தென்றல் தென்றல் தென்றல் (2)

 

தேவகிருபா அருகில் வந்து நின்றான் அவன்.  மொத்த பஸ்டாப்பில் இவர்கள் இருவர் மட்டுமே…

“ஏங்க….இந்த அட்ரஸ் எப்படிங்க போகனும்…? ” கண்முன் நீட்டப்பட்ட அந்த துண்டு காகிதத்தைப் பார்த்தாள் கிருபா.

ஜெயகொடி

தாயகம் இல்லம்

17, ஆசிரியர் தெரு,

பாவூர்.

பக்கென்றது!! அது அவள் வீட்டு முகவரி. பாவூர் என்பதற்கு பதிலாக தென்பாவூர் என்றிருக்க வேண்டும். அப்படின்னா இது யாரு…?

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“தப்பா எடுத்துக்காதீங்க….எனக்கு இந்த ஏரியா பழக்கம் கிடையாது… பாவூர்னு கேட்டதுக்கு பஸ்ல இங்க இறக்கிவிட்டுட்டு போய்டாங்க… “

தலை முதல் கால்வரை அவன் மீது ஓடியது அவள் பார்வை. முடி வெட்டி இருக்கும் விதமும் அந்த மீசையும், அவன் முகமும் தவிர அனைத்தும் அக்மார்க் சினிமா வில்லன்.

தடித்த தோல் செருப்புகள், பெல்ட்டிடப்பட்ட வேஷ்டி, கை முட்டிக்கு மேலாக மடித்துவிடப்பட்ட அந்த முழுக்கை சிவப்பு வர்ண சட்டை…அதை மீறி திமிரிய அந்த இறுகிய கைகள், தடித்த பிரேஸ்லெட், மேல்பட்டன் திறந்துவிட பட்டிருந்த சட்டையின் வழியே தெரிந்த அந்த பட்டை செயின்..

கிராமத்தில் கூட யாரு இப்படி ட்ரஸ் பண்றா…? ஒழுங்கா இருந்த ஒட்டடகுச்சி உலக்கைய பார்த்து உரல்லபோய் முட்டிகிடிச்சிங்கிற மாதிரி… இவன் சினிமா பார்த்து ட்ரஸ் பண்ணிகிட்ட மாதிரில இருக்குது….அப்ப ரொம்பவும் படிக்காதவனோ….? அட்ரஸ் கூட வாசிக்க தெரியாம முழிச்சுகிட்டு இருக்கானே இந்த பஞ்சுமிட்டாய் பண்ணையார்….

இப்படியே எங்க ஊருக்கு வந்தன்னா தெரு நாயெல்லாம் உன் பின்னாலதான்….அந்த காட்சியை மனதில் பார்த்தவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

“பாவூர்ல என்ன விஷயம்…?” அவள் கேட்டாள். கன்பார்மா தெரியாம கபடி ஆட கூடாதுல்ல…

அவன் பார்வை அழுத்தமாக பதிகின்றது அவள் மேல்.

கண்ணில் ஒரு மின்னல்.

“கல்யாண விஷயம்.” அவன் இதழ் ஓரத்தில் சின்னதே சின்னதாய் ஒரு சிரிப்பு. “எதுக்கு கேட்கிறீங்க…?”

கன்பார்ம்மா இவன் என் கழுத்துல கத்தி வைக்க வந்தவன்தான்.

“அது…அது…இப்போதைக்கு அங்க போக பஸ் கிடையாது….. போய்ட்டு இன்னைக்கே திரும்பனும்னா  இப்ப போகாதீங்க….”

இவன இங்க இருந்தே துரத்திவிடலன்னா என் ஊர் நாயெல்லாம் பாவம்…

“ஓ!…அப்ப உங்களுக்கு இந்த அட்ரஸ் தெரியுமா….?”

திங்க் பண்ண டைம் கொடுடா சின்ன தம்பி…உன்னை திரும்பி பாராம ஓடவைக்க நான் கியரண்டி…

“அது…அது….இங்க பக்கத்துல வடபாவூர், தென்பாவூர்னு ரெண்டு ஊரு உண்டு அதுல எதாவது ஒரு ஊரா இருக்கும்… “

“ஓ….அப்ப இப்ப என்னங்க பண்றது….?”

