பெண் எனும் மங்கைக்குள்..

ப்பொழுதுதான் நைட்டியை மாற்றிக் கொண்டு தன் அறையை விட்டு வெளியில் வந்த நிலாவின் காதில் விழுகிறது வரவேற்பறையிலிருந்து வரும் டி வி நியூஸ் ஆரம்பிக்கும் சத்தம். சட்டென அவள் கண்கள் கடிகாரத்திற்குப் போகின்றன. கடவுளே மணி 9 ஆகிட்டா…? ஐயோ!!! அப்பா வரும் நேரம். பதறிப் போனவள் வீட்டின் ஒவ்வொரு அறையாய் ஓடி ஓடி நுழைந்து பார்த்தாள்.

‘எல்லா டவலும் ஒழுங்கா மடிச்சு அதது இடத்துல இருக்கா? தப்பி தவறி எதாவது ஒரு டவல் கலஞ்சு எங்கயாவது பெட்லயோ சேர்லயோ கிடந்துதோ அவ்ளவுதான்….’

‘ஓ மை காட்…. வாட்டர் பியூரிஃபயர் பக்கத்துல அப்பாவோட செம்பும் அது மேல மூடியும் ஒழுங்கா இருக்கா….?’ கிட்ச்சனை நோக்கி ஓடியவள் சமையலறையில் சிந்தியிருந்த தண்ணீரில் தெரியாமல் கால் வைக்க ஸ்கிட்டாகி அடுப்படி மேடையில் போய் இடுப்பு இடித்து நின்றாள். அவள் கை பட்டு உருண்டு விழுந்தன விளக்கி கவிழ்த்தியிருந்த பாத்திரங்களில் சில.

“ஏபிள (ஏய் பிள்ளையின் பேச்சு வழக்கு)  என்னாச்சு…?” சத்தம் கேட்டு வந்து நின்றாள் தங்கை வெண்மலர். அந்த வெண்மலரின் கண்ணில் படுகிறது இப்பொழுது இவள் கையை ஏதோ கிழித்ததால் உண்டாகி இருந்த ஃப்ரெஷ் ஊண்ட்…

”ரத்தம் வருதுபிள….” அவசரமாக வந்து இவள் கையை பிடித்தாள்.

“ஸ்ஸ்ஸ் அப்பா வர்ற நேரம்….இப்ப போய் இத பேசிகிட்டு……” அவசரமாக தன் கையை தங்கையிடமிருந்து உருவிக் கொண்ட நிலா “நல்லவேளை நான் கால் வச்சு வழுக்கினேன்…இல்லைனா இங்க தண்ணி கிடக்கதே தெரிஞ்சிருக்காது…அப்பா மட்டும் இந்த தண்ணிய பார்த்திருந்தாங்களோ…?”. சொல்லியபடி ஓடிப் போய் மேட்டை எடுத்துப் போட்டு தரையில் கிடந்த தண்ணீரை துடைத்தாள்.

‘நேத்தே லிக்விட் ஹேண்ட் வாஷ் கம்மியா தெரிஞ்சுதே…..அப்பா வரவும் அந்த வாஷ்பேசின்ல தான் போய் நிப்பாங்க…’ இப்பொழுது பாத்ரூமிற்கு ஓடியவள் மீண்டுமாய் கிட்சன் அருகிலிருக்கும் ஸ்டோர் ரூமிற்கு வந்து அவசர அவசரமாக அந்த  லிக்விட் ஹேண்ட்வாஷ் சேஷேவை எடுத்துக் கொண்டு போய் பாத்ரூமிலிருந்த அதற்கான கன்டெய்னரில் நிறைத்து வைத்தாள்.

இதற்குள் அப்பா காரின் சத்தம். ‘அச்சச்சோ வந்தாச்சு….எல்லாம் ஒழுங்கா இருக்கா…? எதாவது ஒன்னு அப்பாவுக்கு பிடிக்காத மாதிரி இருந்தாலும் போச்சு….’

இதோ  வந்துவிட்டார் அப்பா.

தன் ஷுவை கழற்றிவிட்டு உள்ளே நுழைந்த அப்பா நேராக சென்று நின்றது பாத்ரூம் வாஷ் பேசின் அருகில் தான். அடுத்த நொடி அவர் கத்திய கத்தில் நிலாவின் உடல் தூக்கி அடித்து தன் நடுக்கத்தை ஆரம்பிக்கிறது.

