பூந்தோட்டத்தில்…(2)

ல்லூரியின் இரண்டாம் ஆண்டு தொடங்கியது. வழக்கமான உற்சாகத்துடன் நாட்கள் நகர்ந்தன. திடீரென அன்று தான் கவனித்தாள் மாலை அவள் கல்லூரி பேருந்தினை  பைக்கில் தொடர்ந்தான் அவன்…நவீன்.

தினமும் இது தொடர….மீண்டும் மனம் சலனம்.

அப்பாவிடம் சொல்லி தனது காரில் கல்லூரி செல்ல தொடங்கினாள் மஹிமா. டேவிட் தாத்தா தான் டிரைவர். இவள் விரும்பிய நேரத்திற்கு கிளம்பலாமே……

சில நாள் சீக்கிரமாக…சில நாள் தாமதமக என கல்லூரியிலிருந்து கிளம்பினாள். நவீனும் தொடரவில்லை.

ஆனால் அன்று இவள் வகுப்பறையைவிட்டு வெளியே வரும் நேரம் பார்வையாளர்கள் பகுதியில் அவன்.

லூசாடா…நீ….யாராவது பார்த்தால்….கொன்னு புதச்சிடுவாங்க….வீட்ல..

நிமிராமல் நடந்து அவனை கடந்தாள். “மஹி…” மென்மையாய், தவிப்பாய் அவன் அழைத்த அழைப்பை தாண்டிச்செல்வது அவள் எதிர்பார்த்ததைவிட கஷ்டமாக இருந்தது. யேசப்பா பலம் தாங்க….ஹெல்ப் மீ.

அடுத்த வந்த நாட்களில் இவள் காரை பின் தொடர்ந்தான் அவன்.

 

ன்று காலை வகுப்பறையில் தன் இடத்தில் சென்று அமர்ந்தவள், மேஜைக்கு அடியிலிருக்கும் செல்ஃபில் தன் உடைமைகளை வைக்க முனைந்தாள் கையில் தட்டியது எதோ.

எடுத்துப் பார்த்தால் கடிதம். அவன் தான்.

கண்ட நாள் முதல் காதல் மழை

உன் நினைவு ஜுரம்

அடிமை சாசனம் அகம் புறம்.

உன் கண் மறுப்பால், சொல் வெறுப்பால்

கசையடி நிதம்;

என் மனம் ரணம்;

வேண்டாம் விலகு என்றது அறிவு

அது அடிபணியாத ஆண்மன நிகழ்வு

பெண்ணவளை காணாமல், 

பிறை அவள்

பேசும் மொழி கேளாமல்

இனி ஓர் நாள் இங்கு உன்னுடன்

நானில்லை என்கிறது உயிர் உட்புறம்.

தவம்.

கவிதைக்கு கீழாக

ஒரே ஒரு 2நிமிஷம் பேசுறதுக்காக இங்க தினம் வாரேன்…தயவு செய்து டைம் கொடு மஹி

என்ற கெஞ்சல்.

கவிதை எழுதுவியாடா…? கள்ளா!!!

 

ன்று மாலை, சிடு சிடு முக பாவத்துடன் அவன் நோக்கி சென்றாள் மஹிமா. கல்லூரி வாயிலில் நின்றிருந்தான் அவன்.

“என்ன இப்படி தொந்தரவு செய்றீங்க….? என் அப்பாட்ட சொன்னா….ஆள் இருந்த தடமில்லாம செய்திடுவாங்க….உடனே ஊர் போய் சேருங்க…”

“அத செய் முதல்ல….உங்கப்பாட்ட சொல்லு….செத்தா இந்த தொல்லை முடிஞ்சிடும் தானே…”

“………………”

“சென்னைல இன்ஃபோஸிஸில் வேலை பார்த்துட்டு இருந்தேன்…உன்ன பார்க்காம முடியல….அங்க ஜாப ரிசைன் செய்துட்டு இங்க ஒரு சின்ன கம்பனில வந்து ஜாய்ன் செய்துருக்கேன்…புரிஞ்சிகோ மஹி….”

“…………………..”