இப்ப நான் நடந்துகிறத பார்த்து, நான்தான் கல்யாண பொண்ணுன்னு தெரிய வரப்ப சொல்லாம கொள்ளாம ஓடிப்போகனும் இந்த பஞ்சுமிட்டாய் பண்ணையார். அப்படி என்ன பண்ணலாம்…? அவசரமா ஐடியா ஒன்னும் வர மாட்டேங்குதே….இவன்பாட்டுக்கு கிளம்பிட்டான்னா……? படு டென்ஷனானாள் கிருபா.

இப்போ நான் இவன போடுற போடுல…..அதுக்கு இவன் கூட கொஞ்சம் டைம் கிடைக்கனுமே……….. ஃபாரின்லலாம் டேட்டிங்னு போய்கிட்டே இருப்பாங்க… அதுமாதிரி….பதற்றத்தில் மனதில் கன்னாபின்னாவென ஏதோ தோன்ற

என்னங்க…?” என்ற அவன் அடுத்து அழைத்ததில் ஆட்டமெடிக்காக மனதில் இருந்த வார்த்தை எக்குதப்பாக எகிறி வந்தது

“டேட்டிங்…டேட்டிங் போலாம்…” சொல்லி முடித்தவுடன்தான் தான் என்ன சொல்லி இருக்கிறோம் எனவே புரிந்தது அவளுக்கு. அரண்டாள்.

“வா…. டங்கு டிங்கா..? அப்படின்னா என்னங்க…? எதாவது சினிமா தியேட்டராங்க….?”

தெய்வமே… இவன்ட்டயா என்னை மாட்டிவிட பார்க்காங்க…

“அது….அது அப்படி இல்ல…நான் பக்கத்துல சாப்பிட போறேன்….நீங்களும் அங்க வந்து சாப்பிட்டுட்டு போங்க….நேரம் போயிடும்…பஸ் வந்துடும்…”

“அப்டீங்களாங்க….சரிங்க…உங்க ஊர்ல சாப்பிட போறத டங்கு டிங்குன்னு சொல்லுவீங்கபோல…”

 “அக்கா செல்லப்பா சித்தப்பா நம்ம பாலம்ம கூடதான் டவுணுக்கு போயிருக்காங்களாம்..” சொல்லியபடி வந்தாள் ஜீவா.

“ஐயோ என்னடி இது புது குண்டா இருக்குது…நம்ம அக்காவும் திருநெல்வேலிக்குதான் போயிருக்கா…பாலம்ம கண்ல மாட்னா சட்னி தான் போ… “ புலம்ப ஆரம்பித்தாள் ஆனந்தி.

“அக்கா அது அடுத்த ப்ரச்சனை இப்ப இம்மீடியட்டா இந்த தடியங்கள கவனிக்கனும்….” ஜீவா கடிந்து கொள்ள ஆனந்தி இயல்புக்கு வந்தாள்.

“ராஜசிங் சித்தப்பா, நவமணி சித்தப்பா எல்லோர் வீட்டுக்கும் கூப்டு பார்துட்டேன்…யாரும் வீட்ல இல்ல…எல்லோரும் வெளிவேலைக்கு போயிருக்காங்க…மூனு மணி பஸ் வந்த பிறகுதாங்கா இவங்களல்லாம் எதிர்பார்க்கலாம்…”

“அப்படின்னா இப்ப இவங்கள என்ன பண்றது?”

“ஐயோ பாருடி  ஒருத்தன் எவ்ளவு தைரியமா கேட் ஏறி குதிச்சு உள்ள வாரான்.”

“நாம பார்துகிட்டு இருக்கோம்னு அவங்களுக்கு தெரியலைல அதான் இவ்ளவு தைரியம்.”

“அப்டின்னா…நாம ரெண்டுபேரும் மொட்டை மாடிக்குபோய் அவனுங்க பார்க்க தெருவில போற யாரையாவது கூப்பிடுவோம்…பயந்து ஓடிடுவாங்க…”

இருவரும் மாடி கதவின் ஆட்டமொடிக் லாக்கை உள்லிருந்து திறந்து மொட்டை மாடிக்கு வந்தனர்.

