திக்கெங்கும் ஆனந்தி – 1 (2)

சற்று நேரம் முன்னிருந்த மேஜையில் முகம் கவிழ்த்து கிடந்தவள் அலைகழித்த அனைத்தையும் மூளையின் மூலையில் மூட்டை கட்டி போட்டுவிட்டு, அடுத்து இவள் என்ன செய்ய வேண்டும் என சிந்திக்கத் துவங்கினாள்.

‘நிகருக்கு லாயர் கூட இல்லை’ இதுதான் இப்போது முதலில் மணியடித்த விஷயம்.

இவளுக்கு லாயர், சட்டம், ஏன் நிகரின் ஷேர் மார்ட்கெட் பிஸினஸ் பற்றி கூட எதுவுமே தெரியாது. சரியாய் சொல்லப் போனால் புரியாது.

இவர்களது திருமணம் நிச்சயமான புதிதில் நிகரன் அதை விளக்க முற்பட்ட போது, ஷேர் என்றால் என்ன, ஷேர்மார்கெட் என்றால் என்ன என்பதுவரை சுவாரஸ்யமாய் கேட்டுக் கொண்டவள்,

“நிறைய பேர்க்கு அதில் இன்வெஸ்ட் செய்து லாபம் சம்பாதிக்கணும்னு ஆசை இருக்கும், ஆனா மார்கெட்ட கவனிச்சு சரியா புரிஞ்சி இன்வெஸ்ட் செய்ய தெரியாது, நேரமும் இருக்காது, அதனால நம்மது போல ஷேர் ப்ரோக்கரேஜ் ஃபேர்ம்ஸ்ட்ட பணம் கொடுப்பாங்க, நாம அதை எந்த ஷேரை எப்ப வாங்கினா லாபம் கொடுக்கும், எதை எப்ப வித்த லாபம்னு பார்த்து அதுக்கேத்த போல அவங்களுக்காக வாங்கி வித்து பிஸினஸ் செய்வோம், அதுக்காக அவங்க நமக்கு  பே பண்ணுவாங்க” என அவன் சொன்ன போது,

“ஓ” என்ற அளவிற்கு வந்திருந்தவள்,

“எப்ப எந்த ஷேர வாங்கணும், எப்ப எதை விக்கணும்னு நாம புரிஞ்சிக்கிறதில்தான் நம்மளோட சக்ஸஸ் அடங்கி இருக்கு. அதை புரிஞ்சிக்க நாம இன்டியன் மார்க்கெட்டயும் இன்டெர்நேஷனல் மார்கெட்டயும் கவனிச்சுகிட்டே இருக்கணும், அதோட கவர்மென்ட் கொண்டு வர ஸ்கீம்ஸ், இன்டியன் பாலிடிக்ஸ், வேல்ட் பாலிடிக்ஸ்னு எல்லாத்தையும் கவனிச்சு, அதில் மார்கெட் பத்தி கிடைக்கிற க்யூஸ் (cues) வச்சு ட்ரேட் செய்தோம்னா சூப்பரா ஏர்ன் செய்யலாம். இது ஆக்சுவலி ப்ரெய்ன் கேம்தான். நாம எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கமோ அவ்வளவுக்கு அவ்வளவு சக்ஸஸ்ஃபுல்லா இருப்போம், ஃபார் எக்சாம்பிள்..” என அடுத்து அவன் ஒரு க்யூ, அதை அவன் பயன்படுத்திய கதையெல்லாம் சொல்லி முடிக்கும் போது,

ஆனந்தியின் கண் சிவந்திருந்தது. திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்த கொட்டாவியின் நிமித்தம் வெகுவாக சோர்ந்தும் போயிருந்தாள். மனதால் லயிக்க முடியாத கடினமான விஷயம் ஒன்றை புரிந்து கொள்ள அறிவு போராடும் போது, ஆக்சிஜன் தனக்கு இன்னும் அதிகமாய் தேவை என உடல் செய்யும் ஆர்ப்பாட்டம்தான் இந்த அடிக்கடி வரும் கொட்டாவி என அவளுக்கு மட்டுமல்ல அவனுக்குமே தெரியும் என்பதால்

“ரொம்ப ட்ரையா க்ளாஸ் எடுத்துட்டனோ? சாரி” என முடித்துக் கொண்ட நிகர்   அதன் பின் அவனாய் தன் தொழில் விஷயங்களை இவளிடம் சொல்ல முனைந்ததே இல்லை, அதாவது சில மாதங்களுக்கு முன் பயந்து போய் இவளாக சென்று சென்று அவனிடம் துருவும் வரைக்கும்.

அதுவரைக்கும் அவனது ஒவ்வொரு தொழில் முறை வெற்றிக்கும் வீடு வரும்போதே எதாவது ஒரு பரிசோடே வருவான். மற்ற நாட்களிலுமே வீடு வந்துவிட்டால் இவளை வால் பிடித்துக் கொண்டுதான் சுத்துவான் என்றாலும், இந்த தினங்களில் அது இன்னும் அதிகமாயிருக்கும். இவளை தன் கைகளுக்குள்ளேயே வைத்துக் கொள்ள முனைவான். சிறு வேலைக்காக கூட இவள் அவனைவிட்டு விலகக் கூடாதென மொட்டைப் பிடிவாதம் பிடிப்பான்.

