தென்றல் தென்றல் தென்றல் (4)

“முன் வாசல் வழியா வராம இப்டி ஜன்னல் வழியா வார ஒருத்தன் எங்க வீட்டுக்கு மாப்ளையா வரமுடியாது…” பாலம்மா எகிற

“ஒரு வாரம் இருக்கிறப்ப கல்யாணத்த நிறுத்துனா என் பொண்ணு வாழ்க்கை என்னாகும்…” என்றபடி ஜெயசீலி மயங்கிவிழ

மகள்கள் மூவரும் அவரைப் பார்த்து ஓட, நீண்ட பாலம்மையின் கைகளில் கிடைத்தது கிருபாவின் பின்னந்தலை முடி.

“எல்லாத்துக்கும் உன்ன சாத்துனா சரியா இருக்கும்….உன்னால தான்டி..”

“அம்மாவ பார்த்துட்டு வாரேன் பாலம்ம…அப்புறம் எத்தன வேணும்னாலும் அடிச்சுகோங்க….ப்ளீஸ் பாலம்ம…” வலி தாளமுடியாமல் தலையை அசைக்காமல் கெஞ்சினாள் கிருபா.

அதிர்ந்து போய் நின்றிருந்தனர் ஆனந்தும் ஜீவனும். என்ன இருந்தாலும் இன்னும் உறவாகத உறவு நிலை….பாலம்மையோ வயதில் மிகவும் முதியவர்…..என்ன செய்ய வேண்டும் இப்பொழுது…?

ஆனால் தேவ் அலறியடித்து ஓடாமல் நடந்து சென்று, முள் செடியில் விழுந்த சேலையை எடுப்பது போல  மெல்ல அந்த முதியவரின் கைகளிலிருந்து கிருபாவின் முடியைப் பிரித்துவிட்டான். முகத்திலிருந்தது கவன பாவம் மட்டுமே.

அவன் ஓடி வந்திருந்தாலோ, கோபமாக பேசி இருந்தாலோ, ஏன்  கோபமாக பார்த்திருந்தாலோ கூட பாலம்மைக்கு கோபம் எகிறி இருக்கும்.

ஆனால் இதற்கு என்ன செய்யவென தெரியவில்லை.

 

“கிரு…போய் உங்க அம்மாவுக்கும் பாலம்மாவுக்கும் ஜூஸ் எடுத்துட்டு வா….வெயில்ல வந்திருக்காங்க பாரு….” வருங்கால மனைவியின் கண்ணைப் பார்த்து ஒரு கண்ணசைவு….அவள் சமயலறையைப் பார்த்து ஓடினாள்.

அடுத்திருந்த டைனிங் அறையின் மேஜையில் தெரிந்த ஜக்கிலிருந்து தண்ணீர் எடுத்து ஜெயசீலி முகத்தில் தெளித்தான் தேவ். இதற்குள் தம்பியரும் அண்ணணைப் உடல்மொழியில் பின்பற்ற தொடங்கி இயல்பாக உடனடி தேவைகளை கவனிக்க தொடங்கினர்.

ஆனந்த் அறையிலிருந்த மின்விசிறிகளை ஆன் செய்ய, ஜீவன் உள்ளறைக்கு சென்று டவல் எடுத்து வந்தான் ஜெயசீலிக்கு.

மௌனமாக நின்றார் பாலம்மை.

ஜெயசீலி கண்விழிக்கவும் அவரைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு பாலம்மையிடம் சென்றான் தேவ்.

அவர்கை பிடித்து அருகிலிருந்த சோஃபாவில் அமர்த்தினான்.

“உங்க கணவரையும், மகனையும் சின்ன வயசிலேயே இழந்துட்டு…..ஆண்துணை எதுவும் இல்லாம, …சின்ன வயதில கணவன இழந்துட்ட மருமகளையும் மூனு பொண்ணுங்களையும் வெளிய இருந்து ஒரு சின்ன ப்ரச்சனை கூட வராம, பாதுகாப்பா, மத்தவங்கல்லாம் உங்கள மரியாதையா பார்க்கிறமாதிரி, தப்பா பார்க்கவே பயப்படுற மாதிரி இவ்ளவு நாளும் அழகா குடும்பத்த நிர்வகிச்சிருக்கீங்க…..அதுக்கெல்லாம் மூல காரணம் நீங்க அவங்க மேல வச்சிருக்கிற வெறித்தனமான பாசம்……”

அவர் கண்களைப் பார்த்து தேவ் சொல்ல

அவர் கண்களில் ஈர பளபளப்ப்பு.

