல ஒருத்தனுக்கு ப்ரச்சனைனு அத்தனை பேரும் சேர்ந்து நிக்றாங்க…ஆனா அவ க்ளாஸில் எப்படி நடந்துகிட்டாங்க பாருங்க..

க்ளாஸ் ரூம் லைட்ஸை ஒருத்தன் அணைக்க, அடுத்தவன் கதவை உள்ள லாக் செய்துட்டான்… அவ கத்துனா கூட எங்கயும் கேட்காது. அப்ப அவ க்ளாஸ் இருந்தது மாடியில லாஸ்ட் ஃப்ளோர்.

நானா இருந்தா பயத்துல மயங்கி விழுந்திருப்பேன்.

“என்னடி…உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சுக்கோ…இப்போ நாங்க என்ன செய்ய முடியுமோ அதை செய்றோம்…தைரியம் இருந்தா வெளில போய் சொல்லு பார்ப்போம்…” உறுமிட்டு நாலஞ்சு நாய்ங்க அவ மேல பாய…அவ எப்ப எடுத்தான்னு தெரியலை….அவ பேக்ல எப்பவும் ஒரு நைஃப் இருக்கும் அத எடுத்து நீட்டி இருக்கா…மிரட்ட தான்.

அரை குற வெளிச்சத்திலும் அது தெளிவா மின்னிருக்குது…இந்த மாடுங்க ஒரு செகண்ட் நின்னு முழிக்க அதே நேரம் கதவுல ஓங்கி ஒரு இடி… வெளிய இருந்து விழுது. .தாழ்பாள் தெரிச்சுட்டு.

ஹீரோ என்ட்ரின்னு வச்சுகிடலாம். வினோன்னு தான் காலேஜே சொல்லும். முழு பெயர் என்னனு அப்போ எனக்கு தெரியாது. எங்க காலேஜ் ஹீரோ. தர்ட் இயர் ஸ்டூடண்ட். யாருக்கு ப்ரச்சனைனாலும் ஓடி போய் ஹெல்ப் பண்ற முத ஆள்.

கிரிக்கெட்டை விட எங்க ஊர்ல ஃபுட்பால்தான்.

வினோ ஃபுட்பால்ல கலக்குவான். ப்ரின்ஸியே அவன பார்த்தா சல்யூட் அடிப்பாரோன்னு தோணும். அப்படி எல்லாத்திலும் கெட்டி. ஆங்  ஆளும் ரொம்பவே அழகா இருப்பான்.

ஆறடி உயரமும் அவன் மீசையும்னு என் பக்கத்தில ஒரு லூசு எப்பவும் புலம்பும்.

அந்த வினோவும் அவன் ஃப்ரெண்டுன்னு காலேஜுக்கே தெரிஞ்ச மனோஜும் அன்னைக்கு பொன்மதி கிளஸில போய் நிக்காங்க.

கைக்கு எட்டுனவனை காலரபிடிச்சு தூக்கிட்டானாம் மனோஜ்.

“பொன்னி நீ கிளம்பு…” வினோ சொல்ல முகபாவம் மாறாம கைல கத்தியோட படி இறங்கி வந்தா பாருங்க. அப்ப அவள பார்த்த எனக்குமே இவ கூட சேரலாமா கூடாதான்னு தோணிச்சு.

“எ….என்ன ஆச்சு மதி…”  அவ கைய பிடிக்கேன்…அவ உடம்பு அப்படி கொதிக்குது…. ஆனா ஒரு சொட்டு கண்ணீர் விடலையே…

“என் க்ளாஸ்மேட்ஸுக்கு நான் என்ன கெடுதல் பண்ணேண்…ஏன் இப்படி விட்டுட்டு போய்ட்டாங்க….?”

இத்தனைக்கும் இந்த இன்ஸிடன்டுக்கு முன்னயும் சரி பின்னயும் சரி, ஸடடி ஹாலிடேஸ் ஆரம்பிக்கிறப்ப அவ க்ளாஸ்  கோஷ்டி ஒன்னு வந்து என்ட்ட கேட்டு அவ நோட்ஸ் காபி வாங்கிட்டு போகும்….இந்த பொன்மதி கிறுக்கும் குடுக்கும்….கேட்டா அடுத்தவங்கள படிக்க வைக்கதான  காலேஜ் நடத்துறாங்கன்னு கேன மாதிரி ஒரு பதில் சொல்லும்….

 

றுநாள் வரமாட்டான்னு நான் நினச்சேன். ஆனா வந்துட்டா. வீட்ல சொன்னியான்னு கேட்டேன்.

“அதான் வீட்டுக்கு தெரிஞ்சிட்டே….வினோ என் செகண்ட் கசின்….கொஞ்சம் டிஸ்டண்ட் ரிலடிவ்…..இவ்ளவுநாள் சென்னைல இருந்தான்…அவங்க அப்பா தவறவும் இங்க வந்துட்டாங்க… ”

அநேகமா எங்க ஃப்ரெண்ட்ஷிப்ல என்னை அறியாம ஒரு விலகல் ஆரம்பிச்சது இங்கதான் போல. நட்பில் இத்தனை ரகசியம் சரியா? என்ற கேட்கபடாத கேள்விதான் காரணமா?

அவள வச்சுகிட்டே வினோவ என் கேங்ல ஜொள்ளுவிட்டவங்க இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் இப்போ இவள் துரோகி மாதிரி தெரியுறா.

எங்க கேங்க் சைஸ் இப்போ மொத்தம் மூனு பேரா சுருங்கிட்டு. அவட்டயே ஏன் இத்தனை ரகசியம்னு கேட்டேன்…..என் பேக்ரவுண்ட் தெரியாத வரைக்கும்தான் நான் நானா இருக்க முடியும்னு சொன்னா.

அவ சொன்னது சரின்னு தோணினாலும்…அவ க்ளாஸ்மேட்ஸுக்கு அவள பார்த்தா வர்ற இன்செக்யூரிட்டிய என்னால என்னமோ அப்போ தெளிவா புரிஞ்சுக்க முடிஞ்சுது.

 

Next Page