குழந்தைத் தனம், முரட்டுத்தனம் என அன்று எல்லாமும் இருக்கும் அவனிடம். இவளைக் கொண்டாடுவான். சட்டென இதோடு நினைவை நிறுத்திப் போட்டாள் ஆனந்தி.

‘இப்ப இதுவா விஷயம், எனக்கு நிகர் பிஸினஸ் பத்தி எதுவுமே தெரியாது, சொன்னாலும் புரியாது, இதில் என்ன பிரச்சனையாகிட்டுன்னு எந்த லாயர்ட்ட என்னன்னு சொல்லி எப்படி அரேஞ்ச் செய்ய? சைலேந்த்ரன் சாரே வரமாட்டேன்னு சொல்லிட்டார்னா மத்தவங்க யாராவது வருவாங்களா? எக்ஸ்பெர்ட் யாரும் இந்த கேஸ எடுத்துக்க மாட்டாங்களோ? யாராவது கத்துகுட்டியதான் பிடிக்கணுமோ? இப்ப இவ என்ன செய்யணும்?’ இவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே மீண்டுமாய் மனதில் வருகிறது அது.

நிகரின் அம்மாவின் குரல்!

“சொந்த வீட்ல திருடுற எவனாவது நல்லா இருப்பானாடா?”

இதற்கு மேல் இவள் எதை யோசிக்க?!!

இறுகிப் போய் அமர்ந்திருந்தவள் பின் வரவழைத்துக் கொண்ட ஒரு தீர்மானத்துடன் நிகரின் அம்மாவின் எண்ணை அழைத்தாள்.

அழைப்பொலி  போய்க் கொண்டே இருந்ததேயொழிய வழக்கம் போல் அழைப்பு ஏற்கப்படவே இல்லை.

இம்முறை இவள் நிகரின் அப்பா எண்ணை அழைத்தாள். முதல் ரிங் செல்லும்போதே, வழக்கம் போல் அவர் அழைப்பை துண்டித்துவிட்டால் என்ன செய்ய எனத் தோன்ற, அழைப்பை நிறுத்தியவள்,

‘என்னாலதான் உங்க மகன் இப்படியெல்லாம் செய்துட்டாங்கன்னு நினைக்கிறீங்களா மாமா? அப்படி நீங்க நினைக்கலைனாலும் இனி அப்படியே நினச்சுக்கோங்க, அப்படி நினச்சுகிட்டாவது என்னை விட்டுடுங்க, ஆனா அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க. இந்த டைம்ல நிகருக்கு நீங்க செய்யாம யார் செய்வா?

நம்ம கண் முன்ன அடிபட்டு கிடக்கது முன்ன பின்ன தெரியாதவங்கன்னா கூட உதவி செய்ய ஓடுவமே, அப்படின்னா ரெண்டு வருஷமா மனைவியா நிகர் கூட வாழ்ந்த நான் அதுக்காகவாவது அவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்தானே, அதனால மட்டும்தான் அவங்க செய்த எதுவுமே எனக்கு பிடிக்கலைனாலும், அவங்களுக்கு லாயர் கூட இல்லைனதும் எதாவது செய்யணுமேன்னு யோசிக்கிறேன்.

அப்படி பார்த்தா பிறந்ததிலிருந்து இல்ல பிறக்க முன்ன இருந்தும் கூட உங்க மகன உங்க கண்ணுக்குள்ள வச்சே வளர்த்திருப்பீங்களே, நீங்க அவங்களுக்காக எவ்வளவா யோசிக்கணும்!

அவங்க தவழ பழகினது, நடக்க ஆரம்பிச்சதுன்னு அந்த நேரங்கள யோசிச்சுப் பாருங்க மாமா, கண்டிப்பா உங்க பையன மன்னிச்சிடுவீங்க’ என ஒரு செய்தியை மொபைலில் டைப் செய்து முடித்தவள்,

உளர்ற போல இருக்கோ? அனுப்பினா தப்பா எடுத்துப்பாங்களோ? என இரண்டு நிமிடம் தயங்கியவள், பின் அதை நிகரின் அப்பா எண்ணுக்கும் அம்மா எண்ணுக்கும் அனுப்பி வைத்தாள்.

உதவின்னு வர்றாங்களோ இல்லையோ, அவங்க மனசு குமுறிகிட்டு இருந்தா, நிகருக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உதவியை கூட தெய்வம் அனுமதிக்காது என என்னதெல்லாமோ தோன்றுகிறது இவளுக்கு.

ஓவர் ஸ்ட்ரெஸ்ல நமக்கு யோசிக்கவே தெரியலையோ என்றும் குழம்பிக் கொண்டவள் விடுவிடென அறையை விட்டு வெளியே வந்து

“வினய், உங்களுக்கு தெரிஞ்ச லாயர் யாரையாவது அறிமுகம் செய்து வைங்களேன்” என தனது பாதுகாவலரிடம் போய் நின்றாள்.

அடுத்த பக்கம்

Advertisements