“என்னடி ரோட்ல யாரும் இல்ல…”

“நமக்கு மேல இருந்து பார்க்கிறதால ரோட்ல யாரும் இல்லனு தெரியும்..கீழ மறைஞ்சு இருக்கிற திருடனுக்கு தெரியாது….சும்மா கூப்டுவோம்…நிஜமாவே ஆள் வராங்கன்னு  நினைச்சி பயந்திடுவான்”

“மணி அண்ணா……ராஜு அண்ணா….” இவர்கள் கத்த தொடங்கவும் காற்று எதிர் திசையில் உய்  உய் என சுழன்று வீசவும் சரியாக இருந்தது.

“நம்ம சத்தம் நமக்கே கேட்காது போல..இதுல அவனுக்கு எப்டி கேட்குமாம்….நான் ஃஸ்டோர் ரூம் மாடிக்கு போய் சத்தமா கூப்டுறேன்…அதுக்கு கீழதான அவன் இருக்கான்…அவனுக்கு கேட்கும்னு நினைக்கேன்…”

மொட்டை மாடியிலிருந்து அடுத்த மாடிக்கு தாண்டினாள் ஆனந்தி.

“ம…” அவள் ஆரம்பிக்கும் முன்

அலறினாள் ஜீவனி

ஐயோ….போச்சே எல்லாம் போச்சே….நாம செத்தோம்…!!!!!!”

இந்த சத்தம் ஒளிந்திருந்த ஆனந்துக்கு மட்டுமல்ல….காரிலிருந்த ஜீவா வரை கேட்டது. அருகிலிருந்த ஆனந்தி கேட்டு பயந்து அலறினாள் என்று சொல்ல தேவையில்லை.

“யாராவது காப்பாத்துங்களேன்…எங்களை யாராவது காப்பாத்துங்களேன்…” இது ஆனந்தி.

தன் தங்கை ஜீவனிக்கு எதோ ஆபத்து என்று நினைத்த ஆனந்தி, ஜீவனி நின்று கொண்டிருந்த தங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு திரும்ப போக நினைத்தால் இப்பொழுது பலத்த எதிர் காற்று அவளை பலமாக எதிர் திசையில் தள்ள, தன் வீட்டுக்கு போக முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு அற்று போனது. பயத்தில் இப்படி அலறினாள்.

இருவரின் அலறலை கேட்டு அண்ணன் தம்பி இருவரும் ஓடி வந்தனர் உதவிக்கு. இதில் ஜீவா தன் முகத்தை மறைத்து கர்ச்சிஃபில் கட்டி இருந்தான் என்பது குறிப்பிட படவேண்டிய விஷயம்.

வேக வேகமாக ஆனந்தி நின்றிருந்த ஃஸ்டோர் ரூம் மொட்டை மாடிக்கு ஏறினான் ஜீவா. அதற்குதான் படி வெளிப்புறமாக இருந்ததே. பயத்தில் மயங்கி சரிந்தாள் அவள்.

“ஏய்….”அவளைப் பிடித்து அவன் தாங்கி தரையில் படுக்க வைக்க…இதற்குள் ஆனந்த் இவர்கள் இருந்த இடத்திற்கு வந்திருந்தான். கையில் ஒரு தென்னஞ் சிரட்டையில் தண்ணீர்.  வீட்டு தோட்டத்திலிருந்து எடுத்து வந்திருந்தான்.

ஆனந்தியின் முகத்தில் அதை வாங்கி வேகமாக தெளித்த ஜீவா “டேய்…அங்க ஒரு சின்ன வாண்டு கத்திகிட்டு இருக்கு அது என்னனு பாரு என பக்கத்து வீட்டு மாடியை காண்பிக்க”

ஜீவனியை நோக்கி ஆனந்த் மாடி தாண்டி குதித்து ஓடினான். அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த ஜீவனி கத்துவதை நிறுத்தி  இருந்தாள். மனம் ஆனந்தின்  ஹீரோயிசத்தில்….

வர்றப்பவே தண்ணி எடுத்துட்டு வந்துருக்கான்….பாக்கவே பயமா இருக்கிற மாடிய எதிர் காத்துல யதார்த்தமா தாண்டி இவளுக்கு ஹெல்ப் பண்ண வாரான்….ரொம்ப நல்ல திருடன்….

