திக்கெங்கும் ஆனந்தி 7

இளகிப் போனதாய் இவள் நெஞ்சம், அவனவள் மேல் கனிந்து பட்டு வருவதாய் பாவை உள்ளம். அதோடு வாச மின்னல்களின்  வசுந்தர பின்னல்கள் மாய மின்சாரத்தால் பெண்ணை பீடித்துக் கொள்ள, காதல் பிடியில் மிதந்தாள்.

வாழ்க்கை இவளுக்கென எப்படிபட்டவனை தேடிக் கொண்டு வந்து தந்திருக்கிறது? ஆகாயம் திறந்து இவளை அனைத்திலும் நீ அழகாய் வாழ்ந்து வா என அள்ளித் தந்திருக்கிறதுதானே! பூரித்துக் கிடந்தாள்.

மூன்று வருடம் இவளுக்காக காத்திருந்து வந்திருக்கிறானே! அவனை அதெற்கெல்லாம் சேர்த்து முழு மூச்சாய் திகட்ட திகட்ட காதலிக்கப் போகிறாள் இவள். பூத்துப் போய் இவள் மனம்.

அவன், அவன் மனம் அதைத் தாண்டி எதற்கும் இவள் சிந்தனை இன்னும் செல்லவே இல்லை. இரவு முழுவதும் அவனையே படித்து  மனதில் நிறைத்ததில் அவனுக்குள்ளேயே நிரம்பிப் போய் கிடந்தாள்.

அறைக்குள் வந்து பாயும் வெளிச்சத்தை கண்ட பின்னும் கூட எழும்பணுமே கிளம்பணுமே என்ற எதுவுமே மனதில் வரவில்லை.

ஐயோ பாவம் இவ்வளவு வெயிட் பண்ணி இருக்காங்க. அடுத்து நானும் அவங்க ஆசைப்பட்ட போலவே அவங்கள அவங்களுக்காகவே சரின்னும் சொல்லி இருக்கேன். எல்லாம் நிறைவேறிட்டுன்னு அவங்க எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாங்க. அப்ப போய் கல்யாணம் வேண்டாம்னு கத்தி வச்சுட்டு வந்திருக்கேன். பாவம் எவ்வளவு கஷ்டமா போய்ருக்கும் அவங்களுக்கு.

என்னை தேடி வந்தவங்கட்டதான நீங்க வேண்டாம்னு மூஞ்சில அடிச்ச போல சொல்லிட்டு வந்திருக்கேன், இப்ப ஃபோன் பண்ணி உங்கள பிடிச்சிருக்குன்னு எப்படி சொல்ல? நானும் நேர்ல போய் பார்த்து அவங்கட்ட சொன்னா நல்லாருக்கும்.

அடப்பாவமே ஆனந்தி அதுக்காக ஐ லவ் யூல்லாம் அவ்வளவு ஈசியா முகத்த பார்த்து சொல்லிடுவியா நீ!

அடச்சீ  போ! ஐ லவ் யூன்னு சொன்னாதான் ஆச்சா? ஐம் சாரின்னாலே அவங்க புரிஞ்சிப்பாங்க. இல்லனாலும் என்ன, என் ஆள் நான் ஐ லவ் யூ சொல்றேன் உனக்கென்ன?

இப்படித்தான் துள்ளிக் கொண்டிருந்தது இவள் உள்ளம். இன்னும் நவிலனிடம் பேசியதைப் பற்றி, அதற்கும் மேலாக அப்பாவை எப்படி சம்மதிக்க வைக்க என்பவையெல்லாம் கவனத்திலேயே வரவில்லை.

காதல் ஒரு கனவுக் களம் அல்லவா? அதுவும் முதல் நாள்! பாவை மயக்கம்.

இதில் “ஏ குட்டிமா கிளம்பிட்டியா நீ?” என  சற்று பரபரத்த குரலில் இவள் அறை வாசலுக்கு வந்த அப்பா, இவளிருந்த கோலத்தைப் பார்த்துவிட்டு “என்ன நீ இப்பதான் எழுந்துக்கிறியா? உடம்பு எதுவும் முடியலையாமா? மாப்ளையோட அம்மா வந்திருக்காங்க, எழுந்து முகம் கழுவிக்கிறியா? நான் உனக்கு உடம்பு முடியலைன்னு சொல்லிடுறேன், இவ்வளவு லேட்டா எழுந்துக்கிறியேன்னு அவங்களுக்கு எதுவும் தோணிடக் கூடாது” என சற்றாய் பரிதவித்தார். பெரிதாய் பரபரத்தார்,

இதில் இவள் அடித்துப் பிடித்து படுக்கையில் எழுந்து உட்காரும் போதே “உள்ள வரலாங்களா?” என அனுமதி கோரியபடி அங்கு வந்தே விட்டார் நிகரனின் அம்மா தவமணி.

