திக்கெங்கும் ஆனந்தி 5 (4)

“இப்பதான கதை சொல்லுவேன்? இந்த டைரிய நீ முன்னாலயே பார்த்திருக்கதான? இதைப் படிச்சுப் பார், நம்ம முதல் மீட்டீங்ல இருந்து எதுக்காக நான் இந்த மேரேஜ்க்கு ஆசைப்பட ஆரம்பிச்சேன்னு வரை எல்லாமே அப்ப உள்ள டேட்டோடயே இருக்கும். அதை படிச்சா உனக்கு இப்ப உள்ள எல்லா குழப்பமும் போய்டும்” சோர்ந்து போன தன் மனதை இழுத்துப் பிடித்து, தனக்கும் அவளுக்குமாய் நம்பிக்கை கொடுத்துக் கொண்டு அவன் தன் டைரியை எடுத்து அவளிடம் நீட்ட,

“நான் என்ன பேசிகிட்டு இருக்கேன், நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க நிகரன் சார்? என்னைப் பொறுத்தவரைக்கும் நம்ம கல்யாண பேச்சு முடிஞ்சு போச்சு. A complete fullstop. இதுக்கு மேல என்னை நீங்க பார்க்கவோ பேசவோ தயவு செய்து ட்ரைப் பண்ணாதீங்க. எனக்கு நீங்க யாரோ உங்களுக்கு நான் யரோ. குட்பை”

அவளோ கையில் வாங்காமலே நடக்கத் துவங்கிவிட்டாள். சரியாய் இந்நேரம் அவளுக்கு எதிரில் வந்து நிற்கிறார்கள் ஆஷிஷும் நவிலனும்.

முகம் செத்தவளாய் கருகிப் போயிருந்த ஆனந்திக்கு இந்த நிமிடம் கடும் பயமும் கெட்டியாய் வந்து அப்பியது. எங்கு யாரிடம் வந்து தனியாய் மாட்டி இருக்கிறாள் என ஒரு சிலீரிட்ட திகில்.

ஏனோ நிகரனிடம் சரிக்கு சரியாய் பேச எதுவும் தயக்கமோ பயமோ இல்லை இவளுக்கு. ஆனால் நவிலனை அப்படியெல்லாம் யோசிக்க முடியவில்லை. பெரும் பணம் படைத்தவன் என்பது வார்த்தையளவாய் இல்லாமல் இத்தனை டேக்சி என்ற வகையில் பெரிதாகவே அவளுக்கு புரிந்திருக்கிறதே.

அதோடு தம்பிக்காக எதையும் செய்வான் போலும்!

“நதி ப்ளீஸ் இத்தனை பேர் இருக்காங்க, அப்படி என்ன பயம்?” என நிகரின் குரல் காதில் விழவும்தான் அவளுக்கு சூழ்நிலையே மனதில் வருகிறது.

இப்படி இவள் படப்படக்கக் கூடாதெனதான் ஆட்கள் சூழ்ந்த இடத்தை இந்த சந்திப்புக்கு நிகரன் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்பதும் ஒரு நொடி அவளுக்குள் புரிந்தோடுகிறதுதான்.

ஆனாலும் அவளைக் கொன்று தின்று கொண்டிருக்கும் அவன் மீதான கோபத்தின் முன் இதெல்லாம் எம்மாத்திரமாம்?

“இப்ப நிகர்ட்ட நீ சொன்ன பின்னதான்மா என்ன நடந்திருக்குன்னே எங்களுக்கு தெரிஞ்சுது. ரியலி வெரி வெரி சாரி, எப்படி உன்ன ஃபேஸ் பண்ணனே தெரியல” அந்த நவிலனோ இவளை எதிர்கொள்ளவே தர்மச்சங்கடப்பட்டான்.

“பிரவாயில்ல சார்” அனிச்சையாக வருகிறது இவள் வாயிலிருந்து. நவிலன் உண்மையாக வருந்துவது புரிகிறதே மனதுக்கு.