“அக்கா எப்டி இருக்கா…..அவளுக்கு என்னாச்சு திருடன் சார்….?? …” ஜீவனி அருகில் வந்த ஆனந்திடம் பாச பதற்றமும் தவிப்புமாக கேட்க

திருடன் சாரா…???  எங்க இமேஜ் இவ்ளவு டேமேஜா!!!!! நிலமை புரிய அடுத்த மாடியில் இருந்த  தன் தம்பியை பார்த்து கூவினான் ஆனந்த்.

“டேய் திருடன் சார் நம்பர் ஒன்…முதல்ல உன் முகமுடிய கழத்து ஆட்டமெட்டிக்கா இவ அக்கா விழிச்சிருவாங்க…”

அண்ணன் சொன்னது புரிய அவசர அவசரமாக தன் கர்சீஃபை கழற்றினான் ஜீவன்.

அங்கு ஜீவனிக்கோ பல விஷயம் நொடியில் புரிந்தது.

இதற்குள் மயக்கம் தெளிந்து மிரண்டு விழித்த ஆனந்தியை நோக்கி சொன்னாள் ஜீவனி

“அக்கா இதுங்க சீக்ரெட்டா வந்த சிங்கம்ஸ்….”

அருகிலிருந்தவன் முகம் பார்த்த ஆனந்தி சட்டென எழுந்து கொண்டாள்.

“சாரி…” நால்வர் வாயிலிருந்தும் ஒரே நேரத்தில் வந்தது. அடுத்து நால்வரும் ஒன்றுபோல் சிரித்துக் கொண்டனர்.

ருகிலிருந்த அந்த சின்ன ஹோட்டலுக்குள் நுழைந்தனர் அந்த சினிமா வில்லனும் தேவகிருபாவும்.

மதிய நேரம். இருந்த இரண்டு டேபிளில் ஒன்றில் இரு ஆண்கள்.

அடுத்த மேஜையில் போய் அமர்ந்தாள் கிருபா.

“இங்க உட்காரலமாங்க..? .தப்பா நினைக்க மாட்டாங்களா உங்க ஊர்காரங்க……?” எதிர் இருக்கையை காட்டி கேட்டான்.

நினைக்க தான்டா செய்வாங்க பஞ்சுமிட்டாய்….எங்க சொக்காரங்க பார்த்தாங்கன்னா உன் சொக்காய பிடிச்சு தூக்கி போட்டு மிதிப்பாங்கடா…

“ம்..உங்க வயித்துக்கு நீங்க சாப்ட போறீங்க….என் வயித்துக்கு நான்…இதுல அவங்க என்ன நினைக்கிறது….?”

“ஆமாங்க அதுவும் சரிதாங்க…” அமர்ந்து கொண்டான்.

“என்ன வேணுங்க….? வெயிட்டர் கேட்க

” அவருக்கு என்ன வேணும்னு அவர்ட்ட கேளுங்க….எனக்கு தயிர் சாதம்..”

ஒருவாய் சாதம் உள்ள இறங்குமான்னு தெரியல….  இவன் பக்கத்துல இருந்தா பயத்துல…வினைய நானே வெதச்சுட்டனோ….???!!

அவள் கண்கள் திறந்திருந்த ஹோட்டல் கதவின் வழியாய் தெருவில் அலைய, அவன் கண்களோ அவள் மீது அலைந்தது….

 

 

ப்பொழுதுதான் தெருவில் ஓடி வந்தது அந்த கோழி. ஓடி சென்று அதை துரத்த ஆரம்பித்தாள் கிருபா.

அரை லூசு பொண்னு இது, ஆளவிட்டா போதும்னு ஓடி போய்டுடா….

பக்..பக்..பக்…பக்…..

குனிந்தபடி அவள் துரத்த சற்று அங்குமிங்கும் ஓடிய கோழி சற்று நேரத்தில் வினோதமாக ஒலி எழுப்ப, கோழியின் உரிமையாளருடையது போலும்…. இப்பொழுது ஓடி வந்தது  ஒல்லியாய் உயரமாய் ஒரு நாய்.

வேட்டை நாய்.

அது அவளை துரத்த ஆரம்பித்தது. தலை தெறிக்க ஓட தொடங்கினாள் கிருபா…

“ஹேய் …ஓடாத ஓடுனாதான் துரத்தும்….”

