திக்கெங்கும் ஆனந்தி 6

போய் தீய வச்சு கொளுத்தணும் என முடிவெடுக்கவெல்லாம் வரத்தான் செய்தது. ஆனால் கையில் அந்த டைரியை தூக்கிக் கொண்டு அடுத்த எட்டு வைக்க கூட கனத்துப் போகிறது மனமும் உலகமும் இவளுக்கு.

எதெல்லாம் தன்னை துன்புறுத்துகின்றன என்று ஆனந்திக்கே வரையறுக்க முடியவில்லை. ஆனால் நிகரனோடு எல்லாம் முடிந்து போனது என்பது இப்போது பூதகர வெறுமையாய் படுகிறது.

இடம் பொருள் பார்க்காமல் அழுகை வேறு வர, அனைவரும் தன்னையே பார்க்கிறார்களோ என அவமானமும் சேர்ந்துவர, தன்னை சுமக்கவே அவள் பெரும்பாடு பட்ட நேரம், கௌஷி வந்து சேர்ந்தாள் அங்கு.

“ஏ ஆந்த கால் பண்ணி இருக்கலாம்ல, அண்ணா தேடி வந்து பை சொல்லிட்டுப் போறாங்க, சரி சரி புரியுது, நீங்க ரொமான்டிக்கா உருகி உருகி பை சொல்லிக்கிற நேரம் குறுக்க குழந்தபுள்ள நான் ஏன்னு பார்த்திருப்பீங்க, உன்ன பத்ரமா வீட்ல போய் விட்டுடணுமாம், அண்ணா ஆர்டர், அவ்வளவு அப்பாவின்னா வேஷம் போட்டுட்டு இருக்க அண்ணாட்ட? பாவம் கல்யாணத்துக்கபுறம் உண்மை தெரியுறப்ப என்ன பாடுபடப் போறாரோ மனுஷன்? என்னடி இந்தா இருக்க மும்பைக்குத்தான போய்ருக்கார் மூஞ்ச இப்படி தூக்கி வச்சுகிட்டு இருக்க?” என கௌஷியை தனியாய் பேசவிட்டு மௌனத்தை மொத்தமாய் சுமந்தபடி ஆட்டோ ஏறினாள் ஆனந்தி. என்ன அழுது வைக்க வரவில்லை.

இவள் இப்படி ஒரு மனநிலையில் கிளம்பக் கூடும் என தெரிந்துதான் துணைக்கு யாரையாவது கூட்டிட்டு வான்னு அத்தனை டைம் சொன்னானா? என அன்றும், மறுநாள் இரவும் கிடந்து அழுத பின் மெல்ல நினைவில் வருகிறது இவளுக்கு.

ஆம் இரண்டு இரவுகளை அழுது தீர்ப்பதற்கென பயன்படுத்திக் கொண்டாள் ஆனந்தி. ஆனால் யாரிடமும் நடந்ததைப் பற்றி இன்னும் ஒரு வார்த்தை பேசி இருக்கவில்லை அவள். அதுவும் அப்பாவிடம் சொல்வது வெகு கஷ்டமான காரியமாய் பட, எப்படி வீட்டில் பேச்சை ஆரம்பிப்பது என இன்னும் சிந்திக்கக் கூட துவங்கவில்லை அவள்.

விடுப்பு எடுத்தால் வீட்டில் ஏன் எதற்கு என கேள்வியாகுமே என மருத்துவமனைக்கு மட்டும் சென்று வந்து கொண்டிருந்தாள்.

இதில் அன்று மதிய உணவு வேளையில் இவள் கேன்டீன் செல்ல, அங்கு அமர இவளுக்கு வாய்த்தது நிகரனும் இவளுமாக பேசிக் கொண்டார்களே அதே மேஜை.

அப்போதுதான் ஓடுகிறது இப்படியான சிந்தனை.

இந்நேரம் இவள் முதுகில் விழுகிறது சின்ன இடி. தன் கையிலிருந்த புத்தகத்தால் இவளை அடித்தபடி இவளுக்கு எதிரில் வந்து அமர்கிறாள் கௌஷி.

