பொழியதோ ஆனந்த சுக மழை (2)

ப்படி வீடு சேர்ந்தாள், என்ன நடந்தது தனக்கு என தெரியாமல் கடந்தது மூன்று நாள் அவளுக்கு.

அவளுக்கு சற்று சுயம் புரியும் நேரம், வீட்டில் மற்றவர்கள் பேசிமுடிவெடுத்து அந்த வார இறுதியில் நடந்தேவிட்டது திருமணம்.

“பாப்பா புத்திசாலியா நடந்துக்கோ பாப்பா…அக்காங்க நாங்க ரெண்டு பெர் இருக்கோம் தான்…ஆனால் சொந்தம்னா இனி அவர்தான்…..” இரண்டாம் அக்கா குமுதினி சொல்லி அனுப்பி வைத்தாள் அவனோடு.

இவள் அவன் வீடு நோக்கி கிளம்ப அக்காக்கள் அவர்கள் ஊரை நோக்கி….அதிக விடுமுறை எடுத்திருந்ததால் இதற்குமேல் தங்க முடியாது அவர்களால்.

த்தனை ஏமாற்றமும் சேர்ந்து ஏனோ அவன் மேல் கோபம் பொத்துக் கொண்டு  வந்தது மகிழினிக்கு. அவன் மனம் வலிக்க ஏதாவது செய்ய வேண்டும் என ஒரு வேகம்.

“நான் இனி வேலைக்கு போகமாட்டேன்…” காரில் வைத்தே அறிவித்தாள். அவனோடு அவள் பேசிய முதல் சொந்த விஷயம்.

“சரிமா…உன் இஷ்டம்…எதுனாலும் யோசிச்சு நிதானமா செய்…வீட்ல போய் பேசுவோமே…” பார்வையால் டிரைவரைச் சுட்டிக் காண்பித்தான்.

இவள் எதிர் பார்த்தது போல் அவன் எகிறாததே அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

மெல்ல அவள் வலக் கையை பற்றிய அவன் இடக்கரம் அவள் கையை அவனது வலகரத்திற்கு கொடுத்தது.

தன் இரு கைகளாலும் அவள் கையை தன் கைகளுக்குள் பொக்கிஷப் படுத்தினான்.

ஏனோ கோபம் எரிச்சல் எதுவும் வரவில்லை அவளுக்கு,மாறாக அழுகை வந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

இப்பொழுது அவன் முகம் வித்யாசமாக தெரிந்தது. அவன் கண்களில் அவள் பார்வை கலந்தது. தாய்மை உணர்வு வலிக்காமல் வருடியது அவளது வலித்த இதயத்தை.

“அப்பா…” வெடித்தாள் அவள்.

ன்று இரவு ஆழ்ந்து உறங்கினாள் வெகு நாளைக்கு பிறகு. மீண்டும் அவளுக்கு முழு விழிப்பு வந்து எழுந்த போது முழுதாக 36 மணி நேரம் முடிந்திருந்தது அவள் தூங்கத்தொடங்கி.

எழுந்த போது முன்னைவிட மனம் பெரிதும் தெளிந்திருந்தது.

பசி புரிய எழுந்து பல் துலக்கிவிட்டு படுக்கை அறையை விட்டு வெளியே வர எங்கிருக்கிறோம் என புரியவில்லை.

உள்ளே நுழைந்தபோது அவள் வீட்டை கவனித்திருக்கவில்லை. இப்போது இது யார் வீடு என புரியவில்லை.

அதன் சுத்தம். அழகு. எதிலும் பெர்பெக்க்ஷன்.

அப்பொழுதுதான் அவள் வந்ததைப் பார்த்தவன் “ ஏய் மணிப்பொண்ணு என் சின்னபொண்ணு வந்தாச்சு பாரு…” என உள்ளே பார்த்து குரல் கொடுத்துவிட்டு இவளைப் பார்த்து “உட்காருமா” என்றான்.

தலை சுற்றியது அவளுக்கு. முந்திய நாள் சாப்பிடாததால் அல்ல, அவன் பேசிய விதத்தில்தான்.

