திக்கெங்கும் ஆனந்தி 5 (2)

அவனோ இப்படி உன் பேரக் கொடுக்கவும் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிட்டான் போல. அதோட வீட்டுக்கு போன இடத்தில் என் டைரிய வேற நான் விட்டுட்டு வர, அது எங்க நவில் கைல கிடைக்க, ஐயோ அந்தப் பொண்ணு கிடைக்கலைன்னா என் தம்பி ரொம்ப உடஞ்சு போய்டுவான் போலன்னு பயந்திருக்கான் அவன்.

அதை போய் அப்படியே ஆஷிஷ்ண்ணாட்ட வேற புலம்பி இருப்பான், கூடவே உன்னைப் பத்தியும் நல்ல ஒபினீயன்தான் என்றதும் இந்த கல்யாணத்த செய்து வச்சிடணும்னும் தோணியிருக்கு அவனுக்கு.

இதில் உன் வீட்டப் பத்தி விசாரிச்சிருக்காங்க. கொஞ்சம் ஆர்தடாக்ஸ் டைப்னு தெரிஞ்சிருக்கு. அதோட உன் அப்பாட்ட அந்த டைம் உங்கப்பாவோட ஃப்ரென்ட் விஜயன் அங்கிள் அவங்க  ரிலடிவ் பிரகாஷ்னு ஒருத்தங்க இருக்காங்களே அவங்களுக்கு உன்னை பெண் கேட்டு வந்தாங்க. எனக்கு சம்மதம்தான், எக்சாம் முடியவும் ஆனந்தி விருப்பத்த தெரிஞ்சிகிட்டு  கல்யாணம் வச்சுடலாம்னு உங்க அப்பாவும் சொல்லிட்டாங்க. இதில் நவிலும் ஆஷிஷ்ண்ணாவும் டென்ஷன் ஆகிட்டாங்க போல.

அப்ப கோர்ஸ் முடிய முன்ன உன்ட்ட என்னைப் பத்தி பேசி, கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிடணும், நீயும் என்னை விரும்ப ஆரம்பிச்சுட்டன்னா அடுத்து எதுவும் கை மீறி போய்டாதுன்னு நினச்சிருக்காங்க.

ஆனா நீயே லவ் மேரேஜில் நம்பிக்கை இல்லாத பெர்சன்ங்கவும் உன்னையும் ரொம்ப  ஆர்தடாக்ஸ்னு நினச்சிகிட்டுதான், அந்த இது உனக்கு தப்பா தோணும் ஆனா தப்பு இல்லைனெல்லாம் சொல்லி என் டைரிய கொடுக்க ட்ரைப் பண்ணது.

இப்ப போய் நான் கேட்கிற வரைக்கும் நீ நவில தப்பா புரிஞ்சு வச்சுருக்கன்னே அவங்களுக்குத் தெரியல” என்றபடி இப்போது தன் பேக்கிலிருந்து அந்த கறுப்பு நிற புத்தகம் போன்றிருந்த நதி எனப் பெயரைச் சுமந்திருந்த அந்த டைரியை எடுத்து அதன் முதல் பக்கத்தை திறந்து காட்டினான். ஒரு பக்கம் நிகரனின் புகைப்படமும் மறுபக்கம் அவன் தன்னை வரைந்திருந்த ஓவியமும் இருந்தது.

“நீ நிதானமா பேச கூட வாய்ப்பு கொடுக்க விரும்பலைங்கவும் கொஞ்சம் பதற்றத்தில் இதை உன்ட்ட கொடுத்துட்டாலே போதும்ன்றதுதான் அந்த நேரத்தில் அவங்களுக்கு முழு கவனமா இருந்திருக்கு.

நீங்க பேசின இடம் பார்க்கிங் போல, தேவையில்லாம நிறைய பேர் அட்டென்ஷன் வர முன்ன கைல கொடுத்துட்டு கிளம்பிடணும்னே நினச்சுட்டு பேசி இருக்காங்க ஆஷிஷ்ண்ணா,

உள்ள இந்த படம் முதற் கொண்டு என்னைப் பத்தி நீ மேரேஜ் பாய்ண்ட் ஆஃப் வ்யூல புரிஞ்சுக்க வேண்டிய எல்லா டீடெய்லும் இதிலேயே இருக்கவும்  படிச்சுப் பார்த்தன்னா என்னைப் பத்தி முழுசா புரிஞ்சுப்ப, என்னை உனக்கு பிடிக்கும்னு அவங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆனா நீ நவில நினச்சுகிட்டு விஷயத்தை ஃபேஸ் செய்றன்றதே அவங்களுக்கு இப்ப வரைக்கும் தெரியல.