“என்ன ஆந்த ரெண்டு நாள மூஞ்சையே கண்ல காட்டல?” எனத் துவங்கியவள், “ஆக அன்னைக்கு அண்ணாட்ட சண்டைய போட்டுட்டுதான் கிளம்பியிருக்க என்ன? இன்னும் கூட பழம் விடலையா நீ? அப்படி என்னடி நிச்சயமான மறுநாளே சண்டை? அவர் வேற மும்பையிலிருந்து ஓடி வந்திருக்கார்?” என நேரடியாக விஷயத்துக்கு வர,

“ப்ச் அவர் என்னை மூனு வருஷமா லவ் பண்ணதா சொல்றார்” என இவளும் ஒற்றை வரியில் விஷயத்தை வெளியிட்டாள்.

“அட பாவி உலகமே, நாட்ல எத்தன பொண்ணுங்க  தன் ஆளு தன்ன லவ் பண்ணணும்னு ஆசை ஆசையா அலைறாங்க அவங்களலாம் விட்டுட்டு போயும் போயும் இவ ஆள போய் இவள லவ் பண்ண வச்சிருக்கியே?!” என கௌஷியோ வானத்தைப் பார்த்து டயலாக் அடிக்க,

ஆனந்தி இப்போது தீயென முறைத்தாள்.

“சரி சரி தீயெல்லாம் உன் ஆளுக்கு சேர்த்து வை, உன்ன லவ் பண்ண தப்ப செய்தவர் அவர்தான? நாந்தான் உன்னை லவ் பண்ணாத நல்லவளாச்சே, அப்றம் என்னை ஏன் எரிக்க? என்ன விஷயம்னு மட்டும் சொல்லு” கௌஷி இன்னும் வம்பிழுக்க,

ஆனந்தி எழுந்து கிளம்பிவிட்டாள். சட்டென அவள் கையைப் பிடித்து இழுத்து மீண்டுமாய் அமர வைத்த கௌஷி “அவர் இருக்கது மும்பை நீ இங்க சென்னைல, அப்ப அவர் எப்படி  லவ் பண்ணார்? அதான உன் கேள்வி. கேட்டியா அவர்ட்ட?”

“…..”

“சும்மா உன்னை எதோ  போறப்ப வாரப்ப ஒன் ஆர் டூ டைம் நாலஞ்சு நிமிஷம் பார்த்துட்டு லவ் பண்றதா கற்பனை செய்துகிட்டு கல்யாணம்னு உன் வீட்ல வந்து நிக்கார் அதுதான உன் எரிச்சல்? இதை அவர்ட்ட கேட்டியா? என்ன சொன்னார் அண்ணா?”

“…..”

“உன்னைப் பத்தி எதுவும் தெரியாம, அவரா நீ இப்படித்தான்னு இந்த மூனு வருஷத்தில் நல்லாவே கற்பனைய வளர்த்திருப்பார், கல்யாணத்துக்கு அப்றம் நீ அப்படி இல்லைனு புரியுறப்ப அது சின்ன லெவல்லயோ இல்ல பெரிய லெவல்லயோ பிரச்சனையாகும் இதுதான உன் பயம்? இதைப் பத்தி அவர்ட்ட பேசினியா?”

“…..”

“அதான தெரியுமே, ஏ அறிவுஜீவி கோபம் வந்தா பேச மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டா, அப்றம் அவர் என்னத புரிஞ்சி என்னத சொல்வார்? சுஜி சூசைட் அட்டெம்ட்ல நீ மட்டுமில்ல நானும்தான் ஆடிப் போய் இருக்கேன், சோ உன் பயம் எல்லாத்தையுமே ஒத்துக்கிறேன்,

ஆனா இதை மனசுவிட்டு பேசியிருந்தா, நிகரன் அண்ணா எதாவது விளக்கம் சொல்லி இருப்பார்ல, உனக்கு அது திருப்தியாகி இருக்கும்ல, இல்லனா கூட உனக்கு வீட்ல வந்து பார்மலா பொண்ணு பார்த்தா எரிச்சலாகும்னு உன்னை சரியா புரிஞ்சிகிட்டுதானே இங்க வந்து பார்த்துட்டு போனேன், என்னால முடிஞ்ச வரைக்கும் உன்னை சரியாதானே புரிஞ்சிருக்கேன், ஒருவேளை இதுவரை சரியா புரிஞ்சுக்காம இருந்தாலும் இனி புரிஞ்சிட்டு போறேன், எப்படியும் உன்னை கஷ்டபடுத்திடக் கூடாதுன்ற கவனம் எனக்கு இருக்குதுதானே அது போதுமே சந்தோஷமான மேரேஜ் லைஃப்க்குன்னு எடுத்து சொல்லி இருப்பார்ல, அப்படின்னாலே உனக்கு மனசு ஆறி இருக்கும்ல, அதைவிட்டுட்டு இது என்ன நேர்த்திகடனா ரெண்டு நாள் மனசுகஷ்டபட்டுகிட்டு மூஞ்சு வீங்கிப்போய் சுத்துவன்னு? பாவம் என்னன்னே புரியாம அண்ணா வேற அங்க நொந்திருப்பார்” கௌஷி சொல்ல சொல்ல