இன்னுமாய் கிர் ரென தலை சுற்றியது உள்ளிருந்து வந்த மணிப்பொண்னை பார்த்துவிட்டு. இவள் ஒரு சிறு பெண்ணை எதிர்பார்க்க கையில் பதார்த்தங்களுடன் வந்ததோ ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி.

“நாந்தான்மா இவிய பிறக்கும் முன்ன இருந்தே இந்த வீட்டில சமையல்….இவரு பிறந்ததும் இவிய அம்ம….இவியளை என்கைல குடுத்துட்டுதான் கண்ண மூடுனாவ…அப்போ இருந்து எல்லாம் நாந்தான் பார்துகிட்டேன்…இப்போ வயசாயிட்டுனு சின்னவரு இந்த கிழவிய சமைக்க விடுறது இல்ல…இருந்தாலும் சின்ன மருமக வந்துருக்கிய…அதான் இன்னைக்கு நான் சமச்சேன்…நேத்தே வந்திருப்பேன்…இவிய இந்தபக்கம் யாரையும் வரவே விடல…”

அவர் முகபாவம் நேற்றை பத்தி அவர் என்ன நினைக்கிறார் என புரிவிக்க குனிந்து கொண்டாள்.

சிறு மௌனத்துக்கு பின் “வேலக்காரி அதிகமா உரிமை எடுக்கிறேன்னு தோணிச்சுன்னா…மன்னிச்சுகோமா…” மூதாட்டி சொல்ல இவள் மௌனம் தவறாக புரிய தொடங்குவது புரிய “ அப்படி எல்லாம் இல்ல பாட்டி” என்றாள் வேகமாக.

“வெட்க பட்டியளா…படுங்க…படுங்க…” அவர் சொல்லியபடி அடுப்படி நோக்கி நடக்க இவள் முகம் பார்த்தவன் கண்களில் நன்றி உணர்ச்சி.

“படிக்காதவங்க தான்…ஆனா என்னை அம்மா முகத்துக்காக ஏங்கவிடாம பார்த்துகிட்டவங்க….அளவுக்கு மீறி நம்ம விஷயத்தில் மூக்க நுழைக்கமாட்டாங்கதான்…இங்கயே எப்பவும் இருக்க மாட்டாங்க…பக்கத்தில் கெஃஸ்ட் ஹவுசில் தான் இருப்பாங்க…ஆனா உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லுடா…நான் வேற ஏதாவது ஏற்பாடு செய்றேன்…” கிட்டதட்ட அவன் கெஞ்ச இவளுக்கு ஆச்சர்யம்.

ஒரு வேலைக்காரிக்காக இவன் கெஞ்சுகிறான். அன்று உதவ போன மாணவர்களை எத்தனையாய் கொதித்தான்?

இன்னும் இவள்முகத்தை தவிப்போடு அவன் பாத்திருக்க, பதில் சொன்னாள் “ எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்ல…”

“ஆனால் ப்ரச்சனை ஆனா என்ட்ட கண்டிப்பா சொல்லு..”

“உங்கட்ட சொல்லாம யார்ட்ட சொல்லுவாவளாம்?, அதெல்லாம் சொல்லாமலே வந்துரும் ….பசிச்ச பிள்ள பாலுக்கு பெத்தவ மடி தேடுத மாதிரி பொம்பிள மனம் ஒரு கஷ்டம்னா கட்டுனவன தான் தேடும்…” தன் வருகையை அறிவித்தபடியே மீண்டுமாய் உணவு மேஜை நோக்கி வந்தார் அந்த முதியவர்.

மொழியும், பாலும், படிப்பும் அம்மூதாட்டிக்கு தன் தந்தையிடமிருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்த மணிப்பொண்ணின் அருகாமை அவளுக்கு தன் தந்தையின் அருகாமையை நினைவு படுத்தியது.

