திக்கெங்கும் ஆனந்தி 8 (2)

இதில் ஆனந்தியின் அப்பா குணசீலன் ஆனந்தியை நினைத்தும் சற்று தவிக்கத் துவங்க, “கண்ணெல்லாம் தூக்கமா இருந்தால்ல, தூங்கி இருப்பாண்ணா, நீங்க ஒன்னும் பதறிக்காதீங்க, எதுக்கும் நம்ம ஆஃபீஃஸ் ஸ்டாஃப் நம்பிக்கையானவங்க யாரையாவது அனுப்பி ஆனந்திய இங்க கூட்டி வர ஏற்பாடு செய்றேன்” என அவருக்கு சமாதானம் சொல்லிவிட்டு

நிகரனை அழைத்து விஷயத்தைச் சொல்லி “ஆனந்தி தூங்கிட்டுதான்டா இருப்பா, ஆனா இங்க உங்க மாமா ரொம்ப கவலைப்படுறாங்க. ஏற்கனவே விமலாவும் ஹாஸ்பிட்டல்ல இருக்கதால பாவம் அவர் ரொம்ப மனச அலைகழிச்சிகிறார். நீ சென்னை ஆஃபீஸ்ல நம்பிக்கையான ஸ்டாஃப் யாரையாவது கூப்ட்டு, நம்ம டாக்சி ஒன்ன எடுத்துட்டு போய் ஆனந்திய பிக்கப் செய்து ஹாஸ்பிட்டல்ல விடச் சொல்லேன், நம்ம ஃஸ்டாஃப் போய் காலிங் பெல் அடிச்சாலே எழுந்துடுவா ஆனந்தி” என வேலையும் கொடுக்க,

‘என்னது சென்னைல இருக்கீங்களா? என்னது ஆனந்தி உங்கட்ட நல்லா வேற பேசினாளா?’ என்ற என்னதுகளை மனதுக்குள் கேட்டபடி நிகரன் தனது அண்ணி சிந்துவை நோக்கினால்

அவளோ ஏதோ பாடலை விசிலடித்தபடி தன் லேப்டாப்பை குடைந்து கொண்டிருக்க,

‘அட ஆனந்திப் பொண்ணு என்ட்ட சொல்றதுக்கு முன்னமே எங்க அண்ணி அம்மா கூடல்லாம் நீ டூயட் பாடுறியா?!’ என்ற அளவுக்கு இவனுக்கு விஷயம் புரிந்து போனது.

“ஏன்மா அந்த நம்பிக்கையான ஸ்டாஃப் கண்டிப்பா லேடியாதான் இருக்கணுமா? நானால்லாம் இருக்க கூடாதா?” என இவன் கேட்க,

“டேய்!!” என அவர் ஆரம்பிக்கும் முன்னும், அப்போதுதான் அவர்கள் பேச்சை கவனித்த சிந்து

“அத்த அவன் வரட்டும், உங்கள தனியா அனுப்பினதே இங்க ஒருமாதிரி இருக்கு, இதுல நீங்க  திரும்பி வர்றப்பவும் ஏன் தனியா வரணும்? அவன் கூட்டிட்டு வருவான்” என இவன் திட்டத்துக்கு  ஆதரவுக் கரம் நீட்ட, முதியவர் தனியாய் அலைகிறாரே என ஒருபக்கம் என்றால் அவங்கட்ட நேர்ல பேசணும்போல இருக்குன்னு ஆனந்தி சொல்லிய நேரத்திலிருந்து இந்த நிகரனை விஷயத்தைச் சொல்லாமல் இன்று சென்னைக்கு எப்படி அனுப்ப என்று வழி தேடிக் கொண்டிருக்கிறாளே! ஆக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள்.

“ம்மா இன்னும் ஹால்ஃபனவர்ல நான் ஏர்போர்ட்ல இருக்கணுமா, அப்பதான் ஃப்ளைட்ட பிடிக்க முடியும்” என்று சொல்லி தன் தாயை சிரிக்கவிட்டு இவன் பறந்து கொண்டிருந்தான்.

அப்படியே நேரே வந்து ஆனந்தியின் வீட்டுக் கதவை தட்டியாயிற்று பையன்.