“நிகர் எங்க வீட்ல எனக்கு பிறகு ரொம்ப வருஷம் கழிச்சு பிறந்த குழந்தை, அவனை சின்னப் பையன்னே பார்த்து எனக்கு அவன பெரியவன்னே மனசுல பட மாட்டேங்குதும்மா, அதனாலதான் அவன் விஷயத்தில் இவ்வளவு பதறிட்டேன், ஆனா உன்னை அவனுக்கும் சின்னப் பொண்ணா, ஒரு குழந்தைய பார்க்கிற கோணத்தில்தான் பார்த்தேன்” நவிலன் சொல்லச் சொல்லத்தான் தான் நவிலனை புரிந்து கொண்ட விதம் நவிலனுக்கு எப்படி இருக்கிறதென்றே புரிகின்றது இவளுக்கு.

“சா..சாரி சார்.. ஒருத்தங்களப் பத்தி எதுவும் தெரியாம அவங்கள இந்தமாதிரி யோசிச்சிருக்க கூடாதுன்னு இப்ப புரியது. ரியலி சாரி” நவிலன் முகத்திலா அவனுக்கு அடுத்து வந்து நிற்கும் நிகர் முகத்திலா எங்குமே பார்வையை நிலையாக வைக்க முடியவில்லை இவளுக்கு.

“நடந்து போன விஷயங்கள சரின்னு சொல்ல முடியலைனாலும் எனக்கு உங்க யார் மேலயும் இப்ப வருத்தம் இல்ல.” ஆஷிஷையும் பார்த்துச் சொன்னவள்,

“இந்த விஷயத்த நாம இதோட விட்டுடலாமே! இந்த மேரேஜ்லாம் எனக்கு சரியா வராது, நீங்க உங்க தம்பிட்ட இதை எடுத்து சொல்லி புரிய வைங்களேன். ப்ளீஸ்” என்றாள் நவிலனிடம். இவளது சார் வகை அழைப்பிலேயே நவிலன் முகம் கறுத்துப் போய்தான் கிடக்கிறது என்றால், இதை இவள் சொல்லும் போதோ எக்கசக்கமாய் விழுந்து போகிறது.

“ஏன்மா நடந்த எதிலும்” என்றபடி நவிலன் பேச்சுவாக்கில் இவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க,

அனிச்சையாய் தூக்கி வாரிப் போடுகிறது ஆனந்திக்கு. அவள் தன்னைக் கண்டு இத்தனை பயப்படுகிறாள் எனவும் நவிலன் அறை வாங்கியது போல் நின்று போக,

“சாரி சார் வெரி சாரி சார், நீங்கல்லாம் ரொம்ப ரொம்ப பெரியவங்க, நாங்க ரொம்ப சாதாரண பேமிலி சார், என்னதான் இருந்தாலும் எனக்கு பயமா இருக்கு, மத்தபடி தப்பால்லாம் உங்கள நினைக்கல” என வேக வேகமாக வந்து விழுகிறது ஆனந்தியின் பதில். இதெல்லாம் பயத்தில் அவள் உளறிய உண்மை என்று கூட சொல்லிவிடலாம்.

நவிலனின் நடத்தையை அவள் இப்போது சந்தேகிக்கவில்லை, ஆனால் பெரும் பணக்காரன் என்பதால் அவன் மிரட்டினாலோ கட்டாயப்படுத்தினாலோ என்ன செய்ய? என்ற பயம் அவளுக்கு போய்விடவில்லை இன்னும். அதன் பின்விளைவு இது.

“அண்ணா ப்ளீஸ்ண்ணா நீ கிளம்பு, அவ ரொம்ப குழம்பிப்போய் இருக்கா, நீ எதையும் மனசுல எடுத்துக்காத, நான் பேசிக்கிறேன் அவட்ட” அண்ணன் இதற்கு மேலும் மனம் வருந்தும்படி ஆகிவிடக் கூடாதே என அவனை தேற்றி அனுப்பிவிட முனைந்தான் நிகரன்.