“எனக்கும் மானம் ரோஷம் எல்லாம் இருக்குது…ஆனா உன் முன்ன…தோத்துடுறேன்டா…”

“…………”

“சரி…எதுவும் எப்படியும் போகட்டும்…எனக்கு முடிவா பதில் சொல்லிடு மஹி…இதுக்கு மேலயும் இழுபட தெம்பு இல்ல…”

இவ்ளவு நாள் நான் சொன்ன பதில் புரியலையாமோ…பதில் கேட்கிற….நோன்னு சொன்னா ஒத்துப்பியா…..???

“நவீன் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல….உங்க அழகுக்கு நான் சரி வர மாட்டேன்…..எனக்கு விட்டலிகோ….சீக்கிரம் உடம்பெல்லாம் பரவி….பார்க்க சகிக்காம….”

அவள் பேச்சை முடிக்கவில்லை…. “நீ எப்படி இருந்தாலும் எனக்கு தேவதை தான்…” விடுவிடென்று சென்றுவிட்டான்.

அடுத்து இருநாட்கள் அவன் கண்ணில் படவில்லை.

என்னவாயிற்று….?? தவியாய் தவித்துப்போனாள் மஹிமா.

மூன்றாம் நாள் கல்லூரி வாசலில் முகம் மற்றும்  கையில் கட்டுடன் அவன்.

“ஹேய்…..என்னாச்சு…நவீன்…?” பதற்றமும் தவிப்புமாக அவனிடம் ஓடினாள். அதற்குள் கண்கலங்கி நீர் கொட்ட தொடங்கியது இவளுக்கு…

“என் அழக பத்தி சொன்னல்ல….அதான்….அத அழிச்சுகிட்டேன்….சீக்கிரம் ஆறிடும்னு டாக்டர் சொல்லிட்டாங்க…பட் தழும்பு இருக்கும்  நாம வாழ்ற காலம் முழுவதும்….எல்லாத்திலும் நாம் ஒன்னு….”

சகலமும் ஸ்தம்பித்தது அவளுள். மொத்தமாக அதிர்ந்துபோய் நின்றிருந்தாள் மஹிமா. அவன் முகம் பார்க்க முடியாமல் கண்மறைத்தது கண்ணீர்.

“பாப்பா….டிரைவர் தாத்தா கூப்பிடும் சத்தம் கேட்க “நாளைக்கு….” சொல்லிவிட்டு ஓடினாள்.

 

வீட்டில் அவளறையில் முதலில் வெகு நேரம் அழுதாள் மஹிமா. அவளுக்கு விட்டலிகோ எதுவும் கிடையாது….விளையாட்டாய் இவள் சொல்லப்போய்……என்ன செய்துவிட்டு வந்துவிட்டான் அவன்? நினைக்கவே நெஞ்சம் பதறியது. குற்ற மனப்பானமை குமுறியது.

நாளை தன் காதலை அவனிடம் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று ஒருவாறு முடிவு செய்துகொண்டாள். வாழ்நாளுக்குமவன் மகிழ்ச்சிக்காகவே இவள் இனி. அதன்பின் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் அப்பா இந்த காதலை பின்னாளில் எப்படி ஏற்பார் என்ற அடுத்த தவிப்பு குழப்பி கும்மி அடித்தது.

“என் மகளும் என் அம்மாவும் எனக்கு இவதான்….” அப்பா அடிக்கடி இவளைப்பற்றி சொல்லுவது நினைவு வந்தது.

தூத்துக்குடியில் சில உப்பளங்களும், இரு கப்பல்களும் இவர்களுக்கு சொந்தம். அதற்கு நிகராக இருக்குமே அப்பாவின் எதிர்பார்ப்பு…?

நவீனை எதாவது பிஸினஸ் தொடங்க சொல்லவேண்டுமோ…?

வீட்டின் பின்வாசலில் சென்று அமர்ந்து தோட்டத்தைப் பார்த்தவாறே யோசித்துக்கொண்டிருந்தாள். யேசப்பா….எனக்கு ஹெல்ப் பண்ணுங்க…சின்ன வயசில இருந்து எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்டு நீங்கதான்….நான் இப்பவும் பெரிய முடிவெல்லாம் எடுக்குற அளவு பெரிய ஆளா ஆகிட்டனான்னு தெரியல…..ஆனா நிச்சயம் இது என் வாழ்க்கையில ரொம்ப பெரிய முடிவுதான்…என்ன செய்யனும்…எப்படி செய்யனும்….சொல்லுங்களேன்….