“உங்களுக்கு தெரியுது…இவங்க யாருக்காவது புரியுதா….?வீட்ல ஆண் துண இல்லன உடனயே எத்தன பேருக்கு எத்தனவிதமா தோணிருது….எல்லாம் நான் இவங்க நல்லதுக்குதானே செய்றேன்….ஆனால் எல்லாரும் என்ன எதிரி மாதிரியே பார்க்காங்க…இவங்கள அழவச்சு நான் என்னத்த அள்ளிட்டு போகப்போறேன்…..?அவங்கல்லாம் ஒன்னா சேர்ந்துகிடுறாங்க…என்ன மட்டும் எதிரியா பார்க்காங்க….”

அவரது இருகைகளியும் பற்றினான் தேவ்.

“அதுக்குதான் பாட்டிமா….. நீங்க இதுக்காகத்தான் இதை செய்றேன்னு சொல்லிட்டு செய்திருந்தீங்கன்னா அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்….”

“எங்க காலத்துலல்லாம் எங்கம்மாப்பா எல்லாத்தையும் சொல்லிட்டு சொல்லிட்டு தான் செய்தாங்களோ….?” பாலம்மயால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

“ஒருவேள இந்த தலமுறை உங்க அளவுக்கு புத்திசாலி இல்லையோ என்னமோ….?

உங்க மேல உள்ள பயத்துல இல்ல……உங்க மேல உள்ள பாசத்துலதான் உங்க மருமகளும் பேத்திகளும்  உங்களுக்கு அடங்கி போறாங்கன்னு அவங்க சொல்லாமலே உங்களால புரிஞ்சிக்க முடிஞ்ச மாதிரி,  நீங்க செய்றதெல்லாம் அவங்க மேல உள்ள பாசத்துலதான்னு அவங்களுக்கு நீங்க சொல்லாம புரியமுடியல போல….”

மெச்சுதலான புன்னகை பெரியவர் முகத்தில்.

“இத்தனை வயசாச்சி…இது எனக்கு தோனுனது இல்லப்பா….நான் சொல்றதுக்கெல்லாம் முறுமுறுத்தாலும் நான் சொல்றத செய்துங்களே என் பிள்ளைங்க அது பாசம் இல்லாம என்னவாம்….? அதுங்க சேர்ந்து முறுமுறுக்கிறது மட்டும்தான் இவ்ளவு நாள் என் கண்ல பட்டு இருக்குது….இன்னைக்கும் அப்படித்தான் அந்த கோபத்துலதான் கதவ வெளிய பூட்டிட்டு போய்ட்டேன்….”

சின்னதாய் சிரித்துக்கொண்டான் தேவ்.

“வயசு வித்யாசம் பார்க்காம மனசுவிட்டு பேசிக்கிறது முக்கியம்னு புரிய வச்சுடீங்க…மாப்ள டாக்டர்னு சொன்னாங்க….மனசுக்கும் வைத்தியம் பாப்பீங்களோ…..?” பூரிப்பாய் கேட்டார் பாலம்மா.

“கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு தேங்க்ஸ்…பாட்டிமா….” அவர் கன்னத்தில் முத்தம் வைத்தான் தேவ்.

 

6 வருடங்களுக்கு பிறகு:

திர் பார்த்தது எதிர் பாராதது எல்லாம் நடந்து இப்பொழுது மூன்று சகோதரர்களும் மூன்று சகோதரிகளையே மணந்திருந்தனர். ஆம் ஆனந்திக்கும் ஜீவனுக்கும்கூட திருமணமாகி இருந்தது.

தேவ், கிருபா தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகன். தேவ் ராணுவ மருத்துவமனையில் பணி செய்தான் எனில் கிருபா ராணுவ பள்ளியில். அதே பள்ளியில் யூகேஜியில் அவர்கள் மகன் விஷேஷ்.