“புது விளக்குமாறு நல்லா கூட்டும்னு ஒரு கான்செப்ட் வேற இருக்குதே, அந்த அஞ்சுமன் சுஜிட்ட ஆரம்பத்தில் எப்படி சீன் போட்டான்?” பரிதாபம் போல முகத்தை வைத்துக் கொண்டாலும் ஆனந்தி இந்தக் கேள்வியைக் கேட்டது கௌஷியை வாய்கட்டத்தான்..

“மண்டைல நங்குன்னு ஒன்னு வைக்கப் போறேன், நீயும் உன் விளக்குமாறும், முதல்ல அண்ணாவ கூப்ட்டு பேசு, அப்றம் நீயே அவர் கூட டூயட் பாட போய்டுவ, நைட் முழுக்க அவர்ட்ட மொக்கை போட்டுட்டு நாளைக்கு நீ லீவ் எடுக்கலன்னா பாரு, இந்த கௌஷிய சீண்டிட்டல்ல இந்த சாபம் உனக்கு பலிக்காம விடாது”

“ஹேய் கௌஷி நான் சீரீயஸா பேசிகிட்டு இருக்கேன், இந்த கல்யாண பேச்சுக்கு இதோட ஃபுல்ஸ்டாப் வைக்கிறதா நிகர் வீட்டாள்ங்கட்ட வரைக்கும் சொல்லிட்டே வந்துட்டேன், என்னைப் பொறுத்தவரைக்கும் இது முடிஞ்சது முடிஞ்சதுதான்”

“ஓ!! மை காட்!!! நீ என்ன பைத்தியமா ஆனந்தி? கோபத்துல வார்த்தை சிந்துவேன்பியே அதை இப்படித்தான் சிந்துவியா? நிஜமா சொல்றேன் இட்ஸ் டூ மச். இப்படி வார்த்தைய விட்டன்னா கூட இருக்கவங்க கடவுளாவே இருந்தாலும் நம்ம லைஃப் கஷ்டமாதான் இருக்கும் ஆனந்தி. இவ்வளவு கோபம் வர்ற அளவுக்கு நிகரன் என்ன தப்பா செய்துட்டார்? உன்னை கல்யாணம் செய்யப் போற ஒரு மனுஷன் உன்ன லவ் பண்ணேன்னு சொன்னது அவ்வளவு பெரிய குற்றமா?” என ஆனந்திக்காகவே குமுறிய கௌஷி,

“சரி விடு, இதுதான் உன் பலவீனம்னு நீயே சொல்வியே, கோபம் வந்தா பேச மாட்டேன்னு நீ மேனேஜ் பண்றதையும் திட்டுறேன், அப்றம் பேசிட்டியேன்னும் திட்டுறேன்” என ஆனந்திக்காவே இறங்கியும் வந்தாள்.

“அப்படி இல்ல கௌஷி, இந்த லவ் மேட்டர்னு மட்டும் இல்ல மொத்தமாவே நிகரன் பேசின எல்லா விஷயமுமே பயங்கர ஏமாற்றமா, கோபமா, பயமா, திகிலா டிப்ரெசிவான்னு எப்படியோ இருந்துச்சு. எப்படியும் எங்க வீட்ல இதெல்லாம் தெரிஞ்சா அப்பாவே இந்த மேரேஜ் வேண்டாம்னு முடிப்பாங்கன்னும் இருந்துது. எல்லா ப்ரஷரும் சேர ரியாக்ட் செய்துட்டேன் போல. எனிவே முடிஞ்சது முடிஞ்சதுதான். இனி அதைப் பேசி ப்ரயோஜனம் இல்ல. இனி எங்க வீட்ல இதை எப்படி சொல்லணும்னு பார்க்கணும்”

“அம்மா தாயே அவசரகுடுக்கை, அப்படி எதையும் செய்துடாதமா? அவங்க வீட்ல இழுத்து வச்சது பத்தாம உங்க வீட்ல வேறயா?”