இவள் சாப்பிட்டு எழுந்திருக்க, அவனோ “அப்படியே போய் படுக்காத நீ…கொஞ்சம் நடந்துட்டு அப்புறன் வேணும்னா படுத்துக்கோ….வீடை 2தடவை சுத்திட்டு…” அவன் சொல்லிக் கொண்டிருக்க, “இது உங்க வீடுதானா?” தயங்கி கேட்டாள்.

ஒரு சிறு அதிர்வுக்கு பின் சிரித்தபடி சொன்னான். “இல்ல நம்ம வீடு..” அதிசயம் அவன் சிரிக்கிறான். வீட்டை பார்வையால் துளாவினாள். பெரிய வீடு. இவளது அவனைப் பற்றிய கற்பனைக்கு இவை எதுவும் பொருந்தவில்லை.

“வா வீட்டை காண்பிக்றேன்…” எழுந்தவன் உடையை அப்பொழுதுதான் பார்த்தாள். முட்டி வரை நீண்டிருந்த சாம்பல் நிற ஷாட்ஃஸ். ஸ்லீவ்லெஃஸ் டி ஷர்ட்.  பின் கல்லூரிக்கு ஏன் அப்படி ஒரு கோலம்? வீட்டில் அணிவதில் செலுத்தும் கவனத்தில் பாதி கவனத்தை கூட அவன் கல்லூரிக்கு வரும் உடையில் செலுத்தவில்லை. ஏன்?

வீட்டில் ஒரு அறை முழுவதும் புத்தகங்கள். ஆசையாய் ஆராய்ந்தால் இவள் விரும்பும் துறையில் எதுவும் இல்லை. மருந்துக்கு கூட ஒரு கதை புத்தகமோ, கவிதை தொகுப்போ..ம்கூம்… பயோ கெமிஃஸ்ட்ரியும், நிர்வாகமும், முந்திரி தோப்பும் அங்கிருந்த புத்தகங்களின் கரு கொடுத்திருந்தன.

படிப்ஃஸ்.

இவன்ட்ட இதை எதிர்பார்த்ததே தப்பு இல்லையா?

வளோடு நூலக அறைக்குள் வந்தவன் இவள் நூல் ஆராயும் நேரம் தரை தளத்திலிருந்து அழைத்த தொலைபேசி அழைப்பை ஏற்க சென்றான. அவன் மீண்டும் உள்ளே வரும் போது உச்ச ஃஸ்தாதியில் அலறியபடி துடித்துக் கொண்டிருந்தாள் மகிழினி.

புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தவள் கவனமின்றி அருகிலிருந்த மேஜையிலிருந்த ஒரு பாட்டிலை தட்டிவிட அது விழுந்து சிதறியது.

பதற்றத்தில் அதை கையில் எடுக்க தொட்ட பின் தான் புரிந்தது அது ஏதோ அமிலம் என.

“ஹேய்.”. பதறியபடி வந்தவன் இவளுக்கு தேவையான முதலுதவி செய்து, மருத்துவமனை கொண்டு சென்று மருத்துவமும் செய்து வீட்டிற்கு வந்த பின்புதான் சிறிது அமைதி பட்டான்.

இத்தனைக்கும் அவளுக்கு சிறு காயம் விரல் நுனிகளில். ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்டுவிட்டான் இதற்குள்.

“லேபில் ஆசிட் காலி….கெமிகல்ஃஸும் ஷாட்டேஜ்…வாங்கித்தர மேனேஜ்மென்ட் டிலே செய்றாங்க…அவசரத்துக்குன்னு இதை வாங்கி வச்சிருந்தேன்….இப்படி ஆயிட்டு…”

அவன் புலம்பலில் அவனது இன்னொரு முகம் பார்த்தாள். சந்தேகம் கேட்பவர்களை திட்டுபவன்…அவர்கள் நலனுக்காக இதை ஏன் செய்ய வேண்டும்?

“பாப்பா தலைக்கு எண்ணெய் வெச்சு நாள் கணக்காச்சு போல…, அலபறந்து கெடக்கு….இந்த நேரத்தில உடம்பு ரொம்ப சூடாயிரும்…இத தேய்ச்சு தலை இழுக்கேன்..சூடு கொறயும்.” மணிப்பொண்ணு எதோ ஒரு எண்ணெயுடன் வந்து நின்றார்.