இதில் இவள் தடபுடலாய் எழுந்து நின்று “வ் வா.. வாங்கம்மா, வணக்கம்” என திக்கியபடி கை குவிக்க,

“என்னமா நீ? யாரோ போல பேசிகிட்டு? முறையா அத்தைனு கூப்டு” அப்பா இதையும் திருத்தினார். நிகரன் அம்மா இவளை எதுவும் குறையாக நினைத்துவிடக் கூடாதே என்பது மட்டுமே அவர் மனதில் இருப்பது இவளுக்கு புரிகிறது.

அதற்குள் நிகரனின் அம்மாவோ “அதிலென்னண்ணா இருக்கு? ஆனந்தியும் எங்க நிகரனும் எனக்கு  வேற வேற இல்ல, அதனால அவ அம்மான்னே கூப்பிடட்டும்” என இவள் அப்பாவிடமும்

“உனக்கு எப்படி கூப்ட பிடிக்குமோ அப்படியே கூப்டுடா” என இவளிடமும் சொல்ல,

அங்கு அப்பா பூத்துப் போவதும் இவளுக்கு கூட கொஞ்சமே பதற்றம் ஏறுவதும்  நடந்தேறுகிறது. இப்படி முகத்துக்கு நேர செல்லம் கொஞ்சுறாங்களே, இவங்கட்ட ஃபார்மலா பேசவா கேஷுவலா பேசவா? எப்படி பேசன்னே தெரியாம எதையாவது அவங்களுக்கு பிடிக்காத போல பேசிடுவனோ?!! என்ற வகை நிலையில் இவள்.

“என்னடா உடம்பு சரியில்லையா? தொந்திரவு செய்துட்டனோ?” அடுத்து நிகரனின் அம்மா இவள் கலைந்த கோலத்தைப் பார்த்து இப்படி கேட்க,

“அச்சோ அப்படில்லாம் இல்லமா, நைட் தூங்க” என்பது வரை அவரை சமாதனப்படுத்தும் நோக்கில் வேகமாய் வந்துவிட மீதியை “ரொ..ரொம்ப.. லேட்ட்.. ஆகிட்டு..” என இழுத்து முடித்தாள் ஆனந்தி.

அப்பா என்ன நினச்சு டென்ஷன் ஆவாங்களோன்னு இருக்குதுல்ல!

ஏனோ நிகரனின் அம்மாவின் முகத்தில் ஒரு விதமான புன்னகை. அதை அவர் உள்ளேயே அடக்கிப் போடவும் கூட முனைந்தார்.

இவளுக்கு அதன் அர்த்தம் அப்போதைக்கு புரியவில்லை.

“சின்னவனும் அங்க இன்னும் எழும்பல” என அவர் அடுத்து அதே புன்னகையுடன் சொன்ன போதுதான் இவள் இரவு வெகுநேரம் நிகரனுடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறாள் என அவர் நினைக்கிறார் என்பது இவளுக்குப் புரிகிறது.

“அ..அது அம்மா” என்ற திக்கல் மறுப்பு சொல்லவென உடனே வந்துவிட்டாலும் என்ன சொல்லவென இவளுக்குத் தெரியவில்லை. அவன் கூட நான் சண்டை போட்டுட்டு மூனு நாளா ஃபோன ஸ்விட்ச் ஆஃப் செய்து வச்சிருக்கேன்னா சொல்ல முடியும்?

இவள் போட்ட சண்டையை நிகரனும் அவனது அண்ணனும் கூட வீட்டில் சொல்லவில்லை போலவே, என்பதும் இப்போதுதான் இவளுக்கு உறைக்கவே செய்கிறது. ‘இல்லைனா இவர் இங்க இத்தன சந்தோஷமா வந்து நிற்பாரா? இதில் இவள் உளறி பிரச்சனையை இழுத்து வைக்கவா? ஆனா இப்ப என்ன சொல்ல?!!!

அப்பாவை நோக்கி அன்னிச்சையாக பாய்கிறது இவள் பார்வை.

“நீங்க பேசிகிட்டு இருங்க, ஆனந்தி கொஞ்சம் ஃப்ரெஷப் ஆகிக்கோ” என அப்பா அங்கிருந்து போய்விட்டார்.

ஆனந்தியா?!! கடவுளே அப்பாவுக்கு  கோபம் வந்துட்டு போலயே! நிகர்ட்ட பேசிட்டே இருந்துட்டு லேட்டா எழும்புறேன், அதை அவன் அம்மாட்ட வேற ஒத்துக்கிறேன் எனத்தானே அப்பாவுக்குத் தோன்றும் என்பதும் புரிய, கடும் சூடான வெண்ணீரின் மேல் நிற்கும் நிலை இவளுக்கு.

“அப்பா ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்டோ?” என இவள் முகபாவம் பார்த்து நிகரனின் அம்மா கேட்கவும்தான் தான் நினைப்பதைவிடம் தன் நிலை இன்னும் இக்கட்டானது என்பது தெரிகிறது இவளுக்கு.

