திக்கெங்கும் ஆனந்தி 8 (3)

“அழகா இருக்கடா, காலைல பார்த்தத விட ஃப்ரெஷாவும் இருக்க, கொஞ்சமாவது நல்லா தூங்கினியா?” என வெகு இயல்பாக இவளை கை பற்றி தன்னருகில் அமர்த்திக் கொண்டார் நிகரனின் அம்மா.

ஆனால் இவளது அப்பா நிகரனிடம் “வாங்க மாப்ள, எப்ப வந்தீங்க நல்லா இருக்கீங்களா?” என்றெல்லாம் தன்மையாக உண்மையாக பேசினாலும் இவளிடம் வாய் திறக்கவில்லை.

இதில் வாங்கி வந்த இனிப்புகளை எடுத்து பகிர்ந்து கொண்டிருக்கும் போதே தினேஷும் வந்து சேர்ந்துவிட, ஆம் அவர் சென்னை அலுவலகத்தில் தான் இருந்தாலும், விமலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலை அறிந்து, அலுவலகத்தில் சொல்லி கிளம்பி வர இத்தனை நேரமாகி இருந்தது. அவரது வேலை அழுத்தம் அப்படி.

தினேஷ் அனைவருக்கும் இரவு உணவு வரவழைக்க, அனைவரும் சாப்பிட, கலகலவென பொழுது கழிந்தது. அடுத்து நிகரனின் அம்மா விமாலுவுக்கென கொண்டு வந்திருந்த புடவையையும் இவர்கள் வாங்கிப் போயிருந்த தோடையும் வைத்து விமலாவுக்கு கொடுக்க,

அடுத்து அப்படியே இவள் நகை பற்றியும் பேச்சு வரும்தானே! இவளது அப்பா மெல்ல எழுந்து சென்றுவிட்டார்.

அடுத்து சற்று நேரத்தில் நிகரன் தினேஷ் என ஆண்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து செல்ல, ஒருகட்டத்தில் மீண்டுமாய் அங்கு வந்த நிகர், இவளை தன்னுடன் வருமாறு  பிறர் கவனிக்கா வண்ணம் சைகை செய்தான்.

என்ன ஏதுவென புரியவில்லை என்றாலும் இவள் எழுந்து போக, அங்கே தினேஷ் இவர்களுக்காக வீட்டுக்கு வெளியில் இருந்த திறந்த வெளியில் காத்துக் கொண்டு நின்றார்.

“உங்கட்ட கொஞ்சம் பேசணும் தினேஷ் அண்ணா” எனச் சொல்லி தினேஷை அங்கே நிறுத்தி வந்திருந்தான் நிகர்.

இவளும் வந்து சேரவும் ‘மூன்று வருடமாய் எனக்கு நதியத் தெரியும்’ என்றது சார்ந்த அனைத்தையும் நிகரன் தினேஷிடம் சொன்னான். “இவளே இப்படி சண்டை போட்டுட்டாண்ணா, எனக்கு நான் நவில் பேரு அப்பா பேரெல்லாம் சொன்னதும் Azee grpன்னு உங்களுக்கு தெரியும்னே நினச்சுட்டு பேசிட்டேன், மறைக்க நினச்சது இல்ல, ஆனா இப்ப உங்க யாருக்கும் அது தெரியாதுன்றப்ப மாமா எப்படி எடுத்துப்பாங்களோன்னு இருக்கு? நீங்கதான் இதை எப்படி ஹேண்டில் செய்யணும்னு சொல்லணும்?” என தினேஷிடமே வழியும் கேட்டான்.

இவள் ஒரு பக்க காதல் விஷயத்துக்கு சண்டை போட்ட கதையை கேட்ட தினேஷ் உண்மையில் சிரித்தார். “இதுக்கு போய் நீ சண்டை போட்டு அவர எவ்வளவு பயங்காட்டி வச்சுருக்க பாரு?” என விஷயத்தை இலகுவாக்கிவிட்டு,

“Azee grpsன்னு எனக்குமே தோணலதான், நான் பேசுற ஆங்கிள்ளேதான் மாமா யோசிச்சிருப்பாங்கன்றதால அவங்களுக்கும் தோணியிருக்காது. சேம் டைம் எனக்கு மத்த நேரம் Azee grpல இருந்து சம்பந்தம்னா வேண்டாம்னு தான் தோணியிருக்கும், அவ்வளவு பெரிய இடம் வேண்டாமேன்னுதான் இருக்கும், ஆனா இப்ப உங்கட்ட உங்க அம்மாட்டல்லாம் பழகினதால அது விஷயமா படல, அது போல மாமாவுக்கும் உங்க வீட பழகிட்டுன்னா இதை பிரச்சனையா யோசிக்க மாட்டாங்க” என நிலையையும் சொன்னார் தினேஷ்.

