பொழியாதோ ஆனந்த சுக மழை !!!

வனையா!!…இருட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு. மற்ற நேரமாக இருந்தால் இப்படி ஒருவனை கன்சிடர் செய்ததற்காகவே தன் உயிரான அப்பாவுடன் குறைந்தது ஒரு மாதமாவது பேசாமல் இருந்திருப்பாள் மகிழினி. எப்படி இவனை தனக்கானவனாக யோசிக்க முடிந்தது தன் ரசனைகள் அறிந்த அப்பாவால்?

“இ..இந்த சம்பந்தம் கி..கிடைக்க நாம கொடுத்து வ…வச்சிருக்கனும் பாப்பா….” சொன்ன அப்பாவின் முகத்தை அழுகையை அடக்கிக் கொண்டுப் பார்த்தாள்.

பைபாஃஸ் சர்ஜரி முடிந்து ஐ சி யூவில் படுத்திருப்பவரிடம் என்ன சொல்ல?

மகள் தனக்காக அழுவதாக நினைத்துக் கொண்டார் அந்த அன்பு அப்பா. பாவம் மருந்தின் பிடியில் இருப்பவருக்கு என்ன புரியும்?அவள் தன் அப்பாவிற்காக தவித்துக் கொண்டிருக்கிறாள் தான். ஆனால் இந்த அழுகை அவளது இதய நொறுங்கலின் வெளிப்பாடு.

“அப்பா போறதுக்கு முன்னால….உ..உன்னை ஒரு பொறுப்பான கை…கையில ஒப்படச்சிடனும்….பாப்பா..” இன்னும் இவள் சம்மதம் சொல்லவில்லையே….தவிப்புடன் பார்த்தார்.

“ஏய் சரின்னு சொல்லுடி மகிழ்…அப்பா எதிர் பார்க்கிறார் பாரு..உன் வாயால கேட்டாதான் அவருக்கு நிம்மதியா இருக்கும்..” அருகில் நின்ற அக்கா குமுதினி மெல்ல இடிக்க…சம்மதமாக தலை ஆட்டினாள். கண்ணில் வடிந்தது கண்ணீரல்ல ரத்தம்.

ப்பா வீட்டுக்கு வந்தாயிற்று. மகிழினி கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.

மகிழினி எம்.எஃஸ்.சி கெமிஃஸ்ட்ரி முடித்துவிட்டு உள்ளூரிலிருந்த ஒரு சுயநிதி கல்லூரியில் விரிவுரையாளராக சில மாதங்கள் முன்புதான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்.

உள்ளூரில் ஒரு வேலை.. அதுவும் படித்த படிப்பிலேயே. அப்பா பக்கத்திலேயே இருக்கலாம். போனஃஸாக மாணவ கூட்டத்துடன் பழகும் பணி.

பயோ கெமிஃஸ்ட்ரி டிபார்ட்மெண்டில் அன்ஃஸிலரி பிரிவான கெமிஃஸ்ட்ரி படிப்பிப்பது இவள் வேலை.  பெரிதாக வொர்க் ப்ரஷர் எதுவும் கிடையாது.

மகிழினி விரும்பி சேர்ந்து ரசித்து செய்யும் பணிதான் இது.

ஆனால் இன்று நரகத்திற்கு கிளம்புவது போன்று இருந்தது. அங்கு அவனைப் பார்க்க வேண்டி இருக்குமே! அந்த சுகவர்த்தனை. சுகவர்த்தனாம் சுகவர்த்தன்…இவள் சுகத்தை வருத்த வந்தவன்.

அவனும் அங்குதான் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். பி.எச்.டி பயோகெமிஃஸ்ட்ரியில் முடித்துவிட்டு இவள் டிபார்ட்மென்டில் எச் ஓ டி. இவளுக்கு பத்தாயிரம் என்றால் அவனுக்கு பதினேழாயிரம் சம்பளம்.

. அவளது வீட்டு சூழலில் பலவகையில் இது பொருத்தமான சம்பந்தம். நல்ல சம்பந்தம் என்றே சொல்லலாம்.