“கழுத அறிவுகெட்ட கழுத….மோட்டர் போட்டு தண்ணி டேங்க நிரப்பி வைக்கனும்னு கூடவா தெரியாது?…நாளைக்கு கல்யாணமாகி மாப்ள வீட்ல அதுவும் மாமியாரோட இருக்கப்போறவ…” என ஆரம்பித்த அவர் கத்தல்…..கன்னா பின்னாவென எதை எதையோ சொல்லி இவளை திட்ட தொடங்க…

கண்ணில் முட்டும் கண்ணீரும் நடுங்கும் உடலுமாய் ஓடிச் சென்று மோட்டரை ஆன் செய்கிறாள் நிலா.

அடுத்து அவளும் மலரும் என்னதான் சமாதானம் சாரி…இனி கவனமா இருப்போம் என எல்லாவகையிலும் கெஞ்சினாலும் இவள் மனம் வலித்து அழும் வரும் வரை திட்டித் தீர்த்தார் அப்பா.

ந்த போலீஸ் ஜீப் NHசில் போய் கொண்டு இருக்கிறது.

தங்கநாதன் தான் ட்ரைவர். அருகிலிருந்த டி எஸ் பி மங்கை. “ ட்ரைவர் அந்த வல்வோ பஸ் பக்கத்துல போங்க……ஏதோ சரி இல்லை…..செக் போஸ்ட்ல இதை மட்டும் செக் பண்ணாம திறந்துவிடுறாங்க…..”

“மேடம்….வேணாம் மேடம்….கட்சி கொடி இருக்குது முன்னால…” தங்கநாதன் தயங்கினார்.

“அதுக்கு?”

“மேடம்….அவனுங்கல்லாம் எதுக்கும் துணிஞ்சவங்க மேடம்….எதையும் செய்துட்டு போறாங்க….நமக்கு எதுக்கு வம்பு….விடுங்க மேடம்….”

“இப்ப அங்க போறீங்களா இல்லை நாளைக்கு டியூட்டில கோ ஆப்ரேட் செய்யலைனு மெமோ கொடுக்கவா?” மங்கையின் குரலில் உறுதி இருந்தது.

‘வந்துட்டா வந்து…நமக்குன்னு வந்து வாய்க்கா பாரு….திமிர் பிடிச்ச ராங்கி…’ மனதிற்குள் முனகியபடி ஜீப்பை அதன் அருகில் செலுத்தினார் தங்கநாதன்.

“அந்த பஸ்ஸை நிறுத்த சொல்லி இன்டிகேட் செய்ங்க…”

“ஐயோ வேண்டாம் மேடம்….”

“டூ வாட் ஐ சே…”

கீழ் படிந்தார் தங்கநாதன். வேற வழி.

பஸ் தொடர்ந்து செல்ல இங்கிருந்து மைக்கில் அறிவித்தாள் அவள் “ மெரூன் கலர் வல்வோ பஸ் டி என் 64 யு 539 உடனே பஸ்ஸை நிறுத்துங்க”

அவள் அனவ்ன்ஸ்மென்டை தொடர்ந்து அந்த வல்வோ தாறுமாறான வேகத்தில் தலை தெறிக்க பறக்கிறது.

“ச்சேஸ் தெம்….. போய் பஸ்ஸை மரிச்சு முன்னால போய் ஸ்டாப் பண்ணுங்க ஜீப்பை….”

“ஐயோ வேண்டாம் மேடம்….கொன்னே போட்டுடுவாங்க நம்மளை…” தங்கநாதன் தன் தைரியம் அத்தனையும் இழந்து போய் அலறினார்.

இதற்குள் “ஏய் போலீஸ் நாய்களா இது யாரு வண்டின்னு நினச்சுகிட்டு நாண்டுகிட்டு நிக்க வர்றீங்க….” என கத்தியபடி அந்த பஸ்ஸிலிருந்து ஒருவன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை இவர்கள் ஜீப்பை நோக்கி எறிகிறான்.

அவ்வளவுதான் “ஐயையோ நான் பிள்ளகுட்டிகாரன் மேடம்…” ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கி ஓடியே போனார் தங்கநாதன்.

ஓடிப் போன ட்ரைவரை ஒரு நொடி முறைத்துவிட்டு ட்ரைவர் இருக்கைக்கு மாறிய டிஎஸ்பி, ஜீப்பில் அந்த பஸ்ஸை துரத்திக் கொண்டு போய் …துரத்தும் போதே பஸ்ஸின் டயர்களை தன் ரிவால்வரால் ஷூட் செய்து , பஸ்ஸை நிறுத்த செய்து….குறுக்காக வழி மறித்து… உள்ளிருந்த அந்த இரு தடியன்களை ரிவால்வர் முனையில் நிறுத்திய போது பக்கத்தில் வந்து கொண்டிருந்த சில கார்காரர்கள் இவளுக்கு துணையாக வந்துவிட்டனர்.