“ப்ளீஸ் புரிஞ்சுக்கோ கௌஷி நிகரோட அண்ணா அவங்க வீட்ல நிகருக்கு அப்பா போல இருக்காங்க, அவங்கட்டயே இந்த மேரேஜ் வேணாம், உங்க தம்பிட்ட சொல்லி புரிய வைங்கன்ற அளவு பேசி இருக்கேன், இதுக்கப்புறமும் இனி கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு நான் போனா எப்படி இருக்கும்? என்னையவோ என் வீட்டாள்களையோ அவங்க வீட்ல இனி எப்படி ட்ரீட் செய்வாங்க? ப்ச் இதெல்லாம் வாழ்க்கைக்கும் பிரச்சனையாகிற விஷயம், அதோட அந்த நவிலன் வேற பிக்க்ஷாட்  போல, நதி கால்டாக்சியே அவரோடதுதானாம், நிகர் பேக்ரவ்ண்ட் எவ்வளவு பெரிய இடம்னு புரியுதா? எனக்கும் என் ஃபேமிலிக்கும் இதெல்லாம் செட் ஆகாது கௌஷி.

பெண்ணுக்கு ஒரு பிரச்சனைனா பெண் வீட்ல உள்ளவங்க வந்து ஏன்னு கேட்க முடியணும், அந்த வார்த்தைக்கு அங்க மதிப்பும் இருக்கணும், அப்படிபட்ட மாப்ள வீடுதான் எப்பவும் குடும்ப வாழ்க்கைக்கு சரியா வரும்னு அப்பா ரொம்பவும் சொல்வாங்க. அப்பா இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டாங்க. இதெல்லாம் சேர்ந்துதான் ப்ரஷராகியே கத்தி இருப்பனா இருக்கும் நான், என்னைப் பொறுத்தவரைக்கும் இதுக்கு மேல இந்த மேரேஜ் டாபிக் என் லைஃப்ல கிடையாது”

“நதி டேக்சியா? அது Azee grpsதான் இதையும் வச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்ட ஞாபகம். Azee grps சிஈஓ பேர் கூட நவிலன்தானே? ஓ மை காட் அவங்கட்டயா கத்தி வச்சுட்டு வந்திருக்க? ஆனா அவ்வளவு பெரிய பேக்ரவ்ன்டுக்கு நிகர் அண்ணா என்ன ஒரு டவ்ன் டூ எர்த் பெர்சனாலிட்டியா இருக்காங்கன்னு இப்ப தோணுது. கிளம்புறேன்னு என்னைய கூட தேடி வந்து சொல்லிட்டு போன ஆள். அதெல்லாம் நிகர் அண்ணாட்ட நீ பேசு போதும், அவங்க அவங்களோட வீட்ட சமாளிச்சுடுவாங்கன்னுதான் எனக்கு படுது, பாரு உங்க வீட்ல வந்து கல்யாணம் நிச்சயம் செய்ற அளவுக்கு அவங்க வீட்ட கூட்டி வந்திருக்காங்கதானே உங்கப்பாவும் சம்மதிசிருக்காங்கன்னு மறந்துடாத!”

“ஓமைகாட் Azee grpஆ தெய்வமே இன்னும் அதைச் சொல்ல்லை பார் இந்த நிகரன், எல்லாமே டாக்டிக்ஃஸ் அண்ட் ட்ராமாதான்போல”

“பிச்சுட போறேன், என்ன நீ? நதின்னு சொல்லவும் Azeeந்னு தெரிஞ்சிடும்னுதான அவங்களுக்கு தோணும், உன் GKல இப்படி இருந்தா அதுக்கு நிகரண்ணா என்ன செய்வாங்க? உன் அரை வேக்காட்டுதனத்தில் இன்னும் பெருசா டேமேஜ இழுத்து வைக்காம முதல்ல அண்ணாட்ட பேசுற வேலையப் பாரு”

அடுத்த பக்கம்