“ம்…இப்ப சொல்லு தயாளா….உங்களுக்குள்ள அப்படி என்னதான் ப்ரச்சனை…. அங்க இருந்து பேசினா வேற யார் காதுலயும் விழுந்திடும்…இப்ப சொல்லு….”

இவள் பின் வாசலில் இருக்கிறாள் என தெரியாமல் அதற்கு அருகில் இருந்த அறையில் இருந்து அப்பா தன் முதல் தம்பி தயாளனிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

தயாளன் சித்தப்பா வந்துருக்காங்களா….? அவங்கள வாங்கன்னு கூட சொல்லாம இவள்….பேசி முடிச்சிட்டு வரட்டும்…

அவர்கள் பேசுவது தன் காதில் விழக்கூடாது என எழுந்தாள் மஹிமா.

“ரொம்ப விரும்பிதான கிறிஸ்டிய கல்யாணம் செய்துகிட்ட….அதுவும் அப்பா வேண்டாம்னு சொன்னதுக்கு தூக்க மாத்திரல்லாம் போட்ட…..இப்ப என்னடா ஆச்சு…..?”

இது நிச்சயம் மஹிமா எதிர்பார்க்காதது. தயாளன் சித்தப்பா  கல்யாணம் காதல் கல்யாணமா?

அவளால் அங்கிருந்து அசைய முடியவில்லை. தயாளன் சித்தப்பாவும் கிறிஃஸ்டி சித்தியும் அல்லிகுளத்தில்தான் வசிக்கிறார்கள். சித்தப்பா இவளிடம் பாசமாக இருப்பார்தான் ஆனால் இவளுக்கு சித்திதான் இஷ்டம்.

காரணம் சித்தியின் சில புலம்பல்களை கேட்டிருக்கிறாள். சித்தப்பாவின் நடவடிக்கைகள் சற்று நியாயமற்று தோன்றும்.

ஆனால் இது காதல் திருமணமென்றோ……அதுவும் தூக்க மாத்திரை போடுமளவிற்கு சித்தப்பா பிடிவாதம் செய்து மணந்தார் என்றோ இதுவரை இவளிடம் சித்தி உட்பட யாரும் சொன்னதில்லை. எங்கு போயிற்று அந்த காதல்…?

 

“ம்…அப்ப முதல்ல நான் கிறிஃஸ்டிய பார்த்தப்ப ….அவ என்னை ரொம்ப அவாய்ட் செய்தா… .என்னமோ எனக்கு அவ இல்லாம முடியவே முடியாதுன்னுதான் இருந்துது…. கண்டிப்பா வேற எந்த தப்பான நோக்கமும் கிடையாது…. அவள சம்மதிக்க வைக்க அவ்ளவு அலஞ்சேன்….. அவ என்னைவிட ரெண்டு வயசு மூத்தவளா….அதனால சம்மதிக்கவே மாட்டேன்னு ஒத்தகால்ல நின்னா… கல்லை கரைக்கிற மாதிரிதான் அவ மனச கரைச்சேன்… கடைசியா நம்ம அப்பா அம்மா வந்து அவங்க வீட்ல பொண்ணு கேட்டா தனக்கு சம்மதம்னு அவ சொன்னதும், அப்பாட்ட வந்து நின்னேன்… அப்பா ஒத்துகலை…அவ வீடு நம்மவிட வசதி கம்மி… அதோட அவ அப்பா சின்ன வயசிலேயே அவ அம்மாவ விட்டுட்டு போய்ட்டாங்கன்னு என்னவெல்லாமோ காரணம் சொன்னாங்க…. எனக்கு கிறிஃஸ்டி இல்லாம வாழ முடியும்னு தோணலை… அதான் தூக்கமாத்திரை… என்னை காப்பாத்திட்டு உடனே கல்யாணமும் செய்து வச்சுட்டாங்க அப்பா…..

அவ்வளவு ஆசையும் சந்தோஷமுமாத்தான் கல்யாணம் செய்தேன்….உலகத்தையே ஜெயிச்சுட்ட மாதிரி இருந்தது. ஆனா அப்புறம் கல்யாணத்துக்கு முன்ன இருந்த அந்த ஈடுபாடு…அந்த வெறித்தனமான காதல் எதுவும் இல்லை.