அவர் இவள் நீண்ட கூந்தலை எண்ணெயிட்டு பின்னலிட பார்த்திருந்தவன் பாதியில் வந்து நின்றான் “மணிப்பொண்ணு எனக்கு சொல்லிகொடு…நானும் பழகனும்…”

“எதுக்காம்…இந்த கிழவி இருக்கிறப்ப நீங்க ஏன் இத செய்தவிய?” அவர் மறுக்க

“நான் என் சின்னபொண்ணோட நாளைக்கு மலை வீட்டுக்கு போறேன்…அங்க இத யார் செய்வாங்களாம்..?”

”இதை இப்படி வச்சு, இத இப்படி செய்தா இப்படி வரும்…” மணிப் பொண்னு இவள் கூந்தலில் அவனுக்கு பாடம் நடத்த கவனமாக கற்றுக் கொண்டான் கணவன்.

வார்த்தை மாறாமல் மறுநாள் அவளை மலை வீட்டுக்கு கூட்டிப் போனவன் கிளம்பும் போதே இவளுக்கு தலை வாரி பின்னலிட்டான். ஜீனும் டீ ஷர்ட்டும் ரிபோக்குமாக வந்திருந்தான் அவன்.

லைவீடு என்பது வெறும் வீடு அல்ல என்பது அங்கு போனபின்புதான் புரிந்தது. முந்திரி தோப்பும் மாந்தோப்பும் சூழ்ந்த பழத்தோட்டம் அது. நூறு ஏக்கராவது இருக்கும். அதற்கு நடுவில் இருந்தது அவ்வீடு.

“அப்பா பிஃஸினஃஸ் இதுதான். அப்பா என் பதினேழு வயசில தவறிட்டாங்க…ஆனா நம்பிக்கையான வேலை ஆட்கள்…ப்ரச்சனை இல்லாம ஓடுது. எனக்கு .வெறும் மேனேஜ்மெட் வேலைதான்…முழு நேரமும் இங்க இருக்கனும்னு அவசியம் கிடையாது…ஆனா ஊரைவிட்டுட்டு எங்கயும் தூரமா போக முடியாது…அதான் பக்கத்திலேயே படிச்சிட்டு…பக்கத்து காலேஜிலே வேலை பார்ப்பது..”

அவன் சொல்ல சொல்ல லெஷர் டைமில் லேப்டாப்பில் அவன் என்ன செய்தான் என்பது இப்போது புரிந்தது. 17 வயதிலிருந்து படிப்பையும் தொழிலையும் கவனித்திருக்கிறான். எதிலும் சோடை போகவில்லை.

‘லேப்டாப் காலேஜில் குடுத்தது’  ஃஸ்டூடன்ட்ஸ் கமெண்ட் ஞாபகம் வந்தது.

இவ்வளவு வசதி இருப்பவன் கல்லூரியில் ஏன் இப்படி..?

“கொஞ்ச நேரம் ரெஃஸ்ட் எடுத்துட்டு சுத்தி பார்க்க போலாம்…” அவன் சொல்ல சம்மதமாக தலை ஆட்டினாள்.

“உங்கட்ட ஒன்னு கேட்கனும்..” அவள் கேட்க

“சொல்லுமா…”

அவன் புருவம் உயர்த்திய விதம் ஆர்வம் அழகு.

“உங்களுக்கு ஏதாவது லவ் ஃபெயிலியரா..?.”

மென்மையாக அவள் வாய் பொத்தினான்.

“முதல் முதலா என்னை பத்தி கேட்கிற, .பாஃஸிடிவா கேளேன்…”

“இல்ல சொல்லுங்க தப்பா நினைக்க மாட்டேன்…” அவன் கையை மெதுவாக விலக்கிவிட்டு ஆர்வமாக இவள் கேட்க

“இல்லமா அப்படி எதுவும் இல்ல…இன்னைக்கு ஒருநாள் டைம் கொடேன் நாளைக்கு இதப்பத்தி தெளிவா சொல்றேன்….”