இப்போது ஆனந்தியை அழைத்துக் கொண்டு இவன் கிளம்பிய நேரம், அங்கு விமலாவிற்கு எதுவும் பிரச்சனை இல்லை என மருத்துவர் அவளை வீட்டிற்கு கிளம்பச் சொல்ல, நிகரனின் அம்மாவும் ஆனந்தியின் தந்தையுமே விமலாவை அவளது வீட்டுக்கு கூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டனர்.

அதை மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த  தன் மகனை அழைத்துச் சொன்ன நிகரனின் அம்மா “முதல் முதலா ரெண்டு பேருமா வெளிய வர்றீங்க, நீங்க எதுக்குப்பா ஹாஸ்பிட்டல்க்கு? அவசியம்னா வரணும்தான், அதிலெல்லாம் சென்டிமென்ட்ஸ் பார்க்க கூடாது, இப்பதான் எதுவுமில்லன்னு ஆகிட்டுல்ல, நீங்க அப்படியே எங்கயாவது வெளிய போய்ட்டு நேரே ஆனந்தி அக்கா வீட்டுக்கு வந்துடுங்க” எனச் சொல்லிவிட்டார்.

ஆக இப்போது நிகரன் ஆனந்தியை அழைத்துக் கொண்டு இந்த சிங்காரச் சென்னையை ஒரு சுற்று சுற்றிவிட்டு அவளை விமலாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அதற்குள்ளாகவே இவங்க பேச வேண்டிய கதையெல்லாம் பேசிகிட்டாங்கன்னு சொல்ல தேவையில்லதானே!.

கூடவே அவன் அவளுக்கென மூன்று காரியங்கள் செய்து கொடுத்திருந்தான்.  முதல் விஷயம் “அம்மா சொல்லியிருக்காங்க இந்த ப்ராக்ரென்ஸ் மாதிரி எப்பவுமே நம்ம ரிலேஷன்ஷிப் மனசுக்கு இதமா இருக்கணும்ன்ற அடையாளமா  உனக்கு நான் முதல் முதல்ல பூதான் வாங்கிக் கொடுக்கணுமாம்” என சற்று அதிகமாகவே ஜாதிமல்லி சரம் வாங்கிக் கொடுத்திருந்தான்.

அடுத்த காரியமாக “எப்பவும் நம்ம லைஃப் ஸ்வீட்டா இருக்கும்ன்றத சொல்லிக்கிறதுக்காக முதல்ல ஸ்வீட் கொடுக்கணுமாம்” என ஒரு வட இந்திய இனிப்பு வகை உணவகத்துக்கு அழைத்துச் சென்று இவள் அறியாத வித வித இனிப்புகளை வாங்கித் தந்திருந்தான். அப்படியே விமலா வீட்டுக்கு என்ன வகை வாங்கலாம் என இவளிடம் விசாரித்து வாங்கிக் கொண்டான்.

இவனை எப்படி தன் அக்கா வீட்டுக்கு செலவு செய்ய வைக்க என விழித்தவளை “ஹேய் அம்மா வாங்கிட்டு வரணும்னு எதிர்பார்ப்பாங்க, அதோட உனக்கு அக்கான்னா எனக்கு அவங்க அண்ணி இல்லியா? நான் வாங்கக் கூடாதுன்னு இதிலெல்லாம் கணக்குப் பார்த்தா ரொம்ப தப்பா இருக்குது, அப்ப நாளைக்கு நவில் வீட்டுக்கு நான் எதாவது செய்தா நீ கணக்குப் பார்ப்பியோன்னு எனக்கு தோணிடும் பார்த்துக்கோ” என்றுவிட்டான் சற்றும் யோசிக்காமல்.

ஆனந்தி இதில் சற்று அரண்டுவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்து அவன் இவள் வீட்டிற்கென செய்த எதையும் தடுக்க அவளுக்கு தெம்பே வரவில்லை.

கோயில் மணியை அங்கங்கு கோர்த்தது போல் ஒரு சின்ன நெக்லெஃஸ் செட் இவளுக்கு வாங்கி பரிசளித்தான். “இது உனக்கு மட்டுமில்ல நமக்குப் பிறகு நம்ம பிள்ளைங்களுக்கு போகணுமாம். அம்மா சொல்லி இருக்காங்க. நம்மளோட திருமணம் நம்ம தலைமுறைக்கு நல்லதைத்தான் தந்துட்டு போகும்ன்ற அர்தத்துக்காகவாம் இது” என ஒரு விளக்கம் சொன்னான் அதற்கு.