மூத்த மகள்கள் இருவரை திருமணம் செய்து கொடுத்ததில் அப்பாவின் சேமிப்பு முக்கால் கரைந்தது எனில் அம்மாவின் மருத்துவ செலவில் முழுதும் போனது. அம்மாவும் பிழைக்கவில்லை. மிச்சமிருப்பது மேலகரத்தில் இருக்கும் இரண்டு படுக்கையறை கொண்ட இவர்களது வீடுதான். கடைசி மூச்சுவரை அதிலிருக்க வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. உள்ளூரில் இவள் இருந்தால் அது சாத்தியம்.

எந்த மகளோடும் உடன் தங்க அப்பாவிற்கு விருப்பம் இல்லை. ஆனால் அருகில் ஒரு மகளாவது வசித்தால் அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம். அது அவருக்கும் அவரது அனைத்துப் பிள்ளைகளுக்கும் நிம்மதியாக இருக்கும் என்பது அவரின் நம்பிக்கை. அப்படி அவர் அருகிருந்து பார்க்க விரும்பியது இந்த மகிழினியைத்தான்.

காரணம் மற்ற இருவரை விட இவளுக்கும் அவருக்கும் ஏராளமான ஒத்த சிந்தனை. ஒரே ரசனை. அற்புதமான புரிதல். அம்மா இருந்த போதுமே மகிழினிக்கு அப்பாதான் உலகம். அந்த அப்பாவிற்காக …மனதை இறுக்கிக் கொண்டு தன் ஃஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

கல்லூரியில் இவளது டிபார்ட்மெண்ட் ஃஸ்டாஃப் ரூமில் நுழைந்தால் எதிர்ப்பட்டான் அவன். அடக்கப்பட்ட ஆர்வத்துடன் சிறு புன்னகை அவன் முகத்தில். ஆக இவள் சம்மதித்த விஷயம் மெர்சி ஆண்டி மூலம் அவனுக்கு சென்றுவிட்டது போலும்.

வீணா ஆண்டியத்தான் உதைக்க வேண்டும். யார் இப்படிபட்ட சம்பந்தத்தை கொண்டு வரச் சொன்னது? சோடா புட்டி வழியாக பார்க்கிறானே…? இப்பொழுது என்ன செய்ய வேண்டும் இவள்?

“குட்மார்னிங் மேம்”

“கு..குட் மார்னிங் சார்..”

சொல்லிவிட்டு அவனை கடந்து சென்றாள். போடா நீயும் உன் ரசனையும்…கல்யாணம் பண்ணப்போற பொண்ணுட்ட பேசுற விதமா இது…சரியான முசுடு.. மனதிற்குள் வசைபாடிக் கொண்டே சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அவளை ஆக்ரமித்தது அவன் பற்றிய சிந்தனை.

பெரிய கருப்பு ப்ரேம் உள்ள ஒரு சோடா புட்டி கண்ணாடி…வெள்ளைக்கு பக்கத்தில் வரும் ஒரு வெளிரிய நிறத்தில் ஒரு முழுக்கை சட்டை அதுவும் அவன் அளவில் இல்லாமல் தோளில் வடியும்.

டக் இன் செய்தால் என்னவாம்? அதுவும் கிடையாது. தொங்கி வடியும் ஒரு மீசை.

உருவ அழகிற்கும் வாழ்கைக்கும் சம்பந்தம் கிடையாதுதான்.

ஆனால் அந்த சிடுமூஞ்சித்தனம்? மாணாக்கர் யாராவது பாடத்தைத் தவிர ஒரு வார்த்தை அவனிடம் பேச முடியாது. பாடத்தில் கேள்வி கேட்டு வந்தால் கூட சிலருக்கு திட்டு விழும்…இதெல்லாம் புக்க பார்த்தாலே தெரியுமேன்னு…

உடன் வேலை ஆட்களிடம் பழகும் விதம் அதற்கும் மேல். யாருடனும் சண்டை போட்டதில்லையே தவிர ஒரு வார்த்தை தேவைக்கு மேல் பேசியது இல்லை. எப்பொழுதாவது இவர்கள் ஏதாவது கவிதை  கதை பத்தி பேசி சிரித்தால் அவன் நிமிர்ந்து பார்க்கும் விதத்தில் இவர்கள் வாயை மூடிக் கொள்வார்கள்.

