திக்கெங்கும் ஆனந்தி 5

அன்று இரவு ஆனந்தி தூங்கினாளா என்று அவளுக்கே தெரியவில்லை.

பாவம் நிகர் இவ்வளவு டிஸ்டர்ப் ஆகுறாங்க. இப்படி பயந்துகிட்டே இருந்தா இதுக்கு முடிவுதான் என்ன? அந்த டாக்சி ஓடுற காலத்துக்கும் இவங்க பயப்படுவாங்களா?

ஹூம் நானும் ஆஷிஷ் பேசினதுக்கே முதல்ல ரெண்டு நாள் வீட்ட விட்டே வெளியபோகலையே, அவ்வளவு டிஸ்டர்ப் ஆகினேன்தானே, ஆனா அடுத்து பிரச்சனையா எதுவுமே நடக்கலைன்றப்ப நாள் போக போக பயம் போய்ட்டுல்ல, அப்படி நிகரும் சரியாகிடுவாங்களா இருக்கும்.

இதை நாளைக்கு இன்னும் தெளிவா அவங்கட்ட சொல்லி வைக்கணும். என என்னவென்னவோ மனதில் ஓடினாலும், இவள் பிரச்சனையை அவன் சட்டென தன் பிரச்சனையாகவே உணர்கிறான், இவளுக்காக பரிதவிக்கிறான் என்பது காதல் என்ற ஏதோ ஒரு அணையின் அடைப்பைத்தான் இவளுக்குள் அசைத்துக் கொண்டிருந்தது.

அதில் விழுந்து வந்த விரிசல்களிலிருந்து அரூபமாய் ஆனந்த குமிழங்கள். எப்போது வேண்டுமானாலும் உடைப்பெடுக்க காத்திருக்கும் மனோரம்யங்கள்.

அதெப்டி சட்டுன்னு இந்த டாக்சிகாரன் விஷயத்தெல்லாம் நிகர்ட்ட போய் சொன்னேன், அதுவும் எடுத்த எடுப்பிலே?!

அவங்க  நதின்னு கூப்ட்டா அப்றம் சொல்லாம என்ன செய்வேன், அதான் சொல்ல வந்துட்டு போல,

ஒஹோ அப்ப உன் அப்பா உன்ன நதின்னு கூப்ட்டா இந்த விஷயத்த இப்படித்தான் சொல்லி இருப்ப?

ஐயோம்மா எங்கப்பாட்டயா? அந்த டாக்சி கதையவா? மை காட் நெவர். எங்கப்பா அந்தகாலத்து ஆள், நிகர் இந்த ஜெனரேஷன், புரிஞ்சிப்பாங்க.

அப்படின்னா அப்பவே இதை உன் அக்கா அத்தான்ட்ட சொல்லி இருக்கலாம்ல, அவங்க என்ன கிழவன் கிழவியா?

ஓய் உனக்கு இப்ப என்னதான் வேணும்? ஏன் நிகர்ட்ட சொன்னேன் அதானே?!

அவங்க எனக்கு ஸ்பெஷல், ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் போதுமா? எனக்கே எனக்குன்னு வர்றவங்கதான் எனக்கு பெஸ்ட் ஃப்ரென்டா இருக்க முடியும்னு சொல்வேன்ல அந்த பெஸ்ட் ஃப்ரென்ட்  வந்தாச்சு! அதனால எல்லாத்தையும் அவங்கட்ட சொல்வேன், அவங்க கேட்டுதான் ஆகணும், அது அவங்க தலையெழுத்து! வேற வழியில்ல!

மனதுக்குள் பட்டி மன்றம் நடக்க இனிக்க இனிக்க எப்போது தூக்கத்தில் நழுவினாளோ?!

மறுநாள்  மாலை மூன்று மணியளவில் இவள் தனது வெண்ணிற கோர்ட்டை கழற்றிவிட்டு அணிந்திருந்த இளமஞ்சள் சல்வாருக்கு ஏற்ற டீல் நிற துப்பட்டாவை எடுத்துப் போட்டுக் கொண்டபோது, இவளது அலைபேசி அழைத்தது.