இன்று காலையிலிருந்து எதோ ஒரு இனம் புரியாத படபடப்பு கிருபாவிற்கு. மூன்றாம் முறையாக ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு வெளியில் வர கதவைத் திறந்தாள். அப்பொழுதுதான் கதவை கடந்து காரிடாரில் யாரோ இருவர் சென்றனர்.

திறக்க தொடங்கிய கதவின் இடைவெளியில் தெறிந்தது அவர்கள் கையிலிருந்த நீண்ட ரைபிள்ஸ்.

பள்ளிக்குள் இது இயல்பு இல்லையே. பதறியவள் மூளையில் முதலில் ஞாபகம் வந்தது மகன் விஷேஷின் முகம்.

தெய்வமே.!!!

சத்தமின்றி கதவை முழுதாக திறந்து அவர்களைப் பார்த்தாள். அவர்கள் ராணுவ வீரர்கள் இல்லை. கறுப்பு உடையும் கறுப்பு தாடியுமாக….

வகுப்புகள்  நடந்து கொண்டிருந்ததால் யாரும் காரிடாரில் இலை. ஆனால் எந்த வகுப்பிற்குள் அவர்கள் நுழைந்த நொடியும் இவளைப் போன்ற எத்தனையோ அம்மாக்களின்  விஷேஷ்…கள் ……..?????

தெய்வமே அதற்கு மேல் அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை கிருபாவிற்கு. பள்ளிக்கு சைரன் உண்டு அதை அமிழ்த்தினால் உடனடி உதவி வரும்.

இதே காரிடாரின் இடது புறம் 200 மீட்டரில் சைரன் இருக்கும். அந்த தடியர்களின் கண்ணில் இவள் பட்டால் இவள் சைரைனை அடையும் முன்பாகவே இவள் உயிர் பிரிந்திருக்கும். அதற்கு அவர்கள் கையில் இருக்கும் ரைஃபிள் பொறுப்பு.

ஆனால் பொறுக்க முடியாது. நொடிகள் பிள்ளைகளின் ஆயிட்காலத்தை முடிவு செய்யும்.

சைரனை குறிவைத்து, மின்னலை மிஞ்சும் வேகத்தில் பறந்தாள் கிருபா காரிடாரில். சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அந்த தடியனில் ஒருவன் இவளை நோக்கி சுடத்தொடங்கினான். மற்றவன் வேகமாக அருகிலிருந்த வகுப்பைப் பார்த்து முன்னேறினான்.

நேர் காரிடாரில் இடம் வலம், வலம் இடம் என  வளைந்து வளைந்து ஓடினாள் கிருபா. ஒவ்வொரு முறையும் தோட்டாக்கள் வலபுறமும் இடபுறமும் விர்ர்ர்ர்ர்ர்ர்ர் விர்ர்ர்ர்ர்ர்ர்.

ஓடிய வேகத்தில் அவளை விட சற்று உயரத்தில் இருந்த சைரனை ஒரு குதியில் தட்டி அலறவிட்டவள் தொடர்ந்து காரிடாரில் நேராக ஓடாமல் அடுத்து இருந்த இடதுபுற வளைவில் வளைந்தாள்.

பின்னால் வந்தவன் இன்னும் ஆக்ரோஷமாக வந்தான். அவ்ளவுதான் என் உயிர் இப்ப போயிடும்….கிருபா நினைத்த நொடி விஷேஷ் மனகண்ணில். நோ…இப்ப நான் சாக கூடாது….

நிமிர்த்திய விழியில் தெரிந்தது சுவரில் கண்ணாடி கேஸில் வைக்கபட்டிருந்த அந்த இரு வாள்களும் கேடயமும். அலங்காரத்திற்குரியது என்றாலும் வெண்கலம்….. இதை வைத்து வருகிறவனை அடித்தால் மயக்கமாவது அவனுக்கு வராதா….???

மயக்கம்!!! புரிந்துவிட்டது அவளுக்கு என்ன செய்ய வேண்டுமென்று.

 

Next Page