றுநாள் கல்லூரிக்கு அவன் கிளம்பி நின்ற கோலத்தில் இமைக்க மறந்தாள் மகிழினி. நேர்த்தியான உடை. ரிம்லெஃஸ்…செதுக்கப் பட்ட சீரான மீசை.

காலேஜ் சென்றடைந்தார்கள்.

இரண்டாம் பீரியட். லேபின் உள் அறையில் உட்கார்ந்து இருந்தாள் மகிழினி.

இவள் அங்கு இருப்பது தெரியாமல் இரண்டு மாணவர்கள் உரையாடுகிறார்கள்.

“நீ முன்னால சொன்னப்ப நம்பவே முடியல மாப்ள… உண்மையிலேயே கோணகண்ணன்…சரி சரி முறைக்காத…உன் அண்ணன் ஃப்ரெண்ட் அந்த ஏ.எஸ் சூப்பராத்தான் இருக்கார்…இன்னைக்கு ஒழுங்கா அவர் சைஸில் டிரஸ் போட்டு ரிம் லெஸ் போட்டு…” ஒருவன் சிலாகிக்க..

“இதெல்லாம் ஒன்னுமே கிடையாது…அவரை காலேஜ் டேஃஸில் பார்த்திருக்கனும்..12பி ஷாம் மாதிரி இருப்பார் பார்க்க….எங்க வீட்டுக்கு கூட வந்திருக்கார்…நானே பார்த்திருக்கேன்…ஹிப்பாப்….சூப்பரா ஆடுவார்…ஃபுட்பால் ப்ளேயர்…..அவர் ஸ்பீச்….அவர் கார்னு அவருக்குன்னு பெரிய ஃபஅன்ஸ் கூட்டமே உண்டு… எங்க அண்ணா சொன்னான்…அவர்ட்ட ப்ரோபஸ் பண்ண ஒரு பொண்ணு சூசைட் அட்டம்ட்…பிழச்சிட்டா…இருந்தாலும்…இங்க நம்ம டிபார்ட்மென்டில் கேர்ள்ஸ் அதிகம்னு …தேவை இல்லாம யார் கவனமும் தன் மேல வர கூடாதுன்னு…இப்படி…

உனக்கு தான் தெரியுமே …அவர் வந்த புதுசில இருந்து இந்த வர்ஷா க்ரூப் செய்ற அட்டகாசம்…இப்ப வரைக்கும் டவுட்னு ….தேவை இல்லாம போய் அவர் முன்னாடி நின்னுட்டு வந்து…ஏதாவது கதை சொல்லுங்க அதுங்க…அவர் திட்ட ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சம் குறச்சிருக்குதுங்க அந்த குரங்குங்க அட்டகாசத்தை…அதுமாதிரி கேன எதுவும் அவர்ட்ட போய் ஐ லவ் யூன்னு ஆர்பாட்டம் செய்துட்டுன்னா….

அந்த கௌதம் க்ரூப்…எப்ப பார்த்தாலும் இதையும் அதையும் சொல்லி பணம் கலெக்ட் பண்ணி டாஃஸ்மார்க் போவாங்க….அப்படி ஒரு நாள் அவனுங்க பணம் கலெக்ட் செய்து கொடுக்கிறதா சுகா அண்ணாட்ட சொன்ன ஹோம்… அவரே நடத்துற ஆர்ஃபனேஜ்… அவருக்கு இவனுங்க தில்லாலங்கடி புரிஞ்சு பிடிச்சு  மிரட்டின மிரட்டலில் வாலை சுருட்டிட்டு கிடக்காங்க…ஆனாலும் சுகா அண்ணா அவங்கள மாட்டிவிடல பார்த்தியா…இல்லனா மேனேஜ்மென்ட்…டி.சி குடுத்துருக்கும்…

அண்ணா எப்பவும் ரியல் ஹீரோ தெரியுமா…?

ஏய் சார் வரார்…” அவர்கள் பேச்சை முடித்துக் கொள்ளவும் இவளிருந்த அறைக்குள் அவன் நுழையவும் சரியாக இருந்தது.