“ஆமா சார் உங்க மேல எந்த நெகடிவான எண்ணமும் எனக்கு இல்ல சார், என் அக்கா எனக்கு எப்படியோ அப்படித்தான் நீங்க உங்க தம்பிட்ட இருக்கீங்கன்னு மட்டும்தான் நினைக்கிறேன்” செய்த டேமேஜை சரி செய்ய ஆனந்தியும் முயல,

ஏதோ வகையில் நிகரனும் ஆனந்தியும் ஒத்துப் பேசுகிறார்களே என கவனித்த ஆஷிஷும் “அவங்க ரெண்டு பேரும் பேசி முடிக்கட்டும்டா, நீ வா” என நவிலனை அழைத்துக் கொண்டு கிளம்ப,

அவர்கள் தலை மறையும் வரைக்கும் மீண்டும் அதுவரைக்குமாய் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்திருந்த ஆனந்தி

“வீட்ல இந்த ப்ரொபோஸல் நின்னுட்டுன்னு சொல்றது உண்மையில் ரொம்பவும் ஹர்டிங்கான விஷயம், அன்னைக்கு காலேஜில் என்னை பார்க்க வந்தப்ப இதைச் சொல்லி இருந்தீங்கன்னா கூட அங்கயே நின்றிருக்கும் எல்லாம், இப்ப நான் என் அப்பா ஹர்ட் ஆகுறத பார்க்கணும், நீங்க உங்க வீட்ட பார்க்கணும், ப்ச்” என்றபடி எழுந்து கொள்ள,

“நீ என்ன முடிவுனாலும் எடுத்துக்கோ ஆனந்தி, ஏன்னா விருப்பம் இல்லாம யாரும் கல்யாணம் செய்ய முடியாது, ஆனா அதுக்கு முன்ன நிதானமா இந்த டைரிய மட்டும் படிச்சுப் பாரு, அப்றமும் உனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னா ஒரு மெசேஜ் அனுப்பு, அதுதான் நமக்குள்ள கடைசி கம்யூனிகேஷனா இருக்கும்,  உன்னை எந்த வகையிலும்  நானோ எங்க வீட்லயோ தொந்தரவு செய்ய மாட்டோம்” அவன் சொல்லிக் கொண்டிருக்க,

“அந்த மெசேஜ இப்பவே அனுப்பிட்டேன்னு வச்சுக்கோங்க” என இவளோ இப்போது வெட்ட,

எதுவும் சொல்லாமல் நிகரன் இப்போது விறுவிறென எழுந்து போய்விட்டான்.

அந்த டைரி மட்டும் அனாதையாக அந்த மேஜையில் உட்கார்ந்திருந்தது.

“ப்ச் நிகர் ப்ளீஸ், இதெல்லாம் எங்க வீட்டுக்கு கொண்டு போக முடியாது” இவள் இங்கிருந்தே சொல்ல,

அதற்கு பதில் சொல்வது யாராம்?

நிகர் திரும்பிக் கூட பார்க்கவில்லை. போயே விட்டான்.

தலையை பிடித்துக் கொண்டு சற்று நேரம் நின்றாள் அவள்.

அந்த டைரி முழுவதும் இவள் படங்கள், கூடவே நிகரனின் படம் கூட இருக்கும் போலும், இதை இங்கே எப்படி வைத்துப் போக?

போய் தீய வச்சு கொளுத்தணும் என்ற ஒரு முடிவோடு அந்த டைரியை தூக்கிக் கொண்டு புறப்பட்டாள் இவள்.

தொடரும்..

உங்க கமென்ட்ஸ ஷேர் செய்தீங்கன்னா ரொம்ப சந்தோஷப் படுவேன்.

திக்கெங்கும் ஆனந்தி – Comments Thread