ரெண்டு பெரியவங்கள ஹர்ட் ஆகிடாம சமாளிக்கணும், அதுவும் பொய்யும் சொல்லாம உண்மையையும் வெளிய விடாம!

“அப்படில்லாம் இல்லமா, அப்பா ரொம்பவும் கேரிங்” என ஒரு பதிலை இவள் சொல்ல,

அவரோ ஒரு பெருமித பாவத்தோடு இவள் கன்னத்தை தட்டியவர், “பெண் குழந்தைங்கதான் அப்பாக்களோட பெரிய சம்பாத்தியம், நானும் என் அப்பாட்ட இப்படித்தான்” என்க, நீ உன் அப்பாவ விட்டுக் கொடுக்கமாட்ட, ஆனா அது எனக்கு பிடிச்சிருக்கு என்பதாய் இவளுக்கு அது புரிய,

உண்மையிலேயே ஆனந்தி இம்முறை இலகுவாக உணரத் துவங்கினாள்.

“நான் இங்க வெயிட் பண்றேன்மா, நீ போய் முகம் கழுவிட்டு வா, பெட்டரா இருக்கும் உனக்கு” என அடுத்து அவர் அனுப்ப,

இரண்டு நிமிடங்களுக்குள் முடிந்தவரை ஃப்ரெஷப் ஆகி வெளி வந்திருந்தாள் இவள்.

“வர்றேன்னு சொல்லிட்டு வந்தா ரொம்ப ஃபார்மலா நீங்க எதாவது ஏற்பாடு செய்துடுவீங்களோன்னு இருந்துது.. தேவையில்லாம உங்களுக்கு எக்ஸ்ட்ரா வேலைதானே, அதோட உன்னை திடுதிப்புன்னு லீவ் எடுக்க சொன்ன போல ஆகிடக் கூடாதுல்ல..இப்ப ஒரு 15 இருபது நிமிடத்தில் கிளம்பிடுவேன்மா” என துவங்கிய நிகரனின் அம்மா

“கல்யாணம் முடிவாகிட்டாலே மாப்ள வீட்ல இருந்து அடிக்கடி பெண் வீட்டுக்கு போவோம்மா, எங்க ஊர் பழக்கம் அது. பெண் வீடு உள்ளூர்னா தினம் சாயந்தரம் பூ கொண்டு போய் பொண்ண பார்த்துட்டு வருவோம், ஆனா இப்பல்லாம் எங்க முடியுது? இதில் எங்க சிந்துக்கு உன்னை பார்த்தே ஆகணுமாம், பெண் பார்க்க வந்த அன்னைக்கும் அவளால வர முடியலைல, அதான் இப்ப போய் பார்த்துட்டு வரேன்னு ஒத்த கால்ல நிற்கா, வீடியோ கால்ல பேசுடான்னா உன்னை போன்ல பிடிக்கவே முடியலைன்றாங்க, தெரியும் ஹாஸ்பிட்டல் டைம்ல நீ ஃபோன் அட்டென் செய்ய முடியாதுன்னு, அதான் நானே நேர்ல வந்துடலாம்னு வந்துட்டேன்.” என முழு விளக்கம் கொடுத்தார்

“நானும் உன்னை வந்து பார்த்த போலும் இருக்கும், அப்படியே சிந்துட்டயும் நீ பேசின மாதிரி இருக்கும்னு நினச்சேன், அதான் நீ காலைல கிளம்புறதுக்குள்ள வந்து பார்த்துடணும்னு இந்த டைம் வந்தேன்.

சிந்துக்கு சும்மாவே நிகர்னா ரொம்ப செல்லம், அவன் கல்யாண நேரத்தில் இப்படி தனக்கு ஓடி ஆடி வேலை செய்ய முடியலையேன்னு ரொம்ப வருத்தப்படுறா போல, குழந்தையுண்டாகி இருக்க பொண்ணு ஆசைப்படுறத பார்த்துட்டு சும்மா இருக்க முடியல” அவர் தொடர,

இந்த மூன்று நாளில் நவிலனின் மனைவி சிந்தியா இவனை தொடர்பு கொள்ள ரொம்பவும் முயன்றிருக்கிறார் என்பது இவளுக்குப் புரிகிறது. கிலி புளிக் கரைசல் எல்லாமும் வருகிறது.

ஆக நவிலன் தன் மனைவி சிந்தியாட்ட விஷயத்த சொல்லியாச்சு போல, ஆனா சிந்தியாவும் பெரியவங்கட்ட சொல்லல போல. நிகருக்கும் அவனது அண்ணா குடும்பத்துக்குமான இந்த பிணைப்பு இவளுக்கு வெகுவாகவே பிடிக்கிறது. அதுவும் அவன் அண்ணிக்கு இவன் செல்லமாம், இப்படி ஒரு வார்த்தை தேர்வை பயன்படுத்துவது அவனது அம்மா.

செம்ம ஸ்வீட்டா இருக்குல்ல கேட்க!

அடுத்த பக்கம்