அதில் அன்னைக்கு நீ ஆஷிஷ்ண்ணாவ திட்டிட்டுப் போய்ட்டு அடுத்து காலேஜ் வேற வரலையா, எங்க பயந்து போய் படிப்பை கெடுத்துப்பியோன்னு ஆஷிஷ்ண்ணாக்கு கில்டியாகிட்டு.

அதான் ஜாப ரிசைன் செய்துட்டு உன் ஹெச்.ஓடிட்ட சொல்லி உன்னை வரச் சொல்லி இருக்காங்க திரும்ப.

இந்த டைம் நான் ஒரு வேலை டென்ஷன்ல மும்பைல என் ஆஃபீஸ விட்டு அசையவே இல்ல. அதை நான் உன்ட்ட ப்ரொபோஸ் செய்து நீ என்னை ரிஜெக்ட் செய்துட்ட போல, அதான் நான் அங்கயே அடஞ்சு கிடக்கேன்னு நவிலும் ஆஷிஷ்ண்ணாவும் புரிஞ்சிருக்காங்க. உங்க வீட்ல வேற கல்யாண பேச்சு போகவும் அவங்களுக்கு இப்படி தோணி இருக்கு.

அதான் அப்ப மால்ல உன்னைப் பார்க்கவும் ஆஷிஷ்ண்ணா அப்படி பேசினது.

மொத்தத்தில் நவிலோ ஆஷிஷ்ண்ணாவோ தப்பான நோக்கத்தோட கண்டிப்பா உன்ட்ட மூவ் பண்ணல நதிமா, என் அண்ணாவுக்கு நான் எப்படியோ நீயும் அப்படி மட்டும்தான், எனக்கு இதை வேற எப்படி சொல்லி புரிய வைக்கன்னு தெரியல.

ஆஷிஷ்ண்ணாவுக்கு லவ் ஃபெய்லியர், அவங்க மேரேஜே செய்யாம இருந்துட்டாங்க, ஏன் சொல்றேன்னு புரியுதா, அதனால இந்த விஷயத்தில் அவங்க கொஞ்சம் எமோஷனலாகிட்டாங்க அவ்வளவுதான்.

என்னைப் பொறுத்தவரைக்கும் இப்படி நம்ம மேரேஜ் ஃபிக்சாகி அடுத்து நேத்து பேச ஆரம்பிச்சமே அப்படி பேசுறப்ப கேஷுவலா ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சுக்க ட்ரைப் பண்ணுவோமில்லையா அப்ப என்னை பத்தி, எங்க உன்னை முதல்ல பார்த்தேன், என்ன விஷயத்தால இந்த மேரேஜ்க்கு டிசைட் செய்தேன்னு நிதானமா என் காதலை பத்தி உன்ட்ட சொல்லணும்னு நினச்சிருந்தேன்,

மத்தபடி உனக்கு தெரியாம மறைக்கணும்னு எந்த எண்ணமும் கிடையாது.

இன்ஃபேக்ட் உன் அப்பாட்ட பெண் கேட்க நான் முதல்ல அப்ரோச் செய்ததே உங்க விஜயன் அங்கிளதான். அவங்கட்ட என்னப் பத்தி எல்லாமே இன்க்ளூடிங், மூனு வருஷமா இந்த மேரேஜுக்காக நான் காத்துகிட்டு இருக்கிறத வரைக்கும் எல்லாம் சொல்லித்தான் கேட்டேன்.

மறைக்க நினைச்சா அவங்கட்ட போய் இதெல்லாம் சொல்லி இருப்பனா? அவங்க வழியா விஷயம் உங்க வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்?

பைதவே இப்பவே இதையும் சொல்லிடுறேன், இல்லன்னா இதை வேற மறச்சேன்னு ஆகிடும்.