“இ..” அவன் எதைச் சொல்ல தொடங்கினான் என மறக்க வைத்தது மகிழினி தந்த சத்தமற்ற முதல் முத்தம் அதன் துணையான மெல்லணைப்பு.

சில நொடிகளில் மெல்ல விலகியவளை பார்த்துச்சொன்னான்  “வீட்டுக்கு வா கவனிச்சுகிடுறேன்….”

மீண்டுமாய் இறுக்கி அணைத்தாள் அவனை. “ ஹேய்…இது காலேஜிடி ஆனந்தி…இவ்ளவுநாள் அடக்கி வாசிச்சு சம்பாதிச்ச பேரை தாரை வார்த்துடாத..”

மெல்ல விலகி அவனைப் பார்த்தாள்.

“மகிழினி…ஆனந்தி ஒரே அர்த்தம் தானே….அப்படி கூப்பிடலான்ந்தானே..”

ன்று இரவு அவர்களது அறை.

“வெயிட் செய்யடி ஆனந்தி..” என்றவன் “ஒரு நிமிஷம்…இது அங்க இல்லாமதான் நேத்தே பதில் சொல்லலை.” என்றுவிட்டு அருகிலிருந்த அலமாரியைத் திறந்தான்.

“ஆனந்தி…”இவளது அபிமான கவிஞர் ஆனந்தனின் கற்பனைக் காதலி.

இவள் பொழுதுகிடைக்கும் போதெல்லாம் படிக்கும் கவிதைகள் அவருக்குத்தான் சொந்தம். காவ்யாவிடம் ஆனந்தனின் ஆனந்தியைப் பத்தி இவள் சிலாகித்த  போது அவன் முறைத்ததாக நியாபகம். ஆனால் இன்று இவனுக்கு இவள் ஆனந்தியாம்…

அவரின் புத்தகங்களோடு வந்து நின்றான்.

அருகில் அமர்ந்து வாசித்தான்.

செய்ய முடிந்ததெல்லாம் செய்துவிட்டேன்

உன் முகம் பார்க்க மறுத்துவிட்டேன்

உன் மூச்சுபடா இடத்தில் ஒளிந்து கொண்டேன்

ஆனாலும்

தொலைய மறுக்கிறதே இத்துணிகர காதல்.

செய்வது திருட்டல்ல

கொண்டிருப்பது உயிர்காதல்

அடங்க மறுக்கும்

ஆண்மனம்

ஆனந்தமாய் அழுகிறதே

ஆனந்தி அடி ஆனந்தி அறிவாயோ நீ.

இது உன்னை முதல் தடவை நம்ம யுனிவர்சிட்டியில் நடந்த செமினார்ல பார்த்துட்டு எழுதினது.

யாருன்னே தெரியாத பொண்ணு பின்னால போன மனதை அடக்க முயற்சி செய்து முடியாம தவிச்சப்ப எழுதினது.

அதிர்ந்து போனாள் என்பது மிகவும் குறைத்துச் சொல்லப்பட்ட வெளிப்பாடு.

அப்படியானால் உண்மையிலேயே இவள்தான் ஆனந்தியேவா?

இந்த ஆனந்தன் எனக்காக வந்தால் எப்படி இருக்கும் என  ‘என்னவளே ஆனந்தி’ கவிதை தொகுப்பை  படித்தபோது காவ்யா கேட்டிருக்கிறாள்.

“பேராசை எல்லாம் நமக்கு கிடையாதப்பா…இந்த கவிதையை என் கூட உட்கார்ந்து படிக்கிற மாதிரி ஒருத்தன் வந்தா போதும்..”.இவள் சொன்ன பதில் இப்பொழுது மனதில் நிழலாடியது.

கண்கரித்தது.

கல்லூரி காலத்தில் அவனது முதல் தொகுப்பை படித்தபோது இந்த ஆனந்தனே தனக்கு வேண்டும் என இவள் ஆசைப் பட்டது உண்டுதான். அதற்காக ஜெபம் கூட செய்திருக்கிறாள். பின் நாட்களில் கற்பனை வாழ்வாகாது என தன்னை தானே கடிந்தும் கொண்டிருக்கிறாள். மறந்து போன ஜெபங்களை நிகழ்த்தி தரும் என் தெய்வம் யேசப்பா..!!!

