திக்கெங்கும் ஆனந்தி – 1 (3)

இவள் நிகரனுக்கு ஏற்பாடு செய்திருந்த லாயர் மறுநாள் காலை 11 மணியளவில் இவளை அலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனந்தி எங்கே சென்று நிற்பது எனத் தெரியாமல் அப்போதுதான் தனது மருத்துவமனையில்  வந்து நின்று கொண்டிருந்தாள்.

மருத்துவமனை என்றால் பல்மருத்துவமனை அது. இப்போதுதான் பல்மருத்துவ படிப்பில் முதுநிலை முடித்திருக்கிறாள் ஆனந்தி.

நிகரனின் இந்த கைது நிலை மட்டும் வராமல் இருந்திருந்தால் இன்னும் சில தினங்களில் இந்த மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கும். அதற்கான ஏற்பாடுகளில்தான் ஓடிக் கொண்டிருந்தாள் இவள்.

இப்போதோ மனம் அது எதிலுமே இல்லையென்றாலும் வீட்டைத் தவிர இந்த மாபெரும் மும்பையில் இவள் சென்று நிற்க வேறு இடமோ உறவோ ஏது? ஆக போக்கிடம் இல்லாமல் வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கும்போதுதான் வந்தது அந்த லாயர் சக்சேனாவின் அழைப்பு.

“மேம் சொன்னனே நிகர் சார்க்கு லாயர்ஸ் க்யூல நிப்பாங்கன்னு. சார் ஒரு டீம் ஏற்கனவே ஏற்பாடு செய்துட்டார் போல. என்னை நீங்க அனுப்பி இருக்கீங்கன்னு தெரிஞ்சதும் உங்க விஷயத்தை அவர் என்னை டீல் செய்யச் சொன்னார் மேம். மத்தபடி நிகரன் சார் கேஸ் நிலமை இப்போதைக்கு மோசம்தான்.

பெரிய அளவு தொகைல பப்ளிக் மனிய ஃப்ராட் செய்தவங்க நிறைய பேர் சமீப காலத்தில் வெளிநாட்டுக்கு தப்பிச்சு போய்ட்டதால கவர்மென்ட் தன் இமேஜை காப்பாத்திக்கிறதுக்காக நிகரன் சார்க்கு பெயிலே கொடுக்க கூடாதுன்றதில் உறுதியா இருக்கு.

சார் இல்லீகலா எதுவும் செய்திருக்கலைனா ஈசியா கேஸ முடிச்சாவது அவர வெளிய கொண்டு வந்துடலாம். அதுவும் இல்லை. நிகரன் சார் ஆதாரத்தோட மாட்டியிருக்கார்.

விஜித் மேத்தா கேஸெல்லாம் கேள்விபட்டிருக்கீங்களா மேம்? 90ஸ்ல ரொம்ப ஃபேமஸான கேஸ். நம்ம நிகர் சார் கேஸ் 100% அந்த விஜித் மேத்தா கேஸேதான். அதுவும் இதே போல ஷேர்மார்கெட் ஊழல்தான். அந்த விஜித்தும் ரெண்டு பேங்க் ஆஃபீஸர்ஸோட கூட்டு சேர்ந்து, போலி டாக்குமென்ட் தயார் செய்து, அதை காட்டி எல்லா பேங்கயும் ஏமாத்தி ஆயிரம் ஆயிரம் கோடியா பேங்க்ல இருந்து எடுத்து ஷேர்மார்க்கெட்ல போட்டு 5000 கோடிக்கு மேல சம்பாதிச்சிருந்தார்.

9 வருஷமா கேஸ் நடந்து 2 கேஸ்லதான் தீர்ப்பு வந்துச்சு, மீதி 20+ கேஸ் நடந்துகிட்டு இருக்கப்பவே ஜெயில்ல வச்சே அவர் இறந்துட்டார், இத்தனைக்கும் 5000 கோடிக்கு மேல பணம் வச்சிருந்தவர், அவ்வளவு பணம் வச்சிருந்தவர்க்கே அப்போ அதுதான் நிலமை, வெளிநாட்டுக்கு ஓடிப் போகலன்னா இதுதான் மேம் பிரச்சனை” என நிகரன் மீதான வழக்கு என்ன என்பதை இந்த ரீதியில் விளக்கி, இவள் மனதில் ஆழ்துளை கிணறொன்றை வலிக்கத் துடிக்க தோண்டியவர்,

இப்போது குரலை இறக்கி ரகசியம் போல் “பெருசா ப்ளான் செய்து பணம் அடிச்சா பெர்ஃபெக்ட்டா ப்ளான் பண்ணி ஃபாரின் போயிடணும் மேம், நிகர் சாரும் அதுக்குத்தான் காய் மூவ் பண்றார் போல, எப்படியும் ஜெயிச்சிடுவார் மனுஷன், பாருங்களேன் அவர் அரெஸ்ட் இப்ப வரைக்கும் மீடியாக்கே வராம வாயடச்சு வச்சிருக்கிறார்” என இன்னுமாய் ஈயத்தை காய்ச்சி இவள் காதில் ஊற்றிவிட்டு,

“ஆனா அப்படி இருக்கவர், எதுக்கு அரெஸ்ட் வரைக்குமா விஷயத்தை முத்த விட்டார்?” என தனக்குத்தானே கேட்பது போல் கேட்டுக் கொண்டு, பின்

“பைதவே நிகர் சார் உங்கட்ட இருந்து டிவோர்ஸ் கேட்டார் மேம், கல்யாணத்துக்கு பிறகு உங்க பேர்ல அவர் வாங்கின ப்ராப்பர்ட்டியெல்லாம் அவர் பேருக்கு மாத்தி கொடுத்துட்டு, டிவோர்ஸ் பேப்பர்ஸ்லயும் சைன் செய்து கொடுத்துடுவீங்களாம்” என்றார் எதோ  ‘சார் ந்யூஸ் பேப்பர் கேட்டார்மா, வாசிக்க எதுவும் இல்லாம போரடிக்காம்’ என்பது போன்ற தொனியில்.

திடும் என வீட்டின் மேற்சுவர் இடிந்து தலையில் விழுந்தது போல் இருந்தது ஆனந்திக்கு.

தொடரும்..

உங்க கமென்ட்ஸ ஷேர் செய்தீங்கன்னா ரொம்ப சந்தோஷப் படுவேன்.

திக்கெங்கும் ஆனந்தி – Comments Thread

 

Advertisements