தென்றல் தென்றல் தென்றல் (5)

ருகிலிருந்த மாடிப்படியில் வேகமாக ஏறி ஓடினாள். அவன் இவளை துரத்துவது புரிந்தது.

ஐயோ மற்றொருவன் இதற்குள் எத்தனை விஷேஷ்களை கொன்று குவித்தானோ,,,???? எப்படி வலித்ததோ என் பிள்ளைகளுக்கு…??? வெறி வந்தது அவளுக்கு. மனோவேகத்தில் பறந்தாள்.

முதல் தளத்தில் முதல் அறை கெமிஸ்ட்ரி லேப். லேபிற்குள் சென்றவள் உள்ளிருந்த கெமிக்கல் அறைக்குள் சென்று கையிலெடுத்தது க்ளொரஃபாம்.

துரத்தியவன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே லேபிற்குள் உள்வருவதை அவளால் உணர முடிந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் இவள் இருக்கும் கெமிக்கல் அறைக்குள் அவன் வருவான்.

அவசர அவசரமாக அருகிலிருந்த செல்ஃபில் ஏறி, லாஃப்டை அடைந்து, வாசலுக்கு நேர் மேலாக அவனுக்காக காத்திருந்தாள். மூச்சு விடவில்லை.

அவன் உள்வந்த நொடி அவன் முகத்தில் க்ளோரஃபாம் அபிஷேகம். மயங்கி சரிந்தான் அவன்.

துப்பட்டாவால் தன் மூக்கை மறைத்து கட்டிக்கொண்டு, மூச்சு விடாமல் லாஃப்டிலிருந்து கீழே குதித்தவளுக்கு அடுத்தவனின் துப்பாக்கி சத்தம் லேபிற்குள் கேட்டது. ஆக முன்னவனைத் தேடி அடுத்தவன் இங்கு வந்திருக்கிறான்.

நன்றி தெய்வமே…பிள்ளைகளை தேடி போகாமல் என்னை தேடி வந்தானே…!!!

அவன் இந்த அறைக்குள் உள்ளே வரவேண்டும். உள்ளே வந்து மூச்சு விட்டால் போதும். மயக்கம் நிச்சயம். அவன் மயக்கம் தெளிவதற்குள் உதவி வந்துவிடும்.

ஆனால் அவன் மயங்க எடுக்கும் நேரத்திற்குள் இவள் சரீரம் சல்லடையாகிவிடும். அவன் கையிலிருக்கும் ரைஃபிள் சும்மா இருக்காதே.

இப்பொழுதே இவள் வேளியே போய் தப்ப முயற்சிக்கலாம்…ஆனால் அவன் இங்கு உள்ளே வராமலே இவளை துரத்த தொடங்குவானே!!

விஷேஷ் மன கண்ணில் வந்தான்.

என் பிள்ள…..!!!

இங்கிருந்து இவள் தப்ப முயன்று, மகனை காக்க இருக்கும் ஒரே வாய்ப்பை இழக்க அவள் தயாரில்லை.

இருட்டு அறையின் ஓரத்தில் சென்று தரையில் படுத்துக்கொண்டாள். மூச்சுவிடாமல் இன்னும் எத்தனை நேரம் இவளால் இங்கு தாங்க முடியும்???

எதிர்பார்த்தபடியே வந்தவன் சுட்டுக்கொண்டேதான் வந்தான். வாசலுக்கு எதிரில் அவன் சகா விழுந்து கிடந்த விதத்தை பார்த்ததும் இவள் எதிர்பார்த்தது போல் உள்ளே நுழைந்ததும் லாஃப்டைத்தான் தோட்டாக்களால் அபிஷேகித்தான். இவள் யூகம் சரியே. லாஃப்டில்  இருந்திருந்தால் இன்நேரம் இவள் நூல் நூலாய் பிரிந்திருப்பாள்.

உள்ளே  வந்தவன் இன்னும் தடுமாறக் கூட காணோம்.

இனி வேறுவழி இல்லை.  நேரடிப் போராட்டம் தான் முடிவு.

கையிலிருந்த க்ளோரஃபாம் குடுவையை அவன் முகத்தின் மீது வீசினாள். அவன் முகத்தில் பட்டு உடைந்து சிதறியது அது. திரவம் அவன் முகத்தில் பட்டிருக்கும். எப்பொழுது மயங்குவான்…? நிச்சயம் முகம் கழுவாமல் இங்கு நின்றிருந்தால் விழுந்துவிடுவான்….

குடுவை முகம் பட்டதும் முகத்தை அழுத்த தடவிக்கொண்ட அவன் கவனம் இவள் மீது வர, இவளை நோக்கி சுட்டான். என்னதான் இடமும் வலமுமாக இவள் உருண்டாலும் சிறு அறையல்லவா….? ஒரு  தோட்டா கிருபாவின் வலக்கையை கிழித்தது. அவன் முகம் கழுவ போகலை…அப்டின்னா நிச்சயமா மயங்கிடுவான்…

அம்மா உன்ன காப்பாத்திட்டேன்டா…. மனம் மானசீகமாக மகனிடம் சொல்ல…. உடலை மீறிய தாய்மை வெள்ளம். எங்கு வலிக்கிறது என்றே புரியவில்லை கிருபாவிற்கு. அடுத்த தோட்டா இடது தோளை பதம் பார்த்தது. யேசப்பா என்னைய நினச்சு எப்படி சிலுவைய தாங்குனீங்கன்னு இப்ப புரியுது….

யேசப்பா என்னையும் என் குடும்பத்தையும் உங்கட்ட குடுக்கேன்….. தனக்கு பூமியை விட்டு கிளம்பும் நேரம் வந்துவிட்டதாக கிருபாவிற்கு தோன்றியது.