ப்ரகாஷ் ப்ரபோஸல் சட்டுன்னு உங்க வீட்ல மூவ் ஆகவும்தான் என்ன செய்யன்னு தெரியாம விஜயன் அங்கிள நான் அப்ரோச் செய்தேன், முறையா ஆனந்தி வீட்ல பெண் கேட்க மட்டும்தான் முயற்சி செய்றேன், அவங்க சம்மதிச்சாங்கன்னா ரொம்பவும் சந்தோஷம், ஒருவேளை அவ வீட்ல இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னா கண்டிப்பா அடுத்து எந்த வகையிலும் ஆனந்தி விஷயத்தில் உள்ள வரமட்டேன்னு விஜயன் அங்கிள்ட்ட  நான் விஷயத்தை சொல்லவும், யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்னு கேட்டாங்க, அப்றம் என்னைப் பத்தி விசாரிச்சுருப்பாங்க போல, தென் அங்கிள் சம்மதிச்சாங்க. அடுத்து அவங்களேதான் அந்த ப்ரகாஷ் வீட்ல ப்ரபோசல புஷ் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டு என் ப்ரபோஸல உங்கப்பாட்ட எடுத்துட்டு வந்தாங்க.

ஆனா இது எதையுமே இப்ப சொல்ற விதத்தில் சொன்னா நீ எப்படி புரிஞ்சிப்பியோன்னே எனக்கு பயமா இருக்கு”

இடைவெளி இன்றி பேசிக் கொண்டிருந்தவன் ஒரு வித தவிப்போடே இப்போது சற்றாய் நிறுத்த, இவளது முகம் பார்க்க,

அவளோ “வெல், உங்க அண்ணா அவங்க ஃப்ரென்ட்னு எல்லோரும் நல்லவங்கன்னு தெளிவா புரிய வச்சுட்டீங்க நிகரன் சார், அதுக்காக ரொம்பவும் நன்றி” என சொல்லியபடியே இருக்கையை விட்டு எழுந்து கொண்டவள், தன் மொபைல் கைப்பை இவைகளை அது மட்டும்தான் அவளது கவனம் என்பதாய் எடுத்தபடி “பைதவே எங்க வீட்ல நம்ம மேரேஜ் ப்ரொபோசல் நின்னு போச்சுன்னு நான் சொல்லிடுவேன், உங்க வீட்ல சொல்ற வேலைய நீங்க பார்த்துப்பீங்கன்னு நம்புறேன். குட்பை” என கிளம்ப,

இதற்குள்ளயே தானும் எழுந்து மொபைலை எடுக்க நீட்டிய அவளது கையை பற்றிவிட்டபடி “என்ன நதிமா இது? இப்ப என்ன ஆகிட்டுன்னு இப்படி ரியாக்ட் செய்ற நீ?” என கேட்டுக் கொண்டிருந்தான் நிகர்.

அவளைப் பற்றியிருந்த அவன் கையை உணர்ச்சியே எதுவுமின்றி இவள் ஒரு பார்வை பார்க்க,

கையை விட்டுவிட்டான் எனிலும் பேச்சை விடவில்லை. எப்படி விடுவான்? “என்ன விஷயம் உனக்கு தப்பா படுதுன்னு சொல்லு, அதில் கேள்வி கேளு, என் பக்கம் நியாயமான பதிலே இல்லைனா வேணா கோபபடு, அதைவிட்டுட்டு இப்படி சட்டுன்னு மேரேஜ நிறுத்துவேன்னா என்ன நதி இது?”

“வெளக்குமாறு” சுரீலென ஆனந்தியின் வாயில் வந்த வார்த்தை இதுதான். ஆனால் அதே நொடி தன் வாயை கையால் மூடியும் கொண்டாள்.

“இதான், கோபம் வந்தா எனக்கு வார்த்தை சிதறும், அதுக்குத்தான் பேசாம கிளம்புறது”

‘பேசி இன்னும் வினைய இழுத்து வைக்கவா?’ என இவள் தொடர்ந்து சொல்லி இருப்பாள்தான், ஆனால் அதற்குள் அவனோ “பிரவாயில்ல என்ட்ட தான சிதறுற, எடுத்துப்பேன்” என்கிறான் எந்த எகிறலும் இல்லாமல்.

“எனக்கு உன்னை எது டிஸ்டர்ப் செய்யுதுன்னு தெரிஞ்சாகணும் நதி, விஷயமே தெரியாம நான் பிரச்சனைய எப்படி சால்வ் செய்வேன்?” அவன் குரலில் பிடிவாதமும் தவிப்பும் பிடித்துப் போய் கிடந்தன. ஆனால் எரிச்சலோ கோபமோ எதுவுமே இல்லை.

இதில் ஒரே ஒரு டிகிரி அவளது கோபம் குறைந்ததா அல்லது கூடியதா?

அடுத்த பக்கம்