நிகரனின் எண்தான்.

“ஹாய் ஹலோ வணக்கம், சென்னை உங்களை வரவேற்கிறது” என்றது இவளானால்

“சென்னை மட்டுமா வரவேற்கிறது, காலைல இருந்து வாட்ச வாட்ச பார்க்கிற இந்த காஞ்சு போன ஆந்தையும்தான் வரவேற்கிறது” என சத்தமாய் சொல்லியபடியே இப்போது வந்து நின்றது கௌஷி எனப்படும் கௌஷிகா.

“அச்சோ அவங்க லைன்ல இருக்காங்கடி, கேட்டுட போறாங்க” என மொபைலை பொத்தியபடி இவள் ஒரு அடி வைக்க,

“கேட்கதானடி சொல்றதே” என இவளுக்கும் “அண்ணா நீங்க எதுக்கும் கல்யாண டேட்ட ப்ரிபோன் செய்துடுங்க, இல்லனா இந்த மூனு மாசத்துல அத்தனை ப்ளைட் கம்பெனியையும் முன்னேத்திடுவீங்க, இந்த ஆந்த உங்கள நல்லாவே அலைய வைக்கும்னு தெரியுது” என நிகரனுக்குமாய் கௌஷி பதில் கொடுக்கவென

கலகலப்பாய் துவங்கிய இந்த நிகழ்வு, பெண்கள் இருவரும் சிட்டி சென்டர் ஃபுட்கோர்டில் நிகரனை சந்தித்து சற்று நேரம் வரைக்கும் வண்ணம் மாறாமல் சென்றது. இவர்கள் அளவுக்கு வாயாடவில்லை என்றாலும் நிகரன் புன்னகையோடே பேசிக் கொண்டிருந்தான்.

இதில் “ஓகே நீங்க பேசிட்டு இருங்க, நான் அப்படியே ஒரு ரவ்ண்ட் போய்ட்டு வர்றேன்” என கௌஷி கிளம்பிச் செல்ல,

“சோ கௌஷி சொன்ன போல எத்தனை ஃப்ளைட் கம்பெனிய முன்னேத்த போறோம்?” என இவள் இலகுத் தொனியிலேயே பேச்சைத் தொடர,

நிகரனோ “நான் உனக்கு ஒன்னு காட்டணும்” என்றபடி தான் கொண்டு வந்திருந்த பேக்கிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து இவள் உருவத்தை அப்படியே ஓரிரு நொடிகளிலெல்லாம் வரைந்து இவள் கையில் கொடுத்தான்.

“வாவ் இவ்வளவு நல்லா வரைவீங்களா? சொல்லவே இல்ல” என உற்சாகமாக அதை எதிர்கொண்டவள் அவன் இப்போது இவளைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையின் வகையிலேயே எதோ புரிந்தும் புரியாமலும் மனதில் ஆட, மெல்ல முகம் இறுகத் துவங்கினாள்.

“எனக்கும் எப்படி சொல்லன்னு தெரியல நதிமா, நேத்து  நீ சொன்ன பிறகுதான் இதெல்லாம் நடந்திருக்குன்னே எனக்கே தெரியும், உனக்குப் புரியுதுதானே?! நீ பார்த்த எல்லாத்தையும் வரைஞ்சது எழுதினதெல்லாம் நான், தயவு செய்து அதைச் செய்தது என் அண்ணான்னு மட்டும் நினைக்காத. யோசிக்கவே ரொம்பவும் கஷ்டமா இருக்கு,

நீ சொன்னியே அந்த டாக்சிகாரன் அது என் அண்ணா நவில், ஆஷிஷ் என் அண்ணாவோட ஃப்ரென்ட், இன்ஃபேக்ட் நான் ஆஷிஷ்ண்ணாவ பார்க்க வந்தப்பதான் நான் உன்ன பார்த்ததே! அது எப்படி பார்க்கவும் லவ் பண்ணலாம்? என் அப்பீயெரன்ஸ தவிர என்ன தெரியும் உங்களுக்கு? அது இதுன்னு கேட்காத, அது எல்லாத்திலும் உன் வ்யூதான் எனக்கும், அதுலன்னு இல்ல நிறைய விஷயங்கள்ள உன் வேல்யூஸும் என் வேல்யூஸும் ரொம்பவும் ஒன்னு போல இருக்கும், அதனாலதான் நீ எனக்கு லைஃப் பார்ட்னரா வரணும்னு எனக்கு ஆசை வந்துச்சு போல.