வாழ்கை நிறமிழந்த மாதிரி ஒரு வெறுமையான உணர்வு. ஆனா அப்புறமும் கல்யாணம் ஆகிட்டு இனி வாழ்க்கைய ஒழுங்கா வாழனுமேன்னுதான் நினைச்சேன்….அப்படித்தான் இப்ப வரைக்கும் ட்ரை பண்றேன்….ஆனா அவ என்னைவிட மூத்தவங்கிறதால அவ சொல்றத கேட்டு… அதுபடி முடிவெடுக்க எனக்கு முடியலை… என்ன டாமினேட் பண்றாளோன்னு தோணுது….. நான் டம்மி பீஃஸ்ங்கிற மாதிரி….மேல் ஈகோ ஹர்ட் ஆகுது… அதனால அவ சொல்ற எதையும் என்னால செய்ய முடியல…ஆனா அவளுக்கும் பிள்ளைங்களுக்கும் எது  நல்லதுன்னு பார்த்து தான் செய்றேன்… அவட்டயே சொல்லிட்டேன்.. .நீ எதையாவது சொன்னன்னா அதை என்னால செய்ய முடியலை….. ஆனால் அதை சொல்லாம இருந்தன்னா நானவே பார்த்து செய்து கொடுத்துடுவேன்னு… அதுக்கு அவ பயங்கரமா கோபபடுறா…. அப்படியே எங்களுக்குள்ள கேப் பெருசாகிட்டே வந்துட்டு… இப்ப அவ அவங்க ஊருக்கு போறேன்… பிள்ளைங்களோட அங்கயே இருக்கேன்…. என்னையத்தான் உங்களுக்கு பிடிக்கலையேன்னு சொல்லிட்டு போய்ட்டா……”

“சரி…..என்னைக்கு கிறிஸ்டிய கூப்பிட போறன்னு சொல்லு…நானும் உன் அண்ணியும் கூட வரோம்….”

“அது….நான் போறதா இல்லண்ணா….”

“ஏன்..?”

“அவ சொன்ன மாதிரி…அவள உண்மையிலேயே எனக்கு பிடிக்கலைதான….”

“அப்ப…இன்னொரு கல்யாணம் செய்ய போறியா….?”

“ஐயோ…இல்லனா….மூத்தவ சியோனாவுக்கு  8 வயசு ஆகுது…இப்ப போய் இப்படி பேசிகிட்டு இருக்கீங்க….”

“இன்னும் நீ அஞ்சு படிக்கிற தயாளனா இருந்திருந்தா செருப்பால அடிச்சிருப்பேன்… வளந்துட்டல்ல… மகளுக்கு வயசு 8 ஆகுதுன்னு வேற சொல்ற… அதான் அடிக்காம விடுறேன்….”

அப்பா அமைதியாக சொல்ல சித்தப்பா பதறுவது கேட்டது.

“என்னண்ணே…?”