“அப்பன்னா இன்னும் கொஞ்ச நாள் இதைச் சொல்ல வேண்டாம்னு சொல்றீங்களா? ஆனா விஷயம் அதா தெரிஞ்சா நாம ஏமாத்தின போலயே இருக்குமே” என்றான் நிகர் இப்போது

“ஆமா அது இருக்குதுதான்” என ஒத்துக் கொண்ட தினேஷ்,

“சரி ஆனந்தி நீ போய் உங்க அக்கா கூட இரு” என இவளை அனுப்பிவிட்டு நிகரோடு இவளது அப்பா இருந்த  சிட்டவுட்டுக்குச் செல்ல அடுத்து என்ன பேசினர் ஆண்கள் என்றெல்லாம் தெரியாது.

ஆனால் சற்று நேரம் கழித்து ஒரு பயத் திகிலோடு ஆண்கள் இருந்த பகுதிக்கு இவள் பழரசம் எடுத்துப் போக, இவளது அப்பா நிகரனை ஒரு கையால் அணைப்பது போல் வளைத்து எதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்.

விஷயம் தெரிந்தும் அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார் என்பது இவளுக்குப் புரிகிறதுதானே! அதன் பின்புதான் உயிரே வருகிறது இவளுக்கு.

கூடவே தினேஷை சந்தித்துப் பேசவென நிகர் இவளை அழைத்துப் போகும் வரைக்கும் இவளுக்கு அப்பா எப்படி இந்த Azee grp என்ற ஸ்டேடசை ஏற்பார் என்ற பயமே வந்திருக்கவில்லையே என்பதும் ஞாபகத்தில் வருகிறது.

நிகர் கூட இருந்தால் இதெல்லாம் தோன்றாதாமா இவளுக்கு?!

“இன்னைக்கு நாள்  நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கேன், ட்யூ டு யூ, செம்மயா உன்னை மிஸ் செய்வேன், தயவு செய்து தினமும் நைட் ஃப்ரீயானதும் எனக்கு கால் பண்ணு, எப்ப டைம் கிடச்சாலும் அடுத்த நிமிஷம் இங்க தான் இருப்பேன், மும்பைக்கும் இங்கயுமா அலையுறேன்னுல்லாம் திட்டக் கூடாது, நீ அங்க வர்ற வரைக்கும் நான் இப்படித்தான் இங்க வருவேன்” என்றெல்லாம் சொல்லி அவன் விடை பெற்றபோது இவளுக்கு நிகர் கூட இல்லாத போதும் கூட அவனையன்றி வேறெதுவும் தோன்றாது போலும் என்பது புரிந்தது.

இப்படியான ஒரு அரை சொர்க்க நிலை, அவன் காதல் தரும் சொர்க்கமும் அவன் பிரிவு தரும் ஏக்கமும் சேர இது அரை சொர்க்கம்தானே! இரவு அப்பாவுடன் வீடு திரும்பும் வரைக்குமே தொடர்ந்தது இவளுக்கு.

“என்ன ஆனந்தி நீ? மாப்ளையோட அம்மாட்டயே நைட் ரொம்ப நேரம் மாப்ளைட்ட பேசின அதனால லேட்டா தூங்கி இன்னைக்கு வேலைக்குப் போகலன்னு சொல்லி வைக்க நீ? என்ன நினைப்பாங்க அவங்க? உன் அத்தை ரொம்பவும் நல்ல குணமா தெரியுது, அதனாலதான் அந்த இடத்தில் ஒன்னும் சொல்லாம விட்டுட்டாங்க, மத்தவங்களா இருந்தா குத்தலா மனசு கஷ்டபடுற போல எதாவது சொல்லி இருப்பாங்க.