உன்னை கல்யாணம் செய்யணும்னு எனக்கு தோணியது ரொம்ப இயல்பான விஷயம், யாரும் என்னை அதுக்கு கன்வின்ஸெல்லாம் செய்யல, ஆனா உன்னை எனக்கு பிடிச்சிருக்கு மேரேஜ் செய்ய ஆசைப்படுறேன்னு நான் உன் பின்ன சுத்தி இருந்தேன்னு வச்சுக்கோ அது எப்படியும் உன்னை கன்வின்ஸ் செய்து மேரேஜ் செய்றதுதானே,

அந்த ஏஜ்ல ஒருத்தங்க நம்மள பிடிச்சிருக்குன்னு சொன்னாலே பிசிக் ஹார்மோன்னு எல்லாம் எக்சைட் ஆகி நமக்கு அவங்கள பிடிச்சிருக்குன்னு ஈசியா தோணிடும், அப்றம் கொஞ்ச காலத்தில் அதெல்லாம் இறங்கி வரவும் இவன நான் ஏன் லைஃப் பார்ட்னரா செலக்ட் செய்தேன்னு இருக்கும்.

எனக்கு இயல்பா நீ என் தேர்வுன்றது போல இயல்பாவே நானும் உன் தேர்வா இருக்கணும்ன்றது ஆசை.

அதோட நீயும் உன் அப்பாவ மீறி கல்யாண முடிவு எடுக்கிற போல ஆள் கிடையாது.

அதனால எப்ப உங்க வீட்ல உனக்கு அலையன்ஃஸ் பார்க்க ஆரம்பிக்காங்களோ அப்ப முறைப்படி உன்னை பெண் கேட்டு வரணும், எந்த கம்பெல்ஷன் கன்வின்ஸிங் இல்லாம நீயா என்னை செலக்ட் செய்யணும்னு நினைச்சேன்.

அதனாலதான் உன் கவனம் என் மேல வர்ற அளவுக்கு கூட நான் உன் முன்னால வந்தது இல்ல.

நீ என்ன நோட் செய்தது இல்லையே தவிர ஆஷிஷ்ண்ணாவும் என் அண்ணாவும் நான் சும்மா சும்மா சென்னை வர்றேன்னு நோட் செய்திருக்காங்க. ஒரு ஸ்டேஜ்ல நான் உன்னைப் பார்க்கதான் வர்றேன்னும் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு.

அவங்களப் பொறுத்தவரைக்கும் அவங்களோட செல்லக் குட்டிதம்பி போய் லவ்ன்ற பேர்ல எதுலயோ மாட்டி தன்னை ஹர்ட் செய்துப்பானோன்ற பயம், அதில்தான் நவில் உன்னை கவனிக்க ஆரம்பிச்சது,

இந்த டைம்ல என் வீட்ல ஏதேச்சையா ஆரம்பிச்சதுதான் கால்டாக்சி பிஸினஸ். அதாவது அப்பா அண்ணாவோட ஐடியா. வழக்கமா எதுக்குமே பேர் வைக்கச் சொல்லி ஐடியா என்ட்டதான் கேட்பாங்க. அதே போல கேஷுவலா இதுக்கும் என்ட்ட பேர் வைக்கச் சொல்லி கேட்டாங்க,

என் மனசுல அந்நேரம் உன் பேர்தான் இருந்துச்சு. சரின்னு நதின்னு அந்த லோகோ டிசைன் செய்து கொடுத்தேன். நவில்க்கு என் லவ் மேட்டர் தெரியும்னு எனக்கு தெரியாதே!

அடுத்த பக்கம்