அன்று பிடிபட்டது  எலெக்க்ஷனில் தன் கட்சிக்கு ஓட்டு போட சொல்லி மக்களுக்கு விநியோகிக்க அந்த கட்சிகாரர்கள் கொண்டு சென்ற பலகோடி பணம்.

இரவு தன் வீட்டிற்கு வந்த டிஎஸ்பி மங்கை தன் அறைக்குள் சென்று ரெஃப்ரெஷ் செய்து நைட்டியை மாற்றி வெளிவர, டிவியில் நியூஸ் சத்தம்.

‘ஐயோ அப்பா வர நேரமாகிட்டு…’ எந்த ரூமிலும் டவல் கலஞ்சு கிடக்கலையே ஓடத் தொடங்கியிருந்தாள் வீட்டில் நிலா என அழைக்கப்படும் மங்கை.

ரவு படுக்கையில் போய் விழுந்தாள் கையில் மொபைலுடன்.

“என்ன இன்னைக்கு என் புலிப்பொண்ணு என்னல்லாமோ செய்துருக்கு போல….டிவி நியூஸ் முழுக்க நீதான்….” எதிர்முனையிலிருந்த ப்ரமித்தின்  குரலில் அத்தனை பெருமிதம் அத்தனை பாராட்டு.

“ம்…..” மென்மையாய் சற்று சிணுங்கலாய் அந்த ம். தான் தானாய் இருக்க முடிகிறவனிடம் அவளின் இயல்பில் வருகிறது அது. அடுத்த மாதம் இந்நேரம் அவனது மனைவியாய் அவன் அருகில் இருப்பாள் இவள்.

“வீட்டுக்கு வர்ற வரைதான் ஹயர் அஃபீஷியல்ஸ் ப்ரெஸ்ஸ்னு பிஸியா இருந்திருப்ப….வரவுமாவது என்ட்ட பேசியிருக்கலாமில்ல நிலாகுட்டி…..நியூஸ் கேட்டதுல இருந்து உன்ட்ட பேச வெயிட் பண்ணிட்டு இருக்கேன்….” ஆஃபீஸ் அவர்ஸில் அவனுடன் பேசும் வழக்கம் இவளுக்கு கிடையாது. அது சரியாய் வராது.

“அதுக்கில்ல ப்ரமித்….நான் வீட்டுக்கு வர்றப்ப மணி 9, அப்பா வர்ற நேரம்….உங்களுக்கே தெரியும்….அம்மா இறந்ததுல இருந்தே அப்பா வீட்டுக்குள்ள நுழையுற நேரம் எடுத்தெதுக்கெல்லாம் கோபபட்டு கத்துவாங்க……இப்ப நம்ம எங்கேஜ்மென்டுக்கு பிறகு அது இன்னும் அதிகமாயிட்டு…..என்னை இப்பவே அப்பா மிஸ் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க….” இப்பொழுது இவள் குரல் தளுதளுக்க ஆரம்பிக்கிறது.

“அதுவும் அப்பாவுக்கு செகண்ட் அட்டாக் வந்த பிறகு அவங்க கத்துனாலே எனக்கும் மலருக்கும் ரொம்ப பயமாயிருக்கு….பிபி எங்க ஏறுமோ…? என்ன ஆகுமோன்னு ஒரே டென்ஷன்…..அதான் எல்லாத்தையும் பார்த்து பார்த்து எடுத்து வச்சுட்டு இருந்தேன்…..ஸ்டில் நேத்து அப்பா கத்தி தீர்த்துட்டாங்க….ஆனா இன்னைக்கு எதுவும் சொதப்பலை…அப்பா தூங்க போயாச்சு….நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்….” இப்பொழுது முழு மகிழ்ச்சி அவள் குரலில்.

“ ஓ இப்படித்தான் நான் வெளில புலினாலும் வீட்ல எலிதானாங்கும்னு ஏமாத்தி வச்சிருக்கியா அந்த சின்ன பையன?….அத்தான் சார் நீங்க ஒரு ராட்சசிட்ட ஏமாந்துட்டீங்க சொல்லிட்டேன்….”  இவள் பெட்டிற்கு பக்கவாட்டிலிருந்து மலரின் குரல்.

“ஏய் கழுத எப்ப உள்ள வந்த நீ…?….அவர் உனக்கு சின்ன பையனா? “  தன் தங்கையை துரத்த தொடங்கி இருந்தாள் மங்கை.

6 comments

Leave a Reply