திக்கெங்கும் ஆனந்தி 7 (2)

இவள் இதையெல்லாம் யோசித்து முடிக்கும் முன் “சிந்து லைன்ல இருக்காமா, பேசுங்க” என தன் டேபை இவள் கையில் கொடுத்த நிகரனின் அம்மா,

“கல்யாண ட்ரெஸ் எங்க எடுக்கலாம், உங்க பக்கம் என்ன முறைன்னு நான் அப்பாட்ட கேட்கணும்டா, நீங்க பேசிட்டு இருங்க” என வெளியே சென்றுவிட்டார்.

“சாரி அத்தை இப்படி அங்க வருவாங்கன்னு நான் யோசிக்கவே இல்ல, என் முகத்த பார்த்துட்டு மாமாவும் அத்தையும் இப்படி யோசிச்சிருக்காங்க போல, டிஸ்டர்ப் செய்ததுக்கு சாரி, ஆனா உன்ட்ட நான் கண்டிப்பா பேசணும் ஆனந்தி.

நீ எங்க நிகர்ட்ட அப்படி எதைப் பார்த்து இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னன்னு எனக்கு இப்ப வரை புரியல ஆனந்தி, அதுல நீ நவில வேற இப்படி சொல்லி அதை காரணமா காமிச்சு கல்யாணத்த நிறுத்தி இருக்க பாரு அதை எங்களால தாங்கவே முடியல,

நவில் எப்படி மறுகிறார்னு உனக்கு புரியாது.

நவிலும் நானும் நாலஞ்சு வருஷமா லவ் பண்ணி கல்யாணம் செய்துகிட்டவங்க, நான் எங்க நிகர முதல்ல பார்க்கிறப்ப அவன் ஸ்கூலுக்குத்தான் போய்ட்டு இருந்தான். அவ்வளவு சின்னப் பையன்.

நவில் எனக்கு ஆரம்பத்திலே சொன்ன ஒரு விஷயம் என்னன்னா ‘நிகர் என் தம்பிதான், ஆனா அவன நீ என் மகன்னு பார்த்து பழகிகிட்டன்னா மட்டும்தான் எனக்கு அவன் மேல உள்ள பாசம் உனக்கு எதோ வகையில் நிகர உன்னோட போட்டியா தோணவிடாம செய்யும்ன்றதுதான்.

அந்த அளவுக்கு அவர் என்னைக்குமே நிகர தன் மகன்னுதான் யோசிப்பார், அப்படி இருக்க அவன் விரும்புற பொண்ணுன்னு உன்னை பார்க்க வந்தவர் என்ன வகையில் உன்னை பார்த்திருப்பார்?

அவரப் போய் இப்படி சொல்லிட்டியே” என இடைவெளியே விடாமல் அந்த சிந்தியா பேசிக் கொண்டே சென்றவள் இதற்குள் பேச முடியாத அளவுக்கு அழுகையில் சிக்கவும் செய்திருக்க,

“அண்ணி ப்ளீஸ் அண்ணி, நான்தான் அப்பவே இப்படி நினச்சதுக்கு சாரி கேட்டுட்டனே, அது ப்யூர்லி மிஸ்ண்டர்ஸ்டாண்டிங் அண்ணி, காலேஜ்க்கு வர்ற யாரோ ஒருத்தர் என்னைய என்னைய பார்த்து அவங்களுக்குள்ள பேசிக்கிறாங்க, அடிக்கடி பார்க்க வர்றாங்க, இதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாதுன்றப்ப நான் அப்படி யோசிச்சுட்டேன். ஆனா நிகர் விளக்கம் சொல்லவுமே நான் நவில் அண்ணாட்ட சாரி கேட்டுட்டனே, ப்ளீஸ் அழாதீங்கண்ணி, கன்சீவா இருக்கீங்கன்னு வேற சொன்னாங்க ப்ளீஸ், நான் ஏற்கனவே ரியாக்ட் செய்ததுக்கே..”  என இவள் தன்னிலையை விளக்கிக் கொண்டிருக்கும் போதே,

இதற்கு இவள் அண்ணி அண்ணாவில், பேசிய தொனியில் அந்த சிந்தியாவுக்கு இவள் மனமாற்றமே புரிந்துவிட்டது போலும்,

“ஹேய் அப்படின்னா புதுப் பொண்ணு இந்த கல்யாணத்துக்கு ரெடியாகிட்டுன்னு சொல்லு” என அழுகையெல்லாம் அடங்கிப் போக வெடித்து வரும் அந்தனை சந்தோஷத்தோடு இவளைக் கேட்டாள்.

