நிலவு மட்டும் துணையாக 8 (4)

சமையல் சாதனங்கள் என பெரிதாக ஏதும் இருக்கவில்லை. இருந்த சில பாத்திரங்களையும் மளிகை பொருட்களையும் முடிந்த அளவு நேர்த்தியாக அடுக்கினாள். வீட்டு வேலையில் மனம் மூழ்க சற்றே அழுகையும் சோகமும் மட்டுப்பட்டிருந்தது. மாலையில் ஜானகி கொடுத்த காபியை பருகிவிட்டு, அவருக்கு இரவு உணவிற்கு காய்கறி நறுக்கிக் கொடுத்து, அவர் திருமணமாகி கடலூரில் வசிக்கும் தனது மகன் பற்றியும், கோவையில் வசிக்கும் மகள் பற்றியும் பேரப்பிள்ளைகள் பற்றியும் கூறிய விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்ததில் பொழுது போயிற்று.

இரவு ஒன்பது மணியளவில் வீட்டின் வெளிப்பக்கம் ஜானகியுடன் அமர்ந்திருந்த வேளையில் மாணிக்கவேலும், ப்ரவினும் வந்து சேர்ந்தனர். ப்ரவீனின் பைக் இரயில் பார்சலில் இருந்து எடுக்கபடாமல் இருக்க, மாணிக்கவேலில் பைக்கில் இருவரும் வந்திறங்கினர். இருவர் முகத்திலும் சற்றே கடுமையின் சாயல் பூசப்பட்டிருக்க, காலையிலிருந்து சுற்றிய அசதி போலும் என்றே ஆத்யா முதலில் எண்ணினாள்.

உள்ளே நுழையக் கூட விடாமல், கணவரின் முகவாட்டத்தை உணர்ந்து கொண்ட ஜானகி, “ஏங்க…. என்னமோ மாதிரி இருக்கீங்க… உடம்பு எதாச்சும் பண்ணுதா?” என அக்கறையுடன் வினவினார்.

,மாணிக்கவேல் பதிலேதும் சொல்லாமல், ப்ரவீனைப் பார்க்க, அவனோ ஆத்யாவை பார்த்துக் கொண்டிருந்தான். ஆத்யாவிற்கும் சட்டென விஷயம் விளங்கிவிடவில்லை. “என்னவாம்? என்னாயிற்று இப்போது?” என எண்ணினாளே தவிர, வேறு விதமாக எண்ணவில்லை.

ப்ரவீன் அதற்குமேல் ஆத்யாவின் பொறுமையைச் சோதிக்காமல், விஷயத்தைப் போட்டுடைத்தான்.

“ஆத்யா மேல கேஸ் குடுத்திருக்காங்க. அவங்க மாமாவும் அத்தையும். அபிமன்யுவோட கொலையில முதல் குற்றவாளியா சேர்த்திருக்காங்க… சாருக்கு தெரிஞ்ச ரைட்டர் மூலமா பாண்டில இருந்து இப்போ தான் தகவல் வந்துச்சு…” என்றவன், “ஐம் சாரிம்மா… “என மெல்ல தோளை குலுக்கினான்.

இந்த நாடகத்தை தனக்கு மட்டுமே உரிமையான கருப்பு நதியில் நீந்திய படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நிலா.

தொடரும்…

தொடரைப் பற்றிய் கருத்துக்களை கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

நிலவு மட்டும் துணையாக – Comments thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

 

 

Advertisements