நம்ம ஊர்ல லேடீஸ்ட்ட உன் மகனுக்கு கல்யாணம் ஆகிட்டா அதோட உன் வாழ்க்கையே போச்சு, வர்றவ அவனை கைக்குள்ள போட்டுப்பா, உன் மகன் உன்னை பார்க்க மாட்டான், தெருவில விட்டுடுவான்னு சொல்லி சொல்லியே பயம்காட்டி வச்சிருப்பாங்க, அதில் நீ இப்பவே இப்படில்லாம் மாப்ளட்ட பேசினா, வர்றதுக்கு முன்னமே என் மகன அவ கன்ட்ரோல்ல வச்சுக்க ட்ரைப் பண்றான்னு தோணும்.

எப்படியும் கல்யாணத்துக்கு பிறகு தனிகுடித்தனம்தானே!, அப்ப நீங்க எவ்வளவு பேசி பழகிகிட்டாலும் உன் அத்தைக்கு தெரியவா போகுது, அதுவரைக்கும் இதெல்லாம் அவாய்ட் செய்யலாமே, ஒரு குடும்பத்துக்குள்ள கல்யாணம் ஆகிப் போறோம்னா அங்க உள்ள எல்லார் உறவும் நமக்கு சுமுகமா இருக்கணும் ஆனந்தி” என்ற அவரின் முதல் கடிந்து கொள்ளுதலின் அரைச் சொர்க்கம் காலாக மாற,

“இங்க பார் மாப்ளைய இங்க நம்ம பக்கத்து வீட்டுக்காரங்க யாருக்கும் தெரியாது, கல்யாணத்துக்கு அப்றம் அவர் வந்தார்னா எல்லோரும் சந்தோஷமா இது நம்ம ஆனந்தி மாப்ளன்னு பேசுவாங்க, இப்பன்னா யாரோ ஒருத்தன் குணசீலன் சார் இல்லாத நேரத்தில் அவர் வீட்டுக்கு வந்துட்டுப் போறான்னு சொல்வாங்க. நல்லா இருக்காது பார்த்துக்கோ, அவர வீட்டுக்கு வரவேண்டாம்னு சொல்லி வை” என்ற முகம் திருப்புதலில் கால் சொர்க்கமும் காணாமல் போனது.

“வீட்டு கேமிராவில் பார்த்தேன் என்ன விளையாட்டு இது? கல்யாணம் பேசிதான் முடிச்சிருக்கு, இன்னும் நடந்திடல” என அவர் தொடர்ந்த போது நரகம் அதன் நாக்கை இவளின் மீது வைத்தது.

வீட்டு பாதுகாப்புக்கென வாசலில் கேமிரா உண்டு. அதன் பதிவுகளை அப்பா எப்போதாவது பார்ப்பார். இன்று பார்த்திருக்கிறார் போலும். நிகரோடு பேசிக் கொண்டிருந்த போது கேமிரா ஞாபகம் இல்லை. ஆனாலும் இவர்கள் தப்பாக எதுவும் செய்யவில்லையே!

“அதென்ன இப்பவே அவர் நகை கொடுக்கிறதும் நீ வாங்குறதும்? வீட்டுக்கு வர்றதுக்கு முன்னமே நம்ம பையன்ட்ட இருந்து முடிஞ்ச வரைக்கும் பிடுங்க பார்க்கிறான்னு தோணிட்டா எவ்வளவு கஷ்டமா போய்டும்? அவங்க வீடு வேற எக்கசக்க பணக்காரங்க போல, நம்ம மரியாதைய காப்பாத்திக்கிறது நம்ம கைலதான் இருக்கு பார்த்துக்கோ! உன் அத்தை இன்னைக்கு விமலாவ எப்படி பார்த்துகிட்டாங்க தெரியுமா? அந்த குணத்த பார்த்ததாலதான் அடுத்து அவங்க பண உயரம் தெரிஞ்சும் நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லல.

அந்த வீட்ல உனக்கு என்னைக்கும் சப்போர்ட் உன் அத்தைதான். அவங்கட்ட எப்பவும் நல்ல பேர காப்பாத்திக்கோ, அதுதான் புத்திசாலித் தனம்” என அவர் முடிக்கும் போது நரகம் ஒற்றைத் தலைவலியாய் இவள் தலைக்குள்ளேயே புகுந்திருந்தது.

தொடரும்…

உங்க கமென்ட்ஸ ஷேர் செய்தீங்கன்னா ரொம்ப சந்தோஷப் படுவேன்.

திக்கெங்கும் ஆனந்தி – Comments Thread