அவன் சொல்வதை கவனித்தால் தானே!!

அவள் முன்னால் ஓட, அவள் பின் அது, அதன் பின் அவன்.

கண்மண் தெரியாமல் ஓடியவள் உணர ஆரம்பிப்பதற்கு முன்பு, சரலில் கால் சரிக்கி மூன்று நான்கு முறை உருண்டு, அவள் விழுந்தது நீருக்குள். கிணறு!!!

“அம்ம்ம்மாமாஆஆஆஆஆஅ”

“ஹேய்………”

இவளை துரத்திய நாய் இவள் மீது குதிப்பதாக குதித்து இவளுக்கு முன்பாக விழுந்தது கிணற்றுக்குள்.

இவளை தொடர்ந்து அவன் கிணற்றில் குதிக்கிறான் என்பது வரை அவளுக்கு உணர்வில் இருந்தது.

மீண்டும் அவளுக்கு உணர்வு வந்த போது, அவள் முகம் பார்த்தபடி நீர் சொட்டும் முகத்துடன் அவன். அருகில் அவளை பரிதாபமாக பார்த்தபடி ஈரமாக அந்த நாய்.

அதையும் வெளியே தூக்கி விட்டிருக்கிறான்.

நாயை தூக்கியபடி கிணற்றிலிருந்து ஏறவேண்டுமெனில்…..அ வெரி வெரி கேரிங் பெர்சன்….ஆல்ஸோ வெரி டிட்டர்மின்ட் ஆன்.. முக்கியமா….இவனுக்கு இவள மாதிரி ஸைனபோபியா கிடையாது.

ஹேய்…எல்லாரும் தண்ணிய குடிச்சுதான் மயங்குவாங்க…தண்ணிய தொடுறதுக்குள்ள மேடம் மயங்கிட்டீங்க…”

“எனக்கு தண்ணி, நாய் ரெண்டும் ரொம்பவே பயம்….”

“பயம் லிஸ்ட்ல பாட்டி பார்த்திறுக்கிற மாப்ளையை விட்டுடீங்களே….”

ஓ கண்டுபிடிசாச்சா…புத்திசாலிடா நீ….

“அது அப்ப…” அவளையும் மீறி முகத்தில் சூடேறியதை உணர்ந்தாள். தன் முகம் சிவக்கிறது என்பது அவளுக்கு புரிந்தது. அவனை நோக்கி இருந்த முகத்தை இட புறமாக திருப்பிக் கொண்டாள்.

ஆனாலும் ஆளை அள்ளும் அவன் முழுப்புன்னகை கண்ணில் தெரிந்தது.

ஆண் புன்னகையில் கூட அழகுண்டா?

 

 

ழுந்து உட்கார்ந்தாள். இருவர் உடையும் தொப்பல்.

“இப்ப என்னங்க செய்யலாம்…?” தவிப்பாய் இவள் தன் உடையை பார்க்க…

“டேட்டிங்…” அவன் சொன்ன வார்த்தையின் சத்தத்தில் அதிர்ந்து நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஆக படிக்காதவன் போல் வேஷமிட்டிருக்கிறான்….

சற்றே தலை சரித்து மந்தகாசமாய் அவன்.

தன் கண்கள் வழியாக ஒருவன் உயிருக்குள் சரிவதை முதல் முறையாக உணர்ந்தாள் பெண்.

சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். கிணறும் அதை சுற்றிலும் கண் தொடும் தொலைவு வயலும்….மின் கம்பியில் அமர்ந்திருக்கும் சில பறவைகளும்….தன்னை தானே சிலிர்த்துக்கொள்ளும் அந்த நாயும்…அவனும் ..அவளும்….அவன் பேச்சும்…சரியும் இவள் மனதும்….இது சரி இல்லையே!!

“இரெண்டு பேரும் மனசுவிட்டு பேசலாம்னு சொன்னேன்…” ஆளுமை நிறைத்த குழைவில்லாத குரல். இவள் பயம் நீங்கி நோக்கம் நேர்மையானது.

மனதை படிப்பவன்.

“உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைனு புரிஞ்சிது….என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா..?” நட்பின் சத்தம்.