‘யெஸ் ஐம் ரெடி இதோ இப்ப கூட்டிட்டுப் போனாலும் வர்றேன்’ என சொல்லிவிடும் அளவுக்கு இவளிடம் உற்சாகம் இருக்கிறதுதான், ஆனால் “ம்” என்பதை சத்தமாய் சொல்லவே இயல்பு தடுக்கிறதே!

“அதெல்லாம் இந்த ம் எல்லாம் நாங்க ஒத்துக்க மாட்டோம், ஐ லவ் நிகரன் அப்படின்னு சொல்லாட்டியும் நான் அவங்கள ரொம்ப மிஸ் செய்தேன், இந்த நிலா அந்த கடல் இந்த ஜன்னல்னு எதைப் பார்த்தாலும் அவங்களா தெரியுறாங்க அப்படின்னாவது எதாச்சும் சொல்லணும்” என சிந்து இப்போது இவளை வம்பிழுக்க,

இதற்கு இவள் என்ன சொல்ல? ஒரு சிரிப்போடு மட்டுமாய் இவள் சமாளித்தாள்.

“நிகர்ட்ட எப்ப சொல்லப் போற ஆனந்தி?” என வெகு ஆவலாக விசாரித்த சிந்து, “சீக்கிரம் சொல்லிடு என்ன, சொல்றப்ப இப்படி எங்கட்ட பேசுற போல ஒத்தை ஒத்தை வார்த்தையா சொல்லக் கூடாது” எனவும் சொல்ல, “எதையும் விளக்கமா பேசிட்டாதான்பா லைஃப் ஈசியா இருக்கும்” என காரணமும் கொடுக்க

“ஆமாண்ணி நேர்லயே பார்த்து தெளிவா பேசிடணும்னு தோணுது” என இவள் நினைத்திருந்ததைச் சொல்ல,

“ஆஹா அடுத்த லெவல் ப்ரபோசல் சீன் ஒன்னு ரெடியாகுது போலயே!” என சிந்து இவளைச் சீண்டினாலும்,

“சீக்கிரம் பேசிடுபா, அவன் ரொம்பவும் அப்செட், வானமே இடிஞ்சு விழுந்தாலும் மார்கெட் ஃபங்க்ஷனாகுற டேல அவன் (மும்பை) ஆஃபீஸ்க்கு போகாம இருக்க மாட்டான், இப்ப நேத்தே இங்க (ஹைதரபாத்)  நம்ம வீட்டுக்கு வந்துட்டான், இன்னும் கூட ரூம விட்டு வெளிய வரல” என நிலைமையை எடுத்தும் சொல்ல,

இவளுக்குத்தான் ரொம்பவும் உருகிப் போனது. கூடவே குற்ற  உணர்ச்சி வேறு.

“சாரி” என்றாள் ரொம்பவும் முனங்கலாக.

“என்னதிது மேரேஜ் லைஃப்னா சின்ன சின்ன மிஸண்டர்ஸ்டாண்டிங் வந்துதான் போகும், அதுவும் இனிஷியல் ஸ்டேஜ்ல ரொம்பவும் சகஜம், அதோட என்ட்ட எதுக்கு சாரி? நிகரன கவனி, அவன் எப்பவுமே தன்ட்ட வர்றவங்களுக்கு நல்ல ரிட்டர்ன்ஸ் கொடுப்பான், மூளைக்காரன்” என கண் சிமிட்ட,

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் போது வரும் லாபத்தை ரிட்டர்ன்ஸ் என்பது வழக்கம் என கொஞ்சம் யோசித்து புரிந்து கொண்டாலும் இதற்குள் வெட்கத்தில் தகித்துப் போயிருந்தது இளையவள் முகம்.

