நானே வருவேன்…

வனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே. அவளைப் பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை…. ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவன் மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்…..பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்….

இப்பொழுதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே…. இப்போது கூட அவனுக்கு முன்னிருந்த பைக்கில் இருந்தவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்…… ச்சேச்சே ….அவளாவது இப்படி இன்னொருவனுடன்  நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது…. அவன் நினைத்து முடிக்கும் முன் பைக்கில் இருந்தவள் திரும்பினாள்….. அது அவளேதான். ஆரதி. அவனுக்கு மனதிற்குள் பெரும் உறுத்தல்.

மகந்தன் ஒன்றும் ஒரு பெண் ஒரு ஆணுடன் பைக்கில் போனாலே அவர்களுக்குள் ஏதோ தவறான உறவு இருக்கிறது என என்னும் குறுகல் புத்தி கொண்டவன் இல்லைதான். அவனது ஃப்ரெண்ட் நிம்மியை அவனே எத்தனையோ முறை ஆஃபீஸில் லேட்டாகிவிட்டதென அத்தனை மணிக்கு மேல் ஆட்டோவில் தனியாக அனுப்புவது சேஃப்டி இல்லையென தானே கூட்டி போய் வீட்டில் ட்ராப் செய்திருக்கிறான் தான்.

நிம்மி ஹஸ்பண்ட் ரஜத்தே அவ்வப்பொழுது “ லேட்டாகிட்டு மகி….நான் இங்க ஸ்ட்ரக்காகிட்டேன்….வர முடியலைனு சொன்னா கத்துவா ராட்ச்சசி ….நீங்களே எதாவது சொல்லி கூட்டிவந்து வீட்ல விட்றுங்க….அப்றமா அவ கால்ல விழுந்துகிறேன்” என சொல்வதும் உண்டுதான். ஒழுக்க மனப்பான்மையும் ஒழுங்கான புரிதலும் அதே போன்ற நண்பர்களும் உள்ளவர்களுக்கு இது ஒரு விஷயமே இல்லை.

ஆனால் இங்கு உறுத்தும் விஷயம் வேறு.

நியூ இயர் ஈவான இன்று இவனோட கூட பைக்கில் வெளியே வர மறுத்தவள் அவள். “இன்னைக்கு தண்ணி அடிச்சுட்டு கன்னா பின்னானு சுத்துவாங்க மனு….நீங்க உங்க மீட்டிங்கை முடிச்சுட்டு நேர சர்ச் வந்துடுங்க…..நானும் அப்பா கூட கார்ல அங்க வந்துடுறேன்…” என்று சொன்னவள் இப்பொழுது யாரோடோ பைக்கில் போய் கொண்டிருக்கிறாள்….

அடுத்த முக்கிய விஷயம் ஆரதிக்கு அந்த பைக் ஓட்டியுடன்  காணப்படும் அவள் இயல்பு இல்லாத அந்த நெருக்கம்…. இவனுடன் கூட பைக் பயணங்களில் இப்படி ஒண்டுவது இல்லை அவள்.

“விழுந்துடப் போறடா ரதி குட்டி…. நீ என் மேல படலாம் வேண்டாம் பட் கொஞ்சம் முன்னால தள்ளி உட்காரு….” நேற்று இவன் சொன்னதற்கு கூட அவள்

“போத் சைடும் தானே கால் போட்றுக்கேன்…..நல்ல பேலன்ஸ் இருக்குது. விழுந்துடலாம் மாட்டேன்….அப்பா கூட போனாலும் இப்படித்தான் போவேன்” மறுத்துவிட்டாள். ஆனால் இதென்ன இன்று அவள் வழக்கமே இது தான் என்பது போல் இயல்பாய் ஒரு கையால் அந்த பைக் ஓட்டியை வளைத்து பிடித்தபடி அவன் மீது சாய்ந்திருந்தாள் அதுவும் ஒரு புறமாக கால் போட்டு அமர்ந்த படி. ஆள் முகமொழியில் எதுவும் சரி இல்லை.

அதோடு நிச்சயம் இந்நேரம் ஆரதி இவனைப் பார்த்திருப்பாள். இருந்தும் அதைக் காட்டிக் கொள்ளாமல் போவெதென்றால்?

அவளுக்கு எதுவும் ஆபத்தோ? யாரும் எதற்காகவும் மிரட்டுகிறார்களோ? பட் அப்படி என்ன மிரட்டிட முடியும்? எது எப்படியோ? அவள் சென்று கொண்டிருந்த அந்த பைக்கைப் பின் தொடரத்தான் வேண்டும்.

ஆனால் இவன் சென்று கொண்டிருக்கும் இந்த வேலையும் இவனுக்கு மிக மிக முக்கியமானது. “ஷார்ப் 8 அ க்ளாக் மிஸ்டர் மகந்த், ஐ ‘ல் பி வெய்டிங்” சொன்ன அன்ஷுமனின் முகம் ஞாபகம் வருகிறது. ஆனாலும் இவன் கைகளும் கால்களும் முன் செல்லும் பைக்கைத்தான் அதுவாக பின் தொடர்கிறது.

அத்தனை ட்ராஃபிகில் புகுந்து நுழைந்து அந்த பைக்கும் செல்ல இவனும் பின் தொடர்ந்தான்.

பைக் இருட்டில் ஈ சி ஆரில் நுழைந்து  ஆள் அரவமற்ற அந்த ஃபார்ம் கவுஸிற்குள் நுழைகிறது. இப்பொழுது என்ன செய்ய? இதுவரை இருந்த ட்ராஃபிக்கில் இவன் பின் தொடர்வதாக அந்த பைக்காரனுக்கு தெரிந்திருக்காது. ஆனால் இப்போது?