அடுத்து தோட்டாக்களே வரவில்லை.

வந்தவன்  மயங்கிவிட்டான். நிம்மதி…..

எல்லாம் முடிஞ்சிட்டு தூங்கு என்கிறது ஒரு மனம்.

அப்படின்னு நிச்சயமா எப்டி சொல்ல முடியும்…..?? கேட்டது தாய்மை.

அவ்ளவுதான் இருந்த இல்லாத தெம்பை எல்லாம் திரட்டிக்கொண்டு எழுந்து ஓடினாள் கிருபா. விஷேஷைப் பார்க்காமல் அவன் பத்திரமா இருக்கிறான்னு தெரியாம என்னால் சாக முடியாது…

தடியன்கள் விழுந்து கிடந்த அறையை வெளித்தாளிட்டு, மொத்த லேபையும் பூட்டி சாவியை கையிலெடுத்துக்கொண்டு தன் மகனின் வகுப்பறை நோக்கி பறந்தாள்…. இரத்த அருவியாக அவள்.

 

அத்தனைபேரும் எமெர்ஜென்சி எக்சிட்டைப் பார்த்து ஓடிக்கொண்டிருந்தனர்.

உயிர் மகனைத் தேடியது

விஷேஷ் எங்கே…??

அழுதபடி மகன் தூரத்தில் அவன் வகுப்பு ஆசிரியர் அருகில் ஓடுவது தெரிந்தது.

நல்லா இருக்கான் என் பிள்ள…நன்றி தெய்வமே!!!

தரை மீது விழுந்தாள்.

 

கிருபாவுக்கு மீண்டும் விழிப்பு வந்தபோது அருகில் தேவ் அவனுடன் விஷேஷ்.

“அம்மா எல்லாரும் சொல்றாங்க நீங்க சூப்பர் ஃஸ்ட்ராங்……சூப்பர் போல்ட்….சூப்பர் ஃபைட்டர் ..நு”

பெருமையும் ஆசையுமாய் சொல்லிய மகனிடம் சொன்னாள் கிருபா

“எல்லா அம்மாவும் அப்படித்தான் செல்லம்… சூப்பர் ஃஸ்ட்ராங்……சூப்பர் போல்ட்….சூப்பர் ஃபைட்டர்” .

 

கிருபா பரிபூரண சுகமாகி வீடு வந்தபின் ஓர் இரவில் தன் கணவனின் கை சிறையிலிருந்து கொண்டு கேட்டாள்.

“எல்லாத்துக்கும் பயப்படுவ…எப்படி உன்னால இவ்ளவு தைரியமா இருக்க முடிஞ்சிதுன்னு எல்லாரும் கேட்டாச்சு….உங்கள தவிர..

கனிந்த முகத்துடன் தன் டைரியை கொண்டு வந்து காண்பித்தான் தேவ். அவளை முதல் முறை பார்த்த தேதியில் ஒரு கவிதை எழுதி இருந்தான் அவன்.

 

நறுமலர் தொடும் தென்றல்

மணம் பரப்பும் மனம் சுகிக்க

கரு முகில் தொடும் தென்றல்

மழை செய்யும் நிலம் சுகிக்க

சுடும் தீ தொடும் தென்றல்

சுற்றி சூழ எரித்திடுமே

பெண்ணிவள் என் தென்றல்.

ஒரு நாளும் நான் உன்ன பயந்த சுபாவம்னும் நினச்சதில்ல, பலவீனமானவன்னும் நினச்சது இல்ல… உன் பாலம்ம நடந்துகிட்ட விதம் நிறையவகையில் தப்புனாலும் அவங்க உள்ள இருந்தது அன்பு. அதை  நீ தொட்டப்ப, உங்க பாட்டியும் உன் மொத்த குடும்பமும் மனசு கஷ்டபடாம இருக்க எவ்வளவோ செஞ்சுருக்க…

அடக்கி ஆள்றதவிட அடங்கி போறதுக்குதான் அதிக மனபலம் தேவை…அந்த வகையில நீ பலசாலி…

கல்யாணம் வேண்டாம்னு நினைச்சுகிட்டு இருந்த என் மனதை நீ தொட்டப்ப காதல் மழை. முதல் நிமிஷத்திலயே என் மொத்த வாழ்க்கையையும் மாத்தி எழுதுன… எனக்கு மேரேஜ் லைஃப் பத்தி இருந்த பயம் …கன்சர்ன்ஸ் அத்தனையையும் அர்த்தமில்லாததுன்னு அரை நிமிஷத்துல புரியவச்ச….நம்ம வாழ்க்கையையும் நம்ம சுத்தி இருக்கிறவங்க வாழ்க்கையையும் செழிக்க வச்ச தேவதை நீ…..உன் சுபாவ பலம் அது

அப்படிபட்ட நீ தீய தொடுறப்ப என்ன நடக்கும்….? எரிச்சிட்ட….”

—————————————

 

பெண் பார்வைக்கு மெல்லியவள் தான்

சிலவகை பயம்  உண்டு இவளிடம் தான்.

பாசத்திற்குள் பதுங்குவாள்தான்

கொடுத்து, கொள்ளும், காதலிலும்

கணவனின் கைசிறை விரும்புவாள்தான்.

எனினும்

அவள் தாய்மையைத் தொட்டுப் பாருங்கள்

புயலும், பூகம்பமும், எரிமலையும், ஏழேழு கடலும்

எல்லா கொடும் விலங்குகளும்

துச்சம் இவள் முன் என்றாகும் காண்.

10 comments

  1. Wow, super story! 👏👏👏👸
    Ur narration of the story is fabulous! Pls give more updates like this. Expecting more from you!

Leave a Reply