துளித் தீ நீயாவாய் 21(4)

SP சாரப் பார்க்க கொஞ்சம் மோசம்னு தோணி இருந்தாலும் ரொம்ப பயந்துருப்பேன், கண்டிப்பா அங்க இருக்க சரின்னு சொல்லி இருக்க மாட்டேனா இருக்கும். ஆனா சார் சின்ன குழந்தைங்கள்லாம் எப்படி அம்மாப்பாவ விட்டுட்டு வரலாம்? அப்படின்றாப்ல என்னை குழந்தைன்னேதான் ட்ரீட் பண்ணினாங்க, என்ட்ட கோபமா வேற இருந்தாங்களா? அதுலயே எனக்கு சார் மேல நல்ல ஒப்பினியன் என்னையறியாமலே வந்துட்டு போல. எப்படியோ சேஃபா ஃபீல் ஆகியிருக்கு.

எப்படி யோசிச்சாலும் எனக்கு இன்னும் எப்படி இங்க தங்க முடிவு செய்தேன்னு லாஜிகலால்லாம் புரியல, ஆன இப்ப யோசிக்க முடிஞ்ச அளவு கூட அப்ப யோசிக்கிற அளவுல நான் இல்ல, இப்பவும் பவிக்கா சாரெல்லாம் என்ட்ட ரொம்பவே நல்லாதான் நடந்துகிறாங்க, ஆனாலும் கூட தங்குறது டிஸ்டர்ப் பண்றமோன்னு ஒருமாதிரி இருக்குது” என வேணி சொன்னது மதுவுக்கு ஞாபகம் வர,

“அது..” என இப்போது கொஞ்சம் தடுமாறிய மது,

“வேணிக்குமே இப்படி உங்க அண்ணி அண்ணாக்கு இடஞ்சலாகிடுவோம்ன்னு ஒரு வருத்தம் இருக்குதுதான்ணா” என ஒத்துக் கொண்டாள்.

கூடவே “இத்தன பிள்ளைங்க படிக்க இவ்வளவு எஃபெர்ட் எடுக்ற பவியண்ணி, வேணிய எப்படி இந்த வயசுல படிக்க அனுப்பாம வேலைக்குன்னு வச்சுகிட்டாங்க?” என முனங்கியும் கொண்டாள்.

இதில்தான் வெள்ளை மணி சொல்லிச் சொல்லி அடித்தது பால்கனிக்குள். துள்ளிப் போனான் இவன்.

இதை இவன் யோசிக்காதே போனானே! ‘ஆக இப்ப எதுக்கோ வேணிய வீட்ல வச்சிருந்தாலும் இவனோட பவியண்ணி எப்படியும் வேணிய படிப்புக்காக வெளிய அனுப்பிடத்தான் திட்டம் வச்சிருக்கணும், இப்படி வயல்ல வேலைன்னு கூடவே வச்சுருக்கப் போறதில்ல’

மது இவனே கேட்டுகலைனாலும் இவனப் பத்தி சொல்ல வேண்டிய விஷயங்கள இப்ப நல்லதாவேதான் வேணிட்ட சொல்லிட்டு இருப்பா, சீக்கிரமே இவனாலே ஈசியாவே வேணிய கல்யாணம் செய்துக்க முடியும்’ இந்தச் சிந்தனைதான் எதிர்காலம் பற்றிய அந்த இத உணர்வுக்குக் காரணம்.

ஆனால் வேணியை ஓரிரு மாதங்களில் பவி வெளியே அனுப்ப இருக்கிறாளா, அல்லது ஒரு வருடமே உடன் வைத்திருக்க திட்டமிட்டிருக்கிறாளா என பால்கனிக்குத் தெரியாதே, அப்படி வெளியே வந்த பின்புதானே இவனுக்கு துப்பக்கித் தடை இருக்காது, அதன் பின்புதானே இவன் வேணியிடம் பேசக் கூட முடியும் போல… தவித்தான்.

இப்படியாய் இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. இது மூன்றாவது வார சனிக் கிழமை.

இன்று காலை தன் வீட்டுக்குச் சென்ற மதுவுக்கு  உள்ளே நுழையவும் அடி வயிற்றில் குப்பென்றது. கடந்த இரு வாரங்களாக வீடு கிடந்தது போல் இல்லை இப்போது. முந்தைய கால ‘வார இறுதி அலங்காரம்’, ரூம் ஸ்ப்ரே, பூ வாசம் இத்யாதி எல்லாம் திரும்பி இருந்தன.

