திக்கெங்கும் ஆனந்தி – 1

மும்பையில் அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் பளபள கண்ணாடி வகை லிஃப்டிற்குள் நுழையும்போதே ஆனந்தியின் முகம் ஒன்றும் அத்தனை ஆனந்தமாகவெல்லாம் இல்லை. சோகமா, எரிச்சலா, ஏமாற்றமா அல்லது இவை எல்லாமே கலந்த குழப்பமோ கப்பிக் கிடந்ததுதான் அவள் வதனத்தில்.

ஆனாலும் அதையும்விட வதங்கிச் சுருங்கிப் போனது அவள் வீட்டிற்குள்ளேயே சென்று இந்த லிஃப்ட் திறந்து கொண்ட போது. முதல் ஆச்சர்யம் அவள் வீடு அவள் எதிர்பார்த்தது போல் பூட்டி இல்லாதது என்றால், அடுத்த அதிர்ச்சி அவள் கணவன்  நிகரன் இந்நேரம் இந்த வீட்டிற்குள் நின்று கொண்டிருப்பது.

அலுவலக நேரத்தில் அவனை இப்படியெல்லாம் வெளியே பார்த்துவிட முடியுமா என்ன? அதையும் விட பேரதிர்ச்சி, அவனிடம் நின்று பேசிக் கொண்டிருந்த இரண்டு மூன்று நபர்களில் ஒருவர்,

“சாரி மிஸ்டர். நிகரன், உங்கள அரெஸ்ட் செய்றத்தவிர எங்களுக்கு வேற வழியில்லை. பப்ளிக் பணம் 1500 கோடிய ஏமாத்திருக்கீங்கன்னு 8 கேஸ் இதுவரைக்கும் உங்க மேல பதிவாகி இருக்கு. இன்னும் 17 கேஸ் இன்னைக்கு ஃப்ரெஷா ரெஜிஸ்டர் ஆகுது. உங்கள வெளிநாட்டுக்கு தப்பிச்சுப் போக விட்டுடக் கூடாதுன்னு எங்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் இருக்கு. ப்ளீஸ் கோ ஆப்பரேட்” என்றபடி இவளவன் கைகளில் விலங்கு மாட்டிக் கொண்டிருப்பது.

நிகரன் முகம் அதுவரைக்குமே இறுகிப் போய்தான் இருந்தது. மறுப்பென்றோ வார்த்தையென்றோ எதுவுமே அவனிடம் இல்லை. வாசலில் அசைவை உணர்ந்தான் போலும், திரும்பிப் பார்த்தவன் இவளைக் காணவும் துடிதுடித்துப் போவது இவளுக்கும் புரிகின்றதுதான்.

இவள் மீதான அவனது காதலுக்குத்தான் என்றைக்குமே பஞ்சமே இல்லையே! ஆனால் இதெல்லாம் காதல்தானா என ஏதோ ஒரு சூனியத்தில் எங்கோ தோன்றித் தொலைக்கிறது.

கைது செய்து கொண்டிருந்தவரிடம் அனுமதி வாங்கி அவசரமாய் இவளிடம் வந்தான் நிகரன். அதுவரைக்குமே அவனை நோக்கி ஒரு எட்டு கூட வைக்காமல் சிலையாய் இவள்.

“அது.. நதிமா.. நம்ம ஃபேர்ம் பத்தி சொல்லி இருக்கேன்லமா.. அதில் இருந்து..” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

“நீங்க இல்லீகலா எதாவது செய்திருக்கீங்களா இல்லையா?” என ஆணித்தர குரலால் இடையிட்டாள் ஆனந்தி. அவள் முகத்தைப் போல குரலிலும் உணர்ச்சி என எதுவுமே இல்லை.

“அது..” அவன் திரும்பவும் துவங்க

“எனக்கு உங்களோட எந்த கதையும் வேண்டாம்.. இல்லீகலா எதாவது செய்தீங்களா இல்லையா? யெஸ் ஆர் நோ?” அவன் கண்களையே அவள் வெறித்திருக்க,

“ஓ” என நிறுத்தினான் அவன்.

அதற்கும் “எனக்கு தேவை யெஸ் ஆர் நோ” என வருகிறது அவளது பிடிவாதம்.

ஆனால் அடுத்த நொடியே அவன் நின்று கொண்டிருக்கும் இக்கட்டான நிலையில் தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு முதல், இனி அவனைப் பார்க்கவே முடியாதோ என்ற பரிதவிப்பு வரை இவளுக்குள் பிரளயமாய் பாய,

“சைலேந்த்ரன் சார் எங்கப்பா? அவர்ட்ட பேசிட்டீங்களா? அவங்க எப்படியும் எல்லாத்தையும் சால்வ் செய்திடுவாங்க, நீங்க தைரியமா இருங்க” என மாறிப் போய் வருகிறது இவள் வார்த்தைகள். இவர்களது லாயர் அந்த சைலேந்த்ரன், இந்திய அளவில் பிரபலமானவரும் கூட. அவரது தொழில் திறமை அப்படி.

“இல்ல அவருக்கு கால் செய்தேன், என் அப்பாதான் அவருக்கு எல்லாமாம். அதனால இனி என் கேஸ் எதையும் ஹேண்டில் செய்ய மாட்டேன்னுட்டார்” இதைச் சொல்லும் போது கூட அவன் குரலில் ஆறுதல் தெரிகிறது.

இவள் கோபத்தைவிட்டு அவன் மீது அக்கறைப் படுவதால் போலும்.