அதை வாங்கிக் கொண்டு காருக்கு வந்த பின் “இந்த ட்ரெசுக்கே இது செட் ஆகும் போலதான் இருக்கு, ப்ளீஸ் போட்டு காட்டேன்” என அப்போதே இவளை அணியவும் வைத்துப் பார்த்தவன்,

“ஹேய் ஒன்னு மறந்துட்டு, இரு வரேன் நதிமா டூ மினிட்ஸ்” என அவளை காரிலேயே விட்டுப் போனவன் வந்து நின்றது இரண்டு தோடுகளோடு.

சின்னதாய்தான் தெரிந்தது அந்த தோடு செட். “அம்மா  அண்ணிக்கு புடவை கூட வச்சு கொடுக்கன்னு ஒரு கம்மல் செட் வாங்கிட்டு வரச் சொன்னாங்க, இது ஓகேதானே! அண்ணிக்கு இது போல பிடிக்குமா? இல்ல கொஞ்சம் பெருசா இருக்க டிசைன் பிடிக்குமா?” என இவன் அதைக் காட்டி விசாரிக்க,

இவள் அவசரமாய் இதே இருக்கட்டும் என்றுவிட்டாள். இவளுக்கு நகை வாங்கவே ஆனந்திக்கு உதறல்தான். அடிப்படையில் அது தப்பாய் தெரியவில்லை என்றாலும் சரியாகவும் தெரியவில்லை. ஆனாலும் எல்லாம் அவன் தனது அம்மா சொன்னதாக சென்டிமென்ட் பேசும் போது என்ன செய்யவெனத் தெரியவில்லை.

எடுத்த உடனே வீட்டுப் பெரியவங்கள மீற வேண்டாமே என்றிருக்கிறது. ஆனாலும் இதெல்லாம் கல்யாணத்தப்ப செய்தா கூட தோணாதே என்றுமிருக்கிறது.

இதில் இவளது அக்காவுக்கும் வாங்குவேன் எனும் போது இவள் திணறிப் போனாள். அவனோ அப்படின்னா எங்க அண்ணாவுக்கும் செய்ய விடமாட்டியா எனதான் கேட்டு வைத்திருக்கிறானே! ஆக மறுக்கவும் தைரியம் இல்லை, அதே நேரம் இதைவிட பெருசாகவா என அவன் இன்னும் அதிக செலவுக்கு வழி இழுக்கிறானே என்ற பதற்றத்தில் இதற்கு தலையாட்டி வைத்துவிட்டாள்.

பில் போட்டு வாங்கி வந்த பின்தான் தெரியும் அது பரு வைரமாம். அவன் சொன்ன பெரிதான கம்மல் வெறும் தங்க நகையாக கூட இருந்திருக்கும். இவள் முகத்தைப் பார்த்தவன் வாங்கிய எந்த நகையின் விலையையும் அறிய அனுமதிக்கவே இல்லை.

“ஆமா நிஜமாவே இப்படில்லாம் சென்டிமென்ட்ஸ் இருக்கா நிகர்? எங்க சைடெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்ல, எதுனாலும் மேரேஜ் அப்பதான் செய்வாங்க” என பேச்சு இலகுவான பின் இவள் விசாரிக்க,

“ஹ ஹா நாம வைக்கிறதுதான சென்டிமென்ட். இதெல்லாம் என் அம்மாவோட சொந்த கண்டுபிடிப்பு, அவங்க அப்பப்ப இப்படி  செய்யணும் அப்படி செய்யணும்னு ஐடியா கொடுப்பாங்க, அதுல இருந்து நான் எனக்கு பிடிச்சத எடுத்துக்குவேன்” என வருகிறது அவனது விளக்கம்.

“அடப்பாவமே உங்க அம்மா பேரச் சொல்லி என்னை மிரட்டி இதெல்லாம் வாங்க வச்சிட்டீங்க நீங்க”

“அம்மா தாயே உன்னை லவ் பண்றது நான், கல்யாணம் செய்யப் போறது நான், குடும்பம் நடத்தப் போறது, குட்டீஸ் வச்சுக்க போறது கூட நீயும் நானும்தான், இதில் நான் சொன்னா வாங்க மாட்ட, எங்கம்மா சொன்னா மட்டும்தான் வாங்குவியா?” என வருகிறது அவனது பதில் விவாதம்.

இந்த நிலையில்தான் இவர்கள் இவளது அக்காவின் வீட்டை அடைந்தது.

அடுத்த பக்கம்