இவளும் காவ்யாவும் தான் பெண் லெக்சரர்கள் இவள் டிபார்ட்மெண்டில். அந்த வகையில் காவ்யாவுடன் இவளுக்கு அதிக நேரம் செலவாகும். அதில் பெரும்பாலான நேரம் காவ்யா இவனை கிண்டல் செய்வதில் தான் கழிப்பாள். இப்பொழுது விஷயம் தெரிந்தால் அவள் இவளையும் சேர்த்து என்னவெல்லாம் பேசுவாளோ?

காவ்யா மட்டுமா? மொத்த மாணவ மாணவியருமே அவனை பிரிவுக்கு ஒரு பெயராக வைத்து ஓட்டுவது வழக்கம். இவளிடமே கூட அவர்கள் அதைச் சொல்லி சிரித்தது உண்டு.

இப்பொழுது இவளை என்ன சொல்லுவார்கள்?

“கோணகண்ணனுக்கு ரெண்டு தங்கச்சி…ஒருத்தி விடோ அவளுக்கு ரெண்டு பொண்ணு…அடுத்தவ டிவோர்சி…அவளுக்கு ஒரு மனவளர்ச்சி இல்லாத குழந்தை… அதான் இவன் எப்பவும் இப்படியே திரியிறான்…” மாணவன் ஒருவன் இவன் சிரியா முகத்திற்கும் கஞ்சதனத்திற்கும்  சொன்ன விளக்கம் ஞாபகம் வந்தது.

கோணகண்ணன்…. யார் அவன் மேஜை எதிரில் போய் நின்றாலும் அவன் விழி நிமிர்த்தி பார்க்கும் விதத்திலேயே அவன் அந்த சந்திப்பை விரும்பவில்லை என தெரிவிக்கும் அவனது பார்வை. அதற்கு ஃஸ்டூடன்ட்ஃஸ் வைத்த பெயர் தான் இந்த கோணகண்ணன்.

அதுதான் போகட்டும் என்றால்…கருமி. அவனை விட கம்மியாக சம்பளம் வாங்குபவர்கள் உடுத்தும் விதம் என்ன? பயன்படுத்தும் பொருள் என்ன? இவன் ஏன் இப்படி இருக்கிறான்? கடன் இருக்குமோ? கையில் வைத்திருக்கும் ஒரு லேப்டாப்பை தவிர உருப்படியாய் ஒரு மொபைல் கூட கிடையாது. ஒரு பாடாவதி மொபைல். வாட்ச் கூட கிடையாது.

அந்த லேப் டாப்பும் காலேஜிலிருந்து குடுத்தது என்றனர் மாணவர்.

ஒருவேளை அந்த மாணவன் சொன்னது போல் இவன் குடும்ப சூழல் ரொம்பவும் மோசமோ? அதை பத்தி எல்லாம் விசாரிக்க அவளுக்கு விருப்பம் இல்லை. இவளுக்கே தெரியும் என நினைத்து அப்பாவும் சொல்லவில்லை போலும். எது எப்படியாக இருந்தால் என்ன? கல்யாணத்தை தடுக்கும் வாய்ப்பு இவளுக்கு இல்லை.

. இனி இங்கு வேலை செய்ய முடியுமா? எல்லோரும் என்னவென்ன பேசுவார்களோ? வேலையை விட்டுவிடலாமா? ஆனால் இருவர் சம்பளம் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்துவதாம்? அதோடு ஒவ்வொரு பைசாவிற்கும் அவனிடம் போய் நிற்பதா? நோ வே

ஒரு வேளை இப்படி இருக்குமோ…இவள் சம்பளத்திற்காகத்தான் இவளைத் திருமணம் செய்கிறானோ? ஒருவேளை என்ன..ஒரு வேளை….நிச்சயமா அதுதான்…

இவள் எதெல்லாமோ நினைத்து நொந்து குழம்ப  இன்னும் கொதி நீர் சாய்த்தது நாட்கள் இவள் வேரில். கல்லூரியில் அறிந்தவர் தெரிந்தவர் திருமண விஷயம் தெரிந்து இவளிடம் துக்கம் விசாரித்தனர். பலர் திருமணத்தை மறுக்க சொல்லி ஆலோசனை சொன்னர்.