ஒரு கணம் அவனை இழுத்து அணைத்துக் கொள்ள ஏங்குகிறது இவளுக்கு. ஆனால் அதே நொடியே “சொந்த வீட்ல திருடுற எவனாவது நல்லா இருப்பானாடா? உன்னைய அப்படியா வளத்தேன் நான்? சொந்த அப்பாவையும் அண்ணனையும் தெருவுல நிறுத்தியவது சொத்து சேர்க்க வேண்டிய அளவுக்கு அப்படி என்னடா உனக்கு பண ஆசை?” என நிகரனின் அம்மா அவனிடம் வெடித்துக் கொண்டு அழுதது ஞாபகம் வர, அடுத்து எதை நினைக்கவும் முடியாமல் முழு மொத்தமாய் சோர்ந்தும் போனாள் அவள்.

என்ன புரிந்ததோ நிகரனுக்கு “உன் மெயில்ல பாரு, உனக்கு ஃப்ளைட் டிக்கெட் புக் ஆகி இருக்கும், கிளம்பி தயவு செய்து ஊருக்குப் போய்டு, அந்த விஷயத்தில் மட்டும் தயவு செய்து செகன்ட் தாட்டே எதுவும் வச்சுக்காத” என்றான் இப்போது.

சில பல நொடிகள் தேவைப்பட்டது இவளுக்கு அவன் என்ன சொல்கிறான் எனப் புரியவே! ஊருக்கா? எந்த ஊருக்கு??!!! எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவளது அப்பாவிடம் போய் நிற்பாளாம்?!! என்ன பேசிக் கொண்டிருக்கிறான் இவன்? இவளது அப்பாவிடம் போகச் சொல்கிறான் எனில் அதற்கு அர்த்தம்தான் என்ன??

“என்னைப் பத்தி, இந்த கேஸப் பத்தியெல்லாம் யோசிச்சு கவலைப்படாம உனக்கு எது நிம்மதி தருமோ அதைப் பத்தி மட்டுமா யோசிக்கப் பாரு” என்றவன் இப்போது இவர்களுக்கு அருகில் நின்றவனைப் பார்த்து தலையசைக்க,

அப்போதுதான் கவனிக்கிறாள் இவளுக்கென சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அந்த செக்யூரிட்டி ஆஃபீசர்  வினய் இங்கு வந்திருக்கிறான் என.

“டேக் கேர் நதிமா, மிஸ்யூ சோ மச்” என இதற்குள் நடந்துவிட்டான் நிகரன். பின் என்ன நினைத்தானோ இன்னுமே அசையாமல் நின்றிருந்த இவளிடமாக வந்தவன் அத்தனை பேர் இருப்பதையும் பொருட்படுத்தாமல் இவளை இழுத்து அணைத்துக் கொண்டான். நொறுங்கிப் போவாளாய் இருக்கும். அப்படி ஒரு அணைப்பு.

அதே இறுக்கம் வார்த்தையிலும் வெளிப்பட “எதுவுமே விஷயமா தெரியல நதிமா, உன்ன நினச்சாதான் உயிரே போகுது” என முனங்கியவன் பின் சட்டென விலகி நடந்துவிட்டான்.

அதாவது போய்விட்டான். போயேவிட்டான்!!

அவன் அணைத்துவிட்டானே! அதுவும் இத்தனை பேர் முன்னிலையில் என்ற எதுவுமெல்லாம் ஆனந்தியின் சிந்தனையைத் தொடவே இல்லை. ஆனால் சமீபகாலமாய் நிகரன் வகையில் மரத்துப் போயிருந்த இவளது மன பாகங்களில் ஒற்றைக் கோடாய் ஒரு காதல் துளி மட்டும் வடிந்து கொண்டிருந்தது தன்னந்தனியாய்.

எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ? “மேம் கிளம்பலாமா?” என்ற வினயின் வார்த்தைகளில்தான் நடப்புக்கு வந்தாள் இவள்.

‘கிளம்பவா? எங்க? என்ற சிந்தனையில்தான் நிகரன் இவளை ஊருக்குச் செல்லச் சொல்லியது மீண்டுமாக கவனத்தில் வர,

“இல்ல, நான் எங்கயும் போகல, நீங்க கிளம்பலாம்” என வினயை அனுப்பிவிட முனைந்தாள்.

“இல்ல மேம், நீங்க ஊருக்குப் போற வரைக்கும் உங்கள தனியா எங்கயும் விடக் கூடாதுன்றது நிகரன் சார் ஆர்டர்” வினயின் இந்த பதிலில், இதற்கு மேல் என்ன சொல்லியும் வினய் இவளைவிட்டு கிளம்பமாட்டான் என இத்தனை நாளில் புரிந்து வைத்திருந்ததால்

“அப்ப இங்க இருங்க, எனக்கு வேலை இருக்கு” என வீட்டு வரவேற்பறையில் நுழையும் இடத்தில் நின்ற அவனிடம் சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.

சற்று நேரம் தேவைப்பட்டது மீண்டும் ஆனந்தி சிந்திக்கத் துவங்கவே! பின் மெல்ல தன் அலைபேசியில் மின்னஞ்சல்களைப் பார்வையிட்டாள்.

இன்னும்  மூன்று மணி நேரத்தில் அவளுக்கு சென்னைக்கு விமானமும், அங்கிருந்து மதுரைக்கு இன்னொரு விமானமும் பதிவு செய்து வைத்திருந்தான் நிகரன்.

அதோடு இவளது அப்பாவிற்கு வேறு தகவல் அனுப்பி இருக்கிறானாம் இவளை மதுரை விமான நிலையத்தில் வந்து அழைத்துச் செல்ல.

இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? அப்பா இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வார்? இந்த நிகரன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்?!!

அடுத்த பக்கம்

Advertisements