திக்கெங்கும் ஆனந்தி 8

“ரெண்டு நிமிஷம் என்னன்னாலும் செய்துக்கலாம்னு பெர்மிஷன் கொடேன்” என கண்சிமிட்டியவன் “அப்படின்னு கேட்க மாட்டேன் ஏன்னா எனக்கு என் கல்யாணம் உருப்படியா நடந்தாகணும்” என பயந்தவன் போல் ஒரு தொனியில் வாக்கியத்தை முடிக்க,

முதலில் முறைக்க ஆரம்பித்து முடிவில் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள் இவள்.

ஒரு முழு நொடி அவள் சிரிப்பதை முழு ஆசையாய் பார்த்திருந்தவன், “சந்தோஷமா இருக்கியா நதிப் பொண்ணே?” என்றான்.

அவள் வாய் வார்த்தையாகவும் அவளது மகிழ்ச்சியை கேட்க அவன் ஆசிப்பது அவன் விழிகளில் விரிந்து கிடப்பதை கண்ணுற்ற படியே “ரொம்பவும்” என பூத்தன இவள் இதழ்கள்.

“தேங்க் யூ” என வருகிறது அவனது அடுத்த வார்த்தைகள்.

“எதுக்கு?” பூரிப்பு குறையா முகத்தில் ஆச்சர்யமும் கலக்க இவள் கேட்க,

“என்னை புரிஞ்சிகிட்டியே அதுக்கு” என வருகிறது அவன் விளக்கம்.

“சாரி” என்றாள் இவள், “புரிஞ்சுக்காம பேசிட்டேன்” காரணமும் சொன்னாள்.

“எல்லோரும் எல்லோரையும் புரிஞ்சிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல, அதனால இதுக்கு சாரி சொல்றது தப்பு” என்றான் அவன்.

இதற்கு என்ன சொல்வாளாம் இவள்? எது சொல்லவும் தெரியாமல் ஆனால் துள்ளும் பூரிப்போடு ஒரு உச்ச நிலை உவப்பும் சேர ஒருவிதமாய் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

“முடிஞ்சா அப்படியே விழுங்ங்ங்கி.. உள்ளயே வச்சுக்கலாம் போல இருக்கு”  முஷ்டி இறுக்கி மார்பின் குறுக்காய் கை வைத்து உற்சாகம் அள்ளி  வெடிக்க, உதடு பிரியாமல் அவன் சொல்லிய வகையில்,

அதை சொல்லும் நேர அவனது உணர்வுப் பிரளயங்களை அவனே ரசிக்கிறான் என்ற விதமாய் சிரிப்போடும் ரசனையோடும் சிமிட்டலாய் மூடித்திறந்த கண்களின் செயலில்,

அவளை தனக்குள்ளேயே வைத்துக் கொள்ள அவன் தவிக்கும் ஆவலின் வீரியம் அவனின் மொழி விழி ரசம் பாவம் என எல்லா வகையிலும் தெறித்தது.

காத்திருந்து கைவரப் பெற்ற அவன் காதலை அவன் கொண்டாடும் அழகில் இவள் தொலைந்து கொண்டிருந்தாளெனில்,

“காஞ்சு போன மாப்பிள்ளைன்னு சொன்னியே, அப்ப நான் எதுவுமே மறுத்து சொல்லல ஏன் தெரியுமா? ஏன்னா அது 100% உண்மை” அவன் அடுத்த வம்பை இழுக்க,

“ஓஹோ அப்படியா? இதுக்கு இப்பவே நல்ல ரெமிடி இருக்கு” என்றபடி  இவளோ அருகிலிருந்த தொட்டிச் செடிக்கு நீர் விட என வைக்கப் பட்டிருந்த நீரை எதிர்பரா நேரத்தில் கையிலெடுத்து அவன் மீது தெளித்தாள். “இனி நனைஞ்ச மாப்ளையாவே இருங்க சார் நீங்க” என்றபடி.

உற்சாக வேகத்தில் செய்து கொண்டதுதான்.

அவனோ அனிச்சை செயலாய் தன் மீது நீர் தெளித்த இவள் கையை பிடித்துவிட்டான். பிடித்த வேகத்தில் இவள் வேறு தடுமாறிப் போய் அவன் மீது விழப் போக, சுதாரித்து இவளும் நின்றுவிட்டாள்தான்.

அவனும் “இருக்கு இதுக்கெல்லாம் சேர்த்து நாங்க அப்றம் கவனிக்கலைனா பாரு” என்றபடி விட்டுவிட்டான்தான்.

இவன் பிடித்து இழுத்ததில் சட்டென அவளுக்குள் ஒரு தர்மசங்கடம், இவனுக்குள்ளும்தான். அதை சமனப்படுத்த முயன்றவனாக,

“இப்படியே ஜம்னுதான் இருக்க, வா கிளம்பலாம்” என கதவை திறந்து கொண்டு வீட்டின் படிக்கட்டுக்குப் போய்விட்டான். “அம்மா மாமால்லாம் அண்ணி கூடதான் இருக்காங்க, போறப்ப மத்த டீட்டெய்ல்ஸ் சொல்றேன்” என அழைத்தவன் சற்று தள்ளி நிறுத்தி இருந்த காரை நோக்கிச் சென்றுவிட,

ஆளற்ற வீட்டுக்குள் இதற்கு மேல் வேண்டாம் என இவள் உணர்ந்ததைத்தான் அவனும் பிரதிபலிக்கிறான் எனப் புரிந்தவளாக, அவளும் அவனை தடுக்க முயலவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் முடியை க்ளிப்பிட்டு அவனோடு காரில் கிளம்பியும் இருந்தாள்.

நடந்தது என்னவெனில் நிகரனின் அம்மா கிளம்பிப் போனதும் போய் குளிக்கப் போகிறேன் என தயாரானவள் சில நிமிடம் என அசந்து போய் சாய்ந்ததாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் சில மணி நேரமே தூங்கிப் போயிருந்தாள். அதன் பின்பு விழிப்புதட்ட எழுந்தவள் உடனடியாக எழுந்துவிட்ட ஒரு பிரமையில் அப்படியே குளித்து தயாராகி நின்று கொண்டிருக்கும் போதுதான் நிகரன் வந்தது.

இதற்கு இடையில் இவளது அக்கா விமலா வீட்டுக்கு நிகரனின் அம்மாவும் இவளது அப்பாவும் போய் சேர்ந்த பொழுது விமலாவுக்கு வலி எடுக்கத் துவங்கி இருந்தது. கர்பகாலத்தில் ஏழாம் மாதத்தில் வலி எனவும் அவள் பயந்து போய்விட பொய் வலி என வருவது இந்த சமயம் இயல்பு என ஆறுதல் சொல்லி உடனடியாக மருத்துவமனை அழைத்துப் போயிருந்தார் நிகரனின் அம்மா.

பயப்பட ஒன்றுமில்லை என்றுவிட்டாலும் மருத்துவ கண்காணிப்பில் மருத்துவமனையில் விமலா இருக்கட்டும் என அவளது மருத்துவர் சொல்ல,

அப்படியானால் விமலாவுக்கு துணையாக ஆனந்தியை வரச் சொல்ல வேண்டும் என தனது இளைய மகளை அழைத்தார் அவளது அப்பா. ஆனால் ஆனந்தியோ ஏற்கனவே (அணைத்து வைத்திருந்த (ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்த) அலைபேசியையும் உயிர்பித்திருக்கவில்லை, அதோடு அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால் தொலைபேசியின் (லேண்ட் லைன்) அழைப்பையும் கேட்கவில்லை.

அடுத்த பக்கம்