ஆனாலும் வேறு வழி இல்லை. இவனும்  அந்த திறந்திருந்த கேட்டின் வழியே நுழைந்தான். அந்த பைக் ஓட்டி இவன் பைக் சத்தம் அருகில் கேட்டும் கூட அதை கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை.

என்ன நடக்கிறது இங்கே?

அந்த ஃபார்ம் ஹவுஸின் பூட்டி இருந்த கதவின் வரை ஆரதியும் அவள் பைக்கும் போனதும் தான் அது நடந்தது.

மிரண்டு போனான் இவன்.

ஆம் இவன் கண் முன்னே அந்த பைக் அதிலிருந்த அந்த பைக் ரைடர் ஆரதி எல்லோரும் புகை போல் அப்படியே மூடியிருந்த கதவைக் கூட ஊடுருவி……

ஓ மை காட்……….. இது என்ன? எதிர்பாரா நிகழ்வில் எகிறி ஏறுகிறது இதயம்.

சுற்றிலும் இருக்கும் கடும் இருட்டும், அலையின் அகோர சத்தமும் இப்பொழுது அமனுஷ்யமாக படுகிறது.

மெல்ல மெல்ல நடந்தது என்னதாயிருக்கும் என இவனுக்கு யூக்கிக்க முடிகிறது.

‘அப்ப அன்ஷுமனை மீட் பண்றது ஆபத்து….. ஹீர்ரே….இவன் ப்ராஜக்ட் நிச்சயம் சக்ஸஸ் தான்.’

2020 ஆம் ஆண்டு.

“இப்படித்தான் நீங்க கண்டு பிடிச்ச டைம் மிஷினை வச்சு உங்களை அன்னைக்கு காப்பாத்தினோம் மகந்த்….” சொல்லியபடி ஒரு பக்கம் கால் போட்டு ஒரு கையால் மகந்தினை வளைத்து பிடித்திருந்த படி பைக்கில் அமர்ந்திருந்த ஆரதி கீழிறங்கினாள்.  “ஒன் சைடா உட்கார்ந்தும் என் ஃபேஸ் உங்களுக்கு தெரியாம போய்ட கூடாதேன்னு படு டென்ஷன்” தங்கள் வீட்டிலிருந்த  லேபில் வந்து இறங்கி இருந்த இருவரும் இருக்கமாக ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்.

2016  பிறக்க இருந்த அன்று மகந்தனின் டைம் மிஷின்  ப்ராஜக்டிற்க்கு இன்வெஸ்ட் செய்வதாக வர சொல்லி, வழியிலேயே அவனை விபத்து போல் கொலை செய்துவிட்டு, அவன் கொண்டு போன டைம் மிஷின் டிசனை திருடி, தான் கண்டு பிடித்த மாதிரி அதை தானே செய்து உலகை ஆட்டிப் படைக்க திட்டம் தீட்டி இருந்தான் அந்த அன்ஷுமன். அதன்படி மகந்தனை கொன்றும் விட்டான். ஆனால் மகந்திடம் இருந்து கைப் பற்றிய அந்த டிசைனுக்கு வொர்க்கிங் வடிவம் கொடுக்கும் முயற்சியில் அவனது லேபில் நடந்த ஆக்சிடென்டில் இறந்திருந்தான் அவன்.

அந்த டிசைனின் இன்னொரு காபி மகந்தனின் தம்பி தீபித்தின் கையில் கிடைக்க அவன் அதன் மீது மேற்கொண்ட முயற்சிகள்  வெற்றி பெற்றிருந்தது.

அதன் மூலம் கடந்த காலத்துக்குள் பிறர் கண் பார்க்க பயணிக்க முடியுமே தவிர அங்குள்ளோரிடம் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது. ஆக மகந்தனை அன்ஷுமனை சந்திக்க செல்வதை தடுக்க இப்படி 2020 லிருந்து 2015 டிசம்பர் 31 க்குள் ஒரு ரைட்.

“அப்ப எப்படி இருந்துச்சு தெரியுமா எனக்கு உங்க டெத் நியூஸை கேட்க…..நீங்க இல்லாத உலகத்துல எப்படி என்னால ….” அதற்கு மேல் இப்பொழுது கூட அவளுக்கு குரல் வரவில்லை…..இன்னுமாய் இறுகியது தம்பதியினரின் பிடி….

“குட்டிமா அதான் இப்ப என்னை எப்படியும் காப்பாத்திட்டியே…பிறகென்ன?” அணைப்பிற்குள் நின்ற மனைவியை ஆறுதல் படுத்த முயன்றான் கணவன்.

“க்கும்…” கணைத்து தன் வருகையை உணர்த்திவிட்டு உள்ளே வந்த மகந்தனின் தம்பி தீபித்தோ “ஏன் சொல்ல மாட்ட….? உன் கடி ஜோக்கை கேட்குற கொடுமைய வாழ்நாளெல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கும்னு தெரிஞ்சும் கஷ்டபட்டு உன் டைம் மிஷினை செய்தது நான்….இப்ப காப்பாத்ன க்ரெடிட் மட்டும் அண்ணிக்கா…..இரு நீ நெக்‌ஸ்ட் டைம் மிஷின்ல ஏர்றப்ப சோமாலியால ட்ராப் பண்றேன்….” மிரட்டினாலும் அண்ணிக்கு அருகில் நின்றிருந்த அண்ணனை வந்து அணைத்துக் கொண்டான்.

“போடா போடா என் ஆரதி கூட இருந்தா சோமாலியா கூட சொர்க்கம் தான்டா….” சிரிப்புடன் சொன்னாலும் அண்ணணும் தம்பியை அணைத்தான்.

6 comments

Leave a Reply