இவள் சூழல் காரணமாக அவர்கள் ஆலோசனையை மறுக்க, காதல் திருமணம் என பரவியது வதந்தி. நொந்து போனாள். காவ்யா இவளிடம் பேச்சை நிறுத்திவிட்டாள். “நான் சொன்னதை அவர்ட்ட போட்டு குடுத்திராத….எனக்கு இந்த வேலை ரொம்பவும் முக்கியம் “ என்ற மன்றாட்டோடு.

இவளிடம் கேலி கிண்டலாக பேசி மகிழும் மாணவ மாணவியர் கூட வெறும் அஃபீஷியல் பேச்சளவிற்கு நிறுத்திக் கொண்டனர். ப்ராக்டிகல்ஃஸ் மார்க்  ஹெ.ச் ஓடி கையிலும் இருக்கிறதே…இப்பொழுது இவள் அவர் ஆளாயிற்றே!

சிடுமூஞ்சி நம்பர் 2 வாக இவளைப் பார்த்தது  கல்லூரி.

இவளிடம் முன்பு போல பேசிய ஒரே நபர் அந்த சுகவர்த்தன் தான். ஆம் ஹெச் ஓ டி என்ற முறையில் அவன் பேசும் அதே விஷயங்கள். அதைத் தாண்டி ஒரு கமா கூட கிடையாது.

“பாப்பா நம்ம மாப்ள தங்கமானவருமா…நிச்சயதார்த்தம் வேண்டாம்….நேரே கல்யாணம்னு சொல்லிட்டாரு…நிச்சயம்னா நமக்கு கூடுதல்  செலவு….நம்ம நிலைய அவரே புரிஞ்சிட்டு எதுக்கு தேவை இல்லாமன்னுட்டாரு….கல்யாணத்தை உடனே வைக்க சொல்லிட்டாரு..கேட்காமலே உதவுற குணம் அவருக்கு..” அப்பா அன்று வீட்டுக்குள் நுழைந்த இவளிடம் சிலாகித்தார்.

அவனுக்கு உதவும் குணமா? கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்வு ஞாபகம் வந்தது.. அனாதை ஆசிரமம், முதியோர் கல்வி இப்படி எதாவது ஒரு காரியத்திற்கென கல்லூரியில் ஒரு குழு மாணவர்கள் அவ்வப்போது பணம் வசூலித்து கொடுப்பது வழக்கம்.

அப்படி ஒருமுறை வசூலித்தவர்கள் இவனிடம் கேட்க, இவன் கடித்து குதறிய விதத்தில் அந்த பழக்கத்தையே விட்டுவிட்டனர்.

இப்பொழுது இவர்கள் வீட்டிற்காக அவன் உதவுகிறானாமாம்?…கருமி நிச்சயதார்த்தம் என்றால் அவனுக்கும் தானே செலவு..அதனால் நிறுத்தி இருப்பான்.

“நீங்க வேறப்பா…..நிச்சயம் அப்புறம் கல்யாணம்னா அவர் இன்னும் எவ்ளவு நாள் காத்திருக்கனும்….இதுன்னா பாப்பா உடனே அவர் வீட்டுக்கு போயிடும்ல….” அவித்த பாசி பயிறை அப்பாவுக்கு கிண்ணியிலிட்டு நீட்டிய மூத்த அக்கா யாழினி சொல்ல “காதல் படுத்தும் பாடு…”அப்பா  ஆனந்தமாக சொல்லி சிரித்தார்.

தலையை குனிந்து கொண்டாள் மகிழினி. காதலா? அழுகை அடைத்துக் கொண்டு வந்தது. இவள் சம்மதம் அறிந்த முதல் நாள் அவன் முகத்தில் வந்த சிறு ஆர்வத்தை தவிர இன்றுவரை அவன் அதே சிடுமூஞ்சி தான்.

திருமணம் ஒரு மாதத்தில் என முடிவாகியது.

ப்பொழுது எல்லாம் வகுப்பு நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் தனிமை தான் கல்லூரியில். அவளது ப்ரிய கவிதை தொகுப்புகளில் தலையை நுழைத்துக் கொள்வாள் மகிழினி. நெருப்பு கோழி உதாரணம்.

அன்றும் அப்படிதான் கவிதை மழையில் நனைந்து கொண்டிருந்தாள்.. அழைத்த அலை பேசியை யார் என பார்க்காமல் இணைப்பை ஏற்க இறங்கியது இடி.

அவளது அப்பா இறந்துவிட்டார்.

Next Page