 

. புத்திசாலி போதிக்க தகுந்தவன்

பதக்கமிட்டு பாராட்டியது

படிக்கும்பள்ளி அறை

படுக்கும் பள்ளி அறையோ

எள்ளி நகை ஆடியது.

 

நிம்மதி விதைத்து

தவிப்பை அறுக்கும்

காதல் பித்தன்

துயில் விற்று மையல் வாங்கும்

மதியீனன்

காலங்களை கொடுத்து

கானல் பயிர் செய்யும்

காதலன்

பட்டம் தந்தவர்கள்

பார்க்க தவறிவிட்டார்கள்

உன் பைத்தியகாரத்தனம்.

நீ காதல் பாலைவனம்!

 

சோகம் சொன்னேனென்று துடித்துவிடாதே சுகவர்த்தினி

ஆழ்ந்தெடுக்கும் என் அனைத்து மூச்சிலும் ஆனந்தி

ஆக அழுகை வலி அறிய வழியில்லை அறிவாய் நீ.

 

“இது நான் பி.எச். டி வாங்கினப்ப எழுதியது..”.

 

 

தொலைந்தாற் போன்ற நிலவு

நித்திரை கொண்ட உன் முகம்.

துயில் தொலைத்த என் மனம்

திறந்தாற் போன்ற வானம்.

திருடிய நித்திரையை

திருப்பித் தந்துவிடு

இல்லையெனில் திருமண இரவுகளில்

தூங்கப் போகிறேன் நான்

காரணம் நீயடி ஆனந்தி

இது ஒரு நாள் லெஷர் பீரியடில் நீ தூங்கியதை பார்த்துட்டு எழுதினது…

 கண் முன் விரியும் என் வானம் நீ

மையிட்ட உன் கண்கள் என் இரவு பகல்

உன் புன்னகை என் புலர் பொழுது

மலர் இதழ்கள் என் இருப்பிடம்

இரவில் பிரிவில் இறக்கிறேன் நான்

தினம் பொழுது

உன் இதழில் என் பெயர் வரும் பொழுது

உயிர்க்கிறேன் மறுபடியும்

என்னைக் கொல்வதும் கொள்வதும்

உன் சுய தொழில்

நான் மரிப்பதும் உயிர்ப்பதும்

காதல் செயல்

சுகம் விதைத்து சோகம் அறுத்தாலும்

என் காதல் நிரந்தரம்.

உனக்கு சுகம் சேர்க்காமல்

முடியாது என் ஜீவனம்.

“என்னோட புக்ஸைப் பத்தி நீ பேசுவதை கேட்டுட்டு எழுதியது….”

அவன் சொல்ல சொல்ல அழுதபடி அவன் மடி சாய்ந்தாள் மனைவியாகிவிட்ட ஆனந்தி.

இந்த மகிழினி யார் என்று தெரியவில்லையா? கதை படிக்கின்ற நீங்கள் தான். அந்த சுகவர்த்தன் உதித்துவரும் புத்தாண்டுதான்.

இதுவரை நீங்கள் கண்ட காட்சி, கனவு, சோதனை, துன்பம், இழப்பு, நம்பிக்கையின்மை எதுவானாலும், இந்த 2015 சுகம் தரும் சுகவர்த்தன ஆண்டாக அமைந்து நீங்கள் நினைப்பதற்கும் எதிர்பார்பதற்கும் மேலாக உங்களுக்கு பொழியட்டும் ஆனந்த சுகமழை. ஒன்றன் பின் ஒன்றாக தொடரட்டும் இன்ப நிகழ்வுகள்.

                There Shall Be Showers of Blessings

                                                                 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

 

20 comments

  1. Omg என்ன அருமையான எழுத்து… late ஆக படிச்சாலும் ஆனந்த சுகமழையேதான்… அருமை sweety

Leave a Reply