“என்ன நொன்னண்ணே..??… மனுஷன் பல தலைமுறையா  வேட்டையாடிதான் வாழ்க்கை நடத்தினானாம்… அப்படி வேட்டைக்கு போறது பெரும்பாலும் ஆம்பிளைங்க வேலையா இருந்திருக்குது…. அந்த வேட்ட புத்தி இன்னும் ரத்தத்துல இருக்குது…. அதான் ஜீன்னு சொல்றாங்களே அதுல வருது போல…. எதாவது ஒன்னு அந்த வேட்ட புத்திய சீண்டி விட்டுதுன்னா…அத அடையாம சும்மா இருக்க முடியல இன்னும் இந்த ஆம்பிள்ளைங்களுக்கு…. அவ கிறிஸ்டி  முதல்ல உனக்கு கிடைக்கமாட்டான்னதும் உனக்குள்ள அந்த வேட்ட புத்தி…. அவள அடஞ்சே தீரனும்னு கொம்பு சீவிருக்கும்…. அதான் அவளை துரத்தி இருக்க…. அப்ப அவ கிடைக்க போற மாதிரி உனக்கு கிடச்ச சின்ன அறிகுறிகளும் பெரிய ஆனந்தமா  இருந்திருக்கும்…. கிடைக்க மாட்டாளோன்னு தோணுறப்ப ரொம்ப மன வேதனையா ப்ரெஷரா தோணி இருக்கும்…. அத காதல்னு தப்பா புரிஞ்சிகிட்ட…. அந்த வேட்ட புத்தி உன்னை விஷம் குடிக்க வரைக்கும் வச்சிருக்குது… அப்புறம் அவ கிடச்சவுடனே…. மனச பொறுத்த வரைக்கும் வேட்டை முடிஞ்சாச்சு…. எந்த தேடலும் ஓடலும் இல்ல…. முன்னால சந்தோஷமா தெரிஞ்ச சின்ன விஷயங்கள் இப்ப சப்புன்னு தெரியும்… அதான் உன் காதல் கலர் போக காரணம்… அவளுக்காக சாக கூட துணிஞ்சவன்னு நினைச்சு உன்ன சந்தோஷமா கல்யாணம் செய்து வந்திருப்பா கிறிஸ்டி.. இப்ப அவ கேட்டாங்கிற ஒரே காரணத்துக்காக அது நியாயமான விஷயமா இருந்தா கூட செஞ்சு தரமாட்டேன்னு சொன்னா அவளுக்கு வலிக்காம என்ன செய்யும்…..?”

“……………..”

“கிறிஸ்டி பார்க்க இன்னும் சின்ன பிள்ளையாதான் தெரியுறா…பேசாம அவளுக்கு இன்னொரு  மாப்பிள்ள பார்ப்போம்…”

“அண்ணா…!!!!!”

“பிறகு….? நீயும் வேற கல்யாணம் பண்ண மாட்ட….அவளும் வேற யாரையும் பண்ணகூடாது….இதுக்கு பேரு என்னடா…?”

“கல்யாணத்துக்குள்ள காதலுக்கு நிறம் மனமெல்லாம் கிடையாது…இப்படித்தான் இருக்கும்….போய் அவட்ட பேசி கூப்பிட்டுட்டு வர வழிய பாரு….அவ அப்பா சின்ன வயசுல அவ அம்மாவ விட்டுட்டு போன மாதிரி இப்ப நீயும் விட்டுட்டு போறன்னு தான அவளுக்கு இருக்கும்…..”

“ம்…சாரி அண்ணா….”

“ நீ உன் வீட்டுகாரிய எப்படி வச்சுகிடுறியோ அப்படிதான்டா உன பிள்ளைகள அவங்கள கட்டிகிறவங்களும் வச்சுபாங்க…. எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் அளக்கபடும்னு கேட்டதில்ல….”

“இன்னைக்கே கிறிஸ்டி வீட்டுக்கு போறேண்ணா…”

“ஏய்…அது கிறிஸ்டி அம்மா வீடுடா….உன் வீடுதாண்டா கிறிஸ்டி வீடும்….”

“ம்…ஆமாண்ணா…”

“ஹஃஸ்பண்ட் அன்ட் வைஃப் தலையும் உடம்பும் மாதிரி…தலை சொல்றதுக்கெல்லாம் உடம்பு ஆடனும்னா…. உடம்பு தான் தேவைன்னு எதலாம் சொல்லுதோ அதை தலை புரிஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி முடிவெடுக்கனும்…… ஒருத்தர் இல்லாம ஒருத்தர் கிடையாது….  தன் மனைவியை நேசிக்கிறவன் தன்னில் தானே அன்பு கூறுகிறான்னு பைபிள்ள இருக்கு……. இதுல அவ கேட்டதை நீ செஞ்சு கொடுத்தா நீ அவளை விரும்புறன்னு தான் அர்த்தம்… கண்டுகாம போறவந்தான் டம்மி பீஸ்….. அவ நியாயமில்லாம எதாவது கேட்டான்னா…அப்ப காரணத்தை சொல்லி நோ சொல்லு”

சித்தி வாழ்க்கை சீராகிவிடும் என்று நம்பிக்கை வந்திருந்தது மஹிமாவிற்கு. ஆனால் அவள் காதலை குறித்துதான் பல கேள்விகள்.

நவீன் உண்மையில் காதலிக்கிறானா? அல்லது இது சீண்டிவிடப்பட்ட வேட்டை புத்தியா?

Next Page