“ம்க்கும் இதெல்லாம் தாங்கி, தாண்டி வரணுமே எங்க வீட்டுப் பையன், பாவம்தான் நீ நிகரா” சிந்துவோ இன்னுமே சீண்ட,

“ஐயோ அண்ணி, அப்றம் நான் ஃபோன வச்சுடுவேன்” என சிணுங்கும் நிலைக்கு வந்திருந்தாள் இவள்.

“சரி சரி விட்டுடுவோம், மீதிய கல்யாணத்தன்னைக்கு கவனிச்சிடுவோம், நிஜமா உன்னை பார்க்க வரணும்னு அவ்வளவு ஆசையா இருக்கு, ஆனா எங்க ஜூனியர் மோஃஸ்ட் அதுக்கு பெர்மிஷன் தர மாட்டேங்கிறாங்க” என இப்போது தன் வயிற்றில் கை வைத்து காட்டிக் கொண்ட சிந்து, ஆனந்திக்கு மனோகரமாகப் பட்டாள் இந்நொடி.

“முதல் டைம் நம்ம வீட்டுக்கு கால் செய்துருக்க, நம்ம வீட்டப் பார்க்காட்டி எப்படி?  வா சுத்தி காட்டுறேன், அப்படியே உன் அவரையும், உங்க ரூமையும் கூட நீ ஒரு டைம் பார்த்துக்கலாம்” என்றபடி டேப் கேமிராவில் தான் நிற்கும் இடத்தை சுற்றிக் காட்டியபடியே நடக்கத் துவங்கினாள் சிந்து.

“ஹ்ம் இப்ப நுழையுறமே இதுதான் வீட்டோட மெயின் ஹால், பார்த்துக்கோ எப்படி இருக்கு?” என அவள் சுற்றிக் காட்டிய அறை மிகப் பெரியதுதான் என்றாலும் அவர்கள் பண நிலைக்கு அதீத படோபடமாய் மனம் ஒட்ட முடியா வகையில் இருக்கும் என ஆனந்தி எதிர்பார்த்தது போல் இல்லை அந்த அறை.

அறையின் ஒரு பக்கம் முழு நீளத்துகுமே சோஃபா வகை இருக்கை அமைக்கப் பட்டிருக்க, மற்றபடி சுவரில் ஆங்காங்கு சின்ன சின்ன அலங்காரப் பொருட்கள் வைக்கப்பட்டு அழகாய் இருந்தாலும் படோபடமாய் எதுவுமே இல்லை.

சோஃபாவின் ஒரு ஓரத்தில் நிகரின் அப்பா அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்.

“மாமா என் ஃப்ரென்டுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க” என சிந்து கேட்பதும் அவர் “ஹலோ ரோகி” என கையசைத்துவிட்டு “நீயாவது சொல்லுமா சிந்துட்ட, டாக்டர் அவள ரெஃஸ்ட் எடுக்க சொன்னா அவ அத்தை இல்லைனதும் நல்லா வீட்ட சுத்தி சுத்தி வர்றா” என கோரிக்கை வைப்பதையும் பார்க்க ஆனந்திக்குள் கசிவும் நனைவுமாய் மழைக்கால மனோபாவம்.

“என்ஃப்ரென்ட் ரோகிணின்னு நினச்சுட்டார் போல, கல்யாணத்துக்கு வருவா, அவளையும் அறிமுகம் செய்து வைக்கிறேன்” என சிந்து சொல்லியபடியே நடக்க இப்போது எதிரில் வந்த ஒரு குட்டிப் பையன்  சோஃபாவில் நிகரன் அப்பாவுக்கு அடுத்து ஏறி நிற்க முயல,

“டேய் தம்புடு என்ன பண்ற நீ?” என அவசரமாக விசாரித்தாள் சிந்து.

அடுத்த பக்கம்