இவள் அம்மா என்ன நோக்கத்தில் இருக்கிறாள் இன்று?

“அம்மா நான் இன்னைக்கும் ஸ்கூல் போகணும்மா” கடந்த இரு வார சனி ஞாயிறுகளை இதை மட்டும் சொல்லிவிட்டு அவள் அம்மாவுக்கு பேசக் கூட நேரம் தராமல் கடகடவென கிளம்பி 20 நிமிடங்களுக்குள் ஓடி வந்துவிடுவதுதான்.

இன்றும் அப்படியே சொல்லிக் கொண்டு இயல்பு போல் இவள் உள்ளே நுழைய, வழக்கமில்லா வழக்கமாக வந்து இவள் ஸ்கூல் பேக்கை முதுகிலிருந்து வாங்க முயன்ற இவளது அம்மாவோ, “போய் முதல்ல தலைக்கு ஷாம்பூ போட்டு குளி, தலை எப்படி இருக்குன்னு பாரு” என அதுதான் விஷயம் போல் பேச,

இன்னுமே உள்ளே குளிர் பரப்பத் துவங்கியது மதுவுக்கு. கோபமும்தான்.

இவள் தன் அறைக்குள் நுழைய, “போய் குளி அதுக்குள்ள உனக்கு நான் ட்ரெஸ் எடுத்து வச்சுடுறேன்” என இங்கும் உதவிக்கு வந்தாள் இவளது அம்மா சாருமதி. சீக்கிரமாய் கிளம்ப வேண்டுமெனில் இவள் குளித்துதானே ஆக வேண்டும் ஆக குளியலறைக்குள் இவள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டவள்,

சரியாய் அரை நிமிடம் கழித்து கதவைத் திறந்து எட்டிப் பார்க்க, இவளது அம்மா அறையைவிட்டு வெளியே போயிருப்பது புரிய, வேகமாய் போய் தன் பேக்கிலிருந்த மொபைலை மட்டும் எடுத்துக் கொண்டு ஓடி வந்துவிட்டாள்.

கதவை உள்ளே பூட்டிக் கொண்டு அவசரமாய் அவள் அழைத்தது அவளது அண்ணனைத்தான்.

“அண்ணா இங்க எதோ ஒன்னு சரியில்ல, எனக்கு பயமாயிருக்கு” என இவள் முனங்கும் போதே,

இங்கு இவளது அம்மா கதவைத் தட்டினாள். “இந்தா உன் ட்ரெஸ்” என, கதவை இடுக்களவாய் திறந்து பார்த்தால்… ஒரு வித வான் நீலமும், அடர் பிங்குமாய் அந்த பாவாடை சட்டை தாவணி.

பார்க்கவே இவளுக்குப் புரிந்து போனது, குமட்டியது “அம்மா” இவள் உறும,

“என்னடி, ரொம்பவும்தான் பண்ற!! இன்னைல இருந்து மூனு நாள் நீ லீவு, அந்த ராஜாமணி வர்றான், ஒழுங்கா ரெடியா இரு” சாருமதி இவளுக்கு மேல் கர்ஜித்தாள்.

இதுவரைக்கும் “அம்மா படிச்சு வேலைக்கு போனா இதவிட நாம நல்லா இருக்கலாம்மா” என ஒரு கெஞ்சல் தொனியிலேயேதான் மது விஷயங்களை பேசி வந்திருக்கிறாள்,

இப்போதோ “இனி எந்தக் காரணத்தக் கொண்டும் இந்த சாக்கடைக்கு நான் சம்மதிப்பேன்னு மட்டும் எதிர்பார்க்காத” என நேருக்கு நேராக உடைத்துப் பேசினாள்.

அவ்வளவுதான் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தாள் சாருமதி. இவளது பள்ளிக்கு, ஆசிரியருக்கு என அனைவருக்கும் அசிங்கமாய் திட்டு கிடைத்தது. அதோடு இவளுக்கோ  கம்பி காய்ச்சி இழுத்துடுவேன், கொலையே விழும் என்றேல்லாம் மிரட்டல் கிடைத்தது.

அடுத்த பக்கம்