“நீங்களும் தான் கல்யாணம் பண்ண வந்த மாதிரி இப்ப எனக்கு புரியல….என்னை வெரட்டியடிக்க கெட் அப் போட்ட மாதிரி தெரியுது…”

“இப்போ நான் சொல்றதை தப்பா நினைக்காம கரெக்டா புரிஞ்சிகிடனும்….ப்ளீஸ்…….உன்னை பார்க்கிறவரை….கரெக்டா சொல்லனும்னா அந்த குட்டி பையனுக்கு நீ ஆட்டோ பிடிச்சு அனுப்பி வைக்கிறத பார்க்கிற வரை எனக்கு கல்யாணத்தில இஷ்டம் இல்ல….

.எனக்கு தெரியாம என் தம்பிங்க ஏற்பாடு செய்த கல்யாணம் இது….”

பாசக்கார தம்பிங்க போல… என் தங்கைங்க மாதிரி.. இது அவள் மனகுரல்.

“கல்யாணத்த நிறுத்த தான் நான் வந்தேன்…அதான் இந்த கெட் அப்…

.இப்போ என் பேரண்ட்ஸ் ரெண்டு பேரும் பூமியில கிடையாது….எனக்கு ரெண்டும் தம்பி…. ஃபினான்ஷியலி அவங்க ரெண்டு பேரும் என்னை டிபெண்ட் ஆக வேண்டிய அவசியம் இல்லைனாலும்…..என் மேரேஜ்ங்கிறது அவங்கள பாதிக்குமோன்னு…. புரியுதா….?”

புரியுதாவா…? சேம்பின்ச்

“மேரேஜ் மேல ஒரு பிடிப்பு  இல்லாமலே இருந்தது… அததான் யோசிச்சுட்டே வந்தேன்….

என்னமோ நீ அந்த பையனுக்கு ஹெல்ப் பண்றத பார்த்தப்ப, கடவுளே இவள பாரு இவ உன் வீட்டுக்கு வந்தா எப்படி இருக்கும்னு சொல்ற மாதிரி பட்டுது…நீ வந்தா என் ஃபமிலி பழையபடி ஒரு முழு குடும்பமாகும்னு தோணிச்சு…”

கிரேட் ஜாப்  ஜீசு….கலகிட்டீங்க போங்க…ஹைஃபை

“ஆனா என்ன .இருந்தாலும் தெருவில பார்க்கிற பொண்ணை எப்படி கல்யாணம் செய்ய முடியும்……?”

ஆங்க்…லைட் லைட்டு  டியூப் லைட்டு…எதுவும் புரியாம இப்படிதான் எக்கு தப்பா முடிவெடுக்கிறதா?

“ஏற்கனவே நிச்சயம் பண்ண பொண்னு வீட்டை கண்டுபிடிச்சு வந்த வேலையை முடிச்சுட்டு கிளம்புவோம்னு தான் உன்ட்ட வந்து அட்ரஸ் கேட்டேன்….ஹெல்பிங் டென்டண்சி இருக்கிறதால ஹெல்ப் பண்னுவன்னு தோணிச்சு…”

என்ன நல்லவன்னு சொல்லிட்ட பஞ்சுமிட்டாய் ….

“ஆனா அட்ரஸைப் பார்த்ததும் உன் முகம் போன போக்கு…பாதி காமிச்சு கொடுத்துதுன்னா……”

ஹி…ஹி..

“”பாவூர்ல என்னவிஷயம்ங்கிற உன் கேள்வி முழுசா காட்டி கொடுத்துட்டு….

எங்கப்பன் குதுருக்குள்ள இல்லன்டனா…

“ஆனால் நீ டேட்டிங் கூப்பிட்ட உடனே தான்….”

“ஐயோ..அது..சும்மா..உங்க.”

“என்னை துரத்த செய்த ப்ளான்னு அப்பவே புரிஞ்சிட்டு…அதனால உனக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு புரிஞ்சிது…பேசுனா காரணம் கண்டு பிடிச்சு …கன்வின்ஸ் பண்ணலாமேன்னு நினைச்சேன்…”

“அது……” காலையில் வீட்டில் நடந்த உரையாடல் ஞாபகம் வந